வரலாற்றுப் பதிவு
• Viduthalaiநங்கேலியின் தியாகம் மறக்கப்படாது!
‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற திரைப்படமாக!
பாணன்
19-ஆம் நூற்றாண்டில் தோள் சீலை அணிந்து கொள்வதற்கு `முலக்கரம்' (முலை வரி) என்ற வரியை வசூலிக்க வந்த நாயர்களிடம் இன்றைய கேரளாவின் சேர்த்தலா என்ற ஊரில், தன் இரண்டு மார்பகத்தையும் அறுத்துக் கொடுத்து உயிர் விட்டாள் நங்கேலி எனும் ஈழவ குல வீர மங்கை.
திருவனந்தபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளப்பட்ட தனி நாடான திருவிதாங்கூரில் நடந்த ஆட்சியை 'ராம ராஜ்ஜியம்' என்று அன்று இந்தியா முழுவதிலும் இருந்த சமயப் 'பெரியவர்கள்' எல்லாம் வியந்தோதினார்கள். பீடாதிபதிகள், ஜெகத் குருக்கள் அந்த ஆட்சி இந்தியா முழுக்க இல்லையே என வருத்தப்பட்டார்கள்.
தோள்சீலை புரட்சி, குப்பாய புரட்சி
19-ஆம் நூற்றாண்டில் தோள் சீலை அணிந்து கொள்வதற்கு `முலக்கரம்' (முலை வரி) என்ற வரியை வசூலிக்க வந்த நாயர்களிடம் இன்றைய கேரளாவின் சேர்த்தலா என்ற ஊரில், தன் இரண்டு மார்பகத்தையும் அறுத்துக் கொடுத்து உயிர் விட்டாள் நங்கேலி எனும் பார்ப்பனரல்லாத சமூக வீர மங்கை.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் இன்றைய கேரளாவின், மலபாரில் உள்ள இரண்டு மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் அநேக பகுதிகளையும் உள்ளடக்கியது.
இங்கு அரசர்கள், நாயர்கள், நம்பூதிரிகள் தவிர்த்த மற்ற அனைத்து ஜாதியினரும் தீண்டப்படாதவர்கள் - பார்க்கக் கூடாதவர்கள். அரசர்கள், நாயர்கள் தவிர மற்ற ஜாதியினர் மீசை - தாடி வைத்துக்கொள்ளக்கூடாது. செருப்பு அணியக் கூடாது. குடை பிடித்துச் செல்லக் கூடாது. மீசை - தாடி வைக்க தனியாக வரி செலுத்த வேண்டும். பெண்கள் திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும். மேலாடை அணிந்து கொள்ள 'முலக்கரம்' எனும் முலை வரி செலுத்த வேண்டும். 94 வயசு நம்பூதிரி பார்ப்பான், ஒரு நாயர் ஜாதி பெண் மீது ஆசைப்பட்டால், அவளைப் படுக்க அவனிடம் அனுப்ப வேண்டும்.
இது கதையல்ல
நம்பூதிரி பார்ப்பனர்களின் தலைமையில், கட்டுப் பாட்டில், அவர்கள் வகுத்த சட்ட திட்டங்களின்படி, சனா தன வைதீக ஹிந்து மதத்தின் பெயரால், ஒரு பொம்மை அரச குடும்பத்தை முகமூடியாகக் கொண்டு, நாயர்களை அரசு அதிகார இயந்திரமாகக் கொண்டு நடந்த சனாதன மாடல் அரசு அது. உலகில் எத்தனையோ கொடுமைகளைப், படுகொலைகளைச் செய்த அரசுகள் இருந்திருக் கின்றன. ஆனால், உலகில் எந்த மூலையிலாவது, என்றாவது, தன் மக்களின் ஒரு பிரிவினரின் பெண்கள் மார்பை மூடக்கூடாது; மூடினால் அதற்கு 'முலை வரி' கட்ட வேண்டும் என்று சட்டம் போட்டு அதைக் கிட்டத்தட்ட 100 வருடம் அமல்படுத்திய, ஒரு கேடுகெட்ட, வக்கிரமான, அரசு இருந்ததுண்டா? இருந்தது! அதுதான் திருவிதாங்கூரின் சனாதன ராம ராஜ்யம்!! (சனாதன பாஜக கட்சிக்குள் தலைவிரித்தாடும் பாலியல் வன்முறைகள், ஒடுக்குமுறைகள் சனாதனத்திற்குள்ளாக இன்று நேற்று வந்ததல்ல).
நாயர்களின் துணை கொண்டு மன்னரின் படைகள் ஆண்கள் - பெண்கள் அனைவரையும் அடித்துத் துவைத்தனர்.
வரலாற்றின் கறை படிந்த பக்கங்களின் வரலாறு
வரி செலுத்தினாலும் பார்ப்பன நம்பூதிரிகள் எதிரில் வரும் பொழுது தோள் சீலையை விலக்கி மார்பகத்தைக் காட்ட வேண்டும். இதனை எதிர்த்துப் போராடும் நங்கேலி தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியுற, இறுதியாக தனது இரு மார்பகங்களை அறுத்து எறிந்து விடுகிறாள். இது மன்னருக்குத் தெரிந்தால் சிக்கல் என்பதால் ஆதிக்க ஜாதி அவளை எரித்துவிடுகிறது, சாட்சிகளையும் கொலை செய்கிறது. அவளுக்கு மூட்டிய சிதையில் தானும் நெருப்பில் குதித்து உயிர்நீத்தான் அவள் கணவன்.
இது மட்டுமல்ல, ஒரு நம்பூதிரி பார்ப்பான் நினைத்தால் எந்த நாயர் குடும்பத்தின் முதல் பெண்ணுடனும் திரு மணம் செய்யாமல் கூட முடிந்த 'சம்பந்தம்' எனும் சனா தன முறை, ஒரு நம்பூதிரி முன் நாயர் மேலாடை அணியக் கூடாது. பார்ப்பனரல்லாதார் (ஈழவர்) 36 அடி தள்ளி நிற்க வேண்டும்; பார்ப்பனரல்லாதார் (புலையர்) 96 அடி தள்ளி நிற்க வேண்டும் போன்ற நூற்றுக்கணக்கான கொடுமையான சனாதன சட்டங்கள் எல்லாம் இருந்த ராம ராஜ்யம் அது!
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிரிட்டிஷ் தூதுவராக இருந்த கர்னல் ஜான் மன்றோ அரசரை வற்புறுத்தி - பரம்பரை கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல, இனி மதம் மாறுகின்ற கிறிஸ்துவர்களுக்கும் முலைவரி விலக்கு என்று சட்டம் கொண்டுவந்தார். பெருவாரி யான பார்ப்பனரல்லாதார் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறினார்கள்.மதமாற்றம் மானம் காத்துக் கொள்ளவே நடந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் குமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர், "எங்கள் பெண்கள் குப்பாயம் (மேலாடை) அணிவார்கள். உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்!" என்று போர்ப் பறை முழங்கினார். இன்றைக்கு "அழகின் பூமி” என்று அழைக்கப்படுகின்ற கேரளா இரத்தக்களரி ஆயிற்று.
1859-ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தின் ஆளுநர் சார்லஸ் ட்ரெவிலியான் கொண்டு வந்த பிரகடனத்தின்படி பார்ப்பனரல்லாத சமூகப் பெண்கள் எந்த மதத்தினராய் இருந்தாலும் மேலாடை அணியலாம் என்று திருவிதாங்கூர் மன்னர் சட்டம் இயற்றினார்.
முலைவரி முற்றிலும் நீங்கிற்றா?
அய்யா வைகுந்தரின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டவர்களில் குரு ஸ்தானத்தில் கொண்டாடப்பட்ட நாராயணகுரு - மற்றொருவர் பார்ப்பனரல்லாத (புலையர்) இனத்தில் பிறந்த அய்யன் காளி. இருவரும் எடுத்துக்கொண்ட முயற்சியால் 1928-ஆம் ஆண்டு முலைவரி முற்றிலும் நீங்கிற்று.
1925-வைக்கத்தில் தந்தை பெரியாரின் போராட்டங்களினாலும், உயிர்ப்பூட்டுகின்ற பேச்சுக்களாலும், கடுமையான, கொடுமையான சிறைவாசத்தாலும் வைக்கம் போராட்டத்தின் மூலக்கல் என்றழைக்கப்பட்ட டி.கே.மாதவன், கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் இவர்களின் முயற்சியாலும் பார்ப்பனரல்லாதவர்கள் கோயிலின் வெளி வீதிகளில் நடக்கும் இவர்களுக்கான உரிமை கிடைக்கப் பெற்றார்கள்.
இதில் `முலை வரி' (முலக்காரம்) கொடுமை, கிறிஸ்துவ மிசனரிகளாலும், பார்ப்பனரல்லாதவர்களின் தீர்க்கமான போராட்டங்களினாலும் (1813-1859), மற்றும் மதராஸ் மாகாண பிரிட்டீஷ் ஆளுநரின் மிரட்டலாலும், 1859இல் அகற்றப்பட்டது. ஆனாலும் மற்ற கொடுமைகள் 1949இல் அந்த சனாதன அரசு ஒழியும் வரைத் தொடர்ந்தன.
இந்த மனிதத் தன்மையற்ற பார்ப்பனிய சனாதனத்தின் கோர முகத்தின் வரலாற்றின் சினிமாப் பதிவு தான் சமீபத்திய மலையாள திரைப்படம் "பத்தொன்பதாம் நூற்றாண்டு!"
மேற்சொன்ன கொடுமைகளை, குறிப்பாக `நங்கேலி' எனும் ஒடுக்கப்பட்ட பெண்ணைத் தன் மார்பைத் தானே அறுத்துத் தற்கொலை செய்ய வைத்த, மனிதகுல விரோத பார்ப்பனியத்தைத் துணிந்து பதிவு செய்ததற்காகவே, அந்தப் படத்தை பார்க்கலாம். இப்படி ஒரு படம் சமீபத்தில் வந்து சென்றது அதுவும் பல மொழிகளில் வந்தும் கவனம் பெறாமல் போனது.
ஆளுநர் போகும் இடமெல்லாம், "இந்தியாவின் பழமையான கலாச்சாரம், பழமையான கலாச்சாரம் சனாதனத்தின் பெருமை" என்று எல்லாம் பேசிக்கொண்டு வருகிறார்,
இந்தப் பழமையான கலாச்சாரத்தில்தான் பொட்டு கட்டும் முறையும் முலை வரியும் இருந்தது.
பொட்டு கட்டும் கலாச்சரத்தை எதிர்த்து தந்தை பெரியாரின் ஆலோசனைப்படி மதராஸ் மாகான சட்டமன்றத்தில் பேசி அதற்கு தடை கொண்டுவந்த மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டியும், முலைவரியை நீக்கப் போராடி தன்னுயிர் நீத்த நங்கேலி குறித்தும் படித்து, இந்தப் படத்தைப் பார்த்தும் ஆளுநர் தெரிந்துகொள்ளட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக