பக்கங்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2018

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்குக் கிடைத்த முதல் வெற்றி

தந்தை பெரியார் தொடங்கி, முதலமைச்சர் கலைஞர் சட்டமியற்றிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்குக் கிடைத்த முதல் வெற்றி


மதுரையில் நியமனம் செய்ததுபோல ஆகம பயிற்சி பெற்றுக் காத்திருக்கும்


அனைவரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்க!




மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் பல தடைகளுக்குப் பிறகு இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறது - மதுரையில் பார்ப்பனர் அல்லாதார் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இனி எந்த சட்டப் பிரச்சினையும் இல்லாத நிலையில், ஆகமப் பயிற்சி பெற்று நியமனத்துக்காகக் காத்தி ருக்கும் அனைவரையும் அர்ச்சகராக தமிழக அரசு நியமனம் செய்யவேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

1969 இல் தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம்


நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தனது தள்ளாத வயதில், முதுமையைப் புறந்தள்ளி, வயதில் அறிவில் முதியார் வாய்மைப் போருக்கு என்றும் இளையார் - உயர் எண்ணங்கள் மலரும் சோலை'' என்று புரட்சிக்கவிஞரால் வர்ணிக்கப்பட்டதற்கேற்ப 95 ஆம் ஆண்டிலும் ஜாதி- தீண்டாமை ஒழிப்புக்கான களமாக,  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கான போராட்டத்தை 1969 ஆம் ஆண்டில்  தொடங்கினார். அதற்குமுன்பே  30 ஆண்டுகளாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வேண் டும் என்பதை வலியுறுத்தியும், 1958 இல் திருச்சி ஜாதி ஒழிப்பு மாநாட்டின் முக்கிய தீர்மானமாகவும் அதனை நிறைவேற்றி வலியுறுத்தி வந்தோம் என்பதும் வரலாறு.

தி.மு.க. அரசு - மானமிகு கலைஞர் அவர்கள் முதல மைச்சராக இருந்த காரணத்தால் 1970 இல் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பனர்கள்


வழக்கமான உயர்ஜாதி பார்ப்பனர் எதிர்ப்பு; சட்ட ரீதியாக - சமூக ரீதியாக இதற்கு அமோக வரவேற்பு இருந்தபோதிலும்கூட, நேரே உச்சநீதிமன்றத்திற்கே சென்று வழக்குத் தொடுத்தனர்.

சிறீபெரும்புதூர் ஜீயர் தொடங்கி மற்ற சில அர்ச்சகர் அமைப்புகளை இணைத்தும், காஞ்சி சங்கராச்சாரியார்கள், சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தொடங்கி அனை வரும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இந்த சட்ட வியூகத்தை வகுத்து, சட்டப் போரை நடத்தினர்.

பல்கிவாலா என்ற புகழ் வாய்ந்த பிரபல மூத்த வழக்குரைஞருக்கு ஆச்சாரியார் பரிந்துரை கடிதம் கொடுத்து வாதாடும்படிக் கேட்டுக்கொண்டார். அவர்  பீஸ்' வாங்காமலேயே இலவசமாக பல நாள் வாதாடினார். 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற தனி அமர்வு இந்த வழக்கினை விசாரித்து, இதன் தீர்ப்பை மகராஷ்டிர (பார்ப் பன) நீதிபதியான ஜஸ்டீஸ் பாலேகர் தீர்ப்பை எழுதினார்.

அதன்படி தமிழ்நாடு அரசு - கலைஞரின் தி.மு.க. அரசு கொண்டுவந்த பரம்பரை அர்ச்சகர் ஒழிப்புச் சட்டம் (1970) சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

"ஆபரேசன் வெற்றி - நோயாளி செத்தார்!''


தி.மு.க.ஆட்சியினர்நாத்திகர்கள்;அவர்கள்யாரை வேண்டுமானாலும் - ஏன் கடவுள் நம்பிக்கையில்லாதவர் களையும், பிற மதத்தவர்களையும்கூட இந்து கோவில்களில் அர்ச்சகர்களாக நியமித்து அதன் புனிதத்தைக் கெடுத்து விடக் கூடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது'' என்று பொய்யுரைகளை வாதங்களாக்கினர்.

அப்படி நிகழ்ந்தால், தாராளமாக மீண்டும் இந்த உச்ச நீதிமன்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் நாடலாம் என்று கூறி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தும் - வைக்காமலும் ஒரு அரைப்புள்ளி (Semi Colon) போட்டனர்.

ஆகம விதிகள்படிதான் அர்ச்சனை நடைபெறவேண் டும் என்றும் கூறியதால், நாம் விடுதலை'யில் - ஆபரேசன் வெற்றி; ஆனால், நோயாளி செத்தார்'' என்று முழுப்பலன் உடனடியாகக் கிட்டாத ஒரு நிலை வந்தது என்றோம்.

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு...


இதற்கிடையில், தந்தை பெரியார் அவர்கள் 1973 டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்தார்கள். அவருக்குத் தமிழக அரசின் சார்பில் இறுதி நிகழ்ச்சியை அரசு மரியாதையுடன் - எவருக்கும் எளிதில் வராத துணிவுடன் அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் செய்து, மன நிறைவடைந்தார். நாட்டையே வியக்க வைத்த இந்த சாதனையை செய்து தனி வரலாறு ஒன்றைப் படைத்தார்!

பெரியார் நெஞ்சில் தைத்த முள்


பிறகு கூறினார், நமது தந்தைக்கு அரசு மரியாதை தந்தோம்; ஆனால், அவர் நெஞ்சில் இருந்த முள்ளை (அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்) அகற்ற முடிய வில்லையே'' என்று ஆதங்கப்பட்டார்; அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு, டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையில் அறிவார்ந்த சமய வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, (2006) அவர்களது  பரிந்துரைகளைப் பெற்று, சைவம் - வைணவப் பிரிவுகளுக்கு ஆகமப் பயிற்சிப் பள்ளிகளைத் தனியே அமைத்து, 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி பார்ப்பனர் தொடங்கி அனைத்து ஜாதி மாணவர்களையும் சேர்த்து பயிற்சி அளித்து 206 பேர் தயார் ஆனார்கள்.

இடையில் பத்தாண்டுகள் சிக்கல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் (உயர்ஜாதி பார்ப்பனர்) குழு உச்சநீதிமன்றத்தில் இதற்கு மீண்டும் வழக்குத் தொடுத்தனர். சுமார் 10 ஆண்டுகாலம் ஓடிற்று. இடையில் அர்ச்சகர் நியமனம் செய்யக்கூடாது என்று உறுதியை அரசிடம் நீதிமன்றம் பெற்றுக்கொண்டதால், பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத சட்டச் சிக்கல் ஏற்பட்டது.

2015 இல்  இறுதி விசாரணை


பிறகு அவ்வழக்கினை இறுதி விசாரணை செய்த  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 16.12.2015 இல் தமிழ்நாடு - கலைஞர் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்புக் கூறிவிட்டனர்; நமக்குக் கிடைத்த வெற்றி இது.

தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளிடையே மாறுபாடு இல்லை


இதற்கிடையில் தமிழக ஆட்சி மாற்றம் முறையே எம்.ஜி.ஆர்., செல்வி ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் ஏற்பட்டபோதும், அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை நிச்சயம் அமுல்படுத்துவோம் என்று சட்டமன்றத்திலும் - இரண்டு காலகட்டங்களிலும் உறுதியளித்தனர். எனவே, தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு இதில் மாற்று நிலைப்பாடே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேரில் வலியுறுத்தினோம்


இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2015 இறுதியில் வந்துவிட்டதை - வரவேற்று, தெளிவாக்கி திராவிடர் கழகம் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்குப் பிறகு வந்த முதலமைச்சர்கள் இருவருக்கும் (ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.) வேண்டுகோள் மனுக்களை நேரிலும், அஞ்சல் வழியிலும் அனுப்பினோம்.

தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்குக் கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைத்து சென்னையில் மாநாடு நடத்தினோம். அதற்கு முன்பு பொதுத் தேர்தலின்போது 18.4.2016 அன்று திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தில் 5000 பேர் கைது செய்யப்பட்டோம்.

இதற்கெல்லாம் இப்போது கைமேல் பலன் கிடைத் துள்ளது!

மதுரையில் முதல் நியமனம்


பயிற்சி பெற்ற 206 பேர்களில் (சிலர் மறைந்துவிட்டார்கள்) ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி பட்டியலிலிருந்து மதுரைக் கோவிலில் அர்ச்சகர் நியமனம் பெற்றது நமது நெஞ்சங்களை மகிழ்ச் செய்துள்ளன!

மருத்துவமனையில் இருக்கும் கலைஞர் கழுத்தில் வெற்றி மாலை


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நமது மானமிகு தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சூட்டப்பட்ட வெற்றி மாலை இது.

தமிழக அரசுக்கும், குறிப்பாக முதல்வருக்கும் நமது பாராட்டு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஆகமப் பயிற்சி பெற்ற மற்றவர்களையும் இதனைத் தொடர்ந்து உடனடியாக நியமனங்கள் செய்திட தவறக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

அர்ச்சகர் இடங்கள்


ஏராளம் காலியாகவே உள்ளன


(அ) தமிழ்நாட்டுக் கோவில்கள் 38,000 ஆகும். இதில் 2,000 கோவில்களில்கூட ஆகமம் தெரிந்த அர்ச்சகர்கள் இல்லை என்பதையும்,

(ஆ) வைணவ திவ்ய தேசங்கள் 108 எனப்படுபவை களில் 106 கோவில்களுக்குச் சென்று வந்துள்ள வ.வே. வாசு நம் பிள்ளை இராமானுஜாச்சாரியார் அந்த 106 திவ்ய தேசங் களில் 30 கோவில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பயிற்சி பெற்ற அனைவரையும் நியமிக்கவேண்டும்


எனவே, உடனடியாக எஞ்சிய பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டியது அவசர அவசியம்.

அடுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து ஜாதிகளி லிருந்து அர்ச்சகப் பயிற்சிப் பள்ளியை தமிழக அரசு தொடர்ந்து இயங்கச் செய்து 69 சதவிகித அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

இனி சட்டக் குழப்பத்துக்கும் இடம் இல்லை


இதில் இனி சட்டக் குழப்பத்தை யாரும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் புரிந்துகொண்டு மேலும் விரைந்து செயல்பட வேண்டும்.

உத்தரகாண்டின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 15.6.2018 அன்று (புக்கராஜ் Vs உத்தரகாண்ட் மாநில அரசு) உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது!

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நமக்கு ஏதோ சாதகமற்ற தீர்ப்புபோல குழப்பியவர்களின் வாதங் களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் முக்கிய மைல்கல்!


மெல்லக் கதவு திறந்துள்ளது. இது முழுமையாக திறக்கப்படவேண்டும். சுமார் 8 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவர்களை கருவறைக்குள்ளே அனுப்பிட வேண் டும். கேரள அரசு முந்திக்கொண்ட இந்தப் பிரச்சினையில், அவர்களையும் முந்திட வேண்டும். தந்தை பெரியார் - கலைஞர் - திராவிடர் இயக்கம் வென்றுள்ளது!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும்

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

1.8.2018

 

(தி இந்து ஆங்கில நாளிதழில் 31.7.2018) அன்று வெளிவந்த செய்தி 7 ஆம் பக்கம் காண்க)

- விடுதலை நாளேடு, 1.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக