பக்கங்கள்

புதன், 6 பிப்ரவரி, 2019

டில்லி - சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரின் எழுச்சியுரை

இடஒதுக்கீடு கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கே! முதலில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது மனுதர்மமே!

உயர்ஜாதியினருக்காக உருவாக்கப்பட்ட


10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லத்தக்கதல்ல''


டில்லி - சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரின் எழுச்சியுரை




புதுடில்லி, பிப்.6 டில்லியில் 5.2.2019 அன்று இடஒதுக்கீடு வழிமுறை - முன்னுள்ள அறை கூவல்கள்'' (Reservation Policy - Challenges Ahead)  எனும் தலைப்பிலான சமூக நீதிக் கருத்தரங்கினை சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றம் (Lawyer’s Forum for Social Justice) ஏற்பாடு செய்திருந்தது.

டில்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள அரசமைப்புச் சட்ட மன்றத்தில், துணை சபாநாயகர் அரங்கில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்க நிகழ்விற்கு சமூகநீதிக்கான வழக் குரைஞர்கள் மன்றத்தின் நிர்வாக அறக்கட்டளையாளரும், உச்சநீதிமன்ற முதுநிலை வழக்குரைஞருமான சுப்பாராவ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் சமூகநீதிக்கான அறைகூவல்கள் பற்றியும், எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், ஆழமான கருத்துச் செறிவுடன் கூடிய உரையினை ஆற்றினார்.

தலைமை தாங்கிய முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ் உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி வழங்குவதில் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அக்கறை அற்ற தன்மை பற்றிய தனது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்


நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சில், சமூக நீதித் தத்துவத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராசர் ஆற்றிய பங்களிப்பின் சிறப்புப்பற்றி  குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்திட தந்தைபெரியார் காரணமாக அமைந்தார். இன்று 'பொருளாதார அடிப்படையில்' அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்புக்குப் புறம்பாக உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (?) 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தினை, ஆணையினை எதிர்த்து திமுக சார்பில் முதன்முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.

து.ராஜா எம்.பி., (சி.பி.அய்.)


நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா பேசும்பொழுது, இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை, கோரிப் பெறவேண்டியதில்லை என எழுச்சியுடன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங் கோவன் உரையாற்றும்பொழுது பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றார். மேலும் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 8 லட்சம் என்பது பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெற பாதகமாகவும், உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியான அணுகு முறைப்பற்றிக் கூறினார்.

தமிழர் தலைவர் உரை




தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமைக்குப் 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி பெற வேண்டியிருந்தது. ஆனால் இன்று உயர்ஜாதியினர் இடஒதுக்கீட்டிற்கு வலுவில்லாத சட்டத்திருத்தத்தினை ஒரு வாரக் காலத்தில் நடைமுறைப்படுத்தியது எப்படி? அடக்குமுறை, ஆதிக்கம் நிறைந்த அரசியல் ஆட்சியாளரான மோடியின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையினையே இது வெளிப்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீட்டைத் தொடங்கியது இன்றைய காலத்தில் அல்ல; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வர்ண அடிப்படையில், ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது மனு - மனுஸ்மிருதி. அந்தப் பாகுபாட்டைக் களைந்திட இன்று கோரப்படுவது நேர்மறை இடஒதுக்கீடு - சரி செய்ய இட ஒதுக்கீடு தொடங்கியது. பாகுபாட்டைத் தொடங்கிய ஆதிக்க மனநிலை இன்றும் ஆட்சியாளரிடம் தொடர்கிறது என்பதற்கு அடையாளம்தான்  103 ஆம் அரசமைப்புச் சட்ட திருத்தமாகும் (2019). பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினருக்குக் கொண்டு வரும் இந்த சட்டத்தை நீதிமன்றத்திலும் சந்திப்போம்; வீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்துப் போராடுவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் கூறினார்.

கருத்தரங்க நிகழ்ச்சியினை கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) ஒருங்கிணைத்துத் தொகுத்தளித்தார்.

நிறைவாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 6.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக