பக்கங்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2016

கோயில் பிரவேசம்

20.11.1932 - குடிஅரசிலிருந்து...
நம்மைப் பொறுத்தவரை நாம் கோவில் பிரவேசம் என்பதற்கு அனுகூலமாகத் தான் இருக்கின்றோம். எதற்காக என்றால், உயர்வு தாழ்வு மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பவற்றை நிலை நிறுத்தவும் மக்களுக்குள் கொள்வினை, கொடுப்பினை, உண்பன, தின்பன ஆகியவை இல்லாமல் பிரித்து வைக்கவும், அவற்றை அனுபவத்தில் நடத்தவும் நிலைநிறுத்தவும், ஏற்பட்ட பல சூழ்ச்சி தாபனங்களில் கோவில் பிரவேசத் தடுப்பும் கோவிலுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்குப் பல வித்தியாசங்களும் முக்கியமானவைகளில் ஒன்று என்பதாகத் தான் கருதி இருக்கிறோம்.
ஆதலால் அவற்றை ஒழிக்க கோவில் நுழைவு தடுப்பும் வித்தியாசங்களும் அழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் அது பக்திக்காக என்றும் கடவுள் தரிசனைக்கா வேவென்றும் சொல்வதையும்  அதன் பேரால் மதம், சாதிரம், புராணம் ஆகியவைகளைப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு மூட நம்பிக்கையை உண்டாக்க முயற்சிப்பதையும் கண்டிக் காமல்  இருப்பதற்கில்லை.
ஒற்றுமை என்னும் விஷயத்திலும் மதம், மத வித்தியாசம் என்பவைகள் உள்ளவரை இரு சமுகத்திற்கு உண்மையான ஒற்றுமை என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. சுய ராஜ்யம் என்பது கிடைத்து விட்டாலும் உண்மையான ஒற்றுமை என்பது ஏற்பட்டு விடாது.
உதாரணமாக, இன்றைய தினம் துருக்கியும் சுயராஜ்யம் பெற்ற நாடு, கிரீசுதேசமும் சுயராஜ்யம் பெற்ற நாடு. இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட அபிப்பிராயப் பேதத்தால் கிரீசில் இருந்த இலாமியர்கள் பத்து லட்சக்கணக்காய் துருக்கிக்கு துரத்தப்பட்டு விட்டார்கள்.
துருக்கியிலிருந்து கிறித்தவர்கள் பத்து லட்சக்கணக்காய் கிரீசுக்கு குடியேறி விட்டார்கள். ஆனால், இதற்குக் சமா தானம் அவர்கள் துரத்தப்பட வில்லை.
தானாகவே அவரவர்கள் தேசத்திற்கு ஓடி  விட்டார்கள் என்று சொல்லக் கூடும். எப்படி யிருந்தாலும் அபிப்பிராய பேதமேற்பட்ட காலத்தில் மதம் காரணமாய் சொத்து சுகங்களை விட்டு விட்டு பெண்டு பிள்ளைகளை நாட்டை விட்டு ஓடும் படியாய் ஏற்பட்டு இன்று சாப்பாட்டிற் கில்லாமல் பட்டினியாய் கிடந்து தவிக்க நேரிட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
மற்றும் சில சுயராஜ்ய நாடுகளிலும் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டாஸ்டெண்டு களுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டு பல கொடுமைகள் அடைந்து வருகிறார்கள். இவற்றிற் கெல்லாம். அந்நிய ஆட்சி இருந்து கலகங்களையும் அபிப்பிராய பேதங் களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தென்றே சொல்லி விட முடியாது.
ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத் துறையில் மக்கள் எல்லோருக்கும் சமத்துவம் இருக்கும் படியான ஏற்பாடுகளுக்கு ஏற்ற காரியங்கள் செய்ய பட்டாலொழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப் பட கூடியதில்லை என்றே சொல்லுவோம்.
எனவே, அதை விட்டு விட்டு ஒற்றுமை மகாநாடுகளுக்கும் கோவில்  நுழைவு பிரசாரமும் செய்வது மேற்கூறிய படி இந்து மதப் பிரச்சாரமும் சாத்திர புராணப் பிரசாரமும் என்றுதான் சொல்ல வேண்டிருக்கிறது. இம்மாதிரி பிர சாரங்களால் நாட்டிற்கோ, மனித சமுகத்திற்கோ ஒரு நன்மையையும் செய்து விடமுடியாது.
இரு சமூகங்களிலும் மேல் நிலையில் உள்ள அதிகாரம் பதவி பட்டம் செல்வம் ஆகியவற்றில் பற்றுக் கொண்ட சில மக்களைத் திருப்தி செய்யலாம்.
அவர்கள் சிறிது நாளைக்கு பாமர மக்களை ஏமாற்றி அடக்கி வைக்கலாம் இவ்வளவு தானே ஒழிய, சமூக சமத்துவத்தையோ சமுக ஒற்றுமையையோ பொருளாதார சமத்துவத்தையோ நிலை நிறுத்தி விட முடியாது.
-vsodlnr,3.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக