உச்சநீதிமன்றம் அனுமதி
புதுடில்லி, ஜன.7 மருத்துவ படிப்பு களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக் கான (ஓபிசி-OBC) 27% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. மேலும் உயர் ஜாதி ஏழையினருக்கான (EWS) 10% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் மட்டும் அனு மதிக்கப்படுகிறது என்றும் இந்த 10% இடஒதுக்கீடு மீது மார்ச் 3-ஆவது வாரத்தில் விரிவான தீர்ப்பு வழங் கப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதி பதிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந் தது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் வழக்குத் தொடர்ந் தன.
இவ்வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம், சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற் படுத்தப்பட்ட பிரிவுனருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் தது. ஆனால் ஒன்றிய அரசு இதனை செயல்படுத்தாமல் இருந்தது. இதனால் ஒன்றிய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தி.மு.க. தொடர்ந்தது.
இதனையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட் பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதேபோல் உயர் ஜாதி ஏழையினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புகளுக்கு எதிராக முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அடங்கிய அமர்வு ஒன்றிய அரசுக்கு பல கேள்விகளை முன்வைத்தது. குறிப்பாக உயர்ஜாதி ஏழைகளை அடையாளம் காண ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு குறித்து கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.
இந்த வழக்கை கடந்த இரு நாட்களாக அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மற்றும் தி.மு.க. தரப்பு வாதங்களை ஏற்று மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்; நடப்பாண்டில் மட்டும் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்கப்படுகிறது என இன்று (7.1.2022) தீர்ப்பளித்தனர்.
மேலும் உயர் ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு குறித்த விரிவான தீர்ப்பு மார்ச் மாதம் 3ஆ-வது வாரத்தில் வழங்கப்படும் என்றும் மருத்துவ மேல்படிப்புகளுக்கான கலந்தாய்வை தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடுகளை பின்பற்றி நடத்த லாம் என்றும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.