பக்கங்கள்

வியாழன், 3 நவம்பர், 2016

பல்கலைக்கழகங்களில்  பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு


பிற ஏட்டிலிருந்து....

பல்கலைக்கழகங்களில்  பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு

 

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமனங் களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அறிவிப்பை வெளியிட்டுள்ள யுஜிசிக்கு ஜார்க்கண்ட் துணைவேந்தர் நந்தகுமார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக்குழு உதவிப் பேராசிரியர்கள் நியமனங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் நந்தகுமார் மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

யுஜிசியின் அறிவிப்பானது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மீறுவதாக உள்ளது. ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவ தற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் விளம்பர அறிவிப்பை வெளியிட தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தேசியக் கொள்கையை மாற்றுகின்ற அதிகாரத்தை யுஜிசி பெற்றுள்ளதா? என்று அவருடைய கடிதத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார். ஜார்க்கண்ட் துணை வேந்தர் நந்தகுமார் தன்னுடைய கடிதத்தில் குறிப் பிடும்போது, மத்திய அரசின் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணிகள், பதவியிடங்களில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. உதவிப் பேராசிரியர்கள் அல்லது கூடுதல் பேராசிரியர்கள் அல்லது பேராசிரியர்கள் பதவிகளில் தனித்தனியே ஒதுக்கீடு என்று கிடையாது.

தேசியக் கொள்கையின்படி, காலிப்பணியிடங்களில்  நேரடியாக நியமனங்கள் செய்யப்படல் வேண்டும். காலிப்பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யுஜிசியின் சார்பில் பணி நியமனம்குறித்து இரண்டு கடிதங்கள் பல் கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 23.3.2016 அன்று ஒரு கடிதமும், 3.6.2016 அன்று மற்றொருகடிதமும்அனுப்பப்பட்டுள்ளது.அக் கடிதங்களில் யுஜிசி குறிப்பிடும்போது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உதவிப் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் அனைத்து நிலை களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு, முதல் கட்ட நிலையில்மட்டும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் இதே பிரச்சினையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய முயல்கிறது என்று மத்திய அரசைக் குற்றம் சாட்டியிருந்தார். யுஜிசி யின் மூத்த அலுவலர்கள் கூறும்போது, 2007ஆம் ஆண்டு முதல் இதே நிலையைத்தான் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்கள். யுஜிசியின் அறிவிப்பிற்கு துணைவேந்தர் பேராசிரியர் நந்த குமார் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரி வித்துள்ளார்.அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான யுஜிசியின் அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என்றும், உடனடியாக இதுகுறித்த வழிகாட்டுதல்களை யுஜிசிக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மத்திய அரசின் இறுதி முடிவு வரும்வரை பல்கலைக்கழத்தில் கூடுதல் பேராசிரியர்கள், பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் துணைவேந்தர் நந்தகுமார், தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- நன்றி: “தினஇதழ்”, 31.10.2016  தலையங்கம்.
-விடுதலை,2.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக