வியாழன், 2 ஆகஸ்ட், 2018

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: முதல் வெற்றி!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: முதல் வெற்றி! தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் - செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழர் தலைவர் நேரில் பாராட்டு
தந்தை பெரியார் அறிவித்து, தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால் சட்டமியற்றப்பட்டு, 48 ஆண்டுகாலப் போராட்டத்தின் பயனாக, ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மதுரை, தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் (இந்து அறநிலையத் துறையின்கீழ் உள்ளது) அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இப்பிரச்சினையில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

அதன் மகிழ்வாகவும், அடையாளமாகவும் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களையும், தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையும் நேற்று (1.8.2018) மாலை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து, வெற்றிக் கனியாக ஆப்பிளையும் அளித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

கலைஞர் நல்ல உடல்நிலையில் இருந்தால், அவரைச் சந்தித்து இந்த மரியாதையைத் திராவிடர் கழகம் செய்யும் - அந்த இடத்தில் நீங்கள் இருப்பதால், இந்தப் பாராட்டைச் செய்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடன் சென்றிருந்தார். (சென்னை, 1.8.2018)

கலைஞருக்கு நன்றி- வெற்றி விழா கொண்டாடுவோம்! தமிழ்நாடு அரசு ஆகமப் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தொடங்க வேண்டும்: செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 

சென்னை, ஆக.2 தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். திராவிடர் கழகம் அதை வரவேற்பதுடன், தி.மு.க. தலைவர் கலைஞருக்கு நன்றி வெற்றி விழா கொண்டாடுவோம் என்றும், அரசின் ஆகமப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரையும் அர்ச்சகர்களாக பணியில் நியமித்திட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு ஆகமப் பள்ளிகளைத் தொடங்கவேண்டும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் (1.8.2018) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியதாவது:

1969இல் தொடங்கிய ஒரு சமுதாயப் புரட்சிக்களம், ஒரு அறப்போராட்டம் ஒரு நல்ல வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும், ஜாதிப் பாம்பை தாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய அந்த முயற்சிகள் 1924 இல் வைக்கத்திலே தொடங்கின.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களிலே  அவை வெற்றி பெற்று, தண்ணீர் பானைகள் உடைக்கப்பட்டு, பல்வேறு இடங்களிலே சமத்துவபுரங்களாக மாற்றப்படக்கூடிய ஆட்சி வாய்ப்புகள் கிடைத்தன. தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு வழிவகுத்துவிட்டோம். ஆனால், கோயில் கருவறைக்குள்ளேதான் இது இன்னமும் நிலைப்பெற்றிருக்கிறது. ஆகவேதான், அங்கே நிலைப் பெற்றிருக்கக்கூடிய அதனை எதிர்த்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டிய போராட்டத்தை, அறப்போரைத் தொடங்கி, அதற்காக சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்ற மாநாட்டையும் தந்தை பெரியார் தன்னுடைய 95ஆவது வயது நிரம்பிய நிலையிலும்கூட, களத்திலே நின்றார்கள். இதே சென்னையிலே மாநாடு நடத்தி, போராட்டங்களை அறிவித்தார்கள்.

அந்த காலகட்டத்திலேதான் கலைஞர் அவர்களுடைய ஆட்சி, 1970இலே அதே கொள்கையுடன் உங்களுக்கு அர்ப் பணிக்கப்பட்ட ஆட்சி, ஆகவேதான், நீங்கள் எங்களுடைய ஆட்சியிலே போராட வேண்டிய அவசியமிருக்காது - சட்டம் கொண்டுவருகிறோம் என்று சொல்லி, ஆதிதிராவிடர் உள்பட, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும். அதன்மூலம் தீண்டாமை, ஜாதி ஒழிப்புக்கு அடித்தளம்  வகுக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

48 ஆண்டு கால வரலாறு. ஓர் அரை நூற்றாண்டு கால வரலாறு. திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சுக் கொள்கைகளிலே ஒன்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு.

1969-க்கு முன்பாக இந்திரா காந்தி தீண்டாமை ஒழிப்புக்காக இளைய பெருமாள் எம்பி தலைமையிலே ஒரு கமிட்டி அமைத்தார்கள். அந்த கமிட்டியின் இரண்டு பரிந்துரைகளில் மிக முக்கியமான பரிந்துரை அனைத்து ஜாதியினரும், குறிப்பாக ஆதிதிராவிடரிலிருந்து அர்ச்சகர்கள் அனைத்து கோயில்களிலும் நியமிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான பரிந்துரை. காங்கிரசு அரசுகளேகூட அதை பின்பற்றாதபோது, தந்தை பெரியார் விருப்பப்படி, கலைஞர் அரசு, திமுக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வரும்போது, ளிதீழீமீநீts ணீஸீபீ ஸிமீணீsஷீஸீs ஷீயீ tலீவீs ஙிவீறீறீ இந்த மசோதாவினுடைய நோக்கம் இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை செயல்படுத்துகிறோம் என்று கூறித்தான் மசோதாவை அறிமுகப்படுத்தினார்கள். அது 1970ஆவது ஆண்டிலே சட்டம் ஆயிற்று.

50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில் அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக 3 ஆணை யங்கள், 2 சட்டங்கள், 2முறை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகள் உள்ளன.

திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த

மாபெரும் வெற்றி

மதுரையில் தமிழக அரசின் சார்பில் பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராகப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

கலைஞருக்கு நன்றி வெற்றி விழா கொண்டாடுவோம். எல்லா தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிப்போம்.

36 ஆயிரம் கோயில்களில்...

செய்தியாளர்: 38 ஆயிரம் கோயில்களில் 36 ஆயிரம் கோயில்களில் ஆகமப்பயிற்சி பெற்றிருக்கவில்லை என்று கூறுகிறீர்கள்...? பயிற்சி பெற்றுள்ளவர்கள் 206 பேர் தானே இருக்கிறார்கள்?

தமிழர் தலைவர்: ஆம். அரசு அமைத்த குழுவின் பரிந் துரையில் 38 ஆயிரம் கோயில்களில் 36ஆயிரம் பேர் ஆகமப் பயிற்சி பெறவில்லை. 2 ஆயிரம் கோயில்களில் தான் ஆகமப்பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மதுரை மீனாட்சி யம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், வடபழனி முருகன் கோயில் போன்ற கோயில்களிலேயேகூட ஆகமப்பயிற்சி பெற்றிருக்கவில்லை.

இந்து சமய அறநிலையத் துறையின்படி அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி. ஓய்வு வயது உண்டு, தகுதிக் குறைவுகளால் பணியிடம் காலியாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, உடனடியாக தமிழ்நாடுஅரசு, இந்து சமய அறநிலையத்துறை ஆகமப்பயிற்சி பள்ளிகளை தொடங்கிட வேண்டும். சைவ, வைணவ கோயில் களுக்கு தனித்தனி பயிற்சிக் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

செய்தியாளர்: பயிற்சி பெற்ற 206 பேரில் சிலர் உயிரிழந்து விட்டார்கள். அவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கலாமே?

தமிழர் தலைவர்: தாராளமாக உதவி செய்ய வேண்டும். இந்த அரசைப் பொருத்த வரையில் இறந்தவர்களுக்கு கருணை காட்டுவதில் தாராளமாக இருக்கிறது. அது வரவேற்கவேண்டிய ஒரு மனிதாபிமானம்.

செய்தியாளர்: கேரளா, கருநாடகா, ஆந்திரப்பிரதேச மாநிலங் களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் இயங்கிவருகின்றன. பணியும் அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் எதிர்ப்பு ஏற்பட்டது?

தமிழர் தலைவர்: தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று அர்த்தம். அங்கெல்லாம் எதிர்ப்புகள் இல்லை. இன்னும்கேட்டால், தமிழ்நாட்டில் போட்டது சட்டம். கேரளாவில் போட்டது அரசாணை. இங்கே சட்டத்தை எதிர்த்து இத்தனை ஆண்டுகள் வழக்கு நடத்தியிருக்கிறார்கள். கடைசியில் கேரளாவிலும் வழக்கு தொடரப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தில் அந்த நியமனக் கொள்கைக்கு சாதகமாகவே தீர்ப்பு அளித்தார்கள்.

கேரளாவைவிட நியாயமாக தமிழ்நாடுதான் முந்தியிருக்க வேண்டும். திருப்பதியில்கூட பயிற்சிக்கல்லூரிகள் உள்ளன.

இங்கேகூட சத்தியவேல் முருகனார் பயிற்சிக் கல்லூரி நடத்துகிறார். சில இடங்களில் தனியார் பயிற்சி கல்லூரிகள் இருக்கின்றன. தமிழக அரசு பயிற்சி கல்லூரிகளைத் தொடங் குவது மட்டுமல்லாமல், அறநிலையத் துறை, தனியார் கல்லூரி களையும் அங்கீகரிக்க வேண்டும். போதுமான அளவுக்கு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் கோயில்களில் இருப்பதற்காகவும் அரசு கொள்கையளவில் முயற்சி எடுக்க வேண்டும்.

செய்தியாளர்: சிலை திருட்டுகள்-...?

தமிழர் தலைவர்: நடக்கிறதைப் பார்த்தீர்களானால், சிலை திருட்டுகளில் அர்ச்சகர்களை சந்தேகப்படவில்லை. அப்படியே சந்தேகப்படுகிறார்கள் என்று செய்தி வந்தாலும், அர்ச்சகர்கள் குற்றவாளிகள் அல்லர். பல நிரபராதிகள் கண்டிப்புடன் இருந் தார்கள் என்பதால் பெரிய அதிகாரிகள் உள்பட திட்டமிட்டு பழிவாங்கப்படக்கூடிய தன்மை இருக்கிறது.  ஒரு பெரிய பெண் அதிகாரியைக்கூட கைது செய்திருக்கிறார்கள்.

சிலைதிருட்டுகளில் தமிழக அரசே சிபிஅய் விசாரணை கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் குறிப் பிட்டார்.

உடன் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் இருந்தனர்.

- விடுதலை நாளேடு, 2.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக