சிந்தனைக் களம் : நீட்டாக ஒழிப்பதுதான் நீட்டா
கவிஞர் கலி.பூங்குன்றன்
நுழைவுத் தேர்வு கடந்து வந்த பாதை!
¨ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு (Entrance Test) நடத்தும் யோசனையை எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்தபோது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹெண்டே சட்டமன்ற மேலவையில் கூறினார். இது விபரீத யோசனை, – கைவிட வேண்டும் என்று அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டார். (‘விடுதலை’ 23.3.1982) இதன் காரணமாக அப்போது நுழைவுத் தேர்வு திட்டம் கைவிடப்பட்டது.
¨ நுழைவுத் தேர்வை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியது. (சென்னை, பெரியார் திடல், 20.3.1984)
¨ இவ்வளவையும் மீறி எம்.ஜி.ஆர். அரசு நுழைவுத் தேர்வைத் திணித்தது. (தமிழ்நாடு செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழர் பண்பாட்டு செய்தி வெளியீட்டுப் பிரிவு) செய்தி வெளியீடு எண்: 322 நாள்: 30.5.1984)
இதனை எதிர்த்து முதலாவதாகப் போர்ச்சங்கு ஊதியவர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (‘விடுதலை’ 8.6.1984)
1982இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டி முறியடித்தது. இப்பொழுது மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டினார்கள். (25.3.1984)
¨ 17.6.1984 அன்று தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்களால் எம்.ஜி.ஆர் அரசு திணித்த நுழைவுத் தேர்வு ஆணை கொளுத்தப்பட்டது.
¨ எம்.ஜி.ஆர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வு செல்வி ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தபோது ரத்து செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்கள் குழு அமைத்து அவர்கள் அளித்த கருத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் 2.1.2006 அன்று கூறியிருந்தார். அதனை ஏற்று இருந்தால் தீர்ப்பு நமக்குப் பாதகமாக இருந்திருக்காது.
¨ கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கூறிய கருத்தின் அடிப்படையில் கல்வியாளர் டாக்டர் எம்.ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. (7.7.2006)
அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர். அதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றனர்.
கல்வி நிலையங்களில் பரிந்துரை அடிப்படையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டதால், அதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்கிறது என்று தீர்ப்புக் கூறியது. (27.4.2007)
பின் உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றமும் அதே தீர்ப்பைக் கூறுகிறது.
இதன் காரணமாக 2007-_2008ஆம் கல்வி ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு இல்லாநிலையில் +2 மதிப்பெண் அடிப்படையில் 69 விழுக்காடு இடங்கள் நிரப்பப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத் குமார் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் இப்பொழுதும் கூடக் கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கவையாகும்!
¨ “நுழைவுத் தேர்வை நடத்தினாலும், முழு சமநிலை என்பதும், கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட “கோன் பனேகா குரோர்பதி’’ நிகழ்ச்சியில் அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை ‘டிக்’ செய்யும் வாய்ப்புள்ளது’’ என்று குறிப்பிட்டனர் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே கருத்தை அதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பாகவே திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எம்.ஜி.ஆர் நுழைவுத் தேர்வைத் திணித்தபோதே கூறியது இங்கே நினைவூட்டத்தக்கதாகும்! (‘விடுதலை’ 8.6.1984)
¨ இந்த இடத்தில் இன்னொரு புள்ளிவிவரம் முக்கியமானது. கண்மூடித்தன தகுதி _- திறமையாளர்களின் கண்களைத் திறக்கச் செய்வதாகும். நுழைவுத் தேர்வு எம்.ஜி.ஆர் ஆட்சியில் திணித்தபோது குறிப்பாக 2004-_2005இல் நடந்தது என்ன? மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தவர் 5 லட்சம் மாணவர்கள். அதில் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர். கிராம மாணவர்கள் பெற்ற இடம் வெறும் 227தான். இந்தப் பாதிப்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுதான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது.
எடுத்துக்காட்டாக, நுழைவுத் தேர்வு இல்லாத காலகட்டத்தில் 2009-2010இல் திறந்த போட்டியில் பெற்ற விவரம்:
மொத்த இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர் 300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72
தாழ்த்தப்பட்டோர் 18
முசுலிம்கள் 16
முன்னேறியோர் 54
200க்கு 200 மதிப்பெண் பெற்றோர் 8
இதில் பிற்படுத்தப்பட்டோர் 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1
2012 – 2013ஆம் ஆண்டு நிலவரம்
திறந்த போட்டியில் மொத்த இடங்கள் 742
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் 678
200க்கு 200 பெற்றோர் 16 பேர்
பிற்படுத்தப்பட்டோர் 10
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1
தாழ்த்தப்பட்டோர் 2
அருந்ததியர் 1
முன்னேறியோர் 2
2016-2017ஆம் ஆண்டு புள்ளி விவரம்
திறந்த போட்டி இடங்கள் 884
பிற்படுத்தப்பட்டோர் 599
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 32
தாழ்த்தப்பட்டோர் 23
மலைவாழ் மக்கள் 1
அருந்ததியர் 2
முன்னேறியோர் 68
இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? நுழைவுத் தேர்வு இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தால் அது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் என்பதைத்தானே இந்தப் புள்ளி விவரம் தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிவிக்கிறதே!
புதிய ‘நீட்’ பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் (2017)
தருமபுரி 2016இல் 225 (நீட் இல்லை)
2017இல் 82 (நீட்)
ஈரோடு 2016இல் 230 (நீட் இல்லை)
2017இல் 100 (நீட்)
நாமக்கல் 2016இல் 957 (நீட் இல்லை)
2017இல் 109 (நீட்)
கிருட்டினகிரி 2016இல் 338 (நீட் இல்லை)
2017இல் 82 (நீட்)
பெரம்பலூர் 2016இல் 81 (நீட் இல்லை)
2017இல் 23 (நீட்)
திருச்சி 2016இல் 184 (நீட் இல்லை)
2017இல் 130 (நீட்)
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதி மதிப்பெண்கள்
தாழ்த்தப்பட்டோர் 45%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 50%
பிற்படுத்தப்பட்டோர் 55%
முன்னேறியோர் 60%
‘நீட்’ வந்தபின் மாற்றப்பட்ட விவரம்
தாழ்த்தப்பட்டோர் _- மலைவாழ்மக்கள் 65%
மற்றவர்களுக்கு 75%
பிற்படுத்தப்பட்டோரை – முன்னேறிய ஜாதியினரோடு இணைத்து மதிப்பெண் வரையறை செய்யப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
நிதி ஒதுக்கீடு (100 சதவிகிதத்தில்)
மாநிலங்களின் பங்கு 84.4%
மத்திய அரசின் பங்கு 15.6%
குறைந்த முதலீடு; கொள்ளை லாபம் என்பார்களே அது இதுதான்!
கேள்வி: ‘நீட்’ யாரால் கொண்டுவரப்பட்டது? யாரால் நிலைக்க வைக்கப்பட்டது?
2010ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கு ‘நீட்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது (21.12.2010)
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்குத் தொடுத்தது. நீதிமன்றமும் ‘நீட்’டுக்குத் தடை விதித்தது. (18.7.2013) தீர்ப்பு வழங்கிய நீதிபதி திரு.ஜோதிமணி.
100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எல்லா வழக்கு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர், விக்கிரஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19, 25, 26, 29, 30 ஆகிய பிரிவுகளின்படி ‘நீட்’ செல்லாது என்று ஏ.ஆர்.தவேவைத் தவிர மற்ற இரு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர். (18.7.2013) அதற்கு மேல் காங்கிரஸ் அரசு மேல் முறையீடு செய்யவில்லை.
எப்பொழுது மேல் முறையீடு செய்யப்பட்டது என்பதுதான் முக்கியமானது. (பெட்டிச் செய்தி காண்க.)
‘நீட்’ எனும் கொடுவாளுக்கு மரணத்தைத் தழுவியவர்கள்
(2017 முதல் 2021 செப்டம்பர் வரை 17 ‘நீட்’ மரணங்கள்)
1. அனிதா, அரியலூர்
2. பிரதீபா, விழுப்புரம்
3. சுப-ஸ்ரீ, திருச்சி
4. ஏஞ்சலின், சென்னை
5. ஹரிஷ்மா,
புதுக்கோட்டை
6. மோனிஷா, விழுப்புரம்
7. வைஸ்யா,
பட்டுக்கோட்டை
8. ரிதுஸ்ரீ, தேனி
9. ஜோதி ஸ்ரீ, மதுரை
10. துர்கா, மதுரை
11. ஆதித்யா, தருமபுரி
12. மோதிலால்,
திருச்செங்கோடு
13. விக்னேஷ், அரியலூர்
14. சுபஸ்ரீ, கோயம்புத்தூர்
15. தனுஷ், சேலம்
16. கனிமொழி, அரியலூர்
17. சவுந்தர்யா, காட்பாடி
18. அனுசுயா, செங்கல்பட்டு
(16.9.2021) மாலை பலத்த தீக்காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சென்னை கீழ்ப்பாக்கம் கொண்டுவர முயற்சி நடந்துகொண்டு இருக்கிறது.
அரியலூர் அனிதா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் ஒரு தொழிலாளியின் மகள்.
+2 தேர்வில் அப்பெண் பெற்ற மதிப்பெண்கள் என்ன தெரியுமா?
பவுதிகம் 200க்கு 200
இரசாயனம் 199
உயிரியல் 194
கணிதம் 200
கட் ஆஃப் 196.75
முதல் தலைமுறையாகப் படித்த _ காலம் காலமாகக் காலனியில் வாழ ஒதுக்கப்பட்ட பெண் இதைவிட இன்னும் எத்தனை மதிப்பெண் வாங்க வேண்டும்?
+2 தேர்வில் இவ்வளவுப் பெரிய மதிப்பெண் பெற்ற அனிதாவால் ‘நீட்’டில் வெறும் 86 மதிப்பெண்தான் பெற முடிந்தது என்றால், கோளாறு _ குற்றம் எங்கே இருக்கிறது? அனிதாவிடத்திலா? ஆட்சியில் இருக்கும் மனுவாதிகளிடத்திலா?
நெஞ்சம் பதைக்கிறதே! _ இந்த நயவஞ்சகர்கள் இந்தப் படுகொலைக்குக் காரணகர்த்தாக்கள் இல்லையா?
அனிதாவின் நிலை இது என்றால் செஞ்சியையடுத்த குக்கிராமமான பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிபாவின் கதையும் சோகம்தான். பத்தாம் வகுப்பில் 500க்கு 495, +2 தேர்வில் 1200க்கு 1145. ‘நீட்’டிலே பெற்றது வெறும் 39.
‘நீட்’ கொலைகாரக் கருவியா இல்லையா?
திட்டமிட்டு பார்ப்பனீயம் ஏற்பாடு செய்த கொலைகார ஏற்பாடுதானே நீட்?
‘நீட்’டால் யாருக்குப் ப(ல)யன்?
2018ஆம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் 691 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றவர் பிகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி. பிகாரில் படித்த அந்த மாணவி குறைந்த அளவு வருகைப் பதிவுகூட இல்லாத நிலையில், நீட்டுக்காக டில்லியில் இரண்டாண்டுகள் தங்கிப் படித்துத் தம்மை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.
வருகைப் பதிவு பற்றி பிரச்னை எழுந்தபோது பிகார் மாநிலக் கல்வி அமைச்சர் கிருஷ்ணானந்த் என்பவர் என்ன சொன்னார் தெரியுமா?
பிகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி ‘நீட்’ தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்து பிகார் மாநிலத்துக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்துள்ளார். அதைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவரது வருகைப் பதிவு குறித்த சர்ச்சை எழுப்புவது தேவையில்லாதது என்று சொன்னாரே பார்க்கலாம்! கல்பனாவின் தந்தை பிகார் மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சியளிக்கும் பேராசிரியர் குழுவின் தலைவராம். எப்படிப் போகிறது பார்த்தீர்களா? பார்ப்பன குலத்தில் பிறந்த பெண்ணாயிற்றே _ சட்டம் வளைந்து கொடுக்காதா? மற்றவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிட்டுமா? கிடைக்கத்தான் விடுவார்களா?
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு – ‘நீட்’டினால் பாதிப்பு யாருக்கு – பலன் யாருக்கு?
2019_2020இல் ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்ற மாணவி கண்டேல்வால். இவரின் தந்தை, தாய், அண்ணன் மூவரும் டாக்டர்கள். அலைன் ‘நீட்’ பயிற்சி வகுப்பில் படித்தவர்.
இரண்டாம் இடம் பிடித்தவர் யார்? பாவிக். தந்தை டில்லி மாநிலக் கல்வித் துறையில் பெரிய அதிகாரி. தாயார் இயற்பியல் பேராசிரியர். இம்மாணவி 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பிறகு ஆகாஷ் ‘நீட்’ தனிப் பயிற்சியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றவர்.
மூன்றாம் இடத்தைப் பிடித்தவர். சுருதி என்ற மாணவி. பெற்றோர் இருவரும் டாக்டர்களே. இவரும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்தான்.
டாக்டர் ஏ.கே.ராஜன் அவர்களின் ஆணையம் என்ன கூறுகிறது? 71 விழுக்காட்டினர் ஒரு முறைக்கு மேல் ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள்தாம்.
ஆகாஷ் என்ற ‘நீட்’ பயிற்சி நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 8 லட்சம், அலைன் நிறுவனம் ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றன.
இதன் பொருள் என்ன? பெற்றோர்கள் நன்கு படித்திருக்க வேண்டும் _ லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி பெறும் வசதி இருக்க வேண்டும்.
‘நீட்’டின் விளைவு எங்கே கொண்டு போய்விடும்?
நீட்டினால் பட்டியலின மக்களும் பிற்படுத்தப்பட்டோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே மருத்துவர்களாகப் பணியாற்றி வந்தவர்களுக்கு முதுகலைப் பட்டப் படிப்பில் 50 விழுக்காடு அளிக்கப்பட்டது _ ரத்து செய்யப்பட்டதால், எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு, குறிப்பாக பிரைமரி ஹெல்த்சென்டர்களில் (PHC) பணியாற்ற மருத்துவர்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த பேராசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள்.
அரும்பாடுபட்டு, தமிழ்நாட்டில் உயர்ந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வந்த மருத்துவ உதவி கிடைக்காமல் போய்விடும். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு தரைமட்டமாக்கப்பட்டு விடும் என்று நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் கணிப்பு மிகவும் சரியானதே! _ கவலைப்பட வேண்டிய முக்கியக் கருத்தும் ஆகும்.
வசதியும் வாய்ப்பும் படைத்த பல லட்ச ரூபாய் செலவு செய்ய வசதியுள்ள பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தாம், ‘நீட்’ பயிற்சியில் சேர்ந்து வெற்றி பெற முடியும். இப்படிப் படித்து டாக்டர் ஆவோர் தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்பட மாட்டார்கள்.
வெளிநாடுகளுக்குப் பறந்து செல்லுவார்கள்; அல்லது உள்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பெரிய பெரிய மருத்துவமனைகளில் பணியாற்றச் சென்றுவிடுவார்கள். இலட்சக்கணக்கில் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும் அல்லவா?
டாக்டர் படிப்பு என்பது ஒரு சிலருக்கு மட்டும் ஏகபோகமாகும் _ எச்சரிக்கை! எச்சரிக்கை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக