பக்கங்கள்

செவ்வாய், 12 டிசம்பர், 2017

மண்டல் பரிந்துரை அமலாகி 24 ஆண்டுகள் ஓடிய பிறகும் - பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இருந்தும் அதனை அளிக்காமல் வஞ்சிப்பதா? கண்டனம்!

மண்டல் பரிந்துரை அமலாகி 24 ஆண்டுகள் ஓடிய பிறகும் - பிற்படுத்தப்பட்டோருக்கு

27 சதவிகிதம் இருந்தும் அதனை அளிக்காமல் வஞ்சிப்பதா? கண்டனம்!

தென் மாநில சமூகநீதி அமைப்புகளின்

கூட்டமைப்பை உருவாக்குவோம் - போராடுவோம்!

கேரளா கோழிக்கோடு சமூகநீதிக் கருத்தரங்கில்

தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்று முக்கியம் வாய்ந்த அறிவிப்புகோழிக்கோடு,டிச.12 ஒடுக்கப்பட்டவர்களுக்காக கல்வி யிலும், வேலைவாய்ப்பிலும் ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்தும் வகையில் தென் மாநிலங்களில் உள்ள சமூகநீதி அமைப்புகளின் கூட்டமைப்பை உருவாக்கி அதன்மூலம் போராடுவோம் என கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் அறிவித்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காமராஜ் நிறுவனத் தின் (Challenges to Social Justice and Secularism) 
41 ஆம் தேசிய மாநாடு நடைபெற்றது.  2017 டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்ற மாநாட்டின் மூன்றாம் நாளில் சமூக நீதிக்கும் மதச்சார்பின்மைக்குமான  அறை கூவல்கள் (சிலீணீறீறீமீஸீரீமீs tஷீ ஷிஷீநீவீணீறீ யிustவீநீமீ ணீஸீபீ ஷிமீநீuறீணீக்ஷீவீsனீ)  எனும் தலைப்பிலான கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி தலைமை வகித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

தமிழர் தலைவரின் தலைமை உரை

காமராஜ் நிறுவனத்தின் 41 ஆம் தேசிய மாநாட்டினை ஒட்டி சமூக நீதி  மற்றும் மதசார்ப்பின்மைக்கான அறை கூவல்கள் எனும் தலைப்பில் சிறப்பானதொரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரான தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மரபினர், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் பெற்று வரும் சமூக நீதியின் வழிமுறையான இடஒதுக்கீடு ஒரே நாளில் கிடைத்துவிடவில்லை.  மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபா பூலே, சாகு மகராஜ், கேரளத்தில் சிறீ நாராயண குரு, தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேற்கொண்ட  கடும் பணிகளால் இன்று இடஒதுக்கீடு முறை, பின்பற்றப்பட்டு வருகிறது.  ஒருபக்கம் கடைப்பிடிக்கப்படுகின்ற இடஒதுக்கீடு கூடுதல் தளங்களில் கிடைப்பதற்குப் போராடுகின்ற சூழ்நிலைகள் நிலவி வருகின்றன.  இன்னொரு பக்கம் ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு அளவு முழுமையாக அளிக்கப்படாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.  கிடைக்கின்ற இடஒதுக்கீட்டு அளவும், வழிமுறைகளும் பறிபோகக்கூடிய அச்சுறுத்தல்களும், அறை கூவல்களும் நீடித்து வருகின்றன.

‘இந்து’ ஏடு வெளியிட்டுள்ள

அதிர்ச்சியூட்டும் தகவல்

இடஒதுக்கீட்டின்பலனைஅனுபவிக்கின்றமக்களி டையே அதுபற்றிய விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும்.  இட ஒதுக்கீட்டின்  முழுமையான பரிமாணம் உணர்த்தப்பட வேண்டும்.  உரிமைகளின் பெருமையும், அவசியமும் உரிய மக்களால் உணரப்படாவிட்டால், கடந்த காலங்களில் போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோகும் சூழல்கள் உருவாகிவிடும்.  அந்த ஆபத்தான சூழல்களை சமூகநீதிக்கு எதிரானவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள்.  சமூகநீதிக்கு எதிரான அறை கூவல்கள் நிலவி வருகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய (10.12.2017) ‘தி இந்து’ ஆங்கில ஏட்டின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக ஒரு நிலவரம் வெளிவந்துள்ளது. ‘‘24 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மத்திய அரசின் பணிகளில் மண்டல் பரிந்துரைத்த இடஒதுக்கீட்டு அளவு இன்னும் எட்டப்படவில்லை’’ என்பதாக செய்தி வந்துள்ளது.  ‘இந்து’ ஏட்டின் அனைத்துப் பதிப்புகளிலும் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் பல துறைகளிலும் வஞ்சனை!

மத்திய அரசின் பணியாளர், பொது குறை தீர்வு மற்றும் ஓய்வூதியத்துறை அளித்துள்ள தகவல் அறியும் சட்டத்தின்மூலம் பெறப்பட்டுள்ள விவரங்களின்படி மத்திய அரசின் 37 ஆட்சித் துறை மற்றும் அரசமைப்புத் துறைகளில் 24 துறைகளில் மண்டல் பரிந்துரைத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் உரிய  அளவு  பணியாளர்கள்  நியமிக்கப்படவில்லை.  இடஒதுக்கீடு பரிந்துரை நடைமுறைக்கு வந்து 24 ஆண்டுகள் ஆன நிலையிலும் 27 விழுக்காடு அளவு எட்டப்படவே இல்லை என்பதுதான் அந்த விவரங்களின் மூலம் தெரிய வருகிறது.  குரூப் ஏ பிரிவில் 14 விழுக்காடும், குரூப் பி, சி மற்றும் டி பிரிவில் முறையே 15, 17 மற்றும் 18 விழுக்காடு அளவிற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள் உள்ளனர்.  சில துறைகளில், சில பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் இல்லாதது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.  மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள குரூப் ஏ பிரிவில் உள்ள 64 பேரில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அறவே இல்லை.  60 பேர் திறந்தவெளிப் போட்டியில் வந்தவர்கள்.  4 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்.

1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மண்டல் பரிந்துரை  இட ஒதுக்கீடு  இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய அள வில் வழங்கப்படவில்லை.  சில பிரிவுகளில் இடஒதுக்கீடு இல்லை என்பது அதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது. பிற்படுத்தப்பட்டவர்களை வஞ்சிக்கக் கூடியதாகும்.

பணியிடங்களில் கடந்த காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலை, போதாத நிலைபற்றி நாடாளுமன்றத்தில் பதிலளித்த மத்திய அமைச்சர், இதனைக் களைவதற்கு அறிவித்த திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.  மேற்கண்டவாறு ஆங்கில ஏட்டில் வந்த செய்தியின் சாரமாக உள்ளது.

போராடிப் பெறப்பட்டது

இட ஒதுக்கீடு!போராடிப் பெற்ற வகுப்புவாரி உரிமையின் நிலை நம் கண்முன்னே பறிபோகின்ற வகையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.  இட ஒதுக்கீடு பெறுவதில் புதிய அத்தியாயங்களைத் துவக்குவதற்கும் சட்டரீதியாக பெறப்பட்ட இடஒதுக்கீட்டினை முழுமை யாக நடைமுறைப்படுத்துவதற்குமான  சமூகநீதிக்குப் பாடுபடும் அமைப்புகளை இணைத்து கூட்டமைப்பு விரைவில்உருவாக்கப்படும்.சமூகநீதிக்காகஅரும் பாடுபட்ட தலைவர் பெயரில் உள்ள காமராஜ் நிறுவனத்தின் தேசிய மாநாட்டில் நடைபெறும் கருத்தரங்கத்தின் மேடையிலிருந்து இந்த சமூகநீதி கூட்டமைப்புப் பற்றிய அறிவிப்பினை வெளியிடுவதில் உத்வேகம் பெறுகிறோம் - அடுத்து போராடுவோம்!

சமூகநீதியில் காமராசரின் பங்களிப்பு

சமூக நீதியை வென்றெடுத்ததில் தலைவர் காமராஜ ருக்குப் பெரும்பங்கு உண்டு.  நாளும் மக்களைச் சந்தித்து, பொது மக்களின் நல வாழ்வுக்கு - குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு, தாம் தமிழ்நாட்டின் முதல மைச்சராக இருந்த பொழுதும், அதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவராக, பின்னர் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த காலங்களிலும்               அளப்பரிய பணி ஆற்றியவர் காமராஜ் ஆவார்.  இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதால், நடைபெறும் அலுவலகப் பணிகளில் தகுதிக்குறைவு, திறமையின்மை, ஆற்றல் குறைந்த நிலைமை உருவாகி வருகிறது என சமூகநீதி எதிர்ப்பாளர்கள் பரப்புரை செய்து வந்த பொழுது காமராஜர் தமக்கே உரிய எளிய மக்கள் மொழியில் பதிலடி கொடுத்தார்.

‘‘இதுநாள்வரை இடஒதுக்கீட்டின் மூலம் படித்து வேலைக்கு வந்த இன்ஜினியர் கட்டிய பாலம் ஏதாவது உடைந்திருக்கிறதா?

இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து டாக்டராக வந்தவர், போட்ட ஊசியால், பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளால் எந்த நோயாளியாவது சாக நேர்ந்ததா?’’

இட ஒதுக்கீட்டின் மூலம் படித்துப் பணியாற்றுபவர்களிடம் எந்தவித தகுதிக் குறைவும், திறமை பற்றாக்குறையும் கிடையாது என ஆணித்தரமாகப் பதிலளித்தார்.  காமராசரின் கூற்றுக்கு சமூகநீதி எதிர்ப்பாளர்களால் மறுபதில் கூறமுடியவில்லை.

அண்மைக் காலமாக மதச் சார்ப்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் பெருகிவருகின்றன.  மதச் சார்பின்மை நெறிசார்ந்த இந்திய அரசமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக மதச் சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத்  துணைபோவதாக, அதனை ஊக்குவிப்பதாக இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

காமராசரைப் படுகொலை செய்ய முயற்சி!

பசுப் பாதுகாப்பு என்பதன் பெயரால் ஒரு மதத்திற்கு, அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாகவும், பிற மதத்தினருக்கும், மதம் சாரா தரப்பினருக்கும் உரிமை மறுக்கப்படுகின்ற வகையிலும் அரசு செயல்பட்டு வருகிறது.  சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால், பசுப் பாதுகாப்பு என்பதாக ஒரு சில மதவெறிக் கும்பல் அதிகாரத்தை தமது கையில் எடுத்துக் கொண்டு சட்ட ஒழுங்கு சீர்குலைவு செய்து வருகிறது.  ஒருவர் தமக்கு  வேண்டியதை, விரும்பியதை உண்ணுவது அடிப்படை உரிமையாகும்.  அந்த உரிமையினை தட்டிப் பறிக்கின்ற வகையில் பசு மாமிசம் உண்ணக்கூடாது; இன்னும் ஒருபடி மேலே போய் பசு மாமிசம் வைத்திருந்தாலே குற்றம்; தண்டனைக்கு ஆளாக வேண்டும் என சட்டம் இயற்றப்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

பசுப் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக  இருந்த நிலையில், காமராஜர் கருத்து தெரிவித்தார்.  அது சமயம் காமராஜர் டில்லியில் தங்கியிருந்த பொழுது இந்துத்துவா மதவெறியாளர்கள் பசுப்பாதுகாப்புக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த காமராஜரை கொலை  செய்ய முயன்று, அதிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்பது வரலாற்றுச் செய்தி.  அன்று அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘பசுப்பாதுகாப்பு’ வன்முறைச் செயல்கள் இன்று வடநாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகின்றன.  நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளை இனம் கண்டு உரிய காலத்தில் -  தேர்தல் காலத்தில் பாடம் கற்பிக்க வேண்டியது நாட்டுப் பற்றாளர்களின் முக்கிய கடமையாகும்.  இதனை காமராஜ் நிறுவனத்தின் தேசிய மாநாட்டுச் சூளுரையாக மேற்கொள்ளுவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தரங்கின் தொடக்க உரையினை காமராஜ் நிறுவனத்தின் தலைவரும் கேரள அரசின் மேனாள் அமைச்சருமான டாக்டர். நீலலோகிததாசன் வழங்கினார்.  கருத்தரங்கில் பேராசிரியர் கே.பி.விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார்.  மேலும், கேரள அரசின் மேனாள் அமைச்சர் முகமது குட்டி, வழக்குரைஞர் பிரகலாதன், கே.ஆர்,ஆர்யா, நசீர் யாதவ், பேராசிரியர் முனைவர்  ஜான்குமார், பி.கே.கபீர் சல்லா, பி.ஏ.ஹம்சா ஆகியோர் உரையாற்றினர்.

வி.சுதாகரன் வரவேற்புரை ஆற்றினார்.  கருத்தரங்கில் உரையாற்ற சென்றிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன். மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் ஆகியோர் சென்றிருந்தனர்.

காமராஜ் நிறுவனத்தின் மூன்று நாள் தேசிய மாநாடு சிறப்பாக நடந்தேறியது.  மூன்று நாள்களும் நாட்டின் பல பகுதிகளிருந்தும் கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பேராளர்கள், பார்வையாளர்கள் மிகப் பலராகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.- விடுதலை நாளேடு,12.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக