சட்ட விரோதம் மட்டுமல்ல - நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது இந்த முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபடுவது சரியல்ல!
ஒத்தக் கருத்துள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் போராட்டத்தில் ஈடுபடும் - எச்சரிக்கை!
தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி
தருமபுரி, மே 11 பொருளாதாரத்தில் பின்தங் கிய உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக் கீடு அளிக்கும் முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடுபடுவது சட்ட விரோதம் - வழக்கு நீதிமன்றங் களில் நிலுவையில் இருக்கும்பொழுது இந்த முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கினால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட உயர்ஜாதிக்காரர்களுக்கு
10 சதவிகித இட ஒதுக்கீடு
இன்று (11.5.2019) தருமபுரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:
மோடி அரசு சமுகநீதிக் கொள்கைக்கு விரோதமாக இந்திய அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார அடிப்படையை வைத்து, அதன்மூலமாக இட ஒதுக்கீடு என்பதை உயர்ந்த ஜாதியில் உள்ள வசதியற்றவர்களுக்கு என்ற பெயராலே, ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை உருவாக்கியது - அவர்களுடைய ஆட்சி நில விய மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியினால், மேல்ஜாதிக்காரர்களின் ஓட்டு நாடாளுமன்றத் தேர்தலிலாவது கிடைக்கவேண்டும் என்பதற் காகவே செய்யப்பட்ட - ஒரு வார காலத்தில் அவசர அவசரமாக செய்யப்பட்டது. எதிர்க்கட்சிக் காரர்களுக்குக்கூட அதனுடைய நகலை முதல் நாளே கொடுக்காமல், ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை அவர்கள் வேக வேகமாகக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓரிரு நாள்களிலேயே நிறைவேற்றி, உடனே அது அரசாங்கப் பதிவேட்டில் கெசட் செய்யப்பட்டு, அவசரமாக அனுப்பினார்கள்.
பிரதமர் நரசிம்மராவ் கொண்டு வந்த ஆணை செல்லுபடியற்றது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதை எதிர்த்து, ஏற்கெனவே பொருளாதார அடிப்படை என்பது கிடையாது. கல்வி, உத்தியோகங்களில் இட ஒதுக்கீடு என்பது காலங் காலமாக அரசியல் சட்டத்தினுடைய விதிப்படி, தெளிவாக சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்பதுதான் அதனுடைய அடிப்படையாக இருக்கவேண்டும் இட ஒதுக்கீட்டிற்கு.
எகனாமிக்கலி என்று சொல்லக்கூடிய பொரு ளாதார அடிப்படை இருக்கக்கூடாது; அதையும் மீறி இருக்கலாம் என்று நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருக்கின்ற காலகட்டத்தில் கொண்டு வந்த அந்த ஆணை செல்லுபடியற்றது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
அதேபோல மிகத் தெளிவாக, எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபொழுது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பினைக் கொண்டு வந்ததை எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு, இன்னும் சில காங்கிரசு தோழர்கள் எல்லாம் இணைந்து ஒரு பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய பிறகு, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அரசியலில் ஒரு பெரிய தோல்வி ஏற்பட்டது; அவர் அதை கைவிட்டு, மறுபடியும் இட ஒதுக்கீட்டின் சத விகிததத்தை அதிகப்படுத்தினார் என்பது பழைய வரலாறு.
31 சதவிகிதம் 21 சதவிகிதமாகக் குறையும்!
ஆனால், இதற்கு நேர் எதிராக வேண்டு மென்றே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த் தப்பட்டவர்களுக்கும் இருக்கக்கூடிய திறந்த போட்டி என்பது இருக்கிறதே, அது அதிகமான அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு திறந்த போட்டி. மற்ற மாநிலங்களில் 50 விழுக்காடு; நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரையில், 69 சதிவிகித இட ஒதுக்கீடு இருக்கின்ற காரணத்தினால், 31 சதவிகிதம் மற்ற அனைவருக்கும்.
பொதுப் போட்டி என்று சொன்னால், தாழ்த்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முன்னேறிய ஜாதியினர் ஆகிய எல்லோருமே போட்டியிடலாம் திறமை அடிப் படையில் என்பதற்காக இருக்கக்கூடிய ஒரு பொதுப் போட்டி பிரிவுதான் அந்த 31 சதவிகிதம்.
இப்பொழுது 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று சொன்னால், 31 சதவிகிதத்தில் 21 சதவிகிதமாகக் குறையும். அதுமட்டுமல்ல, உயர்ஜாதிக்காரர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல.
Reservation is not a policy of poverty annihilation scheme
என்பது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாகவே கொடுக்கப் பட்ட ஒன்றாகும்.
இன்றைக்கு தமிழக அரசு சார்பில் வெளிவந்த அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!
எனவேதான், அதை எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதுபோல, பிற்படுத்தப்பட்ட சமுக நல அமைப்புகள் எல்லாம் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்குப் போட்டிருக்கிறோம். அதேபோன்று, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, அந்த வழக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டு, அதை அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட ரீதியான பெஞ்ச் விசாரிக்கவேண்டும் என்பதற்காக உடனடியாக வேறு தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசு, தேர்தல் கண்ணோட்டத்தோடு மோடி அரசு, அதை அமல் படுத்தவேண்டும் என்று, அவசர அவசரமாக மாநிலங் களுக்கு நிறைய இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்று. முன்னேறிய ஜாதிக்காரர்களின் பிள்ளைகள் ஏற் கெனவே நல்ல அளவிற்குப் படித்தவர்கள். நல்ல அளவிற்கு புளியேப்பக்காரர்கள்; அவர்களுக்கே விருந்து படைக்கக்கூடிய அளவிற்கு அவர்கள் செய்கிறார்கள். தமிழ்நாடு அரசு அதனை நாங்கள் ஏற்கவில்லை; அந்தக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று நம்மிடம் சொல்லிவிட்டு, வழக்கம்போல நீட் தேர்வில் எப்படி முன்னே பார்த்தால் ஒரு முகம்; பின்னே பார்த்தால் வேறொரு முகம் என்று இரட்டை வேடம் போடுகின்ற தமிழ்நாடு அரசு - ஒரு பக்கத்தில் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்; இன்னொரு பக்கத்தில் நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்வதுபோன்று, இன்றைக்கு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி வந்திருக்கிறது.
பொருளாதார அடிப்படை கூடாது என்பதை கொள்கை ரீதியாக எதிர்த்தவர்கள் எம்.ஜி.ஆரும்- ஜெயலலிதாவும்!
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு என்பதுதான் அந்த செய்தி.
அப்படியானால், தமிழக அரசு இதைக் கொள்கை பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறதா? என்பதுதான் எங்களுடைய கேள்வி.
தமிழக அரசு எம்.ஜி.ஆர். அரசு என்று சொல்லப்படு கிறது; அம்மாவினுடைய அரசு என்று ஜெயலலிதா பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேற்சொன்ன இரண்டு பேருமே, பொருளாதார அடிப்படை என்பதை ஏற்காதவர்கள்.
இன்னுங்கேட்டால், 69 சதவிகித இட ஒதுக்கீடு சம்பந்தமான ஒரு வழக்கு வந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் வாதாடியபோது, தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருந்த காலகட்டத்தில், தெளிவாக, பொருளாதார அடிப்படை கூடாது; அதை தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக எதிர்க்கிறது என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பில், இந்திரா சகானி என்ற மண்டல் கமிசன் வழக்கில் அது மிகத் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், தமிழக அரசு இந்த முடிவை செய்யக்கூடாது. காரணம் என்னவென்றால், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு இருக்கிறது; இந்த சட்டம் செல்லாது என்று சொல்வதற்கு - அது அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
தடை இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக...
சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குப் போடப்பட்டு இருக்கிறது - அந்த வழக்கை நீதிபதிகளும் அனுமதித்திருக்கிறார்கள்.
ஸ்டே இல்லை என்கிற ஒரே காரணதிற்காக நாங்கள் அதை செய்கிறோம் என்பது சரியான நிலைப்பாடு அல்ல. சட்டப்படி. எப்பொழுது அந்த வழக்கை விசாரிக்கக் கூடிய அளவிற்கு, அடிப்படை உரிமை, அதாவது அடிக்கட்டுமானம் Basic Structure of the Constitution என்பதை மாற்ற முடியாது எந்த அரசியல் சட்டத் திருத்தமும்.
ஆகவேதான், இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த முயற்சிகளைத் தமிழக அரசு கைவிடவேண்டும். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற வேலைகளைச் செய்து கொண்டு வருகின்றது.
'வழவழா கொழகொழா' விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்!
நேற்றுகூட தமிழைப் பொறுத்தவரையில், தமிழ் விருப்பப்பாடமாக இருக்கக்கூடிய அளவிற்கு என்று சொல்லி, இன்றைக்குக்கூட அதற்கு ஒரு வழவழா கொழகொழா விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். செம்மொழி நிறுவனத்தை, ஒன்றுமில்லாமல், தினக்கூலி நிறுவனமாக ஆக்கிவிட்டார்கள்.
எனவேதான், மொழியைக் காப்பாற்றவேண்டும், சமுகநீதியைக் காப்பாற்றவேண்டுமானால், இந்த ஆட்சியினுடைய நிலைப்பாட்டை மாற்றவேண்டும்; நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ளாமல் - நீட் தேர்வில் எப்படி அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்களோ - அதேபோன்று இந்த விஷயத்திலும் போடுகிறார்கள்.
நீட் தேர்வில் விலக்குக் கோராத தமிழக அரசு - வெளிப்படுத்திய மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது சொன்னார், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரவேயில்லை. நீட் தேர்வில் சில ஒழுங்கு முறைகளை செய்யவேண்டும் என்றுதான் கேட்டார்களே தவிர, ரத்து செய்யச் சொல்லி கேட்கவில்லை.
ஏற்கெனவே தமிழக அரசு நீட் தேர்வு சம்மந்தமாக இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியதைப்பற்றி, அவர்கள் கவலைப்படவேயில்லை. இவர்களும் அதை வலியுறுத்தவே இல்லை.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் அணி - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள் வெற்றி பெற்று வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
மாணவச் செல்வங்களைப் பலி கொள்ளக்கூடியதாக நீட் தேர்வு இருக்கிறது
நேற்றுகூட, மேனாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார். அவர்தான் காங்கிரசு தேர்தல் அறிக்கையை தயாரித்தவர். தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது; ஆனால், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லிக்கொண்டு, அந்தத் தேர்விற்காகப் பயிற்சி வகுப்புகளை நடத்து கிறார்கள். அந்தப் பயிற்சியில் பெண்களுக்கு எவ்வளவு கொடுமைகள் நடத்தப்பட்டன என்பதுபற்றி செய்திகள் வந்திருக்கின்றன. கடைசி நேரத்தில், தேர்வு மய்யங்கள் மாற்றப்பட்டு, அதனால் ஒரு மாணவிகூட இறந்து போயிருக்கின்றார் இந்த ஆண்டு.
ஒவ்வொரு ஆண்டும் மாணவச் செல்வங்களைப் பலி கொள்ளக்கூடியதாக நீட் தேர்வு இருக்கிறது. ஆகவேதான், அதனை கைவிடவேண்டும் என்பதை உங்கள் மூலமாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
தமிழ்நாடு சமுகநீதி மண் - பெரியார் மண்
10 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் இருக்கிறது. ஆகவே, இது சமுகநீதிக்கு விரோதமானது. தமிழ்நாடு சமுகநீதி மண் - பெரியார் மண் - சமுகநீதிக்கே இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடியது தமிழ்நாடுதான். வடநாட்டுக்காரர்களுக்குக்கூட தெளிவு படுத்தவேண்டிய மாநிலம் தமிழகம்தான்.
தமிழ்நாடு அரசு, உடனடியாக இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும்!
ஆகவேதான், இந்தக் கருத்தை உங்கள் மூலமாக வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு, உடனடியாக இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும்.
நெறிமுறைகள் தயார் என்று சொன்னால், என்ன அர்த்தம்? நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்றுதானே அர்த்தம். அதேநேரத்தில், தங்களுக்கு மாறான கருத்து இருந்தால், மத்திய அரசுக்கு, மாநில அரசு அடிமையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. தங்களு டைய கருத்துகளை சுதந்திரமாக, தாராளமாக எடுத்துச் சொல்லலாம்.
எங்களுடைய நிலை வேறு; தமிழ்நாட்டில், சமுகநீதி யைப் பொறுத்தவரையில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு; அதுவும், 9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் இருக்கின்ற ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடுதான். அப்படியென்றால், நாம் வித்தியாசமான ஒரு இடத்தில் சமுகநீதியில் உச்சக்கட்டத்தில் இருக்கிறோம். அதைக் குழிதோண்டி புதைப்பதுபோன்று, இன்றைக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் செயல்படுத்துவதற்கு வழிமுறைகளைத் தயாரிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
மத்திய அரசு கடிதம் எழுதினால், இவர்கள் பதில் கடிதம் எழுதவேண்டும்.
இந்தப் பிரச்சினையில் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, தமிழ்நாடு மாநிலம் சமுகநீதியில் தனித்த மாநிலமாகும். திறந்த போட்டியில் 31 சதவிகிதமாக இருப்பது 21 சதவிகிதமாகக் குறையும். அதனால், தாழ்த்தப்பட்டவர்களுடைய மாண வர்களுக்கு வாய்ப்புகள் குறையும்.
அதேபோன்று, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் திறந்த போட்டியில் போட்டியிடுவது குறையும்.
ஆனால், இப்பொழுது என்ன சொல்கிறார்கள்? புரியாத மக்களிடையே ஏமாற்றலாம் என்று நினைத்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள், நலிந்த பிரிவினருக்கு எல்லாம் இடம் கொடுப்போம் என்பது - வெல்லத்தில் பிள்ளையார் செய்து வைத்து, அதிலிருந்தே கொஞ்சம் கிள்ளி எடுத்துக் காட்டியது போன்ற கதை போல'' இருக்கிறது.
திராவிடர் கழகம் தலைமையில் பெரிய போராட்டம் நடத்தவேண்டி இருக்கும்
ஆகவேதான், இதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும்; இல்லையானால், ஒத்தக் கருத்துள்ள, சமுகநீதியில் நம்பிக்கையுள்ள அத்துணைப் பேரையும் திரட்டி, திராவிடர் கழகம் தலைமையில் பெரிய போராட்டத்தை நடத்தவேண்டி இருக்கும்.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்குக்கு விரோதமாக நடக்கக்கூடிய, சமுகநீதியைப் பறிக்கக்கூடிய ஒரு செயலுக்கு, தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது மத்திய அரசுக்கு என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக