பக்கங்கள்

ஞாயிறு, 5 ஜூன், 2016

நாடார் மாநாடு


5.5.1929 குடிஅரசிலிருந்து..
நாடார் மகாஜன சங்க 13ஆவது மாநாடு தஞ்சை ஜில்லா பொறையாற்றில் வெகுவிமரிசையாக நடந்தேறியது. கொடி யேற்று விழா நடத்திய ஈ.வெ.ராமசாமி யாருடைய சொற் பொழிவானது நாட்டின் சமத்துவத்துக்கும் பொதுஜன சமூக ஒற்றுமைக்கும் அவசியமான அடிப்படையான காரியங்கள் தனி சமூக மகாநாடுகள் கூட்டுவதன் மூலமும் அவைகளை அமுலுக்கு கொண்டுவரும் வெற்றியின் மூல முமே முடியும் என்பதை நன்றாய் விளக்கிக் காட்டியதோடு பற்பல சமூகங்களில் செல்வாக்கில்லாதவர்களின் பொறாமையினால் ஏற்படும் உளறலுக்கும் ஒரு தக்க வாய்ப்பாக இருந்தது.
அன்றியும் நாடார் சமூக மாநாட்டுப் பிரமுகர்கள் மகா நாட்டுக் கொடியேற்று விழாவை ராமசாமியாரைக் கொண்டே நடத்தியாக வேண்டும் என்று தீர்மானித்ததும் அன்னவரை வற்புறுத்தியதும் சுதேசமித்திரன் தமிழ்நாடு முதலிய பார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பனீயப்பிரச்சார பத்திரிகளும் ராம சாமியார் மீது நாடார் சமூகத்தில் வெறுப்பேற்பட்டு விட்டதாக வும் அடி உதை முதலியவைகளுக்கு பயந்து ஓடிவிட்டார் என்றும் நாடார்களை இழிவாகப் பேசினார் என்றும் நாடார் சமூகம் குடி அரசை பஹிஷ்கரித்துவிட்டது என்றும் செய்து வந்த இழிவான விஷமப்பிரச்சாரத்திற்கு வட்டியுடன் பதில் சொன்னது போலாயிற்று.
மற்றும் சட்ட மெம்பர் திவான் பகதூர், கனம் எம். கிருஷ் ணநாயர் அவர்கள் மகாநாட்டுத் திறப்பு விழாவில் செய்த சொற்பொழிவானது நாடார் சமூகத்திற்கு மிக்க  பெரு மையை யும் மகிழ்ச்சியையும் தரத்தக்கதாயிருந்ததோடு அச்சமூகத்திற் குள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு தம்மாலான உதவி செய்வதாக வாக்களித்தது மிகவும் பாராட்டத் தக்கதாகும். மகாநாட்டுத் தலைவர் டபள்யூ.பி.ஏ.சௌந்தர பாண்டியன் அவர்களின் தலைமைப் பேருரையானது அச்சமூகத்திற்கே ஒரு புத்துயிரளிக்கத்தக்கதென்றே சொல்லலாம். அதாவது நாடார் சமூகத்தினராகிய நாம் பழைய பெருமைகளை நினைத்துக் கொண்டே இறுமாப்படைந்துவிடாமல் தற்காலம் நாம் இருக்கும் நிலையறிந்து அதிலிருந்து மீறி முயற்சிக்க வேண்டும் என்பதற்காகவும் சமூக மகிமைப்பணங்களை வீணாக கோவில் பூஜை, உற்சவம் ஆகிய காரியங்களில் வீணாக்காமல் கல்விக்கே செலழிக்க வேண்டும் வலியுறுத்திப் பேசினார்.
மற்றபடி மகாநாட்டுத் தீர்மானங்களும் வெகு முற்போக் கானதென்றே சொல்லவேண்டும். விதவா விவாகம் இந்த மகாநாட்டில்தான் முதல் முதல் ஆதரிக்கப்பட்டிருக்கின்றது.
தவிர அந்த சமூகம் வெகுகாலமாய் பழக்கத்தில் அனுசரித்து வருவதான பூணூல் தரிப்பது மதக்குறி இடுவது முதலிய வைதீக கர்மங்கள் என்பதைக் கண்டித்துச் செய்த தீர்மானம் மிகமிக போற்றத்தக்கதாகும். இவை எல்லாவற் றையும் விட சுயமரியாதை இயக்கத்தை நன்றாக விளக்கி அதன் தத்துவங்களை அப்படியே ஒப்புக் கொண்டது. அதாவது மனிதர்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்பதும் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதும் இயற்கைக்கும் நியாயத்திற்கும், ஒத்தபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கொண்ட சுயமரியாதை இயக்கத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது என்பதாகும்.
மற்றும் வாலிப மகாநாட்டில் ஈ.வெ.ராமசாமியார் தலைமை வகித்து நடத்திய சொற்பொழிவும் அதில் செய்த தீர்மானங் களும் ஆலயப் பிரவேச இயக்கத்திற்கு பண உதவியும் ஜெயில் போக நேரிட்டால் தொண்டர்கள் உதவியும் செய்வ தாக வாக்களித்தது முதலிய தீர்மானங்கள் போற்றற்குரி யவையாகும். இந்தப்படியே ஒவ்வொரு சமூகமும் முதலில் தனித் தனியாக கூடி இம்மாதிரி தீர்மானங்கள் நிறைவேற்ற அவைகளை அமுலுக்குக் கொண்டுவந்து விட்டால் வெகு சீக்கிரத்தில் எல்லாசமூகமும் ஒற்றுமை அடைந்து ஒன்று பட அனுகூலமாயிருக்குமென்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்து மதம் யாருக்கு சொந்த மதம்?
1929 குடிஅரசிலிருந்து., 
பண்டிதப் பெரு மக்கள் இந்து மதம் யாருக்கு சொந்த மெனக்கண்டும் கண் மூடித்தனமாகவோ அல்லது பண்டிதத் தன்மைக் குப்பங்கம் வருமென்னும் நோக்கங் கொண்டோ, பாமர மக்களை பாழ்படுத்துகின்றனர். சரித்திர சம்பந்தப்பட்ட வரையிலும் ஆரியராலேயே இந்து மதம் ஸ்தாபகமானதெனக் காணலாம். ஆரியரின் குடியேற்றத்தின் பின்னர் இந்து மதமுண்டாயிற்றென்பதில் மயக்கமில்லை. இது நமது பண்டிதர்களும் அறிந்த இரகசியமே. ஆரியர்கள் தங்கள் கபட நாடகத்தால் தமிழ் மக்களை வயப்படுத்தி தமிழ் நாட்டிலிருந்த சில வழிபாடுகளை தமது வழி பாட்டுடன் ஜோடித்து  மக்களை மயக்கி விட்டனர். நாம் எவ்வளவு தூரம் துருவிச் சென்றாலும் இந்துமதம் தமிழ் மக்களாகிய நமக்கு சொந்தமன்று என்ற முடிவுக்கே வருகிறோம். சொந்தமற்றதை சொந்தமாகப் பாவிப் பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும். ஆரியரால் உண்டாக்கப் பட்ட நான்கு வருணங்களையும் எண்ணிலடங்கா சாதி களையும் உடைய இந்து மதத்திற்கும் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாத பூர்வத் தமிழ் மக்க ளாகிய ஆதிதிராவிட ரெனும் சமூகத்தினருக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்! இமயகிரிக்கும் குண்டுமணிக்கு முள்ள வித்தியாசத்தை ஒக்கும். இந்து மதமல்லவா பஞ்சமரென்று சண்டாளரெனவும், தீண்டப்படாதவரெனவும், தெருவில் நடக்கப் படாதவரெனவும் இன்னும் மிருகத்திலும் கேவலமாக மதிக்கச் செய்தது. அதனையல்லவா சுயமரியாதை இயக்கம் கண்டிப்பது. இதை அறியாமல்  சகஜாந்தசுவாமி சுயமரியாதைச் சங்கத்திற்கு விரோதமாக போலி ஆஸ்திகர் சங்கத்தில் இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்கி அதை தாங்கிப் பேச தலைமை வகித்தது. நன்றியை கொன்றதற்கு ஒப்பாகும். ஆதிதிராவிட ரென்னும் பூர்வத் தமிழ்பெருமக்கள் இந்துமதத்தை விடும் பரியந்தம் பஞ்சமர் தீண்டாதவர் என்னும் பட்டம் மாறவே மாறாது என்றும் தீண்டாதவர்களாகவும் தெருவில் நடக்கக் கூடாதவர்களாகவும் கேவலமாகத்தான் வாழவேண்டும்.
-விடுதலை,26.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக