August 27, 2021 • Viduthalai
அரசு உதவி பெறும் பள்ளிகளையும் இக்குடையின்கீழ் கொண்டு வருவது அவசியம்!
தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் என்பது கல்வித் துறையில் ஓர் அமைதிப் புரட்சியாகும்; அரசு உதவி பெறும் பள்ளி களையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வருவது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
எதிர்ப்பின்றி நிறைவேறியுள்ளது வரவேற்கத்தக்கது!
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நூறு நாள்களுக்குள், செய்த சாதனைகளில் முக்கியமானது, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றவர்களோடு - நகர்ப்புற வசதி வாய்ப்பு பெற்ற மாணவர்களை சேர்த்துப் கற்பிக்கும் தனியார் பள்ளி களைப்போல - அதைவிட சிறப்பாக படிக்க வைக்கும் வாய்ப்பையும், தரத்தினையும் மேம்படுத்தி, ‘கல்வியின் மேடு பள்ளங் களைச்' சீராக்கி, சம வாய்ப்பு என்பது சம நிலையில் உள்ளவர்கள் போட்டியிட்டால் தான் கிட்டும் என்ற அரிய உண்மையை நிலை நிறுத்தி, ஜஸ்டீஸ் முருகேசன் (ஓய்வு பெற்ற டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி) தலைமையில் குழு அமைத்து, விரைவாக அறிக்கை பெற்று, அதன் பரிந்துரை அடிப்படையில் அரசு பள்ளி களில், பொறியியல், வேளாண்மை, கால் நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் முன்னேற வாய்ப்பளிக்கும் வகையில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை முதல மைச்சர் முன்மொழிய, அது ஏகமனதாக - எதிர்ப்பின்றி நிறைவேறியுள்ளது வர வேற்கத்தக்கது!
மருத்துவக் கல்லூரி படிப்பில் உள்ள சட்டத்தை முந்தைய அ.தி.மு.க. அரசு செய் தது - நீதிபதி கலையரசன் பரிந்துரைப்படி,
இப்போது மற்ற முக்கிய தொழிற்படிப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இத்துறையில் கற்க இது ஓர் அருட்கொடை யாகும்!
கல்வித் துறையில் ஓர் அமைதிப் புரட்சி!
மருத்துவப் படிப்புக்கு எவ்வகையிலும் இத்தொழிற்கல்வி படிப்புகள் குறைந்த தில்லை. பெற்றோரும், மாணவர்களும் இப்போது உணர்ந்து, இப்படிப்புகளில் சேர ஆர்வம் காட்டும் நிலையில், வாய்ப்புக் கதவு இதன்மூலம் அரசு பள்ளி மாணவர் களுக்கு அகலமாகத் திறக்கப்படுவது கல்வித் துறையில் ஓர் அமைதிப் புரட்சி யாகும்!
தனியார் பள்ளிகளில் கூடுதல் வெற்றி மாணவர்களிடையே கிடைப்பதற்கு முக்கிய காரணம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே பள்ளியில் இடம் தரும் வகையில் அந்தந்த நிர்வாகம், தலைமை ஆசிரியர்களின் முடிவினால்தான்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை!
ஆனால், அரசு பள்ளிகள் ‘வெகுமக்கள் பள்ளிகள்' என அனைவருக்கும் வாய்ப்பு அளிப்பதால், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களானாலும், முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறையினரைச் சேர்த்துப் படிக்க வாய்ப்பளிக்கும் முறை அமலில் உள்ளது! கூழாங்கற்களை, வைரக் கற் களாக்குவதுதான் சிறப்பான கல்விப் பணி. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருவதே இதற்கு ஓர் உதாரணம் ஆகும்!
அரசு பள்ளிகளுக்கு கிடைத்துள்ள இந்த அருமையான வாய்ப்பை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்ட வேண்டும்.
இரண்டிற்கும் உள்ள ஒரே வேறுபாடு - நிர்வாகம்தானே தவிர, கல்வி முறையோ, ஆசிரியர்களோ, மாணவர்களோ அல்ல.
பல்லாயிரக்கணக்கில் பயன்பெற்று விழி பெற்று பதவி கொள்வர்
எனவே, அப்பள்ளிகளையும் இத்திட் டத்தின்கீழ் கொண்டு வந்தால், மேலும் தமிழ்நாட்டு மாணவர், மாணவியர் பல் லாயிரக்கணக்கில் பயன்பெற்று விழி பெற்று பதவி கொள்வர். இதையும் தமிழ்நாடு முதலமைச்சர் (விரிவாக்கமாக) திருத்தம் மூலம் செய்தல் நலம்.
இத்தகைய தொழிற்கல்வி, இளைஞர் களின் அறிவுத் திறன், வேலை வாய்ப்புக் கிட்டாவிடினும் சொந்தக்காலில் நிற்கும் தனித்தன்மையை அவர்களுக்குத் தரும் அருமையான படிப்பாகும்.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும்...
ஆதலால், 7.5 விழுக்காடு இட ஒதுக் கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும், அந்தக் குடையின்கீழ் கொண்டு வருவது அவசியம்!
கி.வீரமணி
தலைவர்
27.8.2021
திராவிடர் கழகம்.
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக