பிப்ரவரி 5 இல் டில்லியில் சமூகநீதி கருத்தரங்கம்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
உயர்ஜாதியினரில் ஏழையாக உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு வகை செய்யும் சட்டத் திருத்தம் (103) மக்களவையில் 8.1.2019 அன்றும், மாநிலங் களவையில் 9.1.2019 அன்றும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு விட்டன.
இதுகுறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (19.1.2019) சனிக்கிழமை முற்பகல் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலை வர்கள், பிரதிநிதிகள் பங்குகொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கே.எம்.நிஜாமுதின், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.அய். கட்சி சார்பில் அச.உமர்பாரூக், இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் எஸ்றா.சற்குணம், விவசாய தொழிலாளர் கட்சியின் தலைவர் குமார், பொது பள்ளிகளுக்கான மேடை என்ற அமைப்பின் சார்பில் பிரின்சு கஜேந்திர பாபு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் சிறந்த கருத்துகளை எடுத்து வைத்தனர்.
இவர்கள் தெரிவித்த கருத்துக்களின் திரட்சி பின் வருமாறு:
உயர்ஜாதிக்காரர்களில் ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்னும் சட்டம் அவசர அவசரமாக முன்னறிவிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு சட்டத்தை நிறைவேற்றுமுன் இரண்டு நாள் களுக்குமுன் உறுப்பினர்களுக்கு மசோதாவின் நகல் அளிக்கப்படவேண்டும் என்பது விதிமுறை. அது இந்தச் சட்டம் நிறைவேற்றத்தில் பின்பற்றப்படவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆம் பிரிவில் பயன்படுத்தப்பட்டுள்ள சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அதே வரை யறைச் சொற்கள்தான் வேலை வாய்ப்புக்கு வழி செய்யும் அரசமைப்புச் சட்டம் 16(4) - கல்வி வாய்ப்புக்கு வகை செய்யும் 15(4) - இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் திருத்தப்பட்டபோது, அது குறித்த விவா தங்கள் நாடாளுமன்றத்தில் நடந்த நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் (Economically) என்ற சொல்லும் பயன் படுத்தப்பட வேண்டும் என்ற திருத்தத்தை ஒரு சிலர் கொண்டு வந்தபோது, வாக்களிப்புக்கு விடப்பட்டது. அதற்கு ஆதரவாக வெறும் அய்ந்தே வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன.
பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளா தார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மண்டல் குழு தொடர்பாக இந்த வழக்கில் (இந்திரா சகானி வழக்கில்) உச்சநீதிமன்றம் அது செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கி விட்டது (1992).
குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கருநாடகம், ஜம்மு காஷ்மீர், அரியானா போன்ற மாநிலங்களில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்து சட்டம் கொண்டு வந்தபோது, அவற்றை சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்கள் செல்லவே செல்லாது என்று ஒருமுகமாகத் தீர்ப்பு அளித்துவிட்டன.
இந்த நிலையில், இப்பொழுது மத்தியில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ.) உயர்ஜாதிகளில் ஏழையாக உள்ளவர் களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டப்படியும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புகளின்படியும் அறவே செல்லாது என்று திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது.
அப்படி தெரிந்திருந்தும் என்.டி.ஏ. அரசு இப்படியொரு சட்டத்தை ஏன் கொண்டு வந்தது என்பது முக்கியமான கேள்வியாகும்.
அண்மையில் 5 மாநிலங்களில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பி.ஜே.பி.க்கு மரண அடி விழுந்துவிட்டது. இதற்கான காரணம் என்னவென்று ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு ஓர் அறிக்கையை கொடுத்துள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது - அதனை எதிர்த்து நாடெங்கும் கண்டனங்கள் வெடித் தன. நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பியது. அதற்குக் கட்டுப்பட்டு மத்திய அரசு நடந்து கொண்டதால், வட மாநிலங்களில் உயர் ஜாதியினர் மத்தியில் பி.ஜே.பி.மீது கடும் அதிருப்தியும், வெறுப்பும் ஏற்பட்டுவிட்டன.
உயர்ஜாதிக்காரர்கள் எப்பொழுதும் பி.ஜே.பி.யின் பின்பலமாக இருந்து வந் திருக்கின்றனர். அந்த உறுதியான வாக்கு வங்கியை இழந்ததுதான் வடமாநில சட்ட மன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தோல்விக்குக் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இந்த நிலையில்தான் உயர்ஜாதியின ரைத் திருப்திப்படுத்திட இத்தகு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய பி.ஜே.பி. அரசு.
1951 இல் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தபோது பொருளாதார அளவுகோல் சேர்க்கப்படவில்லை. அப் பொழுது ஏழைகளே இல்லையா? இந்த 58 ஆண்டுகளில் அந்த ஏழைகள் எல்லாம் ஏழைகளாகத்தான் இருக்கிறார்களா?
உலகின் பல நாடுகளிலும் இட ஒதுக்கீடு இருக்கத்தான் செய்கிறது. அங்கெல்லாம் கூட பொருளாதார அளவுகோல் கிடை யவே கிடையாது. அப்படி இருக்கும்பொழுது இந்தியாவில் மட்டும் எங்கிருந்து வந்தது - குதித்தது?
மேல்ஜாதி ஏழைபற்றி பேசுகிறார்களே, அந்த மேல்ஜாதி ஏழைகளில் எவர் கட்டட வேலைக்கு வருகின்றனர்? ரிக்ஷா இழுக் கின்றனர்? வயல் வேலைக்கு வருகின்றனர்?
எல்லோருக்கும் இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்துவிட்டால், இப்பொழுதுள்ள இட ஒதுக்கீடு என்பது காணாமல் போய் விடும் - இதனை பொருளாதார நோபல் அறிஞர் அமர்த்தியா சென் போன்றவர்கள் கூறுவதைக் கவனிக்கவேண்டும்.
இந்தப் பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே முற்றிலும் தகர்க்கக் கூடியது.
ஜாதியின் காரணமாகவே கல்வி மறுக் கப்பட்டது - ஜாதியின் காரணமாகவே சமூக ரீதியாகக் கீழானவர்களாக ஆக்கப்பட்ட நிலையில், அந்த அடிப்படையில் தானே உரிமை மறுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களை உயர்த்திட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்து அதற் கான அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகே பிற் படுத்தப்பட்டோருக்கு மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது முதல் கட்டமாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், அதற் குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியில் இட ஒதுக்கீடு காங்கிரசு ஆட்சிக் காலத்திலும் கொண்டு வரப்பட்டது.
27 சதவிகித இட ஒதுக்கீடு என்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப் பட்டதாக சொல்லப்பட்டாலும் இதுவரை 12 சதவிகித இடங்களைக்கூட அவர்கள் பெறாத நிலையில், கிரீமிலேயர் என்று கூறி பிற்படுத்தப்பட்டவர்களை வடிகட்டுவதும், உயர்ஜாதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி, அரசமைப்புச் சட்டத்தில் இல் லாத - நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட பொருளாதார அளவுகோலைத் திணிப்பதும் எந்த வகையில் நியாயம்?
உயர்ஜாதியில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள் கல்வியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கி இருக்கின்றனரா? அதற்கான புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பில் இருக் கின்றனவா? இவை குறித்து விளக்கம் அளிக்காத நிலையில், காரணங்களைக் கூறாத தன்மையில், அவர்களுக்காக இட ஒதுக்கீடு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
பி.ஜே.பி. என்பது இந்த நாட்டின் பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர்பற்றிக் கவலைப் படாத கட்சியே. அவர்களின் கவனமும், கவலையும், அக்கறையும் எல்லாம் உயர் ஜாதியினர் பக்கமே - அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள் பக்கமே!
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மண்டல் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தபோது, அதனை எதிர்த்த இவர்கள், இப்போது உயர்ஜாதி யினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கத் துடிப்பது ஏன்?
நியாயமாக மண்டல் குழுப் பரிந்து ரையை செயல்படுத்தியபோது வடநாட்டில் உயர்ஜாதியினர், பி.ஜே.பி., சங் பரிவார் கூட்டத்தினர் கடுமையாக எதிர்த்ததுபோல, உயர்ஜாதியினருக்காக இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில், பெரும்பான்மை மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்குப் போராட்டம் வெடித்துக் கிளம்பியிருக்கவேண்டும்.
தமிழ்நாடு என்பது தந்தை பெரியாரின் மண் - சமூகநீதி மண் என்கிற காரணத்தால், இங்கே எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.
இந்த உணர்வு தமிழ்நாட்டிலுள்ள குக் கிராமங்கள்வரை கொண்டு செல்லப்பட வேண்டும்; இந்தியா முழுமையும் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளவேண் டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து களையும், ஆலோசனைகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
வரும் 5.2.2019 அன்று திராவிடர் கழகத் தின் சார்பிலும், Lawyer's Forum சார்பி லும் டில்லியில் சமூகநீதி கருத்தரங்கம் நடை பெறும் என்றும், அதில் இந்திய அளவில் உள்ள சமூகநீதி அறிஞர்கள், அரசியல், சமு தாய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தார்.
- விடுதலை நாளேடு, 20.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக