பக்கங்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு - கூடாது ஏன்?



கோ. கருணாநிதி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 31.1.2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, அரசின் கல்வி நிலையங்களிலும், அரசின் வேலைவாய்ப்பிலும், பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பத்திரிக்கையாளர்களிடம் இக்கூட்டமைப்பின் சார் பில் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி கூறியதாவது:

1. உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு, அரசின் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திட வகைசெய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானதாகும்.

2. இந்திய இந்து சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் சிலர் உயர்ந்தவர்கள், பெரும்பான்மை மக்கள் சூத்தி ரர்கள், தாழ்ந்தவர்கள் என பல நூறு ஆண்டு காலமாக கற்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மறுக்கப் பட்டன. அந்த மக்கள் பல இழிவுகளை சுமந்து வந்தனர்.

3. இவ்வாறு ஜாதியின் அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்பின் அடிப்படையில் சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

4. அதனால் தான், அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5. ஆனால் தற்போது மத்திய அரசின் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று அறிவித்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

6. சமூகரீதியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்குத் தான் இட ஒதுக்கீடு அளிக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டம் இதைத்தான் அனுமதிக்கிறது.

7. பொருளாதார ரீதியில் நலிந்தவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கிட, அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. இப்போது சட்டத்திருத்தம் செய்து விட்டதனாலேயே, அது சட்டப்படி சரி என்று கூற முடியாது. 8. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள், உயர்ஜாதியில் மட்டும் இல்லை. எல்லா ஜாதியிலும் உள்ளார்கள். 9. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் முன்னேற, நலத் திட்டங்கள்தான் தீர்வே தவிர, இட ஒதுக்கீடு அல்ல. அதனால்தான், பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்கள், மலிவாகவும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

10. அரசியல் அமைப்புச் சட்டம் முதல் திருத்தத்தின் போதே, பொருளாதார அளவுகோல் சேர்க்கப்பட வேண்டும் என்ற சில உறுப்பினர்களின் கோரிக்கை, தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

11. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட ஆணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொருளாதார அளவுகோலை மட்டும் வைத்து, இட ஒதுக்கீடு கொடுக்கமுடியாது என ரத்து செய்தனர்.

12. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் குறித்து 2005-ல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சின்கோ கமிசன் தனது பரிந்துரையை ஜூலை 2010-இல் அளித்தது. தனது அறிக்கையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தர முடியாது; நலத் திட்டங்கள் மட்டுமே தர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

13. அரசியல் அமைப்புச் சட்டமும், நீதிமன்றமும், அரசு அமைத்த ஆணையமும், சமூகரீதியாக கல்விரீதியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்குத்தான் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.

14. உயர்ஜாதியில் உள்ள நலிந்தவர்கள் உள்ளிட்ட எவருக்கும், எந்த காலத்திலும், கல்வி உரிமை மறுக்கப்பட வில்லை. எந்த இழிவையும் அவர்கள் சந்திக்கவில்லை. 15. அதுமட்டுமல்ல. அரசின் அனைத்து நிர்வாகத் திலும், உயர்கல்வி நிலையங்களிலும், தங்களின் மக்கள் தொகைக்கு மிக மிக அதிகமான அளவில் பிரதி நிதித்துவம் பெற்றுள்ளார்கள்.

அ. எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் 40 பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்கள் பதவிகளில், உயர்ஜாதியினர் 95 விழுக்காடு உள்ளனர். துணைப் பேராசிரியர் பதவிகளில் 93 விழுக்காடும், உதவி பேராசிரியர் பதவிகளில் 66  விழுக்காடும் உள்ளனர். மீதம் உள்ள நிலைகளில் இட ஒதுக்கீடு உரிமை உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இருக் கின்றனர். குறிப்பாக, பேராசிரியர் 1125 பதவிகளில், துணைப் பேராசிரியர் 2620 பதவிகளில், ஒருவர் கூட பெரும்பான்மை மக்களைக் கொண்ட பிற்படுத்தப் பட்டோர் இல்லை.

ஆ. இதேபோன்று, குரூப் ஏ பதவிகளில், உயர் ஜாதியினர் 70 விழுக்காடு பதவிகளில் உள்ளனர். பொதுத் துறை நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பதவிகளிலும், உயர்ஜாதியினர் 60 விழுக்காட்டிற்கும் மேலே உள்ளனர். உயர்பதவிகளில், 90 விழுக்காடு உள்ளனர்.

16. அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 16 (4)-ன் படி, அரசுத் துறையில் போதிய பிரதிநிதித்துவம் தருவதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியும்.

17. ஆனால், மக்கள் தொகையில் 15 விழுக்காடு உள்ள உயர்ஜாதியினர், ஏற்கனவே அரசின் உயர் பதவிகளில் 70 முதல் 90 விழுக்காடு வரை பிரதி நிதித்துவம் உள்ளபோது, அதில் பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் என்று பிரித்து, மேலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது, சமூக அநீதி மட்டுமல்ல. பாபா சாகிப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கின்ற செயலாகும்.

18. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்ட மல்ல. சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் ஜாதியின் காரணமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அதிகாரத்தில் வழங்கப்படும் பங்கு. 19. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அரசு, அவர்களுக்கு, கல்வி கற்க ஊக்கத்தொகை அளிக்கலாம்; கல்விக் கடன் குறைந்த வட்டியில் தரலாம். அப்படிப்பட்ட திட்டங்களும் அரசு கொண்டு வந்துள்ளது. சிறப்புப் பயிற்சி அளிக்கலாம். ஆனால், இட ஒதுக்கீடு தீர்வு அல்ல. 20. ஏற்கெனவே, தங்களது விகிதாசாரத்திற்கு பன் மடங்கு அதிகமாக (70 விழுக்காட்டிற்கும் மேல்) அதி காரத்தை கையில் வைத்திருக்கும்,உயர்ஜாதியினர்க்கு, குறுக்கு வழியில், மேலும் 10 விழுக்காடு அளிப்பது, சமூக அநீதியாகும்; பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமை பறிக்கும் செயலாகும்.

21.         உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை எந்த ஒரு அரசின் ஆணையமும் தெரிவிக்கவில்லை. அப்பிரிவு மக்கள், போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என்ற புள்ளிவிவரம் எதனையும் மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் சரி, மக்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.

22. மத்திய அரசு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தர உள்ளதாக அரசின் சார்பில் சொல்லப்படுகிறது. இது மக்களை ஏமாற்றுவதற்கும், திசை திருப்புவதற்குமான சொல் தானே தவிர உண்மை அல்ல. 23.              உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரி வினர் என்போர், ஆண்டு வருமானம் ரூ.எட்டு லட்சத் திற்கும் குறைவாக உள்ளோர் அதாவது மாதம் ரு.65000 பெறுபவர், நலிந்த பிரிவில் இட ஒதுக்கீடு பெறலாம். அதேபோன்று, 1000 சதுர அடிக்கு குறைவாக அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளோர், அய்ந்து ஏக்கருக்கும் சற்று குறைவாக நிலம் வைத்திருப்போர் நலிந்த பிரிவில் இட ஒதுக்கீடு பெறலாம். இவர்கள் எல்லாம் ஏழைகளா?

24. மேற்குறிப்பிட்ட அளவுகோல் ஒன்றே, இந்த சட்டம் யாருக்குப் பயன்பட போகிறது என்பதை தெளி வாக்குகிறது. ஒருபுறம், ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் மேல் இருந்தால், வருமான வரி கட்ட வேண்டும் என்று அரசு சொல்லி விட்டு, இன்னொருபுறம், அவர் களை நலிந்த மக்கள் என வரையறுப்பது, கேலிக்கூத்து மட்டுமல்ல. அரசின் நோக்கமே வேறு என்பதை எடுத்துக் காட்டுகிறது.

25.         மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு, பள்ளிகளில் இட ஒதுக்கீடு உள்ளது. புதுடில்லியில் ஆண்டு வருமானம் ரூ.65000-க்கும் குறைவாக உள் ளோர், இந்த இட ஒதுக்கீடு பெறலாம். அதற்கு மேல் இருந்தால் பள்ளியில் சேர முடியாது. ஆனால், தற் போதைய 10% இட ஒதுக்கீடு, மாத வருமானம் ரூ.65000 இருந்தால் பெறலாம். இத்தகைய முரண்பாட்டை உள்ளடக்கி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

26.         மத்திய அரசில் அரசியல் அமைப்புச் சட்டத் தின்படி, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்க்கு இட ஒதுக்கீடு இருந்தும், அது முறையாக நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இப்பிரிவு மக்கள், 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே அரசு பதவிகளில் உள்ளனர். இது குறித்த புள்ளி விவரங்கள் நிறையவே உள்ளன.

27. ஆனால், உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதில், அரசு இவ்வளவு வேகம் காட்டுகிறது. இதனை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

28.         அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சமூக நீதிக் கோட்பாடு தான் முதன்மையாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சமூக நீதிக் கோட்பாட்டை முற்றி லுமாக நீக்கி, பொருளாதார அளவுகோலை உயர்ஜாதி மட்டுமன்றி, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைவருக்கும் பொதுவாக்கி, அதன்மூலம், தொடர்ந்து தங்களின் ஆதிக்கத்தை தளர்த்த விடாமல், உறுதிப்படுத்திக் கொள்ள, எடுக்கப் பட்ட மிகப் பெரிய திட்டமே இந்த சட்டம்.

29. ஆகவே தான், இந்த ஆபத்தை பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் உணர்ந்து, ஒன்றிணைந்து அறவழியில் போராட வேண்டும்; சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்க நினைக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் என்று தெரிவிக்கவே, எங்களது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங் களின் கூட்டமைப்பு இந்த செய்தியாளர் சந்திப்பின் வழியே தெரிவிக்கிறோம்.

30. உயர்ஜாதியினர்க்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்க்கும் அதே வேளையில், இதன் ஆபத்தை உணர்ந்து, சமூக நீதியைக் காப்பாற்றிட, அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என அனைத்து சமூக நீதி அமைப்புகளுக்கும், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்கங்களின் கூட்ட மைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

31. சமூக நீதியில் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து, அனைத்து மாநிலங் களிலும், போராட்டம் நடத்திடவும் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் ஜே.பார்த்தசாரதி - செயல் தலைவர், எம். இளங்கோவன் - பொருளாளர், எம்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் -துணைப் பொதுச் செயலாளர், இராம. வேம்பையன் - அமைப்புச் செயலாளர், செய லாளர்கள் ஏ.ராஜசேகரன், எஸ்.பிரபாகரன், அன்புகுமார் மற்றும் யூனியன் வங்கி கே.சந்திரன் ஆகியோர்  பத்திரிக்கை யாளர் சந்திப்பில் உடன் இருந்தனர்.

-  விடுதலை நாளேடு, 2.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக