பக்கங்கள்

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மண்டல் குழு பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27% அளிக்கப்படாமல் வஞ்சித்து வரும் மத்திய அரசின் துறைகள்!


மண்டல் குழு பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27%

அளிக்கப்படாமல் வஞ்சித்து வரும் மத்திய அரசின் துறைகள்!

அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்



சென்னை, டிச.10 24 ஆண்டுகள் ஆன போதிலும் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான வேலைவாய்ப்பில் மண்டல்  குழு பரிந்துரை பின்பற்றப்படாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமூக நீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில் மண்டல்  குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டது. மண்டல் குழு பரிந் துரையின் பேரில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

சமூகநீதியை எட்டிட பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அய்ந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார். மண்டல் குழுவின் பரிந் துரையின்படி, மத்திய அரசுப் பணிகளில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பின் பற்றாத நிலை தொடர்ச் சியாக இருந்துவருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின்படி,

மத்திய அமைச்சக அலுவலகங்கள் 35இல் 24லும், மத்திய அரசுத் துறைகள் 37இல் 25இலும், அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்தவேண்டிய அமைப்புகளாக உள்ள பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றில் மண்டல் பரிந் துரைகள் கடந்த 24 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.

பெறாத பயன் நிலை

நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசுத் துறை களில் உள்ள பணிவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட் டவர்கள் பெரிதும் பயன்பெறாதநிலையே இருந்து வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் கடந்த 8.9.1993 அன்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அலுவலகம் 1.1.2017 அன்று வெளியிட்ட தகவலின்படி, மத்திய அரசின் 24 அமைச்சக அலுவலகங்களில் குரூப் ஏ பிரிவு அலுவலர்களில் 17 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வர்கள் உள்ளனர். குரூப் பி பிரிவில் 14 விழுக்காட்டுக்கும் கீழ் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். குரூப் சி பிரிவில் 11 விழுக்காட்டள விலும், குரூப் டி பிரிவில் 10 விழுக்காட்டளவிலும் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர்.

மத்திய பணியாளர் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் மக்களவையில் கூறியதன்படி, மண்டல் குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட் டவர்களுக்கு மத்திய அரசுப்பணிகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று 1993ஆம் ஆண்டில் உத்தரவானது. 1.1.2014  அன்றுவரை மத்திய அரசின் 71 அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகளில் 19.24 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். பணியிடங்களில் காலிப்பணியிடங்களை அடையாளம் காண்பது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை நியமிப்பதற் கான நடைமுறைகளில் கால இடைவெளி முக்கிய காரணமாக உள்ளது.

மத்திய அரசின் 24 அமைச்சகங்கள், 25 துறை களில்  குரூப் ஏ பிரிவில் 14 விழுக்காடு, குரூப் பி,சி,டி ஆகிய பிரிவுகளில் முறையே 15, 17, 18 விழுக்காட்டளவில்தான் பிற்படுத்தப்பட்ட வர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய இடங்களை விட குறைவானதாகவே இருக்கிறது.

அமைச்சக செயலகத்தில் ஒரு வரிகூட இல்லை

அமைச்சக செயலகத்தில் குரூப் ஏ அலுவலர் களுக்கான பிரிவில் 64 பணியிடங்களில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்பட வில்லை. திறந்த போட்டியில் 60 பேரும், தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடத்தில் நால்வரும் இடம்பெற்றுள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் குரூப் ஏ பிரிவு அலுவலர்கள் 503 பேரில் 25பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்.

2015ஆம் ஆண்டில், மத்திய அரசின் 12 அமைச் சக அலுவலகங்களிலும் 10 துறைகளுக்கான அலுவலகங்களிலும் குரூப் ஏ பிரிவு அலுவலர் களில்  10.71 விழுக்காட்டளவில் மட்டுமே பிற் படுத்தப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குரூப் பி பிரிவில் அலுவலர்களில் 7.18 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டனர். 2013ஆம் ஆண்டில் 55 மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட வர்கள் 9.43 விழுக்காட்டளவில் நியமிக்கப்பட் டனர். மத்திய அரசு அலுவலகங்களில் மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத் தப்பட்டவர்களுககான பணியிடங்கள் குறித்து விவரங்களைக் கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஈ.முரளிதரன் என்பவர் விண்ணப்பித்தார். அவர் கூறுவதாவது:

விவரம் தராத இரயில்வே துறை

“இந்த விவரங்கள் மட்டுமே முழுமையான தகவல்களை அளித்துள்ளதாக ஆகிவிடாது. ஏனென்றால், அதிகமான அளவில் பணியாளர் களை நியமித்துவருகின்ற துறைகளான ரயில்வே துறை, பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் 11 அமைச்சகங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பணியாளர்கள்குறித்த தகவலை அளிக்கவே மறுத்துள்ளன. மத்திய அமைச்சகங் களில் அதிக அளவிலான பணியிடங்களைக் கொண்டுள்ள அமைச்சகங்கள்தான் 91.25 விழுக் காட்டளவில் மத்திய அரசின் பணிவாய்ப்புகளைக் கொண்டுள்ளனவாக உள்ளன. 24 அமைச்சகங் களின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 8.75 விழுக்காட்டளவில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வர்கள் உள்ளனர்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி மத்திய அரசின் துறைகளில், ரயில்வே துறையில் 13 லட்சத்து 28ஆயிரத்து 199 பணியிடங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் வகுப்புகள் ரீதியிலான புள்ளிவிவரத்தகவல்கள் கிடையாது. மத்திய அரசின் பணிகள் 31 லட்சம் இருப்பதற்கு மாறாகவே புள்ளிவிவரத்தகவல் 2லட்சத்து 71 ஆயிரத்து 375 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்.

2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் 40 அமைச்சகங்கள் மற்றும் 48 துறைகளில், பிற்படுத் தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் எண்ணிக்கை பற்றிய தகவல் அளிக்குமாறு கோரி விண்ணப் பித்த நிலையில், பல அமைச்சகங்கள், துறைகள் பதில் அளிக்க மறுத்துள்ளன.

அய்.அய்.டி. மேனாள் மாணவர் குமுறல்!

19.12.2003 அன்று மத்திய பணியாளர்துறை வெளியிட்ட விரிவான அறிக்கையின்படி, மத்திய அமைச்சகங்கள¢, மத்திய அரசுத் துறைகள் அனைத்திலும் உள்ள  பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள் பணியாளர்கள்குறித்த தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அது மீறப்பட்டுள்ளது என்று சென்னை அய்.அய்.டி. மேனாள் மாணவர் குறிப்பிட் டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஜூனில் மத்திய பணி யாளர் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடியினத்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து அனைத்து மத்திய அரசுத்துறை, அமைச்சகங்கள் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரியது.

ஆறு மாத கால இடைவெளியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட  சில நிபந்தனைகளைத் தளர்த்தி, சிறப்பு பணி நியமனங்களைச் செய்ய வேண்டும் என்று மத்திய பணியாளர் பயிற்சித் துறை அமைச்சகம் குறிப்பிட்டது. இடஒதுக்கீட் டுப் பிரிவுகளுக்கான காலிப்பணிய¤டங்களை நிரப்ப, சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சக அலுவலர்கள், பழங்குடியினருக்கான துறை மற்றும் ரயில்வே, உள்துறை, உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

சிறப்பு பணிநியமனங்கள்மூலமாக திட்டம் துரிதமாக செயல்படுத்தப்படாததால் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான வாய்ப்புகள் 1.1.2017 அன்று அளிக்கப்பட்ட தகவலின்படி, மோசமான அள விலேயே உள்ளன என்றார் டாக்டர் முரளிதரன்.

தற்பொழுது பிற்படுத்தப்பட்டவர்கள் எண் ணிக்கை அதிக அளவில் உள்ளது. குழு அமைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வகைப்படுத்துவதன்மூலம் பிற்படுத்தப்பட்டவர் களை பிரித்தாள அரசு முயற்சிக்கிறது. என்று முரளிதரன் கூறியுள்ளார்.

-விடுதலை நாளேடு, 10.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக