பக்கங்கள்

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

வரவேற்கத்தக்க சுவர் உடைப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் சந்தையூர் கிராமத்தில் ஒரு தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது. அந்தச் சுவரை எழுப்பியவர்களும் தாழ்த்தப்பட்டோரில் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்கள்.

சந்தையூரில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் தாழ்த் தப்பட்டோரில் ஒரு பிரிவினர். அவர்கள் வழிபடுவதற்கு அரசின் புறம்போக்கு நிலத்தில் கோயில் ஒன்றைக் கட்டி யுள்ளனர். அந்தக் கோயிலில் தாழ்த்தப்பட்டோரில் இன்னொரு பிரிவினர் வழிபட அனுமதிக்கப்படவில்லை.

கோயிலில் வழிபடுவதற்கு அனுமதிக்கப்படாத மற்றொரு பிரிவினர் தனியாக கோயில் கட்டினார்கள். இந்த இரு பிரி வினர்களின் கோயிலுக்கு இடையே பொதுப்பாதை ஒன்று இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ஒரு பிரிவினர் முள்வேலி போட் டுள்ளனர். அன்றைக்கு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் பார்வையிட்டு முள்வேலியை அகற்றி இருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின்னர், ஒரு பிரிவினரால் சுவர் எழுப் பப்பட்டது. இந்தச் சுவரை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, நீதிமன்றம் சுவரை இடிக்க உத்தர விட்டது. ஆனால், அரசு உடனடியாக சுவரை அகற்றாமல் காலங்கடத்தியது. அதனால், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக் கிடைத்த மூன்று மாதம் கழித்து, அவ்வழக்கில் சுவரை இடிப்பதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவரை எழுப்பியதற்கு காரணமான தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின்  ஒரு பிரிவினர் 'இது தீண்டாமை சுவர் இல்லை, கோயில் சுவர்தான்' என்றனர். பேரையூர், சந்தையூர் இந்திரா குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர், அங்குள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக்கோரி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் முதல் அருகமை மலைப்பகுதியில் குடியேறி போராட்டம் நடத்தி வந்தனர். அந்த மலைப்பகுதியில் பனியிலும், வெய் யிலிலும் பெண்களும், குழந்தைகளும் சமைத்துச் சாப்பிட்டு தூங்கினர்.

இந்நிலையில்தான், கடந்த மார்ச் 30ஆம் நாளன்று மலையில் போராட்டம் நடத்தி வந்த பழனிமுருகன் (42) நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், பிரச்சினையில் தீர்வு காணும்வரை பழனிமுருகனின் உடலை வாங்க மறுத்து அப்பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக 5.4.2018 அன்று இருதரப்பினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், நத்தம் அரசு புறம்போக்கில் உள்ள சுற்றுச்சுவரில் 2 மீட்டரை உடைத்து, அங்கே அங்கன்வாடி மய்யம் அமைத்து இருபிரிவினர் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. சுவருக்கு மறுபுறம் உள்ள ராஜகாளியம்மன் கோயிலை இருபிரிவினரும் வழிபட்டுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று (6.4.2018) சந்தையூரில் 200க்கு அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டன. சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து  தீக் குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். அப்போது காவல்துறை வாகனத்தில் ஏறிய ஒரு பெண் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு  ஏற்பட்டது. உடனே தீயணைப்புத் துறையினர் அவர்மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காப் பாற்றினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேரை பேரையூர் காவல்துறையினர் கைது செய்தனர். இதன்பின் காவல்துறை அதிகாரி நரசிம்மவர்மன், உசிலம் பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா  முன்னிலையில் வருவாய்த்துறையினர் 2 மீட்டர் அளவிற்கு சுவரை இடித்தனர். இதன்பின் 67 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சுவர் இடிக்கப்பட்ட பின்பு மதுரையிலிருந்து பழனிமுருகன் உடல் பெறப்பட்டு, சந்தையூரில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது. இதையடுத்து மலையில் போராட்டம் நடத்தியவர்கள் ஊர் திரும்பினர்.

இந்த நிகழ்வு உண்மையிலேயே வேதனைக்குரியது. இந்து மதத்தில் ஜாதி அமைப்பினை படிக்கட்டு முறை (நிக்ஷீணீபீமீபீ மிஸீமீஹீணீறீவீஹ்) என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டதுதான் எத்தனை நுட்பமானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ளும் உயர்வு, தாழ்வு என்பது என்ன கொடுமை!

ஜாதி ஒழிப்புக்காக தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏன் பாடுபட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பேரையூரில் நடந்த இந்த நிகழ்வைக் கொண்டு பார்த் தீர்களா பார்த்தீர்களா? பார்ப்பனர்களா இந்தத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள்; தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையேகூட தீண்டாமை இருக்கிறதே! என்று ஏகடியம் செய்வார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் மூலக் கிருமி இந்த ஜாதிதான். அதனை இன்று வரை பாதுகாக்க பல வழிகளிலும் நங்கூரம் பாய்ச்சி நிற்பவர்கள் பார்ப்பனர்களே! அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை உட்பட!

தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பிரிவு கூறுகிறதே! அந்தத் தீண்டாமை என்பதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டம் செய்ய வேண்டாமா?

தந்தை பெரியார் 1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் தனித் தீர்மானத்தையே அந்த வகையில் நிறைவேற்றிக் கொடுத்தாரே!  ஒடுக்கப்பட்ட சகோதரர்களே  - வருண அடுக்கு முறையில் கடைசி இடத்தில் உள்ள நமக்குள் வேண்டாம் இந்தத் தீண்டாமைச் சுவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக