• Viduthalai

 தந்தை பெரியார் நினைவு நாளில் தமிழர் தலைவர்

சென்னை,  ஜன.3    சமூகநீதியால் பயன் உண்டே தவிர, ஆன்மிகத்தால் அல்ல என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் 47 ஆம் ஆண்டு நினைவு நாளான  கடந்த 24.12.2020 காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு ‘பெரியார் விருது' வழங்கப்பட்டது.  அந்நிகழ்வில்,  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது  உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சமூகநீதியால் பயன் உண்டே தவிர,

ஆன்மிகத்தினால் பயனில்லை

ஆன்மிகம், ஆன்மிகம் என்று சொல்கிறார்களே, ஆன் மிகத்தினால் என்ன பயன்? சமூகநீதியால் பயன் உண்டே தவிர, ஆன்மிகத்தினால் பயனில்லை.

இன்றைக்குப் பெண்கள் படித்திருக்கிறார்களே, பெரியார் மண் எப்படி என்று கேட்கிறீர்களே, உங்களுக்குப் பதிலை நாங்கள் சொல்லவில்லை. இப்பொழுது ஓய்வு பெற்று செல்கிறாரே, தலைமை நீதிபதி அவர் சொல்கிறார், தமிழ்நாட்டில்தான் உயர் நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். இதுபோன்று இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று சொன்னாரே!

அது எப்படி மந்திரக்கோலால் வந்ததா? அல் லது ஆன்மிக அரசியலினால் வந்ததா? அல்லது சமூகநீதிப் போராட்டத்தை பெரியார் தொடங்கி யதினாலே - திராவிட இயக்கத்தினாலே வந்ததா?

இங்கே அய்யா நீதிபதி அரிபரந்தாமன் கேட் டாரே, உச்சநீதி மன்றத்தில் இன்னமும் சமூகநீதி எட்டிப் பார்க்கமுடியவில்லை என்று. அங்கே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒரு அம்மையார் இருந்தார், அவரும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ஆளே கிடையாது.

பெண்களை நீதிபதிகளாகப் போடுங்கள் என்றால், உயர்ஜாதி பெண்களாகப் பார்த்து போடுகிறார்கள்

ஒரே ஒருவர் மகாராட்டிராவில் இருந்து சென்றிருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர். மற்ற அத்தனை பேரும் உயர்ஜாதிக்காரர்கள்.

இன்னும் ஒரு தந்திரம் என்னவென்று சொன் னால், பெண்களை நீதிபதிகளாகப் போடுங்கள் என்று சொன்னால், உயர்ஜாதி பெண்களாகப் பார்த்து போடுகிறார்கள்.

எனவேதான், பெரியார் அன்றும் தேவைப் பட்டார் - இன்றும் தேவைப்படுகிறார் - நாளைக் கும் அதிகமாகத் தேவைப்படுவார்.

திராவிடம் வெல்லவேண்டும் என்று சொல் வதற்கு இதுதான் அடையாளம்.

சுயமரியாதைத் திருமணம் இங்கேதான் நடைபெறுகிறது என்று நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் சொன்னார்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை எதிர்த்து வழக்குப் போட்டார்கள். சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்பதற்காக முயற்சி எடுத்தார்கள்! வடக்கே இருந்து வந்த நீதிபதிதான், இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் இருக்கிறார். அவர் தலைமையில் வழக்கு நடைபெற்றது. அது செல்லும் என்ற அளவிற்கு வந்ததற்கு என்ன காரணம்? இது பெரியார் மண் என்பதுதான்.

ஒரு எம்.பி, கூட இல்லாமல், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கூட இல்லாமல், முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தை தந்தை பெரியார் செய்தார் என்று தோழர் தா.பாண்டியன் அவர்கள் சொன் னார்களே, அதனுடைய தாக்கம்தான் இந்த வெற்றி.

ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்,

பெரியாருடைய பணி என்பது, அவர் உருவத் தால் மறைந்திருக்கலாம்; உணர்வால் நிறைந்து, உலகம் முழுவதும் நிறைந்து உலகப் பெரியாராக இன்றைக்குப் பரிமளித்திருக்கிறார் என்பதற்கு அடையாளம் ஒரு செய்தியை சொல்கிறேன், பொத்தாம் பொதுவாக அல்ல - ஆதாரப்பூர்வமாக - ஒரு புள்ளிவிவரத்தோடு சொல்கிறேன்.

307 இணையேற்பு நிகழ்ச்சிகள்

பெரியார் திடலில், பெரியார் சுயமரியாதைத் திருமணம் நிலையம் இருக்கிறது. அங்கே, நடைபெறும் திருமணம் சடங்கு இல்லாமல், சம்பிரதாயம் இல்லாமல், இரண்டு பேர், நான்கு பேர் வருகிறார்கள், திருமணம் செய்து கொள்வதற்காக வருகிறார்கள். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, வயது சான்றிதழ் உள்பட அனைத்தையும் சரி பார்த்து திருமணத்தைப் பதிவு செய்கிறார்கள்.

2020 ஜனவரி மாதம் 20 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 24, 2020 வரை 307 இணையேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கிறது.

இதில், ஜாதி மறுப்புத் திருமணங்கள் 272

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தால் அது செய்தியாகிறது. ஆனால்,  ஆணவக் கொலைகள் அந்தப் பக்கத்தில் நடைபெறும். அதையும் கண்டிக்கிறோம். ஒன்றுகூட அவ்வாறு நடைபெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால், நண்பர்களே! பெரியார் வெற்றி பெற்றாரா? இல்லையா?

பெரியார் என்பது தத்துவம் - பெரியார் என்பது ஒரு போர்க் கருவி - திராவிடம் என்பது லட்சியம் - திராவிடம் என்பது போர்க் கருவி!

அந்த அடிப்படையில்,

ஜாதி மறுப்புத் திருமணங்கள் 272

வேற்று மாநிலத்தவர் திருமணங்கள் 17

பார்ப்பனர் உள்பட இணையேற்பு விழா 12

மணமுறிவு பெற்று மறுமணம் 6

மணவிழா நடத்திக் கொள்கின்றவர்கள் மன முவந்து ‘விடுதலை' சந்தாக்களைக் கொடுக்கிறார் கள்.

ஆகவே, இந்தக் கொள்கை வளர்ந்திருக்கிறதா? இல்லையா?

கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார், அதோடு நின்றுவிடவில்லை - மனிதனை நினை என்றார்.

அப்படியே வாழ்ந்து காட்டினார். தோழர் பாண் டியன் அவர்கள் இங்கே உரையாற்றும் பொழுது சொன்னார், பெரியாரிடம் கொடுக்கப்பட்ட ஒவ் வொரு காசையும் பொதுமக்களுக்கே திரும்பக் கொடுத்தார். பெரியாருடைய சொந்த சொத்து களையும் கொடுத்தார்.

அந்தச் சொத்தை சட்டப்படி பாதுகாப்பதற்காகத் தானே மணியம்மையார் திருமண ஏற்பாடு. அந்த நேரத்தில், அந்த செய்தி அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அது வேறு செய்தி!

ஆனால், அவரால் உருவாக்கப்பட்ட நிறுவனங் களை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் நண் பர்களே! ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக் காட்டவேண்டும்.

3,773 குழந்தைகள் பயனடைந்து இருக்கிறார்கள்

1959 ஆம் ஆண்டு தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் சேர்ந்து "நாகம் மையார் ஆதரவற்ற  அனாதை  குழந்தைகள் இல்லம்" என்ற பெயரில் ஆரம்பித்தார்கள். நான் பொறுப்பேற்ற பிறகு, ஆதரவற்ற, அனாதை என்ற சொற்களை எடுத்துவிட்டோம். அதை அவர்களுக்குத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தக் கூடாது; அது தேவையும் இல்லை. நாமெல்லாம் இருக்கின்றபொழுது அந்தக் குழந்தைகள் ஒரு போதும் அனாதைகள் ஆகமாட்டார்கள்; ஆதர வற்றவர்களாக ஆகமாட்டார்கள்.

அந்த இல்லத்தினை அய்யா தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரையில் 3,773 குழந்தைகள் பயனடைந்து இருக்கிறார்கள்.

இந்த இயக்கம் ஏதோ சாதாரணமான இயக்க மல்ல - ஏதோ பேசிவிட்டுப் போகக்கூடிய இயக்க மல்ல. பெரியாரிடம் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காலணாவும், கையெழுத்திற்காக வாங்கிய நாலணாவும் எப்படி பயன்பட்டு இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

இல்லத்தில் வளர்ந்த 34 பெண்குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறோம்

அங்கேவளர்ந்தகுழந்தைகள்என்னஜாதி, என்ன மதம் என்று தெரியாது. பெரும் பாலும் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை கள்தான் ஏராளம். அவர்களுக்கு முன்னெழுத்து என்ன தெரியுமா? ஈ.வி.ஆர்.எம்.; அந்த இல்லத்தில் வளர்ந்த 34 பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, அவர் களுக்குப் பிள்ளைகள் பிறந்து, அவர்களுக்கும் நான் திருமணம் செய்து வைத்திருக்கிறேன்.

நாங்கள், எங்களை விளம்பரப்படுத்திக் கொண்டவர்கள் இல்லை

இவ்வில்லத்தில் பயின்ற மாணவிகள் பலர் பொறியாளர்களாக, ஆசிரியர்களாக, தொழிற் படிப்பு படித்தவர்களாக, இளநிலை உதவியாளர் களாக, அலுவலக உதவியாளர்களாக, அரசு அலுவலர்களாக இருக்கிறார்கள். பேராசிரியர் களாக இருக்கிறார்கள். அதை நாங்கள், எங்களை விளம்பரப்படுத்திக் கொண்டவர்கள் இல்லை. சிலர், காலணா வேலை செய்து, நான்கு ரூபாய்க்கு விளம்பரம் தேடுகிறார்கள். ஆனால், நாங்கள் அப்படியில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் குறிப்பிட்ட இரண்டு வழக்குகள் வந்தன - அதில் ஒரு வழக்கு ஜாமின் கேட்ட வழக்கு.

அந்த வழக்கின் தீர்ப்பில், குற்றம் சுமத்தப் பட்டவர் ஜாமீனில் வெளிவருவதற்கான பணத்தை திருச்சியில் உள்ள  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை செலுத்தி, ரசீது வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று நீதிபதி நாகமுத்து அவர்கள்  தீர்ப்பு வழங்கினார்.

மதங்கள் சார்பாக நடத்தப்படக் கூடிய பல அமைப்புகளில் ஊழல் நடைபெறுகிறது. ஆனால், கடவுளை மற - மனிதனை நினை சொல்லும் இடமோ ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால், பெரியார் தொண்டர்கள், பெரியார் கொள்கைகள் வெறும் எதிர்மறைப் போக்கானவையல்ல.

சுயமரியாதைத் திருமணத்தைப்பற்றி ஒருமுறை அய்யா சொன்னார்.

கே.டி.கே.தங்கமணியும், ஈ.வெ.கி.சம்பத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் இரண்டு பேரும் பெரியார் திடலுக்கு வந்தார்கள். அய்யா அவர்கள் அமர்ந்திருக்கிறார். ‘‘என்ன சம்பத், டில்லியில் என்ன சம்பவம்?'' என்று கேட்கிறார்.

வரலாற்றுப் பேராசிரியர்

ஹிரேன் முகர்ஜி

டில்லியில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒரு பெரிய அறிஞர் இருக்கிறார். அவர் லண்டனில் படித்த, வரலாற்றுப் பேராசிரியர். அவருடைய பெயர் ஹிரேன் முகர்ஜியாகும்.

பெரியார்மீது மிகவும் பிரியமுள்ளவர் அவர். பெரியாருடைய அண்ணார் மகன் தான் சம்பத் என்பது அவருக்குத் தெரியும்.

அவர்களிடம் ‘‘பெரியாரை சந்திப்பீர்களா?'' என்று கேட்டார்.

"ஆம், பார்ப்போம்" என்றனர்.

"பெரியாரிடம் சொல்லுங்கள்; நான் நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறேன். ராஜ்ய சபா உறுப்பினராக தொடர்ந்து இருக்கிறேன். எங்களுடைய குடும்பம் முழுவதும் கம்யூனிஸ்ட் உணர்வோடு இருக்கிறார்கள். என்னுடைய மகளுக்குத் திருமணம் செய்யவேண்டும் என்றால், நான் பண்டிதரைத்தான், சாஸ்திரியைத்தான் அழைக்கவேண்டி இருக்கிறது. ஆனால், நீங்கள் எவ்வளவு பெரிய வாய்ப்பு பெற்றிருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், உங்களுடைய மாநிலத்தில்தான், பெரியார் - சுயமரியாதைத் திருமணம் என்ற முறையில், புரோகிதமற்ற, சடங்குகளற்ற ஒரு புரட்சிகரமான திருமண முறையை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்தத் திருமண முறையையே இன்றைக்கு சட்டப்பூர்வமாக்கி விட்டார்கள்'' என்று சொன்னார். ஈ.வெ.கி.சம்பத்தும், கே.டி.கே.தங்கமணி ஆகியோர் தந்தை பெரியாரிடம் இதனைத் தெரிவித்தனர்.

‘‘ஓ, அப்படியே! ஹிரேன் முகர்ஜி அப்படி சொன்னாரா?'' என்று கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் தந்தை பெரியார் அவர்கள்.

எனவே, நண்பர்களே! இது பெரியார் மண் என்பதற்கு இதுதான் அடையாளம்.

இங்கே தோழர் தா.பாண்டியன் அவர்களும், மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்களும் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.

தோழர் பாண்டியன் அவர்கள் மிகத் தெளி வாக, தன்னுடைய மனவோட்டங்களை எல்லாம் வெளிப்படுத்தி இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். சுயபரிசோதனையை செய்து கொள்ளவேண்டும் என்று.

ஜாதியை ஒழிக்காமல்,

என்ன செய்ய முடியும்?

பொதுவுடைமைக்கு யார் எதிரியாக இருக் கிறார்கள் என்று கேட்ட பெரியார், அந்த அமைப்புதானே எதிரியாக இருக்கிறது என்று மிக எளிமையாகச் சொல்லிவிட்டு, ஜாதியை ஒழிக் காமல், என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்.

வருணமா? வர்க்கமா? என்று நாம் விவாதம் செய்துகொண்டிருப்பதா?

மனுதர்மத்தில் என்ன எழுதியிருக்கிறான்,

பிராமணன், சூத்திரனிடத்தில் கூலி கொடுத் தேனும், கொடுக்காவிட்டாலும் அவனிடத்தில் வேலை வாங்கலாம்.

சூத்திரன் சேர்த்த பொருள் எதுவாக இருந் தாலும், அது பிராமணனுக்குத்தான் சொந்தம்.

இது வர்க்கமா? வருணமா?

எனவே, எது அடிப்படையாக இருக்கிறது - வருணம் அடிப்படையாக இருக்கிறது.

(தொடரும்)