பிபிசி தமிழ் இணையத்துக்கு தமிழர் தலைவர் பேட்டி
செய்தியாளர்: முரளிதரன் காசிவிஸ்வநாதன் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திற்கே முரணானது; இந்த அரசியலமைப்பை உருவாக் கியவர்களின் கொள்கைக்கு எதிரானது என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிலையில், திராவிடர் கழகத்தின் தலைமை யகமான பெரியார் திடலில் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் இது தொடர்பாகப் பேசினார் கி. வீரமணி. பேட்டியிலிருந்து:
கேள்வி: பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது சரியான முடிவா?
பதில்: இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவமே காலகாலமாக கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதி அமைப்புக்கான தத்துவம். இந்தியாவில்தான் ஜாதி அமைப்பு இருக்கிறது. மனு தர்மம்தான் முதலில் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை உருவாக்கியது. இந்த ஜாதிக்காரர்கள் இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறியது. பிராமணனுக்கு கல்வியும், சத்திரியனுக்கு படையும், வைசியனுக்கு வியாபாரமும், சூத்திரனுக்கு அடிமைத் தொழிலும் செய்ய வேண்டுமென வகுக்கப்பட்டது. இந்த ஜாதி அமைப்பு காரணமாக மிகப் பெரும்பான்மையான மக்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களானார்கள். இதை சரிசெய்யத்தான் 1928இல் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்த போது, தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பின்னால், அரசியல் சட்டத்தில் உள்ள சமத்துவம் என்ற தத்துவத்தைச் சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இட ஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பை வழங்கின. இதற்குப் பிறகு, தந்தை பெரியார் போன்றவர்கள் போராடியதன் விளைவாக இதற்காக அரசியல் சட்டம் திருத்தப் பட்டது. அப்போது பிரதமராக ஜவஹர்லால் நேருவும், சட்ட அமைச்சராக அம்பேத்கரும் இருந்தனர். முதலில் கல்வியில் முன்னுரிமை அளிக்க அரசியல் சட்டத்தைத் திருத்தி 15-4 என்ற பிரிவை உருவாக்கினார்கள். தாழ்த்தப்பட்டவர் களைப் பொருத்த வரை, ஷெட்யூல்ட் காஸ்ட் என்ற பட்டியல் இருந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களை வரையறுக்க என்ன செய்வது? அரசியல் சாசனத்தின் 340ஆவது பிரிவில் ஒரு அம்சம் இருக் கிறது. "சமூக ரீதியாகவும், கல்வி ரீதி யாகவும்" பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அதில் உள்ளது. அதே வரையரையை இந்த 15-4இலும் வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நம்முடைய அரசியலமைப்புச் சட்டத் தின் 340ஆவது பிரிவை உருவாக்கும்போதும், முதல் முதலாக அரசியல் சட்டத்தைத் திருத்தும்போதும் ஒரு கேள்வி எழுந்தது. பொருளாதார ரீதியில் பின் தங்கியவர் களை இதில் சேர்க்க வேண்டுமா என்பது தான் அந்தக் கேள்வி.
இந்த மக்கள் ஒதுக்கப்பட்டது சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும்தான்; பொருளாதார ரீதியில் இன்று பின்தங்கிய வர்கள் நாளை மேம்படலாம். இன்றைய பணக்காரன், நாளை ஏழையாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இன் றைய கீழ் ஜாதிக்காரன் என்றைக்கும் கீழ் ஜாதிக்காரன்தான் என்பது சுட்டிக் காட்டப்பட்டது. அதனால் தான், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் என்று மிகத் தெளிவாக 15-4இல் குறிப் பிடப்பட்டது. இருந்தபோதும் மத்திய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல்தான் இருந்தது. 340ஆவது பிரிவை முன் வைத்து, இந்த விவகாரம் பற்றி ஆராய ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அதுதான் மண்டல் ஆணையம். அந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்தது. அதிலும் 'சமூக ரீதியிலும் பொருளா தார ரீதியிலும் பிற்படுத்தப்பட்டவர்கள்' என்பது குறிப்பிடப்பட்டது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உயர் ஜாதியினரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட் டோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத் தினார். இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை (இந்திரா சஹானி வழக்கு) 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இடஒதுக்கீடு என்பது 'சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப் பட்டவர்களுக்குத் தான்; பொருளாதார ரீதியில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு அல்ல' என நீதிமன்றம் தீர்ப் பளித்தது. மேலும் "இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப் புத் திட்டமல்ல; அதற்கு வேறு திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். இது வாய்ப்புகள் மறுக்கப் பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பது" என்பதைச் சுட்டிக்காட்டியது.
அதேபோல எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, இடஒதுக்கீட்டைப் பெற 9,000 ரூபாய் ஆண்டு வருவாய் என்பதை ஒரு வரம்பாக அறிமுகப்படுத்தினார். இதனைத் தி.மு.க, தி.க., சி.பி.அய். ஆகிய கட்சிகள் எதிர்த்தன. ஓராண்டு இது அமலில் இருந்தது. இதற்கு அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி யடைந்தது. அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை எம்.ஜி.ஆர். கூட்டியபோது நான் இது தொடர்பாக அவருக்கு விளக்க மளித்தேன். "பொருளா தார நிலை என்பது மாறக்கூடியது. பலரது வருமானம் நிலையில்லாதது. குறிப்பாக விவசாயி களின் வருவாய் தொடர்ந்து மாறும். நல்ல மழைக் காலத்தில் நல்ல வருவாயும், வறட்சிக் காலத்தில் மிக மோசமான நஷ்டமும் ஏற்படும். அந்த நிலையில், பொருளாதார நிலையை எப்படி அடிப்படையாக வைக்க முடியுமென" கேட்டேன்.
அதேபோல, அரசு ஊழியராக இருப்பவர் காஞ்சிபுரத்தில் இருக்கும்போது 8,500 ரூபாயைப் பெறுவார். அவர் சென்னைக்கு மாற்றப்பட்டு, சிட்டி அலவன்சை கூடுதலாகப் பெறும்போது 9,000 ரூபாயைப் பெறுவார். உடனே அவர் முற்பட்ட வகுப்பாகிவிடுவார். இது எப்படி சரியாக இருக்கும் என்று கேள்வியெழுப்பினேன். எம்.ஜி.ஆர். விளங்கிக்கொண்டார். அதனை நீக்கினார்.
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டில், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகள் என்று குறிப்பிடுகிறார்கள். அது எப்படி சரியாக இருக்கும்? இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. அதற்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன. இரண்டின் நோக்கங்களும் வேறு.
இவர்கள் கொண்டுவரும் மசோதா உச்ச நீதி மன்றத்தில் நிற்காது. அதற்காக இவர்கள் அரசியல் சட்டத்தை திருத்தினாலும் அது செல்லாது. நம்முடைய அரசியல்சட்ட கர்த்தாக்கள் எதை மனதில் வைத்து 'சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும்' என்ற வார்த்தைகளை வைத்தார்களோ, அது அடிபட்டுப் போய்விடும் என்ப தால் நீதிமன்றம் அதனை ஏற்காது. இது மத்திய அரசுக்குத் தெரியாமல் இல்லை.
அய்ந்து மாநிலத் தேர்தல் தோல்விதான் அவர்களை இந்த முடிவை எடுக்கச் வைத்திருக்கிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள பிராமணர்களின் வாக்கு களைப் பெற பா.ஜ.கவினர் விரும்புகிறார்கள். இதுபோக, காயஸ்தர்கள், சத்திரியர்கள் இருக்கிறார்கள். அவர்களது வாக்குகளையும் பெறுவ தற்கான அரசியல் திட்டம் இது.
தவிர, 8 லட்ச ரூபாய் வருவாய் வரம்பு, நில வரம்பு ஆகியவற்றை முன்வைத்திருக்கிறார்கள். இந்த வரம்பு களைப் பார்க்கும்போது இது ஏழைகளுக்குப் பயன்படாது, நடுத்தர வர்க்கத்திற்குத்தான் பயன்படும் எனத் தோன்று கிறது. சமூக நீதியின் அடி வேரையே பறிக்கும் செயல் இது.
கேள்வி: பொருளாதார ரீதியில் பின் தங்கியவர் களுக்கான இட ஒதுக்கீட்டை நரசிம்மராவ் கொண்டு வந்தபோது, முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததா?
பதில்: அவர் முன்னேறிய பிரிவினர் என்றுகூடச் சொல்லவில்லை. The reservation of the 10 percent is in favour of the economically backward section of the people who are not covered by any existing reservations என்றுதான் கொண்டுவந்தார். ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.
கேள்வி: தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா ஒருவேளை நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டு விட்டால்....?
பதில்: நிறைவேறினால், நீதிமன்றத்திற்குச் செல் வோம். நாங்களே போவோம். நீதிமன்றத்தில் நிச்சயம் அடிபடும். குஜராத்தில் 2016இல் இதேபோல முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அவசரச் சட்டமாகவே கொண்டு வந்தார்கள். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்குச் சென்றபோது, நீதி மன்றம் அதனை ஏற்கவில்லை. குஜராத்தில் செய்த தைத்தான் இவர்கள் இப்போது மத்தியில் செய் கிறார்கள். இதுவும் நீதிமன்றத்தில் அடிபட்டால் அவர்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. 'நாங்கள் செய்ய விரும்பினோம். நீதிமன்றம் தடுத்துவிட்டது' என்று சொல்லிவிடுவார்கள்.
கேள்வி: மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இந்திய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி உடனடியாக எதிர்வினைகள் ஏதும் இல்லையே ஏன்?
பதில்: இனிமேல்தான் வரும். திருவாரூர் தேர்தல் தள்ளிவைப்பு போன்ற செய்திகளில் இது பெரிதாகத் தெரியாமல் போயிருக்கலாம். எங்களைப் போன்ற சமூக நீதிக்கான இயக் கங்கள் முதலில் பேசுவோம். பிறகு எல்லோரும் சேர்ந்துகொள்வார்கள். வட இந்தியாவில் உள்ள கட்சிகளைப் பொருத்தவரை இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவமே அவர்களுக்குப் புரியாது. இடஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவத்தை தென்னாட்டில் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை அரசியலுக்குத்தான் முதலிடம். சமூக நீதிக்கு இரண்டாவது இடம்தான். தென்னாட்டிலும்கூட பினராயி விஜயன் போன்ற வர்கள் இதை வரவேற்பேன் எனக் கூறுவது அதிர்ச் சியளிக்கிறது. ஏற்கெனவே எம்.ஜி.ஆர். காலத்தில் வருமான வரம்பு கொண்டு வந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் நிலைப் பாட்டை புரிந்து கொண்டு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருமான வரம்புக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், சில நாட்கள் கழித்து புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
கேள்வி: இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டால், மாநிலங்களும் உடனடியாக இதனைப் பின்பற்ற வேண்டியிருக்குமா?
பதில்: ஆமாம். மாநிலங்களும் இதைச் செய்ய வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் ஒரு சட்டம் எல்லோருக்கும் பொருந்தும். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனவும் இவர்கள் தான் சட்டம் கொண்டுவந்தார்கள். எல்லா மாநிலங் களும் அதை நிறைவேற்றவில்லை. பல மாநிலங்களில் 12 சதவீதம்தான் அதை நிரப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் குறையை அந்தந்த மாநிலங்களில் உள்ளவர்கள்தான் கேட்க வேண்டும்.
கேள்வி: முன்னேறிய ஜாதியினரில் இடஒதுக் கீட்டிற்கான கோரிக்கை இந்திய அளவில் எவ்வளவு வலுவாக இருந்தது?
பதில்: கோரிக்கை இருந்தது. ராஜபுத்திரர்கள், பட்டேல்கள், தாகுர்கள் போன்றவர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. இந்த பத்து சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் அது 50 சதவீதத்தைத் தாண்டிவிடும். அதனால், இதனை அரசியல் சாசனத்தின் 9ஆவது ஷெட்யூலில் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால், அதிலும் நீதிமன்றம் தலை யிடும் வாய்ப்பு உள்ளது.
கேள்வி: தமிழ்நாட்டில் சமீப காலமாக இடஒதுக் கீட்டிற்கு எதிரான மன நிலை உருவாகியிருப்பதாகத் தோன்றுகிறது. என்ன காரணம்?
பதில்: இந்தியாவில் 69 சதவீத இடஒதுக்கீடு இங்கேதான் இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. அண்ணா மேம்பாலத்தின் மீது வேகமாகச் செல்பவர்களுக்கு, அந்தப் பாலம் கட்டுவதற்கு முன்பாக இருந்த போக்குவரத்து நெரிசல் பற்றித் தெரியாது. ஏனென்றால், அவர்கள் வசதியாகச் செல்ல யாரோ பாடுபட்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியற்றை இட ஒதுக்கீட்டில் பெற்றிருப்பார்கள். ஆனால், அது எப்படி வந்தது எனத் தெரியாது. தொடர்ந்து அவர்களுக்கு விளக்க வேண்டும். ஆனால், பொதுவாகப் பார்த்தால் அப்படியான எதிர் மனநிலை இல்லையென்றுதான் சொல்வேன்.
நன்றி: பி.பி.சி. தமிழ் இணையம், 9.1.2019
- விடுதலை நாளேடு, 13.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக