மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பார்ப்பனர்களுக்குப் புதுப்புது கால்களும், இறக்கைகளும், நீளமான வாயும் முளைத்து விட்டனவோ என்று நினைக்க வேண்டியுள்ளது.
பார்ப்பனர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்களுடைய உண்மை உருவத்தை வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதை நெருக்கடி நிலை காலத்தில் பார்த்தோம் - அனுபவித்தோம்.
த.வே., சுப்பிரமணியம் என்ற இரு பார்ப்பனர்கள் தமிழக ஆளுநருக்கு ஆலோசகராக இருந்து அடேயப்பா எப்படி எப்படி எல்லாம் ஆட்டம் போட்டனர்!
பத்திரிகை தணிக்கை என்ற போர்வையில் மூன்று பார்ப்பனர்கள், சென்னை சாஸ்திரி பவனில் உட்கார்ந்து கொண்டு சிறப்பு மை பேனா என்ற ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு செய்த 'ரவுடிசம்' சாதாரணமானதல்ல. தந்தை பெரியார் அவர்கள் என்று போடக் கூடாதாம். அதே நேரத்தில் சங்கராச்சாரியார் என்று போட வேண்டும் என்று அதட்டல், உருட்டல் செய்து பார்த்தனர். அந்த மூவரில் ஒருவர் இப்பொழுது 'துக்ளக்' அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ஆரிய அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டு இருக்கிறார்.
இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை போய் விடும் என்று கூச்சல் போட்டவர்கள் இப்பொழுது பொருளாதார அளவுகோல் என்று கூறி 10 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற்று விட்டனர். மத்தியில் பா.ஜ.க. என்ற பார்ப்பன ஆட்சி என்னும் காற்றுவீசும்போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று துடியாய்த் துடித்து ஒவ்வொரு காரியத்தையும் சாதித்துக் கொண்டு வருகிறார்கள்.
நீட்டை திணித்தார்கள் - சட்டத்துக்கு விரோதமாக இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்து விட்டார்கள்.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் குலக்கல்வி திட்டத்திற்கு வழிதேடுகிறார்கள். அதில் ஒரு வார்த்தையை சன்னமாக நுழைத்திருக்கிறார்கள் Socially and Educationally என்று அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற மிக முக்கியமான சொற்களுக்குப் பதிலாக Socio - Economically Disadvantaged Group என்கிற சொற்களைத் திணித்துள்ளனர்.
நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தான் அவருக்கே உரித்தான நுட்பமான ஈரோட்டு நுண்ணாடி மூலம் அதை வெளிப்படுத்தினார்.
ஈரோட்டில் கூடிய பார்ப்பனர்களின் பொதுக் குழுவில் இன்னொரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
பொருளாதார ரீதியாக நலிந்த வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பார்ப்பன சமூகத்திற்கென்றே தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்கிறபோது பார்ப்பனர் அல்லாதார்தான் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். வறுமையில்கூட ஜாதி பார்க்கும் இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது. வறுமைக்கும் ஜாதிக்கும் முக்கிய தொடர்பு உண்டு என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பு குறித்து பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆர். ஆர்தர் லூயிஸ் (A theory of Economic Development) பின்வருமாறு கூறகிறார்.
"இந்தச் சமூகம் பொருளாதார தேக்கமடைந்ததற்கு மனிதன் பல ஜாதிப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு (The Water Tight Compartments of Castes) தொழிலாளர் புழக்கம் (Mobility of Labours) தடைப்பட்டது ஒரு முக்கிய காரணமாகும்“ என்கிறார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையத்தின் தலைவரான காகா கலேல்கர் என்ற பார்ப்பனர் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது கவனத்துக்குரியதே!
"ஜாதி அமைப்பினால்தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருகிறது - என்பது உண்மையாகும்.பொருளாதாரத் தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர, ஜாதி தோன்றுவதற்குரிய காரணம் அது வல்ல" என்று ஒரு பார்ப்பனப் பேராசிரியரே குறிப்பிட்டுள்ள நிலையில், பிறப்பினால் உயர்வு எனும் ஜாதி ஆதிக்கத்தின் உச்சியில் இருப்பவர்கள், இந்த வாய்ப்புப் போதாது என்று பொருளாதார அளவுகோல் என்ற முகமூடி அணியும் கொள்ளையர்களாகத் துடிக்கிறார்கள் - வெகு மக்களான ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக