பக்கங்கள்

வியாழன், 14 பிப்ரவரி, 2019

இட ஒதுக்கீட்டுக்கு பெரியார் தான் காரணம்!

கட்சி உறுப்பினர்களுக்காக கட்டுரை எழுதாமல் இளைய தலைமுறைக்காக உண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே !  பகுதி -1
................................................................

இட ஒதுக்கீட்டுக்கு பெரியார் தான் காரணமா என்று தலைப்பிட்டு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் .  அந்தக் கட்டுரையில் " பிராமணரல்லாத மண்ணின் மக்களின் கோரிக்கையை வெள்ளை அதிகாரிகள் பரிவுடன் பார்த்தனர்" என்று நம்மைச் சுரண்ட வந்த ஆங்கிலேயரை உயர்த்தியும் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரை விலக்கியும்  இந்த கட்டுரையை முன்வைக்கிறார் .

நம்மைச் சுரண்ட வந்த வெள்ளை அதிகாரிகள் மீது இவ்வளவு கரிசனம் தோழர் பெ.ம வுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

ஏகாதிபத்தியம் தன்னுடைய சுரண்டல் நலன் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இப்படியான சலுகைகளை  வழங்கவே செய்யும்.

1857 சிப்பாய் புரட்சிக்குப் பின்னர் இந்தியாவிலுள்ள அதிகாரங்களில் இந்தியாவிலுள்ள அனைத்து சமூகத்தவர் அனைவரையும்  பிரதிநிதித்துவப் படுத்துவதன் மூலமே தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று ஆங்கிலேய அரசு முடிவு செய்தது .இதனடிப்படையிலேயே அதிகாரத்தைப் பரவலாக்கியது.    இது சுரண்டல் நலன் கொண்டதே தவிர மக்கள் நலனில் அக்கறையோடு செய்வதில்லை இதை இவ்வளவு வியந்து பாராட்டத் தேவையில்லை.

உண்மையில் ஆங்கிலேயர்கள் இப்படியான அறிவிப்பை கொடுப்பதற்கு மகாத்மா ஜோதிராவ் புலே , அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனிவாசனார் நீதிக்கட்சி தலைவர்கள்  மிக முக்கியமான பங்கை ஆற்றினார்கள் .

1891 ஆம் ஆண்டில் "விகிதாச்சார உரிமை" என்ற சமூகநீதிக் கருத்தை  பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் முதலில் முன்வைத்தார். 1891 டிசம்பர் 1ஆம் தேதி உதகமண்டலத்தில், அயோத்திதாசர் பண்டிதர் கூட்டிய திராவிட மகாஜன மாநாட்டில் போடப்பட்ட முதல் தீர்மானமே, கிராம அலுவலர் உட்படப் பல அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதன் மூலம், அவர்களின் பொருளாதார வாழ்வை உயர்த்துமாறு கோருகிற இடஒதுக்கீட்டுத் தீர்மானமாகும். அதன் அடிப்படையில் தொடர்ந்துப் போராடி, இரண்டு இடஒதுக்கீட்டு ஆணைகளையும் பண்டிதர் அயோத்திதாசர் பெற்றார் என்பது தான் வரலாறு .

ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியாவெங்கும் போராட்டம் நடைபெற்ற காலங்களில் அதை மட்டுப்படுத்துவதற்கு இதைவிட்டால் ஆங்கிலேய அரசுக்கு வேறு வழியில்லை இந்தப் பின்னணியை ஆங்கிலேய அதிகாரிகள் பரிவுடன் செய்ததாக  தோழர் மணியரசன் அவர்களால் எப்படித்தான் எழுத முடிகிறதோ.
சரி விசயத்திற்கு வருவோம்.

இந்தக் கட்டுரை வாயிலாக :
1. பெரியாருக்கு தாய் கட்சி நீதிக் கட்சி யல்ல காங்கிரஸ் கட்சிதான்.
2. காங்கிரஸில் சேர்ந்த பெரியார்  காந்தியாகவே  வாழ்ந்தார்
3. ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி இட ஒதுக்கீட்டு ஆணை போட்டதே தவிர அதைச் செயல்படுத்தவில்லை
3. பெரியாரிய திராவிடவாதிகள்   இட ஒதுக்கீட்டு விசயத்தில் காங்கிரஸ்காரரான  முத்தையா அவர்கள் பங்களிப்பை  மறைத்து விட்டார்கள்  
5. முதல் சட்டத் திருத்தம் பெரியாரால் ஏற்படவில்லை
6. பெரியார் பிறக்காத போது நடக்காத நிகழ்வுகளுக்கு பெரியாரை காரணமாக்கி உயர்த்தக் கூடாது
- இவை தான் கட்டுரையின் சாராம்சம். இது குறித்து ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்

எழுத்தில் உண்மையை எழுதுதல் என்பது ஒருவகை, எழுத்தில்  உண்மையைத் திரித்து பொய்யாக எழுதுவது இன்னொரு வகை இதில் தோழர்.பெ.ம அவர்கள் புதுவகை. அதாவது உண்மையை மறைத்து பாதி உண்மையை எழுதுவது.

எடுத்துக்காட்டாக  சங்கர் என்பவன் சரவணன் என்பவனை அடித்ததால் சரவணன்  சங்கரை அடித்தான் இது முழு செய்தி. இதில் "சங்கர் சரவணனை அடித்ததால் " என்ற பாதி உண்மையை மறைத்து விட்டு சரவணன்  சங்கரை  அடித்தான் என்று மட்டும் எழுதி சங்கர் செய்த செயலை மறைத்து சரவணனை மட்டும் குற்றவாளியாக்கி விடுவது. இப்படி ஒரு புது வகையைத் தான்  இப்பொழுது தோழர்.பெ.ம அவர்கள் பெரியார் விசயத்தில் கையாண்டிருக்கிறார்.

// தந்தை பெரியார் அவர்களுக்கு நீதிக்கட்சி தாய்க் கட்சி அல்ல  காங்கிரசுதான் //  திராவிடத்தின் தந்தை அந்த தாய் கட்சியிலும் சேராமல் அவரது மொழியில் பார்ப்பன-பனியா கட்சியான காங்கிரஸில் சேர்ந்தார் //  ,   பெரியார் காங்கிரசில் சேர்ந்து மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். காந்தியராகவும் இருந்தார் //    // " 1925 இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்படாததால் அவர் காங்கிரசை விட்டு வெளியேறினார்" //  இது தான் தோழர் பெ.ம வின் பெரியாரைப் பற்றிய கருத்து

  வரலாறு தெரிந்த யாரும் பெரியாருக்கு நீதிக்கட்சிதான் தாய் கட்சி என்று எழுத மாட்டார்கள் , பெரியார் தன்னுடைய அரசியல் தொடக்கத்தை காங்கிரசிலிருந்து தொடங்கியதா கத்தான் எழுதுகிறார்கள் , பேசுகிறார்கள். அது கூட பகுதி உண்மை தான்.

பெரியார் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை காங்கிரசிலிருந்து கூட தொடங்கவில்லை அதற்கு முன்பாக அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய  ஹோம் ரூல் இயக்கத்திலிருந்து தொடங்குகிறார் . தீண்டாமை , மூடப்பழக்கவழக்கங்கள் பெண்ணுரிமை  போன்றவை குறித்து  அன்றைய கட்டத்தில்  ஹோம் ரூல்  இயக்கம்  பேசி வந்ததால் பெரியார் அதனை ஆதரித்தார். அதற்குப் பின்பாக  அவ்வியக்கத்தின்  கொள்கைகள் பெரியாருக்கு உடன்பாடு இல்லாமல் வெளியேறுகிறார்.

அதற்கு அடுத்தபடியாக 1917 இல் பார்ப்பனரல்லாதாருக்கு சட்டசபைகளிலும் உத்தியோகத்திலும் இட ஒதுக்கீட்டை கோரும்  காங்கிரஸ் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாதோர் இணைந்து உருவாக்கிய சென்னை மாகாண சங்கத்தில் போய் இணைகிறார்  .( நீதிக் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டது) . இதன் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து பெரியார் பணியாற்றியுள்ளார் .

அப்படித்தான் இட ஒதுக்கீட்டுக்கான பெரியாரின் குரல் அரசியல் களத்தில் தொடங்குகிறது இப்படித் தொடங்கிய பெரியாரின் குரலை மறைத்துவிட்டுத் தான் காங்கிரசில்  கதராடை அணிந்தார் , கள்ளுக்கடை மறியல் செய்தார் என்று மொன்னைப்படுத்தி தோழர். பெ.ம எழுதுகிறார்.

அதற்கு அடுத்தபடியாக 1919 நவம்பர் இல் தொடங்கப்பட்ட தேசியவாதிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து பணியாற்றுகிறார் இந்த சங்கமும் "  சட்டசபையில் 50 விழுக்காடு பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்"  என்ற கோரிக்கையை முன் வைத்து இருந்தது. இது சேலம் விஜயராகவாச்சாரியார் மற்றும் கோபாலாச்சாரியார் ஆகியோரை முறையே தலைவராகவும் பொதுச் செயலராகவும் கொண்டு செயல்பட்டது .

இங்கு தான் ராஜாஜிக்கும் பெரியாருக்கும் அரசியல் ரீதியான நெருக்கமான உறவு ஏற்படுகிறது

ராஜாஜி சேலம் வரதராஜுலு இருவரின் வற்புறுத்தலின் பேரில் 1920 பெரியார் காங்கிரசில் சேருகிறார் பெரியார் 1920 , 1923 , 1924 லில் ஆகிய ஆண்டுகளில் காங்கிரசின் தமிழ் மாகாணத் தலைவராகவும் 1921 , 1922 , 1925 ஆறு ஆண்டுகளில் செயலாளராகவும் இருந்து 1925 மாநாடு காஞ்சிபுரத்தில்  நடக்கும்போது மாநாட்டில் இருந்து வெளியேறி காங்கிரசை ஒழித்துக்கட்டுவேன் என்று சூளுரைக்கிறார்.

காங்கிரசின் தலைமையில் இருந்த ஆறு ஆண்டுகளும் வகுப்பு வாரி  இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ச்சியாக தீர்மானத்தை முன்மொழிந்து போராடி வந்துள்ளார், பார்ப்பனரல்லாத தலைவர்களை ஒன்று திரட்டினார்

1920ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்து  பெரும்பான்மையை பெற்று நிறைவேற்றியும் தலைவர் சீனிவாச அய்யங்கார் அனுமதிக்க மறுத்துவிட்டார் .

1921 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாகாண மாநாட்டில் இதைக் கொள்கையாக வைத்துக் கொள்ளலாம் தீர்மானம் வேண்டாம் என்று ராஜகோபாலாச்சாரியார்  தந்திரமாகத்  தடுத்துவிட்டார்.

1922 ஆம் ஆண்டு திருப்பூர்  மாகாண மாநாட்டில் கொண்டுவர முயன்று விவாதத்தால் கலவரமாக மாற்ற முயன்ற போது  மனுதர்ம சாஸ்திரத்தையும் ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என பேசினார்.

1923 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டிலும் தீர்மானத்தை முன்மொழிந்த போது கலவரம் மூளுவதாக அறிவித்து  டாக்டர் நாயுடுவும் , ஜார்ஜ் ஜோசப்பும் தலையிட்டு சமாதானம் செய்து விட்டனர்.

1924 இல் திருவண்ணாமலை  மாநில மாநாட்டுக்குத் தலைவர் பெரியார் தான் . வகுப்பு வாரி உரிமைத் தீர்மானத்தை பெரியார் கொண்டு வந்த போது எஸ். சீனிவாச அய்யங்கார் ஆட்களைத் திரட்டி  தடுத்து விட்டார். 

1925-இல் காஞ்சிபுரத்தில் மாநில மாநாடு அந்த மாநாட்டுக்கு   திரு.வி.க. தலைமை தாங்கினார்.    " தேசிய முன்னேற்றத்துக்கு இந்து சமூகத்தாருக்குள் பற்பல
சாதியாருக்குள் பரஸ்பர நம்பிக்கையும் துவேஷமின்மையும்
ஏற்பட வேண்டுமாகையால் ராஜ்ய சபைகளிலும் பொது
ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணர் அல்லாதார்,
தீண்டாதார் எனக் கருதப்படும் இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடுக்கு ஏற்ப தங்கள் தங்கள் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும்" என்று தீர்மானம் கொண்டு வந்தார் பெரியார். அதைத் தலைவர் நிராகரித்தார். இதனால் ஆத்திரங் கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார்.

வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமின்றி தீண்டாமைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

திருவிதாங்கூர் வைக்கம் போராட்டமாக இருக்கட்டும் சேரன்மாதேவி நடந்த குருகுலம் போராட்டமாக இருக்கட்டும் தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களும் பங்கேற்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதாவை காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்கள் எதிர்த்தபோதும் காங்கிரசில் இருந்த பெரியார் அதை ஆதரித்தார்.

இப்படியாக தன்னுடைய அரசியல் தொடக்கம் தொடங்கி காங்கிரசிலிருந்து வெளியேறும் வரை தீண்டாமைக்கு எதிராகவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் எதிராகவும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் பணியாற்றிய தந்தை பெரியார் அவர்களை கையில் பகவத் கீதையோடு வாயில் சிறீராம் உச்சரிப் போடு வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்ட காந்தியைப் போல வாழ்ந்தது போல் "காந்தியராகவே வாழ்ந்தார் "  என்று சுட்டிக் காட்டுவது எந்த வகையில் நேர்மை தோழர்.பெ.ம அவர்களே
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக