வெள்ளி, 17 ஜூன், 2016

பல்துறை அறிஞர் அயோத்திதாச பண்டிதர் 171ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை

இன்றைக்கும் அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறி வருவது ஆதிக்க சாதி வெறியர்களால் எந்த அளவிற்குத் தடுக்கப்பட முடியுமோ அந்த அளவிற்குத் தடுத்து வருகிறார்கள் என்பது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கண்கூடாக பார்த்தோம். நாடு முழுக்க 60 இலட்சம் வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது. தமிழகத்தில் 5.5 இலட்சம் வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது. மிக அதிக அளவாக நீலகிரி (தனி) தொகுதியில் மூன்றாவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டில்
யார் சாதி பார்க்கிறார்கள்

இந்திய அரசியல்வாதிகளை எங்களுக்கும் பிடிக்கவில்லை என்று மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று நாம் சட்டைக் காலரை தூக்கிவிட்டு பெருமை பேசிக் கொள்ளும் அதே வேளையில அதில் உண்மை ஒன்று ஒளிந்து இருப்பதை நாம் காணலாம். அந்த உண்மை பெரும்பாண்மையான நோட்டா வாக்குகள் தனி தொகுதிகளில் நாடு முழுக்க விழுந்துள்ளது என்பதுதான். இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் யார் சாதி பார்க்கிறார்கள் என்று கேட்கும் அறிவு ஜீவிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இப்பொழுதே நிலைமை இவ்வாறு இருக்கும்போது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு உயர் சாதியினரால் எல்லா வகையிலும் அடக்கி வைக்கப்பட்டிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமூக சீர்திருத்தம் அல்லது சமூகப்புரட்சியின் விதைகள் வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தில் ஊன்றி வேர் பரவி அதன் செடிகள் தெரிய ஆரம்பித்தது கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான். 1845ஆம் ஆண்டு மே திங்கள் 20ஆம் நாள் அயோத்திதாச பண்டிதர் பிறந்தார். அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பது சொல்லி தெரிய வேண் டியதில்லை. இன்றைக்கு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் மக்கிமா நகரில் கந்தசாமி என்கின்ற சித்த வைத்தியருக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோரிட்ட பெயர் காத்தவராயன்

இவருக்கு பெற்றோரிட்ட பெயர் காத்தவராயன் என்ப தாகும். (சிலர் கோவை அரசம்பாளையத்தில் பிறந்தார் என்று சொல்கிறார்கள்).

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்றைக்கும் ஆல்தோட்டம் என்ற ஒரு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசித்து வந்தனர். முகலாயா காலத்தில் இந்த பகுதியில்தான் முகலாயர்கள் தங்களது குதிரைகளைப் பராமரிப்பதற்காக விட்டு வைத்தனர். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் குதிரைகளைப் பராமரித்து வந்ததன் மூலம் இஸ்லாமியர்கள் அவர்களுக்கு  பொருளாதார தியாக உதவியும் செய்து வந்தனா. அதன் காரணமாக சிலா இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். அவர்களின் சந்ததியினர் இப்பொழுதும் அந்த பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். பின்பு அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு (தாழ்த்தப்பட்ட மக்களுக்கு) ஆங்கி லேயர்கள் அவர்கள் வசித்த நிலங்களை அவர்களுக்கே ஒப்படை செய்து உள்ளார்கள் (பஞ்சமி நிலங்கள்). தற்போது அந்த நிலங்கள் யாவும் மற்ற பிரிவினர்களுக்கு விற்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுவிட்டன. மேற்படி பகுதியில்தான் அதாவது ஆயிரம்விளக்கில் அயோத்திதாசன் தாத்தா மற்றும் அவரது தந்தை சித்த மருத்துவத் தொழில் செய்ததன் மூலம் அந்த பகுதி மக்களிடம் நல்ல பெயரை எடுத்திருந்தனர். 1835ல் தொடங்கிய பெரும் பஞ்சம் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் நீடித்தது. பஞ்ச காலத்தின் இறுதி 5 ஆண்டுகளில் அயோத்தி தாசர் சென்னை தேனாம்பேட்டையில் வளர்ந்தார்.

பாப்பனர்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரம்

டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு தீண்டாமையின் கொடுமை யினை சிறுவயதிலேயே அனுபவித்து மன உளைச்சலுக்கு ஆளானாரோ அதேபோல அயோத்திதாசரும் தனது எட்டாம் வயதிலேயே தனது தந்தை கந்தசாமிக்கு இரண்டு பாப்பனர் களால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை உணர்ந்தார். சுருக்கமாகக் கூறுவதானால் ஜார்ஜ் ஹாரிங்டன் என்பவர் சாணரக்குப்பத்தில் உள்ள அதாலத் நீதிமன்றத்தில் பணியாற்றினார். கந்தசாமி அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார். ஜார்ஜ் ஹாரிங் டனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த இரண்டு பாப்பனர்கள் கந்த சாமியைத் தங்களால் தீண்டமுடியாது, அவர் தொடப்படாதவர், அவர் உங்கள் காலத்தில்தான் ஊருக்குள் நுழைகிறார், அதனால் எங்கள் புனிதம் கெடுகிறது என்று முறையிட்டார் கள். தீண்டாமை பற்றியோ அதன் உண்மை சொரூபம்.  இவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியோ தெரியாத ஜார்ஜ் ஹாரிங்டன் இதுபற்றி அறிந்துகொள்ள ஆர்வம் மேலிட்டு கந்தசாமியைப் புகார் கொடுத்த இரண்டு பாப்பனர்கள் முன்னிலையில் விசாரித்தார். அப்பொழுது தனது தரப்பு நியாயத்தை மிக மென்மையாக, உருக்கமாக சொன்ன அயோத்திதாசரின் தந்தை சில கேள்விக் கணைகளையும் அந்த இரண்டு பார்ப்பனர்களையும் நோக்கி வீச அவர்கள் பதில் கூறாமல் மவுனமாக இருந்தனர். மேற்படி அவதூறு முறையீட்டை தள்ளுபடி செய்த ஹாரிங்டனுக்கு அயோத்தி தாசரின் தந்தையைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வளர்ந்ததைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த வழக்கும், தன் தந்தையார் கந்தசாமி பெற்ற அவ மானமும், மன உளைச்சலும் மிக அதிகமாகி சிறு வயது அயோத்திதாசரை மிகவும் பாதித்தது. தன் தந்தையார் மூலம் ஆங்கிலம் மற்றும் சித்த மருத்துவத்தை முறையாகக் கற்ற அயோத்திதாசர் பின்பு முறையான படிப்பிற்காக வி.அயோத்தி தாசரிடம் முறையாக தமிழிலக்கியம் கற்றார். அத்துடன் கவிதை புனையும் ஆற்றுலும் சேர்ந்து கொண்டது.

தன் குரு வி.அயோத்திதாசர் மீது வைத்திருந்த அளவற்ற பற்றின் காரணமாக காத்தவராயன் என்ற தன்னுடைய பெயரை வி.அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார். பண்டிதர் என்பது தமிழிலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழ் மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோகிய அறிஞர் களுக்கு அளிக்கப்படும் பட்டமாகும்.

ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கை

பின்பு கல்வியை முடித்துக்கொண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் வந்த அயோத்திதாசர் தோடர்குடியில் பெண் ணெடுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். திரு மணம் முடிந்து அண்றைய பர்மாவின் தலைநகரான ரங்கூ னுக்கு பயணமாகி பத்தாண்டுகள் அங்கிருந்தார். பிறவியி லேயே கண் குருடாக பிறந்த ஒரு மகனையும் அவரது மனை வியையும் பறிகொடுத்து பின்பு மீண்டும் குன்னூருக்கு திரும்புகிறார். நீலகிரியில் தீவிரமான சமூகப்பணியில் ஈடுபட்ட அவர் ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கைகளைப் பரப்புவ தற்காக ஒரு மடத்தை நிறுவி அத்வைதானந்த சபையை உருவாக்கினார்.

மதம் மற்றும் மருத்துவத்தொழிலையும் மேற்கொண்டு சித்த மருத்துவத்தைப் பரப்புவதோடு மட்டுமலலாமல் நோய் முறிவு மருந்துகளை மக்கள் தாங்களே எப்படித் தயாரித்துக் கொள்வது, மூலிகைகள் எங்கே கிடைக்கும், எப்படிப் பெறுவது, அதை எப்படி பக்குவப்படுத்துவது என்பதை விரிவாகக் குறிப்பிட்டு ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை குன்னூர் மலைப்பகுதிகளில் விநியோகம் செய்து பின்பு சென்னை மாகாணம், சென்னைப்பட்டினம் ஆகியவற்றிற்கு அனுப்பி பல்வேறு மூலிகையைப் பற்றியும் அதன் பயன்பாடு ஆகிய வற்றைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பரப்பினார்.

இரட்டைமலை சீனிவாசன்

எல்லோரும் இன்புற்றிருக்க தான் அறிந்த மருத்துவத்தை உலகிற்கு பரப்பிய ஒரு உன்னதமான மருத்துவர் அயோத்திதாச பண்டிதர் என்றால் அது மிகையில்லை. கிட்டத்தட்ட பத்தாண் டுகளுக்கும் மேலாக இந்த மருத்துவப்பணியினை திறம்படத் தொடர்ந்த அயோத்திதாசர் புகழ்பெற்ற இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்ததனால், அவருக்கு மைத்துனரானார். நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் பிறந்தனர்.

தான் அதுவரை கொண்டிருந்த அத்வைத கருத்துக்கள் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்து அதை நிரந்தரமாக வைத்திருக்கிறது என்பதை பவுத்தத்தைப் பெரிதும் அறிந்து ஆய்ந்ததன் மூலம் தெரிந்து கொண்டார். அதனால் தனது இரண்டு மகள்களுக்கும் பவுத்த சார்புடைய பெயர்களான அம்பிகாதேவி, மாயாதேவி (புத்தரது தாயார்) என்ற பெயர்களைச் சூட்டினார்.
தனது மைத்துனரான இரட்டைமலை சீனிவாசனுக்கும் அயோத்திதாசருக்குமான உறவு அய்ம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில் குறிப்பிடுவது போல காமனும் சாமனும் போல இந்த மாமனும் மைத்துனனும் ஒன்றி சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளம் அமைக்கும் பணியில் ஈடு பட்டார்கள். 1882ஆம் ஆண்டு மீண்டும் தான் பிறந்த சென்னைக்கு திரும்பி சமூகப்பணியினை மேற்கொண்டார். 1882லிருந்து திராவிடர் கழகம் என்று பெயர் கொண்ட சமூக அமைப்பு ஒன்று ஜான் இரத்தினம் அவர்களால் நடத்தப்பட்டு வந்தது. அதில் பண்டிதர் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கினார். இரண்டாண்டுகள் தொடர்ச்சி யாக வந்துகொண்டிருந்த இந்த இதழ், ஜான் இரத்தினம் சென்னை மாகாண கவுரவ நீதிபதியாக பதவியேற்றவுடன் முற்றுப் பெற்றது. பின்பு 1887ஆம் ஆண்டிற்குப் பிறகு முழுக்க முழுக்க பவுத்தத்திற்குத் திரும்பினார்.

இந்த காலகட்டத்தில ‘திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை நிறுவி அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்தார். அயோத்திதாசர் அதன் மூலம் ஆய்வு செய்து சொன்ன வார்த்தை தமிழர் என்றால திராவிடர் என்பது தான். தமிழின் பூர்வ சொல்லான த்ரமிள, திராவிட என்பதன் விரிவுதான் திராவிடர் என்பதாகும் என்று சொன்னார். எனவே திராவிடர் என்ற சொல் அண்றைக்கே ஏற்றுக்கொள்ளப்பட் டிருந்தாலும் ஆதிதிராவிடர் என்ற சொல்லை அயோத்திதாசர் முன்னிறுத்தினார்.

திராவிடர் மகாசபையின் முதல் மாநாடு

அயோத்திதாசர் தொடங்கிய திராவிடர் மகாசபையின் முதல் மாநாடு 01.12.1891ஆம் ஆண்டு நீலகிரியில் அவரது தலைமையில் நடைபெற்றது. இதற்கிடையே 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் ஆங்கிலேயர்களை அனுசரித்து நடந்து வந்தது. எனவே காங்கிரஸ் மூலம் சில கோரிக்கைகளை அயோத்திதாசர் ஆங்கிலேய அரசுக்கு முன்வைத்தார். அந்த கோரிக்கைகள் பின்வருமாறு:

1. ஆதி திராவிடர் சமூக மக்களை பறையர் எனக் கூறுவது அவதூறு எனக்கருதிக் குற்றம் எனக் கருதச் சட்டம்
2. ஆதி திராவிடர்களுக்குக் கலவி வசதியினை அளித்தல்
3. கல்வி உதவித் தொகை அளித்தல்
4. கல்வியில் தேறியவருக்கு அரசு வேலை
5. கல்வி கற்றவர்களுக்குத் தடையின்றிப் பணிநியமனம்
6. உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்
7. சிறைச்சாலைச் சட்டம் 464 பிரிவை நீக்குதல்
8. பொது இடங்களில் நுழைய உரிமை
9. அரசு அலுவலகங்களில் இக்குலத்தோர் தங்கு தடையின்றி அனுமதித்து நீதி அளித்தல்
10. கிராம முன்சீப் அலுவலகங்களின் இக்குலத்தார் நியமிக்கப்பட்டு அரசு நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பு.
1894ஆம் ஆண்டு மீண்டும் தான் பிறந்த சென்னைக்கு அயோத்திதாசர் குடியேறினார். ஒரு பைசாத் தமிழன் என்ற பத்திரிகையை அச்சிட்டு நடத்திவந்தார். ஒரு பைசாத் தமிழன் என்ற பெயருக்கு கீழ்க்காணும் விளக்கத்தினை அளித்ததார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை பைசா பெறாதவர் என்பது போல இளப்பமாகக் கூறுவது வழக்கமாயினும், அத்தகைய ஒரு பைசா தமிழனின் அருமை அறியாதவர் அதன் உண் மையை உணர்ந்தால் ஒரு கோடிப் பொன் இதுதான் என்று உரைப்பர் என்று தன் இதழ் பெயருக்கு அவர் விளக்கமளித்தார்.
பின்பு ஒரு பைசாத் தமிழன், தமிழன் என்று பெயர் மாற்றப்பட்டு 1908 முதல் அன்னார் மறைந்த ஆண்டான
1914 வரை நிற்காமல் வாரம் தவறாமல் வெளி வந்தது. அயோத்திதாச பண்டிதரின் அடிப்படைக் கொள்கைகள் சாதி எதிர்ப்பு, வேஷ பிராமண எதிர்ப்பு மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கில வழி நவீன வழிக்கல்வியை வலியுறுத் துதல். ஆகியவைகளாகும் புராண இதிகாசங்கள் பள்ளிகளில போதிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். மேற்கத்திய பாணியிலான தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை தந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று தீர்மானம் இயற்றியவர் இவரே ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்பதை தொடர்ந்து தமிழ னில் வற்புறுத்தி வந்தார். பெணிகளுக்குக் கல்வி, தொழிற்கல்வி, வணிகக் கல்வி, விதவைத் திருமணம் ஆகியவற்றை மிகத்தீவிரமாக தமிழன் இதழில் வலியுறுத்தினார். இந்து மதத்தினைக் கடுமையாக எதிர்த்தார். பௌத்த நெறியினைப் பரப்பிடக் கடுமையாக உழைத்தார்.
அயோத்திதாசரின் சிந்தனைகள் அவரது மறைவுக்கு பின்பு நடைமுறைக்கு வந்தது. இன்றைக்கு பெண்களுக்குக் கல்வி கிடைத்ததனால் எல்லா துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். 1928ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி காலத்தில் தொடங்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இன்றும் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பின்பற்றப்பட்டு வருகின்றன, இந்து மத எதிர்ப்பு இயக்கங்கள் அதிகமாக உருவாகி உள்ளன.

பண்டைய தமிழ்வழிக் கல்வி ஒழிந்து தற்போதைய தமிழ்வழிக் கல்வி மாற்றம் கண்டுள்ளது. எழுத்துச் சீர்த்திருத் தம் நடைமுறைக்கு வந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறையைத் தடுக்க வன் கொடுமை (தடுப்பு) சட்டம் இயற்றப்பட்டுள்ளது, திருக்குற ளுக்கு, அயோத்திதாசர் எழுதிய உரையினை ஆய்வு செய்து திறனாய்வு கட்டுரைகள் பல வந்துவிட்டன. மேற்கண்டவை மூலம் அயோத்திதாசப் பண்டிதர் எந்தளவிற்கு சமூகப் பங்களிப்பினைச் செய்து நமக்கு முன்னோடியாக உள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம், குறிப்பாக  தமிழர் என்ற சொல்லின் மூலச்சொல திராவிடர் என்பதாகும் என்ற அவரது ஆய்வு இன்றைக்கு மிக முக்கியமானதாகும்.
வாழ்க அயோத்திதாசப் பண்டிதர் என்று சொல்லாமல அவரைப் பின்பற்றுவோம்.

நான் மேலே சொன்ன சில செய்திகள் மிக மிக சுருக்க மானதாகும்.

அயோத்திதாசப் பண்டிதர் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள ஆதார நூல்கள்

1. சாகித்ய அகாடாமிபிரசுரித்துள்ள க. அயோத்திதாச பண்டிதர் (கவுதம சன்னா எழுதியது).
2. ஞான.அலாய்சியஸ் வெளியிட்டுள்ள அயோத்திதாசரின் சிந்தனை தொகுதிகள்.
3. அம்பேத்கர் பிரியன் எழுதிய பண்டிதர் அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு’,
4. க. திருநாவுக்கரசு எழுதிய ‘திராவிட இயக்க வேர்கள் மற்றும் களத்தில் நின்ற காவலர்கள்.
அயோத்திதாசரின் பிறந்த நாள் 20.5.1845
-விடுதலை,19.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக