காணொலியில் தமிழர் தலைவரின் வினா?
சென்னை, மே 19 இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு இத்தனை சதிவிகிதம்தான் என்ற வரையறை உண்டா? என்று என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வினா எழுப்பினார்.
இட ஒதுக்கீடுக்கு ஆபத்து
கடந்த 13.5.2021 மாலை 7 மணியளவில் ‘‘இட ஒதுக்கீடுக்கு ஆபத்து'' என்ற தலைப்பில் நடை பெற்ற காணொலி கருத்தரங்கத்தில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் தொடக்கவுரையாற்ற, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய தொடக்க வுரையாற்றிய கழக வெளியுறவுச் செய லாளர் அருமைத் தோழர் கோ.கருணாநிதி அவர் களே, கழக துணைத் தலைவர் உள்பட இந்த அறிவார்ந்த அவையில் குழுமியிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, கொள்கையாளர்களே, அன்பர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இட ஒதுக்கீடு, சமூகநீதி என்பதற்கு அடிப்படையே அந்தந்த மாநிலங்களில் இருந்து கிளம்புவதாகும். அடிப்படையான சில கருத்துகளை முதலில் சுட்டிக் காட்டினால், பிறகு நான் மற்ற செய்திகளை விளக்கமாகச் சொல்ல சரியாக இருக்கும்.
ஏன் இட ஒதுக்கீடு?
மனுதர்மத்தில்தான் ஆரம்பித்தார்கள்!
இட ஒதுக்கீட்டை யார் ஆரம்பித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மனுதர்மத்தில்தான் ஆரம்பித் தார்கள்!
சரி, அதிலிருந்த அநீதிகளைப் போக்குவதற்காக, நீக்குவதற்காக ஒரு பரிகாரம்தான் இன்றைக்கு இருக்கும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிச் சட்டங்கள்.
காலங்காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அதன்காரணமாக வேலை வாய்ப்புகளும் கிட்டாத ஒரு சூழ்நிலை இருந்தது.
ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை மக்கள் அத்தனை பேரையும், ‘‘அடிமை ஜாதிகள்'' (Servile Classes) என்று ஒரே வார்த்தையில் அழகாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொன்னார். அப்படிப்பட்ட மக்கள் மத்தியில், அவர் களுக்கு எழுச்சியை உண்டாக்குவதற்காக செய்யப் பட்ட சிறப்பான ஒரு தொடக்கம்தான் இட ஒதுக்கீடு.
அதைத் தூண்டுவது என்பது மிக முக்கியம். எப்படி ஒரு விமானம் புரெப்பல்சன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சுற்றி, பிறகு மேலே பறக்கத் தொடங்குகிறதோ - அதுபோலத்தான் அதற்கு வேண்டிய உந்து சக்தியாகத்தான் இட ஒதுக்கீடு காலங்காலமாக இருக் கிறது என்று உச்சநீதிமன்றத்திலேயே பல நீதிபதிகள் கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள்.
எனவே, அந்தக் கருத்தினுடைய அடிப்படையில், தெளிவாகச் சொல்லவேண்டிய சில கருத்துகள் இருக் கின்றன.
யாருக்கோ வந்த விருந்து என்று இருப்பது போன்ற ஒரு நிலை!
இன்றைக்கு இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரிகளாக இருக்கக்கூடிய ஆதிக்க சக்திகள் - குறிப்பாக பார்ப் பனர்கள், ‘‘முன்னேறியவர்கள்'' என்று தங்களைக் கருதிக்கொண்டு ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் - இவர்கள் காலங்காலமாக நேரிடையாக இந்தப் பிரச் சினையில் கை வைப்பதற்குப் பதிலாக, மறைமுகமாக தங்களுக்கு இருக்கின்ற நீதிமன்ற ஆதிக்கங்கள், ஊடக செல்வாக்குகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, எந்த மக்கள் பயனடைய வேண்டியவர்களோ, எந்த மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ, அந்த மக்களுக்கே அதுபற்றி புரியாத அளவிற்கு - ஒன்று குழப்புவது; அல்லது அவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், யாருக்கோ வந்த விருந்து என்று இருப்பது போன்ற ஒரு நிலையை உருவாக்கி வைத்தி ருக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கக்கூடிய மாநிலங்கள் தமிழ கமும், கருநாடகமும்தான்! காலங்காலமாக இந்த உரிமை உணர்வு தென்னகத்தில் இருந்துதான் வந்தது. அதற்கடுத்து சொல்லவேண்டுமானால், மராட்டியத்தில் முன்பு ஜோதிபாபூலே காலத்தில் தொடங்கி, சாகுமகராஜ் அவர்கள் காலத்தில், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 50 சதவிகிதம் கொடுக்கக்கூடிய அளவிற்கு முன்பு இருந்தாலும், அதனைக் கொள்கை ரீதியாக எடுத்துக்கொண்டு வந்து சிறப்பாக செய்த வரலாறு தமிழ்நாட்டைப் பொறுத்தது; கருநாடகத்தைப் பொறுத்தது வரலாற்றில்! இது பழைய செய்தி.
இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்ற பிரச்சினைகள் என்ன? தொடக்க வுரையாற்றிய கழக வெளியுறவுத் துறை செயலாளர் கருணாநிதி அவர்கள் எல்லாவற்றையுமே அழகாக விளக்கியிருக்கிறார்.
மாநிலங்கள்தான் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தக் கூடியவைகளாக இருக்கின்றன. அதற்குக் காரணம், மாநிலங்களுக்குத்தான் மக்கள் இருக்கிறார்கள் - ஆளுவதற்கு!
ஜாதி என்பது நிலைத்துவிட்ட உண்மை. அது ஒரு நாள் ஒழிக்கப்பட்டால், அது வேறு பிரச் சினை.‘‘இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையிலா?'' என்று கேட்பவர்களுக்கு, பலமுறை பதில் சொல்லியிருக்கி றோம்.
மனித குலத்தில் பேதமில்லை என்று சொல்லுங்கள்!
‘‘ஜாதியை ஒழித்துவிடுங்கள்; நாளைக்கே அவசரச் சட்டம் கொண்டு வாருங்கள்; ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேசன் கார்டு என்று ஒற்றை வரியில் சொல்லிக் கொண்டிருக்கின்ற நீங்கள், ‘‘ஒரே ஜாதி'' என்று சொல்லிவிடுங்கள்; மனித குலத்தில் பேதமில்லை என்று சொல்லுங்கள்.
ஜாதியை ஒழித்து, தீண்டாமையை ஒழித்து நீங்கள் எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் மனிதகுலம்'' என்று சொல்லக்கூடிய அளவிற்குக் கொண்டு வாருங்கள்; அப்போது இட ஒதுக்கீட்டைப்பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம்; அதிலே இழப்புகள் ஏற்பட்டாலும்கூட.
ஜாதியை நாம் உருவாக்கவில்லை; ஜாதியினால்தான் இட ஒதுக்கீடு வந்ததே தவிர, இட ஒதுக்கீட்டினால் ஜாதி வரவில்லை. இதை இன்றைக்குத் தலைகீழாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
மண்டல் கமிசன் வந்த நேரத்தில், வி.பி.சிங் அவர்களைப் பற்றியெல்லாம் தவறாகப் பிரச்சாரம் செய்தார்கள். ஜாதி அடிப்படையிலா இட ஒதுக்கீடு? என்று ‘பிறவிலேயே ஜாதியிலே ஆதிக்கவாதிகளாக, அர்ச்சகர்களாக இருக்கவேண்டும்; அதைத் தடுக்கக் கூடாது’ என்று சொல்லுகிறவர்கள் - அங்கே ஜாதி அடிப்படையில் அனுபவித்துக்கொண்டு, இங்கே ஜாதி அடிப்படையிலா என்று கேட்கிறார்கள்.
எனவே, ஜாதியை நாம் உருவாக்கவும் இல்லை. நாம் ஆதரிக்கவும் இல்லை. நாம் அதை ஒழிக்கவேண்டும் என்று சொல்பவர்கள்! எந்தக் காரணத்தினாலே அவர்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதையே மூலாதார மாக வைத்துக்கொண்டு, ‘‘அதே கிருமியை'' எடுத்து உள்ளே செலுத்தி, அதற்குத் தடுப்பூசியை போட வேண்டும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பாகத்தான் இட ஒதுக்கீடு அமைந்திருக்கிறது.
நீதிமன்றம் என்று சொல்லி லாவகமாகப் பறித்துவிடக் கூடிய சூழல்!
‘‘அதுகூட எவ்வளவு காலத்திற்கு? எவ்வளவு அளவிற்கு?'' என்று சொல்லுகின்றபொழுது, நேரிடை யாக இதற்குப் பதில் சொல்ல முடியாதவர்கள் - அவ்வப்பொழுது நீதிமன்றம், நீதிமன்றம் என்று கூக்குரலிடுகிறார்கள். காலங்காலமாக மறுக்கப்பட்ட நியாயங்களை மக்கள் மன்றத்தினுடைய தீர்ப்பின் மூலம், மக்களுடைய பிரதிநிதிகள் கொஞ்சம் உணர்ந்து, உரியவற்றைச் செய்து, அதனால் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு நீதி கிடைக்கின்ற நேரத்தில் - அவர்கள் அந்த உணவை எடுத்துப் பசியாற உண்ணப் போகின்ற நேரத்தில், அந்த உணவைத் தட்டிவிடக்கூடிய அள விற்கும், அதை நீதிமன்றம் என்று சொல்லி லாவகமாகப் பறித்துவிடக் கூடிய சூழலும் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
எனவே, சில கருத்துகளை முதலில் தெளிவு படுத்துகின்றோம்.
இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற ஆபத்து என்ன?
இரண்டு செய்திகளைச் சொன்னார்கள்.
மத்தியிலே இட ஒதுக்கீடு என்னும்போது, ஷெட்யூல்டு காஸ்ட், ஷெட்யூல் டிரைப் என்று, மிக முக்கியமாக 1935 ஆம் ஆண்டு முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டு, செய்யப்பட்டுவிட்ட ஓர் ஏற்பாடு.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ‘‘மண்டல் கமிசன் பரிந்துரை வந்து, அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகே, வி.பி.சிங் ஆட்சியில்தான் மத்திய அரசில் முதல் வேலை வாய்ப்பு'' என்று வந்தது!
அதற்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்துதான் கல்வி யில் இடஒதுக்கீடு என்று 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது - நம்முடைய தொடர் போராட்டத்தால்!
‘கம்யூனல் ஜி.ஓ.' நமக்கு சென்னை ராஜ்ஜியத்தில் மட்டும் இருந்தது அப்பொழுது. அது செல்லாது என்று வந்த வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியும்; அதை சொல்லவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை.
ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு
அதன் காரணமாக தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டுதான், முதன்முறையாக இந்திய வரலாற் றிலேயே தமிழ்நாட்டிற்கு மட்டும் கிடைத்த அனு கூலமான, வாய்ப்பான, இட ஒதுக்கீட்டின் நன்மை - சமூகநீதியின் பலன் - இந்தியா முழுவதும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு, 1951 ஆம் ஆண்டு முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக, பிற் படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் சேர்த்துக் கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பும், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பும் 15(4) பிரிவின் மூலமாக ஏற்பட வழிவகுத்தது!
பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமர்; பாபா சாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சர் - அவர்கள் காலத்தில் இது நிறைவேற்றப்பட்டது.
நண்பர்களே, இப்போது ஏன் அதைச் சுட்டிக்காட்டு கிறோம் என்றால், ‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally) பிற்படுத்தப்பட்டவர்கள்'' என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை, அடை யாளம் காணுகின்ற பொறுப்பு, வாய்ப்பு மக்களை ஆளுகின்ற மாநில அரசுகளுக்கே உண்டு.
அப்படி பட்டியல்கள் எல்லாம் தயாரித்து, இட ஒதுக்கீடு வரக்கூடிய சூழலில், இப்பொழுது மறுபடியும் பல வழிகளில் திட்டமிட்டு இதனை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்று படிப்படியாக பல்வேறு காலகட்டங்களில் இந்த முயற்சிகளை செய்து கொண் டிருக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்திற்கு விரோதமாக....
இட ஒதுக்கீடே கூடாது என்ற கொள்கை உள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. - எப்படியாவது இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று, தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப்பாக மத்தியில் ஆட்சி அவர்களுடைய கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு காரணத்தால், அதனைப் பயன்படுத்தி, அடுத்து ஆட்சிக்கு வருகிறோமோ இல்லையோ என்று நினைத்து, அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, உயர்ஜாதியில் பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு என்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உருவாக்கி அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்திற்கு விரோதமாக ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினார்கள்!
அதற்கு முன்பே நாம் கேட்ட ஒரு கோரிக்கையை, ஏற்பதுபோல, முதலில் அதற்கு இணங்கி வருவதுபோல ஒரு புறத்தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஏனென்றால், நாடாளுமன்றத்திலும், நாடெங்கிலும் அந்தக் கிளர்ச்சி இருந்தது.
பிற்படுத்தப்பட்டோருக்கென்று பார்லிமெண்டரி கமிட்டி உருவாக்கவேண்டும் என்று சொன்னோம்; உருவாக்கினார்கள். ஆனால், அதற்கு சட்ட வடிவம் இல்லை. ‘பல்' வலிமையுடன் கூடிய சட்ட வடிவம் கொடுங்கள் என்று கேட்டோம்.
அங்கேதான் ஆபத்து முளைத்து இருக்கிறது!
அந்தச் சட்ட வடிவம் கொடுக்கின்ற கோரிக்கையை ஏற்கின்ற சாக்கில் அமைந்ததுதான் 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாகும். நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுகின்றோம் என்கிற சாக்கில், ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருக்கின்ற உரிமையை, நாம் பல பேர் எதிர்த்தும், போராடியும்கூட, அவர்கள் நினைத்தபடி அவசர அவசரமாக சில நாள்களிலேயே, நாடாளுமன்றத்தில் அதிக விவாதங்கள்கூட நடை பெறாமல், செலக்ட் கமிட்டி சொன்ன பிறகும்கூட, அதைப்பற்றிக் கவலைப்படாமல், அவர்கள் தெளிவாக அந்த வரையறையை உருவாக்கி வைத்துவிட்டார்கள். அங்கேதான் ஆபத்து முளைத்து இருக்கிறது!
இரண்டு வகையாக இந்த உரையை நான் பிரித்துக் கொள்கிறேன்.
69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஏதோ பெரிய ஆபத்து ஏற்பட்டுவிட்டதா என்றால், உடனடியான ஆபத்தோ, பிரச்சினையோ கிடையாது. அவ்வளவு எளிதில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் கை வைக்க முடியாது. அதற்குக் காரணம், 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு அதற்கு இருக்கிறது - அரசமைப்புச் சட்டத் திருத்தப்படி அது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
அதைப்பற்றி நான் அடுத்து விளக்கிச் சொல்கிறேன்.
இப்பொழுது எதைச் சொல்கிறார்கள், அவர்கள் எந்த ரூபத்திற்கு வருகிறார்கள் என்றால், நேரிடையாக வரவில்லை. ‘50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு என்பது ஏற்க முடியாது என்று அரசமைப்புச் சட்ட தீர்ப்பு சொல்லியிருக்கிறது’ என்கிறார்கள்.
50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதைப்பற்றி முதலில் தெளிவுபடுத்தவேண்டும்.
முதலாவது கேள்வி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இட ஒதுக்கீடு என்று சொல்லுகிறபொழுது, எவ்வளவு சதவிகிதம் இருக்கவேண்டும் என்ற நிர்ண யத்தை அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள் எந்த இடத்திலாவது சுட்டிக்காட்டி, இதற்குமேல் வரக்கூடாது என்று எங்கேயாவது அரசமைப்புச் சட்ட பிரிவுகளில் நுழைத்திருக்கிறார்களா? வரைந்திருக்கிறார்களா? பதில் சொல்லட்டும்!
அரசமைப்புச் சட்டத்தினுடைய எந்தப் பிரிவிலும் இல்லை!
ஒரு இடத்தில்கூட உச்சவரம்பு இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. 50 சதவிகிதம் என்ற உச்சவரம்பை, ‘‘பாலாஜி'' என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்னார்கள் என்பதைத் தவிர, அவர்கள் நிர்ணயித்துக் கொண்டார்களே தவிர, நீதிமன்றமே உருவாக்கிக் கொண்டதே தவிர, அரசமைப்புச் சட்டத்தினுடைய எந்தப் பிரிவிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.
‘‘ஜீவாதார உரிமைகள்''
எவ்வளவு இருக்கவேண்டும் என்று சொல்லு கின்றபொழுது, 15(4), 16(4) என்ற பிரிவில்,
15(4) என்ற பிரிவு கல்வி வாய்ப்புகள் பற்றியது;
16(4) என்ற பிரிவு வேலை வாய்ப்புகள் பற்றியது. இவை அடிப்படை உரிமைகள் - ‘‘ஜீவாதார உரிமைகள்'' (Fundamental Rights) என்ற தலைப்பில் இருக்கின்றன.
ஆனால், நீதிமன்றங்களில் இருக்கின்றவர்கள் அந்தத் தலைப்பைப்பற்றிக் கூட கவலைப்படாமல், நீதிபதி சொல்கிறார்,
அது அடிப்படை உரிமை என்பதைக்கூட ஒப்புக் கொள்ள முடியாது என்று இப்போது கூறுகிறார்கள்! எவ்வளவு விசித்திரம்?
எந்த அளவிற்குப் போகிறார்கள் பாருங்கள்.
தலைப்பே, அடிப்படை உரிமைகள் என்று போட்டி ருக்கிறார்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக் கியவர்கள்.
சமூகநீதியை தகர்த்து வருகிறார்கள்
ஆனால், இவர்கள் அதையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்று கொள்ள முடியாது என்று சொல்லி, ஒரு மலையை கொஞ்சம் கொஞ்சமாக வெடி வைத் துத் தகர்ப்பதைப்போல, சமூகநீதியை தகர்த்து வரு கிறார்கள்.
அரசமைப்புச் சட்டம் 16(4) பிரிவில் உள்ளதை அருள்கூர்ந்து ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
‘‘மாநில அரசினுடைய கருத்துப்படி அமைய வேண்டும். போதுமான அளவிற்கு, மற்றவர்களோடு சமப்படுத்தக்கூடிய அளவிற்கு அந்த நியமனங்கள் இல்லை என்று அந்த அரசு கருதுமேயானால், அந்த அரசு அதற்கேற்ப வேலை வாய்ப்பிலே இட ஒதுக்கீட்டை செய்யலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ‘adequately' என்பதுதான் அவர்கள் பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தையே தவிர, அது எத்தனை விழுக்காடு என்று எந்த இடத்திலும் கிடை யாது. ஆனால், 50 விழுக்காடு என்பதை இவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்!
இவர்களாக உருவாக்கிக் கொண்டதுகூட எப்படி என்கிற அந்த வரலாற்றையும் சொல்கிறேன், அதை முக்கியமாக நீங்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு முன்பாக ஒரு செய்தி; பல கூட்டங்களில் சொல்லியிருந்தாலும், மீண்டும் மீண்டும் ஒரே செய்தியை சொன்னாலும், மக்கள் மனதில் பதியக்கூடிய அளவில் சொல்லவேண்டும்.
adequately represented in the services under the State என்கிற வரிகள் அரசமைப்புச் சட்டம் 16(4) இல் இருக்கின்ற வாசகம்.
‘adequately' என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?
அது adequatus என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. அதற்கு என்ன பொருள் என்றால், till it is equalised - மற்றவர்களோடு சமப்படுத்துகின்ற வரையில் என்பதுதான் அதன் பொருள்.
ஒரு பக்கம் மேடாக இருக்கிறது; இன்னொரு பக்கம் பள்ளமாக இருக்கிறது. இரண்டையும் சமப்படுத்த வேண்டும். சமப்படுத்தப்படும் வரையில் இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு என்று சொல்லவில்லை.
அதற்காக பல விவாதங்கள் நடைபெற்று இருக் கின்றன. அங்கே நாம் போகவேண்டிய அவசியமில்லை.
எப்படி வந்தது? யாரால் வந்தது? ஏன் வந்தது?
ஆகவே, 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எப்படி வந்தது? யாரால் வந்தது? ஏன் வந்தது? அதற்கு ஏதாவது ஒரு ‘‘சயிண்டிபிக் டேட்டா'' (அறிவியல்ரீதியான புள்ளிவிவரங்கள்) இருக்கிறதா? என்றால் கிடையாது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக