மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை, பிடிவாதமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்கத் தவறியதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண்ணான தமிழ்நாடு தொடர்ந்து நடத்தி வ ந்திருக்கிறது. இன்னொரு கட்டத்தில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. இதில் முழு மூச்சாக இருந்து சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று பெரு வெற்றி பெற்று, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்தது.
மாநில அரசுகளின் செலவில் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டால், அதனை வழிப்பறிக் கொள்ளை போல 50 சத இடங்கள் வரைப் பறித்துச் சென்று, அவற்றில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பின்பற்றும் இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்ற நியாயமான மரியாதையான பண்பாட்டைப் பின்பற்ற வில்லை என்பதையும் தாண்டி, அறவே ஒரு விழுக்காடு இடம் கூடத் தர மாட்டோம் என்ற ஆணவப் போக்கு எந்த வகை ஜனநாயகம்? எந்த வகை சமூகநீதி?
இந்த நிலையில் தான் தி.மு.க. அரசு உச்சநீதிமன்றக் கதவைத் தட்டி, நீதி கேட்டது - போராடியது. இறுதி வெற்றிக் கிடைத்தும் விட்டது.
இந்தியா முழுவதும் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டை நன்றி உணர்ச்சிக் குலுங்கப் பார்க்கின்றனர்.
இடஒதுக்கீடுப் பிரச்சினையில் முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்த தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணை நோக்கித் தங்கள் கரங்களை உயர்த்தி வணக்கம் செலுத்துகின்றனர்.
குறிப்பாக இப்பொழுது கிடைத்த பெரு வெற்றிக்குக் காரணமான தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு மழைப் பொழிந்து கொண்டு இருக்கின்றனர்.
நேற்று (26.1.2022) காணொலி மூலம், அனைத்திந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பு (AIBCF), பூலே, அம்பேத்கர் கவுரவ்ஷாலி மற்றும் ஆதர்சலாடி முகிம் (PAGAAM), அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக ஊழியர்களின் கூட்டமைப்பு (BAMCEF), 'குடி மக்களாகிய நாம்' மற்றும் 'முதன்மை இந்தியா' ஆகிய அமைப்புகளின் ஒருங் கிணைப்பில் தேசிய இணைய அரங்கம் நடைபெற்றது.
சமூகநீதியின் இன்றியமையாமை குறித்தும், சமூகநீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் வருந்தத்தக்க நடவடிக்கைகள் குறித்தும், சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் குறித்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பங்கு கொண்டு சமூகநீதிக் கருத்துக்களைப் போர் முரசாகக் கொட்டினர்.
குறிப்பாக தமிழ்நாடு தி.மு.க. அரசின் முதல் அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அரும்பெரும் முயற்சியை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். அடுத்து சமூகநீதிப் பிரச்சினையில் ஒருங் கிணைந்து எதிர்காலத்தில் செயல்படுவோம் என்றும் உறுதி யளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது தலைமை உரையில் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டதை எடுத்துக் காட்டித் தனது உரையைத் தொடங்கினார்.
"திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டது போல திராவிட இயக்கம் பாராட்டை எதிர்பார்த்து நடைபெறுகின்ற இயக்கமல்ல. சமூகநீதியைக் கடமையாகக் கருதி, செயல்படும் இயக்கமாகும்" என்று குறிப்பிட்டது சிறப்பானது.
"சமூகநீதித் திசையில் நாம் பெற வேண்டிய உரிமைகள் ஏராளம் உள்ளன. இந்நிகழ்வு நல்ல தொடக்கம். கூடிய விரைவில் சமூகநீதிக்கான நாடு தழுவிய அளவில் இயக்கத்தினைக் கட்டமைப்போம். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கை சமூக நீதிக் களத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் காண விரும்பியவாறு - வடக்கு, தெற்கு, கிழக்கு,மேற்கு என அனைத்துப் பகுதியிலிருந்தும் சமூகநீதிக்கான உரிமை மீட்புப் பணியினை ஒருங்கிணைத்து இயக்கமாக கட்டமைப்போம்! நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும். அதுவே நாம் விரும்புகிற சமூகநீதியினை வென்றெடுக்க வழி வகுக்கும். நாடு தழுவிய அளவில் ஒன்றிணைவோம். நன்றி."
முத்தாய்ப்பாக முக்கிய கருத்தினைப் பதிவு செய்துள்ளார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
இந்தக் காணொலி நிகழ்ச்சியில் வெளிப்பட்ட பல மாநிலங்களின் தலைவர்களின் உரைகள், ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் முன்னெடுப்புக் கருத்துகள், முதல் அமைச்சரின் அறிவிப்புகள் - சமூகநீதி வரலாற்றில் தொடர்ந்து அலை ஓசையாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.
திராவிடத் தத்துவக் கொடி இந்திய ஒன்றியம் முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைநோக்கோடு கூறிய "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" பட்டத்தின் அருமை இப்பொழுது புரிந்திருக்குமே!