பக்கங்கள்

வியாழன், 28 ஜனவரி, 2021

மண்டல் ஆணை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு - வி.பி.சிங் அவர்களுக்கு வரலாறு காணாத வரவேற்பு!

18.11.1992 அன்று மத்திய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செய்து 1990இல் வி.பி.சிங் அரசு போட்ட ஆணை செல்லும் என்று 9 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். (என்ற போதிலும் அவர்களில் 3 நீதிபதிகள் சில விஷயங்களில் தனித்து எழுதினர்) இதனை விளக்கி முக்கிய அறிக்கையை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். (மொத்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு)

அதில், உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் வழங்கிய தனித் தீர்ப்புதான், தனித்தன்மையான சிறப்புகளைக் கொண்டிருக்கிறது என்று பாராட்டி அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

சமூகநீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்குக் காரணமே தந்தை பெரியார் அவர்களும் அவர்தம் இயக்கமும் முன்னின்று போராடியதன் விளைவுதான் என்பதை அன்றைய பிரதமர் பண்டிதர் நேரு நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மாநிலத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஓர் சமுதாயத்தில் பல்வேறு தடைகள், தடங்கல்கள், தொல்லைகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டு நீந்தி, இன்று அந்தப் பெரிய இடத்தில் அமர்ந்துள்ளார் திரு.இரத்தினவேல் பாண்டியன். அவர்கள் தகுதியிலும் திறமையிலும் எந்த ஒரு முன்னேறிய சமூகத்தவருக்கும் சளைத்தவர் அல்லர். சட்டஞானம், பொதுஅறிவு, ஆழ்ந்த நுண்மான் நுழைபுலம் இவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பால் உயர்ந்த பதவிக்கு வந்துள்ளவர். எனவே, மிக அருமையாக தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் பாராட்டியிருந்தோம். அவர் மறைவுக்குப் பின் பெரியார் திடலில் ஒரு மாபெரும் இரங்கல் கூட்டம் நடத்தினோம்.

இதனைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலில், “மண்டல் கமிஷனும் _ சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பும்’’ எனும் தலைப்பில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் 23.11.1992 அன்று சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு துறையைச் சேர்ந்த பெருமக்கள் இக்கூட்டத்திற்குப் பெருந்திரளாக வந்திருந்தனர்.

மண்டல் பரிந்துரை மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பாராட்டு தெரிவித்து எனக்கு பாராட்டுக் கடிதங்கள் வந்தவண்ணம் இருந்தன.

அதில், அமெரிக்கா வாழ் தமிழர்களான பல்துறை வல்லுநர்கள் கூட்டாகக் கையொப்பமிட்டு எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தந்தை பெரியார் அவர்களது தொலைநோக்குப் பார்வையில் விளைந்த கல்விப் புரட்சியாலே படித்துப் பட்டம் பெற்று இன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களின் நன்றி அறிவித்தலை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விடாது பாடுபட்ட உங்களுக்கும், உங்களுக்குப் பேருதவியாக இருந்த கருப்பு மெழுகுவத்திகளுக்கும் மற்றும் வி.பி.சிங், ராம்விலாஸ் பஸ்வான், லாலுபிரசாத் போன்ற தலைவர்களுக்கும் எங்கள் நன்றியை உளமாரத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டாக்டர் சோம.

இளங்கோவன்

மிக்க அன்புடன், டாக்டர் சோம.இளங்கோவன், சிகாகோ வ.செ.பாபு, சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் ந.விசுவநாதன், சிகாகோ பொறியாளர் டாக்டர் திருநாவுக்கரசு, செயிண்ட் லூயிஸ் விஞ்ஞானி டாக்டர் தண்டபாணி, டாக்டர் அய்யனார், டாக்டர் இளங்கோவன், டாக்டர் ஏ.எம்.இராசேந்திரன், (பாஸ்டன், விஞ்ஞானி), திரு.மோகனம் (ஒஹியோ, வழக்கறிஞர்), டாக்டர் குமார், (பேட்டன்டுச், நியூ ஓர்லியன்ஸ்), பேராசிரியர் இலக்குவன் தமிழ், (டல்லாஸ், டெக்சாஸ்) என்று அந்தப் பட்டியல் பதிவு செய்யப்பட்டிருந்தது.

25.12.1992 அன்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் பாரத பிரதமர் சமூகநீதி காவலர் திரு.வி.பி.சிங் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பினை அளித்தோம்.

கழகக் கொடிகளுடன் அணிவகுத்து நின்ற கழகத் தோழர்கள் “சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் வாழ்க’’ Long live, long live! V.P.Singh long live!” என்கிற முழக்கங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தமிழ்நாட்டில் தீவிர சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட திரு.வி.பி.சிங் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றோம். வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  மாநில மகளிர் அணி செயலாளர் க.பார்வதி, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கவிஞர் செ.வை.ர.சிகாமணி, சேலம் ப.கந்தசாமி, கு.தங்கமணி, தே.அன்னத்தாயம்மாள், வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன், செயலாளர் குணசீலன் உள்ளிட்ட ஏராளமான கழக நிருவாகிகள் கலந்துகொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் சமூகநீதி காவலர் திரு.வி.பி.சிங்கை வரவேற்கும் ஆசிரியர்

வரவேற்பைத் தொடர்ந்து திருச்சியிலும் சமூகநீதிக்காவலர் திரு.வி.பி.சிங் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது. கருஞ்சட்டைக் கடலினைக் கண்டு வி.பி.சிங் அவர்கள் நெகிழ்ந்து போனார்.

பின்பு 28.12.1992 அன்று பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகளும் அணிவகுத்து நின்று வரவேற்றனர். கல்வி வளாகத்துக்குள் குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சி துவங்கியது. ஜனதா தளத்தின் செயலாளரும் தீவிரமான கொள்கையாளரும், துடிப்புமிக்க செயல் வீரருமான ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி. தலைமை தாங்கினார்.

தஞ்சையில் இயங்கிவரும் பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக வி.பி.சிங் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

பின்பு, வி.பி.சிங் அவர்கள் நினைவாக கல்வி வளாகத்தின் கட்டடப் பிரிவு ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும், பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

வி.பி.சிங் அவர்கள் உரையை மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு.வெ.கி.ஆசான் மொழிபெயர்த்தார்.

வி.பி.சிங் அவர்கள் உரையாற்றும்போது 2 ஆண்டுக்கு முன் மண்டல் அறிக்கையை தாம் அமல்படுத்திய நேரத்தில் ஆதிக்க சக்திகள் அதை எதிர்த்தபோது, தமிழ்நாட்டில் வீரமணி அவர்கள் உருக்குமலையாக நின்று ஆதரித்ததை தன்னால் மறக்க முடியாது என்ற வி.பி.சிங், “நான் செல்லும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் தருகிற சிறப்பான அன்பான வரவேற்பு - என்னுடைய உள்ளத்தை விட்டு அகலவில்லை’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதேநேரத்தில், சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன்’’ என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.

குழந்தைகள் காப்பகக் கட்டடத்தை திறந்து வைக்கும் திரு.வி.பி.சிங், ராம் விலாஸ் பஸ்வான் உடன் ஆசிரியர்.

பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு தலைமையேற்ற முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் ஆற்றிய உரையில்,

“நான் இதற்கு முன் 1979லே இங்கே வந்தேன். அன்றிலிருந்து நண்பர் வீரமணி அவர்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன். அந்த நாளிலேயே தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய புத்தகங்களை நண்பர் வீரமணி எனக்குக் கொடுத்தார். நான் அந்த நூல்களை மற்ற இலக்கியங்களைவிட அதிகமாகப் படித்திருக்கிறேன்.’’

நண்பர் வீரமணி அவர்களிடத்திலே,  “தமிழ்நாட்டிலே, நீங்கள் செய்கின்ற பணியை இந்தியா முழுவதும் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டது உண்டு. அவ்வாறு கேட்டுக் கொண்டபோது தந்தை பெரியாரின் கருத்துகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துத் தாருங்கள் என்றும் கேட்டேன். ஏனென்றால், இவ்வாறு தந்தை பெரியாரின் கருத்துகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துப் பரப்பினால் இன்றைக்கு தமிழ்நாட்டிலே நிலவுகின்ற அமைதி, சமுதாய நல்லிணக்கம், சமூக முன்னேற்றம் இந்தியா முழுவதும் நிலவ வாய்ப்பு உண்டு.

தந்தை பெரியார் அவர்கள் நமக்கு சமூகநீதித் தத்துவத்தைத் தந்திருக்கிறார்கள். அவ்வாறு நமக்கு சமூகநீதித் தத்துவத்தைத் தருவதற்கு முன் பண்பாட்டுப் புரட்சி என்னும் தத்துவத்தைத் தந்தார்கள். பண்பாட்டுப் புரட்சி ஏற்பட்டு சமூகநீதித் தத்துவம் நிறைவேறினால்தான் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும். பண்பாட்டுப் புரட்சி, சமூகநீதிப் புரட்சி ஆகிய இவை ஏற்பட்டால்தான் நம் நாடு முழுமையான விடுதலை பெற்ற நாடாக இருக்க முடியும் என்று கூறினார்கள். கல்வி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர் பெருமக்களும் கலந்துகொண்டு உரையைச் செவிமடுத்தனர்.

- உண்மை இதழ், 1-15.3.20

புதன், 13 ஜனவரி, 2021

வறுமையும் ஜாதியும்!


மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பார்ப்பனர்களுக்குப் புதுப்புது கால்களும், இறக்கைகளும், நீளமான வாயும் முளைத்து விட்டனவோ என்று நினைக்க வேண்டியுள்ளது.

பார்ப்பனர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்களுடைய உண்மை உருவத்தை வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதை நெருக்கடி நிலை காலத்தில் பார்த்தோம் - அனுபவித்தோம்.

த.வே., சுப்பிரமணியம் என்ற இரு பார்ப்பனர்கள் தமிழக ஆளுநருக்கு ஆலோசகராக இருந்து அடேயப்பா எப்படி எப்படி எல்லாம் ஆட்டம் போட்டனர்!

பத்திரிகை தணிக்கை  என்ற போர்வையில் மூன்று பார்ப்பனர்கள், சென்னை சாஸ்திரி பவனில் உட்கார்ந்து கொண்டு சிறப்பு மை பேனா என்ற ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு செய்த 'ரவுடிசம்' சாதாரணமானதல்ல. தந்தை பெரியார் அவர்கள் என்று போடக் கூடாதாம். அதே நேரத்தில் சங்கராச்சாரியார் என்று போட வேண்டும் என்று  அதட்டல், உருட்டல் செய்து பார்த்தனர். அந்த மூவரில் ஒருவர் இப்பொழுது 'துக்ளக்' அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ஆரிய அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை போய் விடும் என்று கூச்சல் போட்டவர்கள் இப்பொழுது பொருளாதார அளவுகோல் என்று கூறி 10 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற்று விட்டனர். மத்தியில் பா.ஜ.க. என்ற பார்ப்பன ஆட்சி என்னும் காற்றுவீசும்போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று துடியாய்த் துடித்து ஒவ்வொரு காரியத்தையும் சாதித்துக் கொண்டு வருகிறார்கள்.

நீட்டை திணித்தார்கள் - சட்டத்துக்கு விரோதமாக இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்து விட்டார்கள்.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் குலக்கல்வி திட்டத்திற்கு வழிதேடுகிறார்கள். அதில் ஒரு வார்த்தையை சன்னமாக நுழைத்திருக்கிறார்கள் Socially and Educationally என்று அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற மிக முக்கியமான சொற்களுக்குப் பதிலாக  Socio - Economically Disadvantaged Group என்கிற சொற்களைத் திணித்துள்ளனர்.

நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தான் அவருக்கே உரித்தான நுட்பமான ஈரோட்டு நுண்ணாடி மூலம் அதை வெளிப்படுத்தினார்.

ஈரோட்டில் கூடிய பார்ப்பனர்களின் பொதுக் குழுவில் இன்னொரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

பொருளாதார ரீதியாக நலிந்த வறுமைக்கோட்டிற்குக்  கீழ் உள்ள பார்ப்பன சமூகத்திற்கென்றே தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்கிறபோது பார்ப்பனர் அல்லாதார்தான் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். வறுமையில்கூட ஜாதி பார்க்கும் இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது. வறுமைக்கும் ஜாதிக்கும் முக்கிய தொடர்பு உண்டு என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பு குறித்து பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆர். ஆர்தர் லூயிஸ் (A  theory of Economic Development) பின்வருமாறு கூறகிறார்.

"இந்தச் சமூகம் பொருளாதார தேக்கமடைந்ததற்கு மனிதன் பல ஜாதிப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு (The Water Tight Compartments of Castes) தொழிலாளர் புழக்கம் (Mobility of Labours) தடைப்பட்டது ஒரு முக்கிய காரணமாகும்“ என்கிறார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையத்தின் தலைவரான காகா கலேல்கர் என்ற பார்ப்பனர் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது கவனத்துக்குரியதே!

"ஜாதி அமைப்பினால்தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருகிறது - என்பது உண்மையாகும்.பொருளாதாரத் தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர, ஜாதி தோன்றுவதற்குரிய காரணம் அது வல்ல" என்று ஒரு பார்ப்பனப் பேராசிரியரே குறிப்பிட்டுள்ள நிலையில், பிறப்பினால் உயர்வு எனும் ஜாதி ஆதிக்கத்தின் உச்சியில் இருப்பவர்கள், இந்த வாய்ப்புப் போதாது என்று பொருளாதார அளவுகோல் என்ற முகமூடி  அணியும் கொள்ளையர்களாகத் துடிக்கிறார்கள் - வெகு மக்களான ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

செவ்வாய், 12 ஜனவரி, 2021

டெல்லியில் சந்திரஜித் யாதவ் தலைமையில் நடந்த சமூகநீதி பேரணி (6.12.,1985)

டெல்லியில் சந்திரஜித் யாதவ் தலைமையில் நடந்த சமூகநீதி பேரணி (6.12.,1985)


இந்தியாவின் தலைநகரில் மண்டல்குழு அறிக்கையை அமலாக்கக் கோரி ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடும், சமூகநீதி கோரி எழுச்சிப் பேரணியும் 06.12.1985 அன்று டெல்லியில் பெரிய அளவில் நடைபெற்றன. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான அன்று டில்லியில் பல்லாயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் சமுதாய மக்களுக்கு சமூகநீதி கேட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது.

இடஒதுக்கீடு செயல் கமிட்டித் தலைவர் சந்திரஜித் யாதவ் உள்பட பல தாழ்த்தப்பட், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முன்னணித் தலைவர்கள இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தேசிய ஒன்றிணைந்த தூதுக் குழுவினர் உடன் சென்று குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். பேரணியின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உள்ளபடி விளக்கி குடியரசுத் தலைவர் அரசியல் சட்டப்படி உரிமைகளை செயல்படுத்த மத்திய அரசுக்கு ஆணை இடவேண்டும் என்று நாங்கள் குடியரசுத் தலைவரிடம் வற்புறுத்தினோம்.

தூதுக்குழுவினரின் விளக்கங்களை நல்லவண்ணம் கேட்ட குடியரசுத் தலைவர் இப்பிரச்சினையில் கட்சி சார்பின்றி ஒருமித்து நின்று இதனை வற்புறுத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

நான், குடியரசுத் தலைவர் அவர்களை தனிமையில் சந்தித்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூலினை வழங்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.


அவர், இடஒதுக்கீட்டுத் துறையில் தமிழ்நாடு போல மற்ற மாநிலங்களும் முன்னேற வேண்டும். இதில் தமிழ்நாடுதான் முன்னேறிய மாநிலம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

மறுநாள் 7.12.1985 அன்று டெல்லி விட்டல்பாய் மண்டபத்தில் பல  மாநில முக்கிய பிரதிநிதிகளைக் கொண்ட சமூகநீதிப் பணியாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றினேன்.


- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

உண்மை இதழ்,1-15.2.19

புதன், 6 ஜனவரி, 2021

சமூகநீதியின் நெருப்புப் பொறி துவங்கிய மாநிலத்தில் குடியிருப்புகளின் ஜாதிப் பெயர் நீக்கம்

• Viduthalai

மராட்டிய அரசு உத்தரவு



மும்பை, டிச.4 இந்தியாவில் தமிழ்நாடு, பீகார், மராட்டியம் போன்ற மாநிலங்கள் சமூகநீதிக்கான எடுத்துக்காட்டாக திகழ்கின்றன  அதில், மராட்டிய மாநிலத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. மகாத்மா ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் என மாபெரும் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு.  அந்த மண்ணில் தற்போது முற்போக்கான ஒரு முடிவை மராட்டியத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது


மராட்டிய மாநிலம் முழுமையும் பிராமன்வாடா (பார்ப்பனர்கள் குடியிருக்கும் பகுதி), கோலிவாடா (மீனவர் குடியிருப்பு) சர்ம்மாவாடா (தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பு) மங் வாடா (சூத்திரர் குடியிருப்பு) தோர் பஸ்தி (பழங்குடியினர், நாடோடிகள் குடியிருப்பு), மல்லி கல்லி (குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வசிக்கும் தெரு) போன்றவை ஒழிக்கப்படும் என்றும்; அவற்றுக்கு மாற்றாக சமதா நகர் (ஒற்றுமைநகர்), பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி நகர்(புரட்சி நகர்) என்ற புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் என்றும் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வசிக்கும்பகுதிகளில் அனைத்து ஜாதியினரும் வசிக்கும் நிலையை உருவாக்க முயற்சிகள் எடுக்கப் படும் எனவும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அம்பேத்கர் அவர்கள் பெயரில் வழங்கப்படும் விருதும், அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தந்தை பெரியார் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தங்களின் பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப்பெயர்களை நீக்க முடிவெடுத்து அதை தீர்மானமாக நிறைவேற்றினார். அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாரும் ஜாதிப் பெயர்களைக் வைத்துக்கொள்வதில்லை.


தாங்கள் படித்துப் பெற்ற பட்டங்களையே தாங்கி நின்று, சமூகநீதியின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதுபோலவே, தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்களும் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டுவிட்டது. ஜாதி ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மக்களும் சேர்ந்து இணக்கமாக வசிக்கக்கூடிய கனவுத் திட்டமான தந்தை பெரியார் பெயரிலான ‘சமத்துவபுரம்’, தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு, இந்தியாவுக்கே வழிகாட்டும் மனிதநேயத்தின் மகத்தான மய்யங்களாயின.


பல நூறு ஆண்டுகளாகப் பரவிப் புரையோடிப் போயிருக்கும் ஜாதிப் பாகுபாடுகளை - அதன் விளைவாக நேர்ந்த கொடுமைகளை - வன்மத்தை அகற்றிட, தொடர்ச்சியான செயல் பாடுகள் தேவை. அனைத்து மாநி லங்களிலும் அவை பரவலாக முன் னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு இதனைமேற்கொண்டுள்ளது.


சமூகநீதியால் பயன் உண்டே தவிர, ஆன்மிகத்தால் அல்ல!

• Viduthalai

 தந்தை பெரியார் நினைவு நாளில் தமிழர் தலைவர்

சென்னை,  ஜன.3    சமூகநீதியால் பயன் உண்டே தவிர, ஆன்மிகத்தால் அல்ல என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் 47 ஆம் ஆண்டு நினைவு நாளான  கடந்த 24.12.2020 காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு ‘பெரியார் விருது' வழங்கப்பட்டது.  அந்நிகழ்வில்,  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது  உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சமூகநீதியால் பயன் உண்டே தவிர,

ஆன்மிகத்தினால் பயனில்லை

ஆன்மிகம், ஆன்மிகம் என்று சொல்கிறார்களே, ஆன் மிகத்தினால் என்ன பயன்? சமூகநீதியால் பயன் உண்டே தவிர, ஆன்மிகத்தினால் பயனில்லை.

இன்றைக்குப் பெண்கள் படித்திருக்கிறார்களே, பெரியார் மண் எப்படி என்று கேட்கிறீர்களே, உங்களுக்குப் பதிலை நாங்கள் சொல்லவில்லை. இப்பொழுது ஓய்வு பெற்று செல்கிறாரே, தலைமை நீதிபதி அவர் சொல்கிறார், தமிழ்நாட்டில்தான் உயர் நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். இதுபோன்று இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று சொன்னாரே!

அது எப்படி மந்திரக்கோலால் வந்ததா? அல் லது ஆன்மிக அரசியலினால் வந்ததா? அல்லது சமூகநீதிப் போராட்டத்தை பெரியார் தொடங்கி யதினாலே - திராவிட இயக்கத்தினாலே வந்ததா?

இங்கே அய்யா நீதிபதி அரிபரந்தாமன் கேட் டாரே, உச்சநீதி மன்றத்தில் இன்னமும் சமூகநீதி எட்டிப் பார்க்கமுடியவில்லை என்று. அங்கே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒரு அம்மையார் இருந்தார், அவரும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ஆளே கிடையாது.

பெண்களை நீதிபதிகளாகப் போடுங்கள் என்றால், உயர்ஜாதி பெண்களாகப் பார்த்து போடுகிறார்கள்

ஒரே ஒருவர் மகாராட்டிராவில் இருந்து சென்றிருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர். மற்ற அத்தனை பேரும் உயர்ஜாதிக்காரர்கள்.

இன்னும் ஒரு தந்திரம் என்னவென்று சொன் னால், பெண்களை நீதிபதிகளாகப் போடுங்கள் என்று சொன்னால், உயர்ஜாதி பெண்களாகப் பார்த்து போடுகிறார்கள்.

எனவேதான், பெரியார் அன்றும் தேவைப் பட்டார் - இன்றும் தேவைப்படுகிறார் - நாளைக் கும் அதிகமாகத் தேவைப்படுவார்.

திராவிடம் வெல்லவேண்டும் என்று சொல் வதற்கு இதுதான் அடையாளம்.

சுயமரியாதைத் திருமணம் இங்கேதான் நடைபெறுகிறது என்று நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் சொன்னார்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை எதிர்த்து வழக்குப் போட்டார்கள். சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்பதற்காக முயற்சி எடுத்தார்கள்! வடக்கே இருந்து வந்த நீதிபதிதான், இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் இருக்கிறார். அவர் தலைமையில் வழக்கு நடைபெற்றது. அது செல்லும் என்ற அளவிற்கு வந்ததற்கு என்ன காரணம்? இது பெரியார் மண் என்பதுதான்.

ஒரு எம்.பி, கூட இல்லாமல், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கூட இல்லாமல், முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தை தந்தை பெரியார் செய்தார் என்று தோழர் தா.பாண்டியன் அவர்கள் சொன் னார்களே, அதனுடைய தாக்கம்தான் இந்த வெற்றி.

ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்,

பெரியாருடைய பணி என்பது, அவர் உருவத் தால் மறைந்திருக்கலாம்; உணர்வால் நிறைந்து, உலகம் முழுவதும் நிறைந்து உலகப் பெரியாராக இன்றைக்குப் பரிமளித்திருக்கிறார் என்பதற்கு அடையாளம் ஒரு செய்தியை சொல்கிறேன், பொத்தாம் பொதுவாக அல்ல - ஆதாரப்பூர்வமாக - ஒரு புள்ளிவிவரத்தோடு சொல்கிறேன்.

307 இணையேற்பு நிகழ்ச்சிகள்

பெரியார் திடலில், பெரியார் சுயமரியாதைத் திருமணம் நிலையம் இருக்கிறது. அங்கே, நடைபெறும் திருமணம் சடங்கு இல்லாமல், சம்பிரதாயம் இல்லாமல், இரண்டு பேர், நான்கு பேர் வருகிறார்கள், திருமணம் செய்து கொள்வதற்காக வருகிறார்கள். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, வயது சான்றிதழ் உள்பட அனைத்தையும் சரி பார்த்து திருமணத்தைப் பதிவு செய்கிறார்கள்.

2020 ஜனவரி மாதம் 20 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 24, 2020 வரை 307 இணையேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கிறது.

இதில், ஜாதி மறுப்புத் திருமணங்கள் 272

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தால் அது செய்தியாகிறது. ஆனால்,  ஆணவக் கொலைகள் அந்தப் பக்கத்தில் நடைபெறும். அதையும் கண்டிக்கிறோம். ஒன்றுகூட அவ்வாறு நடைபெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால், நண்பர்களே! பெரியார் வெற்றி பெற்றாரா? இல்லையா?

பெரியார் என்பது தத்துவம் - பெரியார் என்பது ஒரு போர்க் கருவி - திராவிடம் என்பது லட்சியம் - திராவிடம் என்பது போர்க் கருவி!

அந்த அடிப்படையில்,

ஜாதி மறுப்புத் திருமணங்கள் 272

வேற்று மாநிலத்தவர் திருமணங்கள் 17

பார்ப்பனர் உள்பட இணையேற்பு விழா 12

மணமுறிவு பெற்று மறுமணம் 6

மணவிழா நடத்திக் கொள்கின்றவர்கள் மன முவந்து ‘விடுதலை' சந்தாக்களைக் கொடுக்கிறார் கள்.

ஆகவே, இந்தக் கொள்கை வளர்ந்திருக்கிறதா? இல்லையா?

கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார், அதோடு நின்றுவிடவில்லை - மனிதனை நினை என்றார்.

அப்படியே வாழ்ந்து காட்டினார். தோழர் பாண் டியன் அவர்கள் இங்கே உரையாற்றும் பொழுது சொன்னார், பெரியாரிடம் கொடுக்கப்பட்ட ஒவ் வொரு காசையும் பொதுமக்களுக்கே திரும்பக் கொடுத்தார். பெரியாருடைய சொந்த சொத்து களையும் கொடுத்தார்.

அந்தச் சொத்தை சட்டப்படி பாதுகாப்பதற்காகத் தானே மணியம்மையார் திருமண ஏற்பாடு. அந்த நேரத்தில், அந்த செய்தி அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அது வேறு செய்தி!

ஆனால், அவரால் உருவாக்கப்பட்ட நிறுவனங் களை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் நண் பர்களே! ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக் காட்டவேண்டும்.

3,773 குழந்தைகள் பயனடைந்து இருக்கிறார்கள்

1959 ஆம் ஆண்டு தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் சேர்ந்து "நாகம் மையார் ஆதரவற்ற  அனாதை  குழந்தைகள் இல்லம்" என்ற பெயரில் ஆரம்பித்தார்கள். நான் பொறுப்பேற்ற பிறகு, ஆதரவற்ற, அனாதை என்ற சொற்களை எடுத்துவிட்டோம். அதை அவர்களுக்குத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தக் கூடாது; அது தேவையும் இல்லை. நாமெல்லாம் இருக்கின்றபொழுது அந்தக் குழந்தைகள் ஒரு போதும் அனாதைகள் ஆகமாட்டார்கள்; ஆதர வற்றவர்களாக ஆகமாட்டார்கள்.

அந்த இல்லத்தினை அய்யா தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரையில் 3,773 குழந்தைகள் பயனடைந்து இருக்கிறார்கள்.

இந்த இயக்கம் ஏதோ சாதாரணமான இயக்க மல்ல - ஏதோ பேசிவிட்டுப் போகக்கூடிய இயக்க மல்ல. பெரியாரிடம் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காலணாவும், கையெழுத்திற்காக வாங்கிய நாலணாவும் எப்படி பயன்பட்டு இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

இல்லத்தில் வளர்ந்த 34 பெண்குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறோம்

அங்கேவளர்ந்தகுழந்தைகள்என்னஜாதி, என்ன மதம் என்று தெரியாது. பெரும் பாலும் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை கள்தான் ஏராளம். அவர்களுக்கு முன்னெழுத்து என்ன தெரியுமா? ஈ.வி.ஆர்.எம்.; அந்த இல்லத்தில் வளர்ந்த 34 பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, அவர் களுக்குப் பிள்ளைகள் பிறந்து, அவர்களுக்கும் நான் திருமணம் செய்து வைத்திருக்கிறேன்.

நாங்கள், எங்களை விளம்பரப்படுத்திக் கொண்டவர்கள் இல்லை

இவ்வில்லத்தில் பயின்ற மாணவிகள் பலர் பொறியாளர்களாக, ஆசிரியர்களாக, தொழிற் படிப்பு படித்தவர்களாக, இளநிலை உதவியாளர் களாக, அலுவலக உதவியாளர்களாக, அரசு அலுவலர்களாக இருக்கிறார்கள். பேராசிரியர் களாக இருக்கிறார்கள். அதை நாங்கள், எங்களை விளம்பரப்படுத்திக் கொண்டவர்கள் இல்லை. சிலர், காலணா வேலை செய்து, நான்கு ரூபாய்க்கு விளம்பரம் தேடுகிறார்கள். ஆனால், நாங்கள் அப்படியில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் குறிப்பிட்ட இரண்டு வழக்குகள் வந்தன - அதில் ஒரு வழக்கு ஜாமின் கேட்ட வழக்கு.

அந்த வழக்கின் தீர்ப்பில், குற்றம் சுமத்தப் பட்டவர் ஜாமீனில் வெளிவருவதற்கான பணத்தை திருச்சியில் உள்ள  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை செலுத்தி, ரசீது வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று நீதிபதி நாகமுத்து அவர்கள்  தீர்ப்பு வழங்கினார்.

மதங்கள் சார்பாக நடத்தப்படக் கூடிய பல அமைப்புகளில் ஊழல் நடைபெறுகிறது. ஆனால், கடவுளை மற - மனிதனை நினை சொல்லும் இடமோ ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால், பெரியார் தொண்டர்கள், பெரியார் கொள்கைகள் வெறும் எதிர்மறைப் போக்கானவையல்ல.

சுயமரியாதைத் திருமணத்தைப்பற்றி ஒருமுறை அய்யா சொன்னார்.

கே.டி.கே.தங்கமணியும், ஈ.வெ.கி.சம்பத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் இரண்டு பேரும் பெரியார் திடலுக்கு வந்தார்கள். அய்யா அவர்கள் அமர்ந்திருக்கிறார். ‘‘என்ன சம்பத், டில்லியில் என்ன சம்பவம்?'' என்று கேட்கிறார்.

வரலாற்றுப் பேராசிரியர்

ஹிரேன் முகர்ஜி

டில்லியில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒரு பெரிய அறிஞர் இருக்கிறார். அவர் லண்டனில் படித்த, வரலாற்றுப் பேராசிரியர். அவருடைய பெயர் ஹிரேன் முகர்ஜியாகும்.

பெரியார்மீது மிகவும் பிரியமுள்ளவர் அவர். பெரியாருடைய அண்ணார் மகன் தான் சம்பத் என்பது அவருக்குத் தெரியும்.

அவர்களிடம் ‘‘பெரியாரை சந்திப்பீர்களா?'' என்று கேட்டார்.

"ஆம், பார்ப்போம்" என்றனர்.

"பெரியாரிடம் சொல்லுங்கள்; நான் நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறேன். ராஜ்ய சபா உறுப்பினராக தொடர்ந்து இருக்கிறேன். எங்களுடைய குடும்பம் முழுவதும் கம்யூனிஸ்ட் உணர்வோடு இருக்கிறார்கள். என்னுடைய மகளுக்குத் திருமணம் செய்யவேண்டும் என்றால், நான் பண்டிதரைத்தான், சாஸ்திரியைத்தான் அழைக்கவேண்டி இருக்கிறது. ஆனால், நீங்கள் எவ்வளவு பெரிய வாய்ப்பு பெற்றிருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், உங்களுடைய மாநிலத்தில்தான், பெரியார் - சுயமரியாதைத் திருமணம் என்ற முறையில், புரோகிதமற்ற, சடங்குகளற்ற ஒரு புரட்சிகரமான திருமண முறையை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்தத் திருமண முறையையே இன்றைக்கு சட்டப்பூர்வமாக்கி விட்டார்கள்'' என்று சொன்னார். ஈ.வெ.கி.சம்பத்தும், கே.டி.கே.தங்கமணி ஆகியோர் தந்தை பெரியாரிடம் இதனைத் தெரிவித்தனர்.

‘‘ஓ, அப்படியே! ஹிரேன் முகர்ஜி அப்படி சொன்னாரா?'' என்று கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் தந்தை பெரியார் அவர்கள்.

எனவே, நண்பர்களே! இது பெரியார் மண் என்பதற்கு இதுதான் அடையாளம்.

இங்கே தோழர் தா.பாண்டியன் அவர்களும், மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்களும் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.

தோழர் பாண்டியன் அவர்கள் மிகத் தெளி வாக, தன்னுடைய மனவோட்டங்களை எல்லாம் வெளிப்படுத்தி இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். சுயபரிசோதனையை செய்து கொள்ளவேண்டும் என்று.

ஜாதியை ஒழிக்காமல்,

என்ன செய்ய முடியும்?

பொதுவுடைமைக்கு யார் எதிரியாக இருக் கிறார்கள் என்று கேட்ட பெரியார், அந்த அமைப்புதானே எதிரியாக இருக்கிறது என்று மிக எளிமையாகச் சொல்லிவிட்டு, ஜாதியை ஒழிக் காமல், என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்.

வருணமா? வர்க்கமா? என்று நாம் விவாதம் செய்துகொண்டிருப்பதா?

மனுதர்மத்தில் என்ன எழுதியிருக்கிறான்,

பிராமணன், சூத்திரனிடத்தில் கூலி கொடுத் தேனும், கொடுக்காவிட்டாலும் அவனிடத்தில் வேலை வாங்கலாம்.

சூத்திரன் சேர்த்த பொருள் எதுவாக இருந் தாலும், அது பிராமணனுக்குத்தான் சொந்தம்.

இது வர்க்கமா? வருணமா?

எனவே, எது அடிப்படையாக இருக்கிறது - வருணம் அடிப்படையாக இருக்கிறது.

(தொடரும்)