புதுடில்லி, மார்ச்29, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதி செய்வோம் டில்லியில் நடைபெற்ற ஓபிசி மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபட கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவினர் (ஓபிசி) மாநாடு டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது.
இதில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:
நாட்டின் 5 கோடி ஏழைக் குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க, ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதி திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஏழைகளுக்கு நமது கட்சி, நீதி வழங்கப் போவதை பிரதமர் உணர்ந்துள்ளார். விண்வெளி சாதனை குறித்த அறிவிப்புக்காக அவர் 45 நிமிடம் மக்களை காக்க வைத்து விட்டார்.
அந்த சாதனை குறித்து சொல்லும்போது அவர் முகத்தை பார்த்தீர்களா? ஏழைகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கப் போவதையும், தான் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்ட தையும் உணர்ந்த அவரது முகத்தில் பயம் நன்றாக தெரிகிறது.
2014 தேர்தலின் போது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக மோடி பொய் சொன்னார். நாங்கள் பொய் சொல்ல மாட்டோம். ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.3.60 லட்சம் கோடியை நாங்கள் தருவோம். நாங்கள் சொன்னதை செய்வோம்.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதி செய்வோம்.
அதே போல எங்கள் தேர்தல் அறிக்கையில், எந்த சமுகத்தை சேர்ந்த இளைஞர்களாக இருந்தாலும் புதிதாக தொழில் தொடங்க முதல் 3 ஆண்டுக்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற அம்சத்தை சேர்த்துள் ளோம்.
நாங்கள் விரும்புவது மேக் இன் இந்தி யாவை, பிரான்சின் அம்பானியின் தயாரிப்பை அல்ல என்றார்.
- விடுதலை நாளேடு, 29.3.19