பக்கங்கள்

வியாழன், 28 ஜனவரி, 2021

மண்டல் ஆணை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு - வி.பி.சிங் அவர்களுக்கு வரலாறு காணாத வரவேற்பு!

18.11.1992 அன்று மத்திய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செய்து 1990இல் வி.பி.சிங் அரசு போட்ட ஆணை செல்லும் என்று 9 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். (என்ற போதிலும் அவர்களில் 3 நீதிபதிகள் சில விஷயங்களில் தனித்து எழுதினர்) இதனை விளக்கி முக்கிய அறிக்கையை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். (மொத்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு)

அதில், உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் வழங்கிய தனித் தீர்ப்புதான், தனித்தன்மையான சிறப்புகளைக் கொண்டிருக்கிறது என்று பாராட்டி அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

சமூகநீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்குக் காரணமே தந்தை பெரியார் அவர்களும் அவர்தம் இயக்கமும் முன்னின்று போராடியதன் விளைவுதான் என்பதை அன்றைய பிரதமர் பண்டிதர் நேரு நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மாநிலத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஓர் சமுதாயத்தில் பல்வேறு தடைகள், தடங்கல்கள், தொல்லைகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டு நீந்தி, இன்று அந்தப் பெரிய இடத்தில் அமர்ந்துள்ளார் திரு.இரத்தினவேல் பாண்டியன். அவர்கள் தகுதியிலும் திறமையிலும் எந்த ஒரு முன்னேறிய சமூகத்தவருக்கும் சளைத்தவர் அல்லர். சட்டஞானம், பொதுஅறிவு, ஆழ்ந்த நுண்மான் நுழைபுலம் இவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பால் உயர்ந்த பதவிக்கு வந்துள்ளவர். எனவே, மிக அருமையாக தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் பாராட்டியிருந்தோம். அவர் மறைவுக்குப் பின் பெரியார் திடலில் ஒரு மாபெரும் இரங்கல் கூட்டம் நடத்தினோம்.

இதனைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலில், “மண்டல் கமிஷனும் _ சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பும்’’ எனும் தலைப்பில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் 23.11.1992 அன்று சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு துறையைச் சேர்ந்த பெருமக்கள் இக்கூட்டத்திற்குப் பெருந்திரளாக வந்திருந்தனர்.

மண்டல் பரிந்துரை மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பாராட்டு தெரிவித்து எனக்கு பாராட்டுக் கடிதங்கள் வந்தவண்ணம் இருந்தன.

அதில், அமெரிக்கா வாழ் தமிழர்களான பல்துறை வல்லுநர்கள் கூட்டாகக் கையொப்பமிட்டு எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தந்தை பெரியார் அவர்களது தொலைநோக்குப் பார்வையில் விளைந்த கல்விப் புரட்சியாலே படித்துப் பட்டம் பெற்று இன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களின் நன்றி அறிவித்தலை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விடாது பாடுபட்ட உங்களுக்கும், உங்களுக்குப் பேருதவியாக இருந்த கருப்பு மெழுகுவத்திகளுக்கும் மற்றும் வி.பி.சிங், ராம்விலாஸ் பஸ்வான், லாலுபிரசாத் போன்ற தலைவர்களுக்கும் எங்கள் நன்றியை உளமாரத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டாக்டர் சோம.

இளங்கோவன்

மிக்க அன்புடன், டாக்டர் சோம.இளங்கோவன், சிகாகோ வ.செ.பாபு, சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் ந.விசுவநாதன், சிகாகோ பொறியாளர் டாக்டர் திருநாவுக்கரசு, செயிண்ட் லூயிஸ் விஞ்ஞானி டாக்டர் தண்டபாணி, டாக்டர் அய்யனார், டாக்டர் இளங்கோவன், டாக்டர் ஏ.எம்.இராசேந்திரன், (பாஸ்டன், விஞ்ஞானி), திரு.மோகனம் (ஒஹியோ, வழக்கறிஞர்), டாக்டர் குமார், (பேட்டன்டுச், நியூ ஓர்லியன்ஸ்), பேராசிரியர் இலக்குவன் தமிழ், (டல்லாஸ், டெக்சாஸ்) என்று அந்தப் பட்டியல் பதிவு செய்யப்பட்டிருந்தது.

25.12.1992 அன்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் பாரத பிரதமர் சமூகநீதி காவலர் திரு.வி.பி.சிங் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பினை அளித்தோம்.

கழகக் கொடிகளுடன் அணிவகுத்து நின்ற கழகத் தோழர்கள் “சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் வாழ்க’’ Long live, long live! V.P.Singh long live!” என்கிற முழக்கங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தமிழ்நாட்டில் தீவிர சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட திரு.வி.பி.சிங் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றோம். வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  மாநில மகளிர் அணி செயலாளர் க.பார்வதி, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கவிஞர் செ.வை.ர.சிகாமணி, சேலம் ப.கந்தசாமி, கு.தங்கமணி, தே.அன்னத்தாயம்மாள், வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன், செயலாளர் குணசீலன் உள்ளிட்ட ஏராளமான கழக நிருவாகிகள் கலந்துகொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் சமூகநீதி காவலர் திரு.வி.பி.சிங்கை வரவேற்கும் ஆசிரியர்

வரவேற்பைத் தொடர்ந்து திருச்சியிலும் சமூகநீதிக்காவலர் திரு.வி.பி.சிங் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது. கருஞ்சட்டைக் கடலினைக் கண்டு வி.பி.சிங் அவர்கள் நெகிழ்ந்து போனார்.

பின்பு 28.12.1992 அன்று பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகளும் அணிவகுத்து நின்று வரவேற்றனர். கல்வி வளாகத்துக்குள் குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சி துவங்கியது. ஜனதா தளத்தின் செயலாளரும் தீவிரமான கொள்கையாளரும், துடிப்புமிக்க செயல் வீரருமான ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி. தலைமை தாங்கினார்.

தஞ்சையில் இயங்கிவரும் பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக வி.பி.சிங் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

பின்பு, வி.பி.சிங் அவர்கள் நினைவாக கல்வி வளாகத்தின் கட்டடப் பிரிவு ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும், பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

வி.பி.சிங் அவர்கள் உரையை மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு.வெ.கி.ஆசான் மொழிபெயர்த்தார்.

வி.பி.சிங் அவர்கள் உரையாற்றும்போது 2 ஆண்டுக்கு முன் மண்டல் அறிக்கையை தாம் அமல்படுத்திய நேரத்தில் ஆதிக்க சக்திகள் அதை எதிர்த்தபோது, தமிழ்நாட்டில் வீரமணி அவர்கள் உருக்குமலையாக நின்று ஆதரித்ததை தன்னால் மறக்க முடியாது என்ற வி.பி.சிங், “நான் செல்லும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் தருகிற சிறப்பான அன்பான வரவேற்பு - என்னுடைய உள்ளத்தை விட்டு அகலவில்லை’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதேநேரத்தில், சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன்’’ என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.

குழந்தைகள் காப்பகக் கட்டடத்தை திறந்து வைக்கும் திரு.வி.பி.சிங், ராம் விலாஸ் பஸ்வான் உடன் ஆசிரியர்.

பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு தலைமையேற்ற முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் ஆற்றிய உரையில்,

“நான் இதற்கு முன் 1979லே இங்கே வந்தேன். அன்றிலிருந்து நண்பர் வீரமணி அவர்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன். அந்த நாளிலேயே தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய புத்தகங்களை நண்பர் வீரமணி எனக்குக் கொடுத்தார். நான் அந்த நூல்களை மற்ற இலக்கியங்களைவிட அதிகமாகப் படித்திருக்கிறேன்.’’

நண்பர் வீரமணி அவர்களிடத்திலே,  “தமிழ்நாட்டிலே, நீங்கள் செய்கின்ற பணியை இந்தியா முழுவதும் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டது உண்டு. அவ்வாறு கேட்டுக் கொண்டபோது தந்தை பெரியாரின் கருத்துகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துத் தாருங்கள் என்றும் கேட்டேன். ஏனென்றால், இவ்வாறு தந்தை பெரியாரின் கருத்துகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துப் பரப்பினால் இன்றைக்கு தமிழ்நாட்டிலே நிலவுகின்ற அமைதி, சமுதாய நல்லிணக்கம், சமூக முன்னேற்றம் இந்தியா முழுவதும் நிலவ வாய்ப்பு உண்டு.

தந்தை பெரியார் அவர்கள் நமக்கு சமூகநீதித் தத்துவத்தைத் தந்திருக்கிறார்கள். அவ்வாறு நமக்கு சமூகநீதித் தத்துவத்தைத் தருவதற்கு முன் பண்பாட்டுப் புரட்சி என்னும் தத்துவத்தைத் தந்தார்கள். பண்பாட்டுப் புரட்சி ஏற்பட்டு சமூகநீதித் தத்துவம் நிறைவேறினால்தான் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும். பண்பாட்டுப் புரட்சி, சமூகநீதிப் புரட்சி ஆகிய இவை ஏற்பட்டால்தான் நம் நாடு முழுமையான விடுதலை பெற்ற நாடாக இருக்க முடியும் என்று கூறினார்கள். கல்வி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர் பெருமக்களும் கலந்துகொண்டு உரையைச் செவிமடுத்தனர்.

- உண்மை இதழ், 1-15.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக