பக்கங்கள்

புதன், 18 ஏப்ரல், 2018

தமிழ் நாட்டில் சாதி உருவாக்கம்

(கடந்த இதழ் தொடர்ச்சி...)

புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும்

சாதி உருவாக்கமும் குப்தர்/வாகாடகர் 
மரபில் ஓம்படைக்கிளவிகள்



சபைகளில் ஒருங்கிணைந்த புதிய சமூகக் குழுக்களின் எழுச்சி

இந்த மாற்றம், சோழ ஆட்சி முடிவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அரசுக் கட்டுப்பாடு பலவீனம் அடைதலோடு தொடர்பு கொண்டது ஆகும். குறிப்பாக நாடு (வட்டார அளவில் இருந்த நிர்வாக அலகு) என்பதுவே பாதுகாப்பு உடையதாக இருந்ததால், அதைக் குறித்து அதிக அக்கறைக் கொண்டிருந்ததைப் பற்றிய மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, கல்வெட்டுகளில் பல்வேறு துரோகிகளுள் நாட்டுத் துரோகியே மிக அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரத்தின் வீழ்ச்சியினால், தங்கள் நாட்டுச் சபையைப் பாதுகாப்பது வட்டார மக்களுக்கு மிகுந்த அவசியம் ஆகிவிட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் முனைப்பாகத் தெரிகிற அரசின் அரசியல் அதிகாரத்தின் நிலையற்ற தன்மையுடன், சித்திரமேழி பெரியநாடு (உழவர் அமைப்பு), இடங்கை, வலங்கை (முன்னாள் மலைப் பழங்குடிகள் தலைமை வகித்த குழுமம் கடந்த அமைப்புகள்), அய்ந்நூற்றுவர் (பாதுகாப்பு வீரர்களைக் கொண்டிருந்த வணிகர் அமைப்புகள்) போன்ற வட்டாரம் கடந்த அமைப்புகள் எனப் படுகின்றவற்றின் உருவாக்கம் நெருங்கிய தொடர்புடையது ஆகும்.

நாடு பற்றி, குறிப்பாக அதுவே பாதுகாப்பானது என்ற உணர்வை ஒருமுறை மக்கள் பெற்ற பின்பு, அவர்கள் நாட்டுச் சபையில் நிலவும் சமூக தர ஒழுங்கு பற்றி அதிக ஈடுபாடு செலுத்தத் தொடங்கினர். முன்பு, சோழர் ஆட்சியின் இடைப் பகுதி வரை, பிரம்மதேயங்களில் பிராமண நில உடைமையாளர்களுக்கும் வெள்ளாள உழவர்களுக்கும் பகைமை நிலவிய போதிலும்கூட, வேளாண் சமூகத்தில் ஆளும் வர்க்கமாக விளங்கிய நிலச் சொந்தக்காரர்களான பிராமணர்கள், வெள்ளாளர்கள் ஆகியோரின் கூட்டு ஆதிக்கத்தின் கீழ் சமூகம் நிலைத் தன்மையைப் பெற்றிருந்தது. அய்ந்து பிராமணச் சகோதரர்களின் அட்டூழியங்களைக் குறிப்பிடுகிற, 12ஆம் அடிக்குறிப்பில் மேற்கோள் காட்டப்பட்ட திருக்கச்சூர் கல்வெட்டு, அந்தப் பிராமணச் சகோதரர்கள், பிராமணர்கள் - வெள்ளாளர்களிடையே இயல்பாக நிலவும் நன்னடத்தை விடுத்து, அதற்குப் பதிலாகக் கீழ்ச் சாதிகளைப் போன்று நடந்துகொள்ளத் தொடங்கினர் என்றும் வருத்தம் அடைகிறது. இந்தக் கல்வெட்டு உயர் சாதிகள் இரண்டிற்கும் இடையே நிலவிய சமூகக் கூட்டுறவையும் ஒருங்கிணைவையும் உணர்த்துகின்றது.

திருக்கச்சூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் இந்த நிலைமை, சோழ ஆட்சியின் பிற்பகுதியில், குறிப்பாகப் பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, பிராமணர்களையும் வெள்ளாளர்களையும்விட பிற சமூகக் குழுக்களின் அதிகாரம் அதிகரித்துச் செல்வதையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. சோழ அரசின் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முன்னாள் மலைப் பழங்குடிகளைச் சேர்ந்த மனிதர்கள், விலைக்கு வாங்கியதனாலோ அல்லது கைப்பற்றிக் கொண்டதாலோ நிலம் பெற்றதன் மூலம் நிலச் சொந்தக்காரர்கள் ஆனார்கள் Karashima 1984:30);  இவர்களோ அல்லது பதினோராம் நூற்றாண்டு தொடங்கி சோழர் ஆட்சியில் வெளிநாட்டு வணிகத்தின் மூலம் வலுவடைந்த வணிகர்கள், கைவினைஞர்கள்  (Karashima 1992: 171-80; Karashima, Subbarayalu, Shanmugam 2008) ஆகியோரே பிராமணர்கள் வெள்ளாளர்களுக்குப் பிறகு அதிகாரம் பெற்றுக் கொண்டிருந்த பிற சமூகக் குழுக்கள் ஆவர். இவர்கள் மேலே சுட்டியது போன்ற சில வட்டாரம் கடந்த அமைப்புகளை உருவாக்கினர்; இவர்கள் பெருநிரவி எனப்படும் பெருஞ்சபையில் மேற்கொண்ட பல்வேறு உடன்பாடுகளும் முடிவுகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலே காட்டிய பொ.ஆ.1227ஆம் ஆண்டு வாலிகண்டபுரம் கல்வெட்டு, சித்திரமேழி பெரிய நாடு, வாணிய நகரம் ஆகியவற்றின் உறுப்புகளாக யாதவர், நாட்டுமக்கள், மலையமான்கள், அந்தணர், பன்னாட்டார், பதிணெண் விசயம் என்ற வணிகக் கைவினைக் குழுவின் பகுதியாகக் கைகோளர் போன்ற, சாதியைப் போன்ற குழுக்கள் (நீணீstமீ-றீவீளீமீ ரீக்ஷீஷீuஜீs) குறிப்பிடப்படுகின்றன; உயர்ந்த சமூகக் குழுவின் உறுப்பினர்களான பிராமணர்கள், ஆரியர்கள் என்றழைக்கப்படுகின்றவர்களின் பெயர்கள் எந்தவொரு சமூகக் குழுவிலும் இல்லை. மேலே மேற்கோள் காட்டிய பொ.ஆ.1229ஆம் ஆண்டு குடுமியான் மலைக் கல்வெட்டு, பிராமணன், செட்டி, வெள்ளாளன், இளமையர், படைப்பற்றுகள், தண்டி, பறையர், பட்டர் போன்ற சாதியைப் போன்ற குழுக்களைக் குறிப்பிடுகிறது; மற்றொருபுறம் நாடு (வட்டாரச் சபை), நகரம் (நகரச் சபை), கிராமம் (ஊர்ச் சபை), வன்னியர் (போர்வீரர்க் குழுக்கள்), படைப்பற்றுகள் (போர்வீரர்[க் குழுக்கள்]) போன்ற நிர்வாகக் குழுக்களையும் குறிப்பிடுகிறது. மேலே மேற்கோள் காட்டிய பொ.ஆ.1258ஆம் ஆண்டு செங்கமம் கல்வெட்டு, நாட்டின் பல்வேறு நிர்வாக உறுப்புகளாக, ‘அனைத்து சாதிகள்’ என்ற தலைப்பின்கீழ் பின்வரும் குழுக்களை விவரிக்கிறது: அடிவாரத்து மலையாளர், மலையாள முதலிகள், முதுநீர் மலையாளர், மலையரண் முதலிகள், செட்டிகள், வாணிகர், கணக்கர், கருமப்பேர், பன்னாட்டவர், பன்னாட்டு முதலிகள், பொற்கொற்ற கைக்கோளர், ஆண்டார்கள், சிவப்பிராமணர், மன்றாடிகள், உவச்சர், தென்கரை நாட்டு வடதலை நாட்டவரும் தென்மலை நாட்டவரும், தெல்ல... புலவர், பண்ணுவார், நியாயத்தார், பன்னிரண்டு பணிமக்கள், பெரும்வேடர், பாணர், பறையர், பறை முதலிகள், செக்கிலியர், இறு(ரு)ளர், பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வரும் கரடுமுரடான, பண்பற்ற ஓம்படைக்கிளவி வெளிப்பாடுகள், பன்னிரண்டாம் நூற்றாண்டு பிற்பகுதியிலிருந்து வட்டாரம் கடந்த அமைப்புகளை உருவாக்கி வலுபெற்று வந்த மேற்கண்ட சாதித்தன்மை கொண்ட குழுக்களின் வலிமையைப் பிரதிபலிக்கின்றன.
கல்வெட்டுகளில் அதிகரித்துச் செல்லும் சாதி பற்றியக் குறிப்பு

இந்தக் குழுக்கள் பற்றியும், சாதி உருவாக்கத்தின் வளர்ச்சி பற்றியும் ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல; ஆயினும் சாதி பற்றிய ஆய்வுகளில் மேலும் விவாதத்திற்காக மூன்று விடயப் புள்ளிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். அண்மையில் சிந்தியாதல்போட் (Talbot 2001) ஆந்திரக் கல்வெட்டுகளில் வரும் சாதிப் பெயர்கள் போன்ற சொற்களைப் பற்றி விவாதித்துள்ளார்; அதுபற்றி இருவிடயப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். முதலாவது பதின்மூன்றாம் நூற்றாண்டு ஆந்திரக் கல்வெட்டுகளில், சாதி என்ற சொல் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சாதிப் பெயர்  (caste-like groups) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஆதாரம் எதுவும் இல்லை  (Talbot 2001:52). இரண்டாவது காகதிய கல்வெட்டுகளில் வரும் சாதிப் பெயர் போன்ற சில சொற்கள், முதன்மையாகத் தொழில் அடிப்படையிலான தரநிலையையே காட்டுகின்ற சொற்கள் ஆகும்; அவை சாதிகளை அல்லது குறிப்பிட்ட சாதியைச் சுட்டவில்லை (Talbot 2001:55).  பொதுவாக, செய்திகளைப் பதிவதிலும், பதியும் முறையிலும் தமிழ்க் கல்வெட்டுகளுக்கும் ஆந்திரக் கல்வெட்டுகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன; தமிழ்க் கல்வெட்டுகளுக்கும் கர்நாடகக் கல்வெட்டுகளுக்கும் இடையில்கூட பல வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் இந்தப் பகுதியின் வேறுபட்ட சமூக_பண்பாட்டு அமைவிலிருந்து தோன்றுவன ஆகும். ஆகவே, பதின்மூன்றாம் தமிழ்க் கல்வெட்டுகளில் சாதி (மற்றும் இனம்), குறிப்பிட்ட சாதிக் குழுக்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகளைப் பெற்றுள்ளோம், கண்டுள்ளோம்; ஆயினும் ஆந்திரக் கல்வெட்டுகளில் உண்மையான சாதிகள் அல்லது சாதி என்ற சொல்லுக்கு ஆதாரத்தை நடைமுறைப்பூர்வமாகத் தேடுவதற்கு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லையானால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆயினும், தல்போட் கருதிய இரண்டாவது விடயப் புள்ளி மிகுந்த கவனமுடன் இங்கு ஆர்வத்தோடு விவாதிக்கப்படுகிறது. காரணம், தமிழ்க் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் குழுக்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சமூக வகைநிலை வரிசையைப் புரிந்துகொள்வதற்கு மிகுந்த சிரமம் நிறைந்தது ஆகும். அக்குழுக்கள் கல்வெட்டுகளில் சாதி என்று குறிப்பிடப்பட்டாலும், இச்சொல்லை இக்காலச் சமூகவியலாளர்கள் வழங்கும் பொருளில் வழங்க வேண்டிய அவசியமில்லை. தல்போட் மேற்கொண்ட பகுப்பாய்வைக் கவனத்தோடு கைகொண்டு, தமிழ்க் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் சாதி போன்ற குழுக்களை மூன்று வகை குறிப்பீடுகளைக் கொண்டிருந்தவை எனப் பின்வருமாறு பகுக்கலாம்:

1.    பட்டப்பெயரால் தெரியும் சமூகத் தகுதி நிலை.

2.    தொழிலால் தெரியும் சமூகத் தகுதி நிலை.

3.    குடிவழி அல்லது குருதிவழி உறவால் தெரியும் சமூகத் தகுதி நிலை.

செங்கமம் கல்வெட்டில் குறிப்பிட்ட குழுக்களில், நாட்டு முதலிகள் என்னும் பட்டப் பெயர் சமூக தகுதி நிலையைக் காட்டுவதால், அதுவே குறிப்பீடு ஆகும்; கணக்கர் என்பது தொழிலைச் சுட்டும் குறிப்பீடு ஆகும்; எந்தப் பிற குழுவோடும் திருமண உறவு கொள்ளாத குழுவான பறையர் என்பது குடிவழிக் குறிப்பீடு ஆகும். ஆயினும், ஓர் எடுத்துரைப்பில் இந்த அனைத்து வேறுபட்ட குறிப்பீடுகளின் வருகையையும் ஊகிப்பதும், குறிப்பிட்ட குறிப்பீட்டுடன் குறிப்பிட்ட குழுவை அடையாளம் காணுவதும் மிக மிகச் சிக்கல் நிறைந்ததாகும். செங்கமம் கல்வெட்டில் உள்ள பல குழுக்களை இந்தக் குறிப்பீடுகளில் அடையாளம் கண்டு எடுத்துரைப்பது எளிதானதல்ல,அல்லது சாத்தியமற்றது. மேலும், ஒரு குழுவை ஒன்றுக்கும் மேற்பட்ட குறிப்பீடுகளுடன் அடையாளம் காணவும் முடிகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு தமிழகத்தில் சாதி உருவாக்க நிலையில் இருந்து கொண்டுள்ளது என்ற உண்மையிலிருந்து இந்தச் சிக்கலான அல்லது அய்யப்பாடான நிலை தோன்றுகிறது.

ஆயினும், பதினைந்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் மேலே குறிப்பிட்ட மூன்று குறிப்பீடுகளிடையேயான வேறுபாடு மங்கிக் கொண்டிருப்பதாக அல்லது ஒன்றிணைந்து கொண்டிருப்பதாகப் புலப்படுகிறது; இடங்கை, வலங்கைக் குழுக்களின் கலகங்கள் பற்றிய கல்வெட்டுகளில் எடுத்துரைக்கப்பட்ட சாதிக் குழுக்கள் செங்கமம் கல்வெட்டில் உள்ளதை விட எண்ணிக்கை குறைந்து, சிக்கல்பாடு குறைந்துள்ளன. அவை பிரித்தானிய ஆவணங்களில் முடிவுக்கு வந்துவிட்டன. ஆயினும், பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சாதி போன்ற அல்லது சாதிக் குழுக்களை, பிள்ளை, நத்தமக்கள் போன்ற முன்னாள் மலைப் பழங்குடிக் குழுக்களை, அவர்கள் செயல்பாடுகளோடு தொடர்புபடுத்தி நோக்கினோமானால், பின்னாளில் சாதி என்று வரும்போது பறைசாற்றப்படும் குழு ஒற்றுமை என்கிற ‘ஒருமை’ என்னும் பண்பு இல்லாமல் இருப்பது தென்படுகிறது. எவ்வாறாயினும், பதின்மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சாதி உருவாக்கம் பற்றிய சித்திரத்தைக் காட்டுகின்றன.

படிநிலை அடிப்படையில் அமைந்துள்ள சாதிமுறை பற்றிய விவாதத்திற்காக மேலும் இரண்டாவது விடயப் புள்ளியை நான் விரிக்க விரும்புகிறேன். கடந்த முப்பது அல்லது நாற்பது வருடங்களாக அறிஞர்கள் சாதிப் படிநிலை பற்றிய பிரச்சினையை விவாதித்துக் கொண்டுள்ளனர்; இந்திய மரபில் சாதிப் படிநிலையின் உச்சியில் இருப்பவர்கள் பிராமணர்களா? சத்திரியர்களா? இருவரில் எவர், அல்லது சமூக ஒழுங்கைப் பேணி வருவதில் முக்கிய பாத்திரம் வகிப்பது அரசியலா? மதமா? இந்த இரண்டில் எது என்ற கேள்வி மீதான வாதங்களில் கவனம் குவிக்கின்றனர். அறிஞர்கள் ஹோகர்ட் அல்லது/ மற்றும் தூமோவைப் பின்பற்றுகின்றனர். ஆயினும் சாதிப் படிநிலை என்றழைக்கப்படுவதின் நடைமுறை ரீதியான செயல்பாட்டைக் கருத்தில் கொண்டோமானால், பிராமணர்களுக்கும் அரசருக்கும், மதத்திற்கும் அரசியலுக்கும் உள்ள கூட்டிசைவாக்கம் என்பதை ஏற்றுக்கொள்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று படுகிறது. இந்திய வரலாற்றில் நீண்ட காலம் ஒருபுறம் ஆள்வோர்களாக விளங்கிய பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் (அல்லது உயர் சாதிகளுக்கும்), மறுபுறம் ஆளப்படுவோர்களாக விளங்கிய பிற குழுவினருக்கும் (வைசியர், சூத்திரர் என்று கொள்கையளவில் வகைப்படுத்தப்படும் குழுவினருக்கும்) இடையே பகைமை நிலவியது சமூகத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தென்னிந்தியாவில் சத்திரியர் என்று முறையாக அழைக்கப்பட்ட எந்தக் குழுமங்களும் இல்லை; பண்டைக் கால, இடைக்காலத் தமிழ்நாட்டில் சத்திரியர்களின் பாத்திரத்தை ஆற்றியவர்களாக, உயர்ந்த சாதியான வெள்ளாளர்களைக் கருத முடியும். பிராமண_வேளாள நல்லியல்பை இழந்து, கீழ்சாதிகள் இயல்புடன், அதனுடன் முரண்படுதலைக் குறிப்பிடும் மேலே மேற்கோள் காட்டிய திருக்கச்சூர் கல்வெட்டில் பிராமணர் வேளாளர் கூட்டுறவுக்க ஒரு நல்ல எடுத்துக்காட்டைக் காணலாம். பிராமண-வேளாளக் கூட்டணிக்கும் இடங்கை வலங்கை குழுக்களாக ஒருங்கிணைந்த பிற குழுக்களுக்கும் இடையே நிலவிய மோதல்களுக்கு மேலே காட்டிய இடங்கை வலங்கை கலகங்களைக் குறிப்பிடும் பதினைந்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டைக் கண்டுகொள்ள முடியும்.

அரசியல் நிலையற்ற தன்மையும் சாதி உருவாக்கமும்

உண்மையான சாதிப் படிநிலை தரப்படுத்தல் அரசர்கள், அரச அலுவலர்கள், வட்டாரத் தலைவர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே சமூக ஒழுங்கைப் பேணுவதற்குச் சாதிப் படிநிலையை அரசியல் அதிகாரம் முறைப்படுத்தியது. ஆயினும், நீண்ட வரலாற்றுக் காலத்தில், சில நேரங்களில் அரசர்களுடைய அதிகாரம் தேய்வடைந்தது; சமூக ஒழுங்கின்மை தலைதூக்கியது. இந்தக் கால கட்டங்களில் சாதி உறவு முறைப்படுத்தல் காணாமல் போய்விட்டதா? தளர்ந்து போய்விட்டதா? இது தொடர்பாக, சாதி உருவாக்கத்திற்கும் அரசியல் நிலையற்ற தன்மைக்கும் இடையே உள்ள உறவு பற்றி இண்டேனுடைய கருத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்:

இந்து அரசமுறையின் நவீன வடிவம் (இதை விளக்கியுரைக்க முடியாது எனினும்) ஒருவாறான மறு ஒழுங்கமைத்தலுக்கு ‘சாதிகள்’_இன் அமைவாக்கம் இட்டுச் சென்றாலும்கூட, அங்கு (Inden 1976) நான் இந்து அரசமுறை அழிந்து விட்டதைக் காட்டியுள்ளேன். பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டு முன்புவரை கூட தோன்றாத இந்திய நாகரிகத்தின் தனிச்சிறப்பான நிறுவனமான சாதிகள், இந்து அரசமுறையின் பலவீனத்திற்கும் அழிவுக்கும் காரணி அல்ல; ஆனால் அதன் விளைவு ஆகும் (Inden 1990:92).

ஆயினும் இண்டேனால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட, பல்வேறு சாதியைப் போன்ற குழுக்களாய் விளங்கும் சாதிகளிடையில் நடைபெற்ற கலப்புத் திருமணம் தோற்றுவித்த பல சாதிகள் வாழ்ந்த இடைக்கால வங்காளத்தில் நிலவிய சூழல், அதே காலத் தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்டதாய்த் தென்படுகிறது. மேலே விவரித்தது போல, பதின்மூன்றாம் நூற்றாண்டு முழுவதும் அரசியல் நிலையற்ற தன்மையும் சமூக ஒழுங்கின்மையும் நிலவிய காலக்கட்டத்தின்போது தமிழ்நாட்டில் சாதிகளின் உருவாக்கமும் அதன் விளைவாகப் படிநிலை மறு_ஒழுங்காக்கமும் முடக்கி விடப்பட்டது. ஆனால் சாதி உருவாக்கத்தின் வளர்ச்சி கலப்புத் திருமணத்தால் நடைபெறவில்லை. வட்டார சமூக ஒழுங்கில் அதிகாரம் பெற்ற சில புதிய குழுமங்கள் ஒருங்கிணைந்ததின் வழியாகச் சாதி உருவாக்கம் நடைபெற்றது. புதிய, பழைய குழுக்களுக்கு இடையிலும், அல்லது புதிய குழுக்கள் மத்தியிலும் ஆதிக்கத்திற்கான போராட்டம் சாதிப் படிநிலை மறு_ஒழுங்காக்கம் செய்யப்படுவதற்கான காரணி ஆகியது. புதிய படிநிலையின் நிறுவல் அரசனால் முறைப்படுத்தப்படவில்லை; வட்டார மக்கள் ஒருங்கிணைந்த சபைகளால் முறைப்படுத்தப்பட்டது.

அரசனோ அல்லது சபையோ, யார் முறைப்படுத்தும் முகாமையாக விளங்கினாலும், சாதிப் படிநிலை முறைப்படுத்தலில் பிராமணியக் கருத்துநிலையே தொழிற்பட்டது என்பதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். கடந்த கால வரலாறு முழுவதையும் நோக்கினோமானாலும், மன்னரோ, மக்களோ எவரென்றாலும் நீதி வழங்குவதற்கு மனுஸ்மிருதியே ஆதாரமாய் விளங்கியது. “அனைத்துச் சாதிகளும் அந்தணன் தலையாக அரிப்பன் (பறையன்?) கடையாக “(செங்கமம், AD 1258), அல்லது ‘இந்த உடன்படிக்கைக்கு எதிராகத் திரும்பும் எவராயினும் கீழ்ச்சாதியினும் கீழ்ச்சாதி ஆவான்’ (வலிகண்டபுரம், AD 1227), ‘இத்தானத்திற்கு அதம் பண்ணியவன் எவனோ அவன் தன் மிணாட்டியைக் குதிரைக்குப் புல்லு பறிக்கிற புலையனுக்குக் கொடுப்பான்’ (வலிகண்டபுரம், AD 1240) போன்ற தொடர்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம், பதின்மூன்றாம் நூற்றாண்டின் அரசியல் நெருக்கடியின்போது வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள புதிய ஓம்படைக்கிளவிகள் சாதிப் படிநிலையைக் குறிப்பிட்டன. ஒவ்வொரு குழுவின் எல்லைக் கோடுகளும் ஜனநாயகப் பூர்வமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய வட்டாரச் சமூகத்திற்குள், புதிய குழுவின் ஈர்ப்பு நிலை வளர்ச்சிக்கேற்பவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிராமணியக் கருத்து நிலையினுடைய தூய்மை / தீட்டு என்ற எதிர்நிலை அடிப்படைகளின் மீதும், அவர்களின் சார்பளவிலான நிலை முடிவு செய்யப்பட்டது.

அதே வேளையில், பிராமணர்களுக்கு எதிராகவும், ஏன் பிராமணக் கருத்துநிலைக்கு எதிராகவும்கூட நிலவிய மக்களுடைய தீராப்பகை உணர்ச்சிகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, மேலே ஆய்வு செய்த இரத்தினகிரி கல்வெட்டில், பிராமணர்களின் கண்களைத் தோண்டி மூக்கை அறுக்கும், பெருங்கோபக் கனலைக் கக்கும் எண்ணம் இதற்கு ஒரு சான்றாகும். பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் இடங்கை/வலங்கை குழுவின் உருவாக்கத்தின் மூலம், சாதிகள் தங்கள் சொந்தப் படிநிலை ஏற்பாடு வழியாக இடங்கை, வலங்கை ஆகியவற்றுள் சாதிக் குழுக்கள் இரு கிளைகளாகப் பிளவுற்றதால், பிராமணியப் படிநிலை மாறும் மக்கள் மனநிலைக்குச் சவால் விடுக்கப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ளமுடியும். ஒவ்வொரு குழுவிலுமே இடங்கை/வலங்கை வரை விளக்க_ஓழுங்கை மீறுவோரும் இருந்திருக்கலாம்; இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளுவதற்குக் கடின வரம்புகளும் இருந்திருக்கலாம். இந்தச் சவாலில் வளர்ந்து செல்லும் அவர்களின் அரசியல், பொருளாதார அதிகாரத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்க முடியும். என்றாலும்கூட, சாதிப் படிநிலை மறு ஒழுங்காக்கத்தின் வளர்ச்சியில் பழமைவாதக் கருத்துநிலையின் தாக்கத்தையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

மூன்றாவது விடயப் புள்ளியாக, அரசியல் பார்வை என்று அழைக்கப்படும், குறிப்பாகச் சாதி உருவாக்கத்தில் வட்டார அதிகாரம் ஆற்றும் பாத்திரம் பற்றிய நோக்கான, சாதி முறை பற்றிய ஹோகர்டியன் நோக்கைத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன். சாதி உருவாக்கத்தில் அரசனுக்கு மையமான பங்கு உள்ளது என்றே கருதுகிறார் டர்க்ஸ்  (Driks 1987. 1989); இது தொடர்பில் கொடானியும் தனபேவும் வட்டார அரசியல் அதிகாரம் மீது அதிகக் கவனம் செலுத்துகின்றனர் (Kotani 2002; Tanable 2003, 2005) 2003, 2005). வலிமையான அரச மரபுகள் மறைந்துபோன பதின்மூன்றாம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் சாதி உருவாக்கம், அதன் மறு_ஒழுங்காக்கம் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு, டர்க்ஸ் முன்வைத்த கருத்தைவிட, கொடானியும் தனபேவும் முன்மொழிந்த வாதவரியையே நான் ஓரளவுக்குப் பின்பற்றுகிறேன்.

இந்த விடயப் புள்ளி பற்றி விவாதிப்பதற்குத் தொடர்புடைய ஆதாரங்களாய் இருப்பது, வட்டாரத்தின் பல்வேறு குழுக்கள் பெருஞ்சபையில் மேற்கொண்ட முடிவுகள் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகளே ஆகும். சித்திரமேழி பெரிய நாட்டார், ஐந்நூற்றுவர் ஆகியோர் கூடிய பெருஞ்சபையில் மேற்கொள்ளப்பட்ட முடிவைக் குறிப்பிடும் திட்டக்குடி கல்வெட்டு (SII VIII:291, AD 2167, SA) விஷ்ணு கோயில் அமுதுபடி சாத்துபடிகளுக்கும் திருப்பணிகளுக்கும் திருவிழா தேவைகளுக்கும் நாட்டு உறுப்பினர்கள் ஆண்டுதோறும் நெல்லும் காசும் பின்வரும் முறையில் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது: “ஏரால் பதக்கு நெல்லும் ஆளால் குறுணி நெல்லும் மாலைக் கட்டி பரிமாறுவார் ஆளுக்கு அஞ்சு காசும் இடக் கடவார்களாகவும், நங்கீழ்பணிமக்கள் இரண்டு காசு இடக் கடவார்களாகவும், நம் ஊர் கோபாலர் குடியால் நா நாழி நெய்யளக்கக் கடவார்களாகவும்.’’

இந்தக் கல்வெட்டில், சித்திரமேழி பெரிய நாட்டார் குழு உறுப்பினர்களையோ, ஐந்நூற்றுவர் குழு உறுப்பினர்களையோ எடுத்துரைக்கவில்லை. ஆனால், சித்திரமேழி பெரியநாடு, வேளாளர்களையும் உள்ளடக்கிய _ சில வேளைகளில் பிராமணர்களையும்கூட உள்ளடக்கிய _ உழவர்களின் அமைப்பு ஆகும். ஐந்நூற்றுவர் பல்வேறு வணிகர், கைவினைஞர் குழுக்களின் அமைப்பு ஆகும். இந்த அமைப்புகளால் ஒன்றிணைந்த குழுக்கள் ஏதோ தரவரிசை பகுப்பிற்குள் சங்கமம் ஆயினர் அல்லது மேற்காட்டிய குடுமியான்மலைக் கல்வெட்டில் பார்த்ததுபோல, ‘அந்தணன் தலையாக பள்ளன் கடையாக’ என்று கூறப்பட்ட படிநிலையின்படி வரிசைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சில பொழுது குழு உறுப்பினர்கள் தொழிலின்படியும் தர நிலையின்படியும் குழுக்களின் படிநிலை வரிசை, அக்குழுக்ககளின் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட, செலுத்த வேண்டிய பங்கு ஆகியவை பற்றிய முடிவு செய்யக் கருத்தில் கொள்ளப்படுகிறது; சாதி உறவுகள் முறைப்படுத்தலில் முன்கூறிய வட்டாரம் கடந்த மற்றும் / அல்லது குழுமம் கடந்த அமைப்புகள் அதிகாரப் போட்டியில் ஈடுபடுகின்றன என்று முடிவு செய்யலாம்.

ஏர், ஆள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செலுத்த வேண்டிய பங்கு முடிவு செய்யப்பட்டது என்பதிலிருந்து இந்த அமைப்புகளை நிறுவிய மக்கள் மத்தியில் சமத்துவச் சமூகம் பற்றிய உணர்வு இருந்தது என்று நாம் வாதிட முடிந்தது; கல்வெட்டில் ‘நம் கீழ்ப்பணி மக்கள்’ என்று குறிப்பிடப்பட்டதிலிருந்து தலைகீழாகவும் வாதிடலாம். ஆயினும், இந்த மூன்று விடயப் புள்ளிகள் மீது மேலாதிக்க விவாதம் இந்த ஆய்வின் வாய்ப்பு எல்லைக்கு அப்பால் செல்லுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டில் ஆள்கிற கருத்துநிலை, ஆட்சி செய்த கருத்துநிலை, மரபார்ந்த கருத்துநிலை, புத்துயிர்ப்பான கருத்துநிலை ஆகியவற்றுக்கு இடையில் ஒன்று மற்றொன்றை எதிர்த்து ஆதிக்கம் பெறுவதற்கான போட்டிக் களத்தில் சாதி உருவாக்கம் மலர்ந்தது என்னும் பார்வையைப் பெற்றதற்கு நாம் திருப்தி கொள்வோம். கல்வெட்டுகளில் புதிய வகை ஓம்படைக்கிளவிகளின் எழுகையே இந்தச் சண்டைக் களத்தை வெளிப்படுத்துகிறது.

- உண்மை இதழ், 1-15.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக