பக்கங்கள்

வெள்ளி, 29 மார்ச், 2019

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதி செய்வோம்! ஓபிசி மாநாட்டில் ராகுல் பேச்சு

புதுடில்லி, மார்ச்29, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதி செய்வோம் டில்லியில் நடைபெற்ற ஓபிசி மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபட கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவினர் (ஓபிசி) மாநாடு டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது.

இதில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:

நாட்டின் 5 கோடி ஏழைக் குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க, ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதி திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஏழைகளுக்கு நமது கட்சி, நீதி வழங்கப்  போவதை பிரதமர் உணர்ந்துள்ளார். விண்வெளி சாதனை குறித்த அறிவிப்புக்காக அவர் 45 நிமிடம் மக்களை காக்க வைத்து விட்டார்.

அந்த சாதனை குறித்து சொல்லும்போது அவர் முகத்தை பார்த்தீர்களா?  ஏழைகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கப் போவதையும், தான் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்ட தையும் உணர்ந்த அவரது முகத்தில் பயம் நன்றாக தெரிகிறது.

2014 தேர்தலின் போது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15  லட்சம் தருவதாக மோடி பொய் சொன்னார். நாங்கள் பொய் சொல்ல மாட்டோம். ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.3.60 லட்சம் கோடியை நாங்கள் தருவோம். நாங்கள் சொன்னதை செய்வோம்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதி செய்வோம்.

அதே போல எங்கள் தேர்தல் அறிக்கையில், எந்த சமுகத்தை சேர்ந்த இளைஞர்களாக இருந்தாலும் புதிதாக தொழில் தொடங்க முதல் 3  ஆண்டுக்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற அம்சத்தை சேர்த்துள் ளோம்.

நாங்கள் விரும்புவது மேக் இன் இந்தி யாவை, பிரான்சின் அம்பானியின் தயாரிப்பை அல்ல என்றார்.

- விடுதலை நாளேடு, 29.3.19

புதன், 20 மார்ச், 2019

தமிழகத்தின் 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு பாதிப்பில்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு



புதுடில்லி, மார்ச் 15,  தமிழகத் தில் கடந்த 1993ஆம் ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு அமலானது. அரசியலமைப்பு சட்டத்தின் ஒன் பதாவது அட்டவணையில் இது சேர்க்கப்பட்டிருந்தாலும்,  அதில் இடம் பெற்றுள்ள அனைத்து  அம்சங்களும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவையே என உச்ச நீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித் துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் தமிழக மருத்துவ கலந்தாய்வின் போது 69 சதவிகித இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் ஓசி பிரி வினருக்கு உரிய இடம் கிடைக்க வில்லை என்பதால் 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என சென் னையைச்  சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன் றம், “தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக் கீட்டை காரணம் காட்டி மருத்துவ படிப்பில் கூடுதல் இடம் கேட்க முடியாது. மேலும் இந்த  வழக்கை பொறுத்தமட்டில் தனிப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர மாநிலத்தில் நடைமுறையில் இருக் கும் 69 சதவீதத்திற்கு எதிராக மனுவில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை  என்பதால் அதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது’’ என தெரிவித்த நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இருப்பினும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான மைனர் காயத்ரியின் பிரதான வழக்கை விரைவில் இறுதி விசாரணை மேற்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து முந்தைய விசாரணையின்போது நாடு முழுவதும்  50 சதவிகிதம் கடைபிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தி வரப்படுகிறது என மாநில அரசு நீதிமன்றத்தில் முழு விளக்கங் களை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை மார்ச் 14க்கு  ஒத்திவைத்து கடந்த மாதம் 21ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நேற்று மீண் டும்  விசா ரணைக்கு வந்தது. இதுகுறித்து விளக்கமளிக்க தமி ழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தயாராக இருந்தனர். ஆனால் வழக்கை 6 வாரங்களுக்கு பின்னர் விசாரிப்பதாக நீதிபதிகள் நேற்று ஒத்தி வைத்தனர்.  இதையடுத்து  தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் 69 சதவிகித இடஒதுக்கீடு பயன் பாட்டிற்கு தற்போது எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 15.3.19

செவ்வாய், 19 மார்ச், 2019

இட ஒதுக்கீட்டில் நடுவன் அரசின் மோசடி!

அதாவது பொதுப்பட்டியல்ல எப்புடி மெரிட் OBC/SC/ST மாணவர்கள உள்ள விடாம உயர்சாதிகளுக்கு மட்டும் டெக்னிக்கலா இந்திய அரசு ஒதுக்குதுங்கரத இப்ப பாக்கலாம் ..

முதல்ல இரண்டு கட்ட தேர்வுனு அறிவிப்பு வரும்

அதுல தேர்வு விதில ஒரு விதிய சேத்துவானுங்க அதாவது நீங்க முதல் தகுதித்தேர்வுல ஒதுக்கீட்டு பட்டியல் மரர்க் வாங்கி தேர்ச்சி பெற்றா அடுத்தடுத்த தேர்வுகளிலும் ஒதுக்கீட்டு பட்டியல் மட்டுமே உங்களுக்கான வேலை ஒதுக்கீடு செய்யப்படும்

அதாவது நீங்க முதல் தகுதி தேர்வுல OBC கட்ஆப் மார்க் வாங்கி பாஸ் ஆகிடுறீங்க ஆனா அடுத்த ரெண்டாவது தேர்வுல நல்லா படிச்சு ஜென்ரல் கட் ஆப் எடுத்து பாஸ் ஆனாலும் உங்கள மெரிட் பிராகரம் ஜென்ரல்ல ஒதுக்க மாட்டாங்க ஏன்ன முதல் தேர்வுல OBC ல பாஸ் ஆனதால அடுத்த தேர்வுக்கு உங்கள OBC ல ஒதுக்குவாங்க

இப்ப இதுல என்ன கெட்டு போச்சு மொத்தத்துல வேலை வந்துடுச்சுனு நீங்க நினைக்கலாம் ஆனா இதுல திருட்டு வேலை இருக்கு வெவராம மெரிட் வாங்குனவனையும் OBC க்கு தள்ளிவிட்டா ஜென்ரல் கோட்டா சீட்டா அழகா உயர்சாதிக்கு தூக்கி குடுத்துடலாம்.க
இது முலமா ஜென்ரல் கோட்டவுல ++

மெரிட் ஒதுக்கீட்டு பட்டியல் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் ...எப்புடி வெவரமா வேலை பாக்குறானுங்க பாருங்க

எ.கா கடைசியா வந்த NTPC நோட்டிபிகேசன்ல வந்த திருத்தம் ..
( இதையே இங்கிலீஸ்ல போட்டு ஒருத்தரும் கண்டுக்கலை அதான் தமிழ்ல ஒருக்கா போட்டு இருக்கேன் .) https://t.co/plWwVNIPGV

- பால் பாண்டி, 18.3.19, கீச்சுலிருந்து எடுத்தது.

திங்கள், 18 மார்ச், 2019

13 point roster reservation எனும் அயோக்கியத்தனம்

பல்கலைக் கழகங்களில் முன்பு நடைமுறையில் இருந்த 200 point roster முறையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2017இல் உத்தர விட்டது. அதாவது பல்கலைக் கழகத்தை ஒரு அலகாக (unit) கொண்டு அமல் படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை துறை வாரியாக (Department as a unit) இட ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. இதன் மூலம் 13 point roster முறை அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

200 point rosterமுறை என்றால் என்ன ?


அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் 200 point roster முறையே அமலில் இருந்தது. இதன் மூலம் பல்கலைக் கழகத்தை ஒரு அலகாக (University as a unit) கொண்டு இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டது. உதாரணமாக ஒரு பல்கலைக் கழகத்தில் 200 பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்றால் அதை இட ஒதுக்கீடு மூலம் பிரிக்கும் போது 99 பணியிடங்கள் SC, ST, OBC பிரிவினருக்கும் மீதி 101 இடங்கள் பொது போட்டியிலும் நிரப்பப் படும். இதுவே 200 point roster system.

இந்த முறையை அலகாபாத் உயர்நீதி மன்றம் ரத்து செய்து, துறை வாரியாக (Department as a unit) இட ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. இதன் பின் தான் 13 point roster முறை அமலுக்கு வந்தது.

13 point roster முறையில் எப்படி பணியிடங்கள் நிரப்பப்படும் ?


இந்த முறைப்படி முதல் மூன்று (1,2,3) இடம் - OC

4ஆவது இடம் - OBC

5,6ஆவது இடம் - OC

7ஆவது  இடம் - SC

8ஆவது இடம் - OBC

9,10,11ஆவது இடம் -  OC

12ஆவது இடம் - OBC

13ஆவது இடம் - SC

என இந்த வரிசையில் தான் நிரப்பப் படும்.

அதாவது ஒரு OBCக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்தபட்சம் 4 காலியிடங்கள் அந்த துறையில் இருப்பது அவசியம். SCக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்தபட்சம் 7 காலியிடங்கள் அந்த துறையில் இருப்பது அவசியம். STக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்த பட்சம் 14 காலியிடங்கள் இருந்தாக வேண்டும். ஒரு துறையில் 14 காலி பணியிடமாக இருப்பது சாத்தியமற்ற ஒன்று. பல துறைகளில் மொத்த பணி இடங்களே வெறும் 6 அல்லது 7 தான்.

இந்த 13 point roster முறை என்பது சட்ட ரீதியாக பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை நிர்மூலமாக்குகிறது. உச்ச நீதிமன்றமும் இதற்கு துணை போகும் வகையில் கடந்த ஜனவரி 23 தேதி இது செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதார இட ஒதுக்கீடு எனும் பெயரில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ள இந்த சூழலில். உச்ச நீதிமன்றம் மீண்டும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள இட ஒதுக்கீட்டை சிதைக்கும்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதனை எதிர்த்து, டில்லி பல்கலைக் கழக பேராசிரியர்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, வேறு வழி யின்றி, மோடி அரசு,  7.3.2019 அன்று, ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந் துள்ளது. இதன்படி, பழைய முறையில், அதாவது 200 பாயிண்ட் ரோஸ்டர் முறை பின்பற்றப்படும்.

ஆனால், 8.3.2019 அன்று, இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் உயர்ஜாதியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

- கோ.கருணாநிதி
- விடுதலை நாளேடு, 13.3.19

புதன், 13 மார்ச், 2019

அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு

உயர்நீதிமன்றம் உத்தரவு




சென்னை, மார்ச் 9  தமிழக அரசின் அனைத்து துறைகளி லும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தர விட் டுள்ளது. கோவையில் உள்ள பள் ளியின் இளநிலை உதவியாளர் பணிக்கு மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டின்படி பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள் ளிக்கல்வித்துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசா ரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதி, தாக்கல் செய்யப்பட்ட அறிக் கையில் போதுமான தகவல்கள் இல்லை.மேலும் பள்ளிக் கல்வித்துறை மட்டுமின்றி அரசின் பிற துறைகளிலும் மாற்றுத்  திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுவ தில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு 8 வார காலத்துக்குள் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங் குவது தொடர்பான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்து துறை களுக்கும், பொதுத்துறை நிறு வனங்களுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு, 9.3.19

வியாழன், 7 மார்ச், 2019

காங்கிரசு ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு உயர்வு

முதல்வர் கமல்நாத் அறிவிப்பு




போபால், மார்ச்.7 மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு 16 விழுக்காடும், பழங்குடியினத்தவருக்கு 20 விழுக் காடும், இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 14 விழுக்காடும் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்பொழுது பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 விழுக்காடாக அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான இடஒதுக்கீடு 14 விழுக் காடாக உள்ளது. அதனை 27 விழுக் காடாக அதி கரித்திட முடிவெடுத்து அம்மாநில முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்களை வழங்கி அம்மாநில முதல்வர் கமல்நாத் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்தியப்பிரதேச மாநிலத் தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட் டவர்களுக்கு 27 விழுக்காடாக இடஒதுக்கீடு அதி கரித்து வழங்கப்படும் என்றார். குழு அமைத்து முடிவெடுக்கப்படும்

மத்தியப்பிரதேச மாநில சட்ட மன்றத்தில் கேள்விக்கு மாநிலத்தின் முதல்வர் கமல்நாத் பதில் அளித்த போது, பொருளாதாரத்தில் நலிவுற் றவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு  இதுவரை நடை முறைப்படுத்தப்படவில்லை. அதனை நடைமுறைப்படுத்துவதற் காக துணைக்குழு அமைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

அந்நாள் - இந்நாள்


1926 - 'இந்தியின் இரகசியம்' என்ற பெரியாரின் கட்டுரை 'குடிஅரசு' ஏட்டில் வெளி வந்த நாள்.

- விடுதலை நாளேடு, 7.3.19

சனி, 16 பிப்ரவரி, 2019

கிரிமிலேயர் என்னும் கிருமியை ஒழிப்போம்







மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 7.8.1990 அன்று பிறப்பித்தார். இதனை எதிர்த்து, தமிழகம், தென் மாநிலங்கள் தவிர்த்து, வட மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. இட ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து உயர்ஜாதியினர் வழக்கு தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தடையை பெற்றனர்.


அடுத்து வந்த பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசில், ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை 25.9.1991-அன்று பிறப்பித்தது. இந்த ஆணையும், உச்ச நீதிமன்ற வழக்கில் சேர்க்கப்பட்டது.


இறுதியாக, இந்த இரு வழக்கிற்கும் சேர்த்து, உச்ச நீதிமன்றம், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு 16.11.1992 அன்று தீர்ப்பினை அளித்தது. வி.பி.சிங் பிறப்பித்த ஆணை செல்லும்; பி.வி.நரசிம்மராவ் பிறப்பித்த பொருளாதார முறையிலான இடஒதுக்கீடு ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.


இத்துடன் நில்லாமல், 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை கண்டறிந்து (கிரீமிலேயர்), அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த ஆணையின்படி, பிற்படுத்தப் பட்டோரில் முன்னேறியவர் பற்றி கண்டறிய, மத்திய அரசு 22.2.1993 அன்று, நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.


பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) யார் யார் என்று பட்டியலிட்டு, குழு தனது அறிக்கையை 10.3.1993 அன்று மத்திய அரசுக்கு அளித்தது.


நிபுணர் குழுவின் அறிக்கையை, மக்களவை-யில் 16.3.1993 அன்றும், மாநிலங்களவையில் 17.3.1993 அன்றும் அரசு வைத்தது. குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்-டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் 8.9.1993 தேதியிட்ட ஆணையின் மூலம் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.



நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையிலான குழு பரிந்துரைத்த கிரிமிலேயர் பட்டியல் என்ன?


நிபுணர் குழு தனது பரிந்துரையில் கீழ்காணும் பதவி வகிப்பவர்களை, ஆறு பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் கிரிமிலேயர் என பரிந்துரைத்தது.


1. அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள பதவிகள்:


குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், மத்திய, மாநில அரசு சர்வீஸ் கமிசன் ஆணையர்கள், மத்திய தணிக்கைத் துறை தலைவர் உள்ளிட்ட பதவிகள். இதில், கவர்னர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கிடையாது.


2. சேவைத் துறை:


மத்திய, மாநில அரசில், குரூப் ஏ பதவிகள்


கணவன்  மனைவி இருவரும் குரூப் பி பதவிகள்


பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு, மத்திய அரசுக்கு ஈடான பதவி எது என கண்டறியும்வரை, வருமான* அடிப்படையில்.


3. ராணுவத்தில் கலோனல் பதவியில் உள்ளவர்கள்


4. வணிகர்கள், தொழில் சார்ந்த பிரிவினர், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில்முறை நிர்வாகத்தவர்கள்.


5. சொத்து வைத்திருப்போர்


6. ஆண்டு வருமானம்* ரூ.1 லட்சம் உள்ளவர்கள் மற்றும் செல்வம் வைத்திருப்போர்


(*வருமானம் என்பதில், மாதச் சம்பள வருமானமும், விவசாய வருமானமும் விலக்கு அளிக்கப்பட்டது)


மத்திய அரசின் ஆணை 8.9.1993-இன் படி, மேற்கொண்ட பட்டியலில் உள்ளோர், கிரீமிலேயர் என அறிவிக்கப்பட்டு, அவர்களது பிள்ளைகளுக்கு, ஓபிசி (பிற்படுத்தப்பட்டோர்) சான்றிதழ் கிடையாது. ஏனையோர்க்கு ஓபிசி சான்றிதழ் பெற வழிவகை செய்தது. இந்த ஆணையின் அடிப்படையில் 8.9.1993 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் பணிகளில் சேர்ந்திட ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பெரும்பிரிவினர் இந்த ஆணையின் காரணமாக பாதிக்கப்பட்டனர்.


இந்த நிலையில், 8.9.1993 அரசின் ஆணைக்கு, விளக்கம் அளிக்கிறோம் என்ற பெயரில், மத்திய பணியாளர் நல அமைச்சகம், 14.10.2004 அன்று ஒரு விளக்க ஆணையை பிறப்பித்தது. இதில், பொதுத்துறையில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் பற்றி குழப்பமான விளக்கத்தை அளித்தது.


மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. (குடிமைப்பணி தேர்வு) நடத்திய தேர்வில் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோர் சிலருக்கு, 2015-ஆம் ஆண்டு பணிக்கான ஆணையை, மத்திய பணியாளர் நலத் துறை வழங்க மறுத்தது. காரணம், அவர்களது பெற்றோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் உள்ளதாலும், அவர்களது மாத வருமானம், நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பை (2015இ-ல் ரூ.6 லட்சம்) மீறுவதாலும், அவர்களுக்கு பணி வழங்க முடியாது என கூறியது.


ஆனால், அதே துறையின் 8.9.1993- தேதியிட்ட ஆணையில், வருமான வரம்பை கணக்கிடும்-போது, மாத வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடப்-பட்டுள்ளதை, அதே துறையே ஏற்க மறுத்தது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டில், தேர்வு பெற்ற 25 பேருக்கு பணி வழங்கப்படவில்லை.


பாதிக்கப்பட்டோர், சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். 12.1.2017 அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு, உடனடியாக பதவி வழங்க வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறைக்கு ஆணையிட்டது. இதே தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றமும், 31.8.2017 அன்று அளித்தது. ஆனால், வழக்கை உச்ச  நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, தடையாணை பெற்றது மத்திய அரசு.


டில்லி உயர் நீதிமன்றத்திலும், பாதிக்கப்-பட்டோர் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு சாதகமாக, 22.3.2018 அன்று தீர்ப்பளித்தது.


ஆனால், இந்த தீர்ப்பையும், மத்திய அரசு ஏற்கவில்லை.


இதனிடையே, 2016, 2017, 2018 ஆண்டுகளில், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கு (ஏறக்குறைய நூறு பேர்), அவர்களது பெற்றோரின் மாதச் சம்பளத்தை கணக்கில் எடுத்து, இன்றளவும் பணி வழங்காமல், மத்திய அரசு சமூக அநீதியை செய்து வருகிறது. தனது தவறான வழிமுறையை நியாயப்படுத்தும் விதமாக, மத்திய பணியாளர் நலத் துறை, 6.10.2017 அன்று ஓர் ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் பெரும்-பான்மையோர், கிரீமிலேயர் என அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.


இதனை எதிர்த்து, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்க கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.  திராவிடர் கழகமும் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. சமூக, அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று கோரிக்கை வைத்துள்ளது.




இந்த கோரிக்கையின் அடிப்படையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடனடியாக அறிக்கை வெளியிட்டதோடு, 9.11.2018 அன்று, கிரீமிலேயர் எனும் கிருமி ஒழிப்பு மாநாட்டையும் நடத்தியுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


தற்போது, பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு, இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட முடிவு செய்து, பொதுமக்கள் கருத்தை அறிந்திட பத்திரிகையில் செய்தியும் வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் 6.10.2017 தேதியிட்ட கிரீமிலேயர் தொடர்பான ஆணை திரும்பப் பெற வேண்டும் என்பது அவசரம்; அவசியம்.


1. அரசியல் அமைப்பு சட்டத்தின் 340-ஆவது பிரிவில் சமூக ரீதியாக, கல்விரீதியாக (Socially and educationally) என்று தான் உள்ளது. அதனைப் பின்பற்றி, முதல் அரசியல் சட்ட திருத்தம் 15(4) கொண்டுவந்த போது, அதே வார்த்தைதான் கையாளப்பட்டது.


2. பொருளாதார அடிப்படையில் என்பதை நாடாளுமன்றம் ஏற்கவில்லை. சில உறுப்பினர்கள், பொருளாதார அளவுகோல் வேண்டும் என்ற நிலையில், நாடாளுமன்றத்தில் 1.6.1951 அன்று  வாக்கெடுப்பு நடந்து 245-5 என்ற வாக்கில் அன்றே தோற்கடிக்கப்பட்டது.


3. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல.


4. முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காகா கலேல்கர் தலைமையில், 30.3.1955 அறிக்கை அளித்தது. அதில் பொருளாதார அளவுகோல் இல்லை.


5. மண்டல் குழு பரிந்துரை 31.12.1980 அன்று அளிக்கப்பட்டது. அதிலும், பொருளாதார அளவுகோல் இல்லை.


6. வசந்தகுமார் கர்னாடகா வழக்கில் (8.5.1985) தீர்ப்பளித்த நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி கூறியதாவது:


பொதுப்போட்டியில், சமூகத்தின் கிரீமிலேயராக உள்ளவர்கள், பல இடங்களை கைப்பற்றுவது தவறு இல்லை என்றால், இட ஒதுக்கீட்டு இடங்களில், அதே போன்று, பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய சிலர் கைப்பற்றுவது எப்படி தவறாகும்? என்று கேட்டார்.


7. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.பி.சாவண்ட் அவர்கள், கிரீமிலேயர் பற்றி கூறுகையில், அரசியலமைப்பில் ஒதுக்கீடு "வகுப்புகளுக்கு" (Classes) வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு (Individuals)  அல்ல.


அரசு நிர்வாகத்தில், இந்த பிரிவுகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது என்று சொன்னார்.


8. சமூகரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்-பட்டோர் யார் என்பதை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க்கு உள்ள பட்டியல் போன்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்-பட வேண்டும். அதுவே, கிரீமிலேயர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும் என மேனாள்  நீதிபதி ஏ.கே.ராஜன் கூறுகிறார்.


9. 24.7.1998 அன்று நாடாளுமன்றத்தில், கிரீமிலேயர் தொடர்பாக, தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உறுப்பினர் ஜி.எம்.பானட்வாலா, இன அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு இருக்குமானால், அதற்கான தீர்வும், இன அடிப்படையில் தான் இருக்கவேண்டும் என அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


கிரீமிலேயர் ஆபத்து!


1992 இல் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றான 16(4) படி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை, அந்நாள் பிரதமர் திரு. வி.பி.சிங் போட்ட ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட (இந்திரா சகானி வழக்கு) வழக்கில் 9 நீதிபதிகள் அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பையொட்டியே பெரிதும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றாலும், இதில் கிரீமிலேயர் (Creamy layer) என்ற வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித் திருப்பது, ஒரு கையால் கொடுத்ததை மறு கையால் பறித்துக் கொள்ளுவது போன்றதொரு அநீதியை ஏற்படுத்தியுள்ளது!


பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வருமானம் அதிகமுள்ள மேல் தட்டினைப் பிரித்து, அவர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராகக் கருதாமல் செய்யும் இந்த தீர்ப்பு அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும் (Unconstitutional)..


உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இதனை எழுப்புவதன் உள்நோக்கமே, இப்படி ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியை வைத்தால், அதனால் காலியாகும் இடங்களை தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் என்பதுதானே!


உயர்ஜாதியினர் அபகரிக்கத் திட்டம்


Carry Forward  என்ற முறை அமலில் இல்லை. அதாவது இந்த ஆண்டு தகுதி உள்ளவர்கள் வராததால், காலியாகும் இடங்களை அப்படியே அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் முறை கிடையாது என்பதால், அது பொதுப் போட்டிக்குச் செல்லும். அதனைத் தாங்களே அபகரிக்கலாம் என்பதால்தானே!


பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்றம், கிரீமிலேயரை அறிமுகப்படுத்துவது ஏன்?


அரசமைப்புச் சட்டத்தில் பொருளாதார அடிப்படைக்கு இடம் இல்லை என்று கூறிவிட்டு இப்படிச் சொன்னதே மிகப் பெரிய தவறு. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இந்த சமுதாயக் கொடுமையை அனுபவித்தறியாதவர் களான அல்லது தங்களுக்கே உரிய உயர்ஜாதி தத்துவத்தின் வியூக அடிப்படையில்தான், தெருக்கதவு வழியாக நுழைக்க முடியாததை, கொல்லைப்புற வழியாக அந்த நான்கு உயர்ஜாதி நீதிபதிகளும் புகுத்தி விட்டார்கள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டு ஆணைகளில் எது செல்லும், எது செல்லாது என்று மட்டும் கூறவேண்டிய வர்கள், எதை எதையோ வழக்குக்குச் சிறிதும் சம்பந்தமில்லாதவற்றை வலிய போய்த் தேடி ஏதோ இட ஒதுக்கீட்டிற்கே இதுதான் கடைசி தீர்ப்பு என்பது போலக் காட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். எருதின் புண் அதனைக் கொத்தும் காக்கைகளுக்கு எப்படித் தெரியும்?


எனவே, மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கையில், கிரீமிலேயர் என்ற காரணம் காட்டி, அவர்கள் வெற்றி பெற்றும் பதவி தராமலிருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதம்; சமூக அநீதியும் ஆகும்!


தேர்வு எழுத அனுமதித்து விட்டு பணி நியமனத்தின்போது குறுக்கிடுவதா?


அவர்கள் தேர்வு எழுது முன்னர், அக்காரணத்தைக் காட்டி, அவர்களது மனுக்களை நிராகரிக்காமல், அவர்களைத் தேர்வு எழுதவிட்டு, அவர்கள் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் _ இப்படி கிரீமிலேயர் _ அதிக வருமானம் உள்ள பெற்றோர்களைக் கொண்டவர்கள் என்று காரணம் காட்டித் தடுப்பது இயற்கை நீதி (Natural Justice) என்பதற்கேகூட விரோதமான ஒன்றாகும்!


இது ஒருபுறமிருக்க, கிரீமிலேயர், கிரீமிலேயர் என்பது நீ சதா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென்றே _ இவர்களை பதவிக்கு வராமல் தடுக்க வைக்கப்பட்ட கண்ணி வெடிகள் ஆகும்.


இந்திரா சஹானி வழக்கில்  சம்பந்தம் இல்லாமல்..


இந்திரா சஹானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தீர்ப்பு எழுதிய 5 நீதிபதிகளை _ வழக்கிற்கே சிறிதும் சம்பந்தமில்லாத கிரீமிலேயர் என்பதை தனியே, யாரும் கேட்காமலேயே கேள்வியும் நானே பதிலும் நானே என்பதுபோல வலிய புகுத்தப்பட்டது தானே இந்தக் கிரீமிலேயர்?


பொருளாதார அளவுகோல் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்த அன்றைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் முடிவு செல்லாது என்று தெளிவாக அதே தீர்ப்பில் கூறி விட்டு கொல்லைப்புற வழியாகப் புகுத்தல் போல, இந்த கிரீமிலேயர் நுழைக்கப்படுவது ஏன்? ஏன்?


கிரீமிலேயர் ஆதரவாளர்களுக்குச் சில கேள்விகள்


கிரீமிலேயர் என்று வற்புறுத்துவோர், அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகட்டும், ஆதிக்க ஜாதியாய் இருந்து கொண்டு, ஊடகங்களை தங்களது அஸ்திரங்களாக ஆக்கி மற்றவர்கள்மீது எய்தி இன்புறும் எவராயினும், அவர்களை நோக்கி சில நியாயமான கேள்விகளை முன் வைக்கிறோம். அவர்கள் இந்த கிரீமிலேயர் பற்றி பதில் கூறி விளக்க வேண்டும்.


இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட _ பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றிலாவது கிரீமிலேயர் (பொருளாதார அடிப்படை) கூறப்பட்டுள்ளதா? வற்புறுத்தப்பட்டுள்ளதா?


மண்டல் அறிக்கையில் பொருளாதார அளவுகோல் உண்டா?


மண்டல் கமிஷன் என்ற இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனின் பரிந்துரைகளில் ஏதாவது ஒன்றிலாவது கிரீமிலேயர் என்ற சொற்றொடரோ, கருத்துரையோ, பரிந்துரையோ உள்ளதா?


சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தலைமையிலான அரசு தனது (மத்திய) அரசு சார்பில் செயல்படுத்திய ஆணை (Official Memorandum) யிலாவது இந்த கிரீமிலேயர் மூலம் வடிகட்டல் நடத்தப்பட்ட பிறகே, நியமனம் என்று கூறப்பட்டதா?


அரசமைப்புச் சட்டத்தில் தான் உண்டா?


அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் 1951இல் (First Amendment)  பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் போன்றவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப் பட்டதில், Socially Educationally என்ற சொற்றொடர் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்களை அடையாளப்படுத்தப் பயன் படுத்தப்பட்டன; 'Econamically' என்பது நீண்ட விவாதத்திற்குப் பின், அதில் சேர்க்க மறுக்கப்பட்டது என்பதும் உண்மை அல்லவா?


மேல் அடுக்கான திறந்த _ பொதுப் போட்டி _ தொகுதிக்கும் கிரீமிலேயர் இல்லை.


அடியில் உள்ள S.C., S.T., என்ற தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கான தொகுதியிலும் கிரீமிலேயர் இல்லை. அப்படியிருக்க கிரீமிலேயர் என்ற மறைமுகமாக பொருளாதார அளவுகோல் ஏன் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு மட்டும் அடிப்படையாக இருக்க வேண்டும்? இப்படி நாம் கேட்பதனால் அவர்களுக்கும் கிரீமிலேயர் வேண்டும் என்பது அல்ல. யாருக்கும் கூடாது என்பதே!


52 சதவீத மக்களுக்கு 27 சதவீதம் தானே!


பிற்படுத்தப்பட்டோரில் உள்ள _ மண்டல் பரிந்துரைப்படி _ 52 விழுக்காட்டில், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 27சதவிகிதம் தானே. அதாவது பாதி அளவுதான்! இதிலும் கிரீமிலேயர் என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம்? இது சமூகநீதிக்கு விரோத மானதல்லவா. அது மட்டுமல்ல. 27 சதவீதத்திலும் இதுவரை 12 சதவீதத்துக்கு மேல் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலை! பிற்படுத்தப்பட்டோரில் உள்ள வசதி படைத்தோரை இந்த இடஒதுக்கீடுகளை அனுபவிக்காமல் தடுக்கவே, பிற்படுத்தப்-பட்டோரில் உள்ள ஏழைகளைக் காப்பாற்றவே இந்த வடிகட்டல் என்பது அத்தரப்பு வாதமானால், நாம் ஒன்றைக்  கேட்கிறோம். பதில் கூறட்டும்!


எந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்  பாதிக்கப்பட்டு, ஆட்சியாளரிடமோ, நீதிமன்றங்களிடமோ முறையிட்டு, அதன்பின் ஆட்சியாளரோ, நீதிமன்றங்களோ ஆணையிட்டு, புள்ளி விவரப்படி மேல் தட்டு வர்க்கத்தினரே அத்தனை இடங்களையும் கபளீகரம் செய்து விட்டனர் என்று கண்டறியப்பட்டதனால், இப்படி கிரீமிலேயர் அளவுகோல் புகுத்தப்பட்டதா? இல்லையே!


தேசிய பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்தின் நன்முயற்சி


இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது _ வற்புறுத்தியதுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. (இந்த ஆணையத்திற்குச் சட்ட ரீதியான அந்தஸ்து  _ இதுவரை கொடுக்கப்படாததும் ஓர வஞ்சனை, பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவா?)


ஆண்டுக்கு ஆண்டு வருமானம் கூடுவதும், குறைவதும் உண்டு. இது சரியான அளவுகோல் ஆகாது என்ற காரணத்தால்தான், அரசியல் சட்டப்பிரிவு, 1951இல் ஏற்பட்ட நாடளுமன்றக் குழு விவாதம் இவைகளில் எல்லாம் 'Econamically' என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட்டது; ஏனெனில் அது குழப்பம் உருவாக்கக் கூடியது. நிலையானவற்றை அளவுகோலாகக் கொள்வதுதானே அறிவுடைமை! மாறி மாறி வரும் நிலையற்றதை அளவுகோலாகக் கொள்வது அறிவுடைமையா?


ஆளுவோர் சிந்திக்கட்டும். கிரீமிலேயர் முறை _ அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்ற ஓர வஞ்சனை ஒழியட்டும் _ அணி திரள்வீர்! 


 



குழப்பம் தரும் கிரீமிலேயர் அளவுகள்!

மத்திய அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு முழுமையானதாக இல்லை. ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளவர்கள் கிரீமிலேயர்களாக, அதாவது வசதி படைத்தவர்களாக, கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இந்த அநீதி ஒருபுறமிருக்க, கிரீமிலேயர்களை கணக்கிடுவதில் மத்திய அரசு இழைக்கும் பெரும் அநீதி காரணமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகளின்படி மத்திய, மாநில அரசுகளில் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. மத்திய, மாநில அரசுகளின் சி மற்றும் டி பிரிவு பணிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கிடப்படாது; அதேநேரத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படும்.
அதன்படி பார்த்தால், சி மற்றும் டி தொகுதி பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பெற்றோர் இருவரும் இப்பணிகளில் இருந்து ரூ.1.30 லட்சம் மாத வருவாய் ஈட்டினாலும் கூட அவர்களின் வாரிசுகள் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள்; ஆனால், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பெற்றோர் இருவரும் தலா ரூ.35,000 மாத வருவாய் ஈட்டினாலே அவர்களின் வாரிசுகள் கிரிமீலேயராகக் கருதப்பட்டு ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில் தான் 2017-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 பேருக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட முன்னணி வரிசை பணிகள் மறுக்கப்பட்டுள்ளன. இவர்களின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதால் அவர்களின் வருமானமும் கணக்கில் சேர்க்கப்பட்டு, 29 பேரும் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டிருக்கிறது. சமூக நீதியை இதைவிடக் கொடூரமாக யாராலும் படுகொலை செய்ய முடியாது.

-  உண்மை இதழ், 16-30.11.18