பக்கங்கள்

திங்கள், 12 நவம்பர், 2018

உயர்நீதிமன்றங்களில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள்

புதுடில்லி, நவ.12- நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் வெறும் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர்.

இந்திய நீதித்துறையின் பொற்காலம் என போற்றும் வகையில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முக்கிய 4 உயர்நீதி மன்றங்களுக்கு பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். நீதிபதிகள் மஞ்சுளா செலூர் மும்பை உயர்நீதிமன்றத் திற்கும், ஜி.ரோகினி டில்லி உயர்நீதிமன்றத்திற்கும், நிஹிதா நிர்மலா மத்ரே கோல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கும், இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் 2017 ஏப்ரல் 13இல் நீதிபதி ரோகினியும், செப்.,19இல் மத்ரேவும், டிச., 4இல் செலூரும் பணி ஓய்வுபெற்றனர். இந்திரா பானர்ஜி சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் தகில் ரமணியும், காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்கு கீதா மிட்டலும் தலைமை நீதிபதிகளாக உள்ளனர். மொத்தமுள்ள 24 உயர்நீதி மன்றங்களில் 1221  நீதிபதிகள் பணியிடங்களில் 891 நீதிபதிபணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 70 பேர்களின் பெயர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பால் பரிந்துரைக்கப் பட்டது.

தற்போதுள்ள 891 நீதிபதிகளில் 81 பேர் மட்டுமே பெண்கள். கடந்த ஓராண்டில் மட்டும் 20 க்கும் அதிகமான பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 7க்கும் அதிகமானவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நிய மிக்கப்பட உள்ளனர். கடந்த 68 ஆண்டு கால நீதித்துறை வரலாற்றில் தற்போது 3 பேருடன் சேர்த்து இதுவரை 8 பெண் நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 12.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக