பக்கங்கள்

வியாழன், 19 மார்ச், 2020

சமூகநீதி மீது மற்றொரு பேரிடி!

மாணவர்கள் ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கும் நுழைவுத் தேர்வு தேவையாம்!

புதுடில்லி, மார்ச் 15 தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயில நிதி உதவி பெற்று வந்த ‘ஸ்காலர்ஷிப்' திட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாற்றிட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் குறைந்துகொண்டே வருவதற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெரும் எதிர்ப்பினைக் காட்டிவரும் வேளையில், மேலும் நிதி உதவி கிடைக்கக்கூடிய வாய்ப் பினைக் குறைக்கின்ற வகையிலே, உயர்ஜாதி யினரும் ‘ஸ்காலர்ஷிப்' பெறுகின்ற வகையில் திட்டம் மாற்றப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் இந்த திட்டத்திற் கான நிதி ஒதுக்கீட்டை இதுநாள் வரை மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்து வந்தன. மத்திய அரசு அளித்துவந்த நிதி அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, மாநில அரசின் நிதிப் பளு அதிகமாகிக் கொண்டுடே வருகிறது. நிதிப் பளு என்று காரணங்கூறி, மாநில அரசுகள் திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர் எண் ணிக்கையையும், பெறும் நிதி அளவையும் குறைத்துக்கொண்டு வரும் சூழல்களும் நிலவி வருகின்றன.

நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்ட மத்திய அரசு, ‘‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழிபறித்த கதையாக'', நிதி உதவித் திட்டத்தை ‘‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவித் திட்டம்'' (PM - YASASVI) என்பதாக மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், உயர்ஜாதி மாணவர்களும் ‘ஸ்காலர்ஷிப்' பெற்றிட முடியும் என்பதாக அறிவிப்புகள் வந்துள்ளன.

ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத்

தகுதி தேர்வாம்!

நிதி உதவி என்பதே ஒடுக்கப்பட்ட மாண வர்களுக்கு - ஆண்டாண்டு காலம் கல்வி மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு என்பதுதான் திட்டத்தின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்தில்  பயன்பெறும் மாணவர்களின் குடும்ப வருமானத்தைப் பொறுத்த அளவில் வரம்பு விதிக்கப்பட்டு (ஆண்டு வருமானம் முறையே ரூ.1.5 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சம் வரம்பு)  ‘ஸ்கலர்ஷிப்' வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை அடியோடு நீக்கப்பட்டு, ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கு தகுதித் தேர்வு என்ற பெயரில் ‘நுழைவுத் தேர்வு' நடத்தப்படுமாம். உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் நுழைவுத் தேர்வு எழுதிடலாமாம். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே ‘ஸ்காலர்ஷிப்' கிடைத்திடும் வகையில் கல்வி நிதி உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இதுகாறும் வழங்கப்பட்ட நிதி உதவியானது - பராமரிப்புச் செலவு, திருப்பி அளிக்கப்படாத கட்டாய கல்விக் கட்டணம்,  அஞ்சல் வழிக் கல்வி பெறுவதற்கான புத்தகச் செலவு என பல வகையிலும் பயன் அளித்தது. இதன்மூலம் தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்று பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர் அதிகபட்சமாக ஓர் ஆண்டுக்கு ரூ.87,000/- என்ற அளவில் கல்வி நிதி உதவி பெற முடிந்தது.

இனிவர இருக்கின்ற உயர்ஜாதி மாணவர் களுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும் திட்டத்தில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.30,000/- மட்டுமே வழங்கிடும் வகையில், நிதி உதவி வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய திட்டத்தின்கீழ் மத்திய அரசு, மாநில அரசு ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிதி ஒதுக்கீடு அளவுபற்றிய குறிப்பு எதுவும் வெளிவரவில்லை. கடந்த கால நிதி ஒதுக் கீட்டால் மாநிலங்களின் நிதிப்பளு அதிகரித்து பாதிக்கப்படக் கூடிய சூழல்கள்தான் உரு வாகின. சில மாநில அரசுகள் சமூகநீதி அடிப் படையில் நிதிப் பளு கூடினாலும், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பலன் பெறுகிறார்கள். அவர்களின் உயர்வு கருதி செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களும் இனி முடக்கப்படும்; முடிவு பெறும்.

உயர்கல்வி பெறுவதற்கு, உயர்ஜாதி மாண வர்களும் நிதி உதவி பெறுவதற்கு உருவாக் கப்பட்டுள்ள பா.ஜ. அரசின் புதிய கல்வி நிதித்திட்டம் மாநில அரசின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில்தான் அமையும் என்பது உறுதியாகத் தெரிகிறது என சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள், அமைப்புகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

புதிய கல்விக் கொள்கை, உயர்ஜாதியி னருக்கும் கல்வியில், வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என இதுவரை அரசமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி உரிமைகளை படிப்படியாகப் பறித்துக்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவி' திட்டம், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பினை உருவாக்கிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

- விடுதலை நாளேடு 15 3 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக