பக்கங்கள்

சனி, 24 டிசம்பர், 2022

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேறியது

வியாழன், 22 டிசம்பர், 2022

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஜார்க்கண்ட் மாநில அரசின் மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர்!

வெள்ளி, 9 டிசம்பர், 2022

ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்த வேண்டும்: மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன் வலியுறுத்தல்


புதுடில்லி,டிச.9- நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது: 

''ஆர்.என். பிரசாத் தலைமையிலான வல்லுநர் குழு 10.3.1993  அன்று சமூக ரீதியாக முன்னேறிய நபர்களை தவிர்ப்பதற்காக கிரீமிலேயர் முறையை கண்டறிந்தது. ஓபிசி இடஒதுக்கீடுகளில் இருந்து கிரீமிலேயர் வகுப்பினரை விலக்குவதற்கான அறிக்கையினை வகைப்படுத்தி அக்குழு சமர்ப் பித்தது. இது செப்டம்பர் 8, 1993 இல் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கும், கிரீமிலேயரை விலக்குவதற்கும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தொடக்கத்தில், அதாவது 1993 ஆம் ஆண் டில் வருமான வரம்பானது ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது உயர்த்தப்பட் டது. கடைசியாக செப்டம்பர் 2017 இல் ரூ.6 லட்சத்தி லிருந்து ரூ.8 லட்சமாக திருத்தப்பட்டது.

இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான உச்சவரம்பு மறுபரிசீலனை செய்யப்பட வில்லை. பணவீக்கம், பணமதிப்பு, நேர மாற்றங் களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமத்துவம் அடைய முடியவில்லை. ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பான ரூ.8 லட்சத்தைத் திருத்துவதற்கான காலம் ஏற்கனவே 1.9.2020 இல் முடிந்துவிட்டது. எனவே, வருமான உச்சவரம்பை ரூ.15 லட்சமாக திருத்துவது தற்போதைய தேவையாக உள்ளது. அதே போன்று கிரீமிலேயரை நிர்ணயிக்கும் காரணிகள் திருத்தப்பட வேண்டும். எனவே, ஓபிசி வகுப்பினரின் வருமான உச்சவரம்பை திருத்து வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்,’’ என கோரிக்கை வைத்துள்ளார்.

வியாழன், 8 டிசம்பர், 2022

அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்! 596 பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே!

திங்கள், 24 அக்டோபர், 2022

சமூகநீதி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

சமூகநீதி : சமூகநீதி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

டிசம்பர் 16-31,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

1921 ஆம் ஆண்டு PUBLIC ORDINARY SERVICE G.O. NO. 613 Dated 16/9/1921) 12

1) பார்ப்பனர் அல்லாதார் 5 (44%)

2) பார்ப்பனர்கள் 2 (16%)

3) முஸ்லிம்கள் 2 (16%)

4) ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்துவர்கள் 2 (16%)

5) தாழ்த்தப்பட்டவர்கள் 1 (12%)

மீண்டும் 15.2.1922 மற்றும் 2.2.1924 ஆகிய நாள்களில் இதே ஆணை தொடர்ந்து வெளியிடப்பட்டது. (பானகல் அரசர் என்ற இராமராய நிங்கர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தார்). 1924இல் சென்னை பல்கலைக்கழக மசோதாவைக் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று பார்ப்பனர் போட்டிருந்த சூழ்ச்சியை நொறுக்கினார்.

1928ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி.சுப்பராயன் தலைமையில் அமைந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் அந்த வகுப்புரிமை ஆணை COMMUNAL G.O முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

1948ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சராக இருந்த போது பழைய ஆணையைக் கொஞ்சம் திருத்தி அமைத்தார். பெற்ற இடங்கள் 14 என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பார்ப்பனர் அல்லாதாருக்கு 6 இடங்கள் (43%)

பிற்படுத்தப்பட்டோருக்கு 2 இடங்கள் (44%)

தாழ்த்தப்பட்டோருக்கு 2 இடங்கள் (14%)

ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓரிடம் (7%)

முஸ்லிம்களுக்கு ஓரிடம் (7%)

பார்ப்பனர்களுக்கு 2 இடம் (14%)

இவர்களைத் தெரிந்து கொள்வீர்!

மண்டல் குழுப் பரிந்துரை வெளியாவதற்கு முன், அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை எப்படியோ அறிந்து கொண்ட நிலையில்‘BURRY THE MANDAL REPORT’ என்று “இண்டியன் எக்ஸ்பிரஸ்’’ எழுதியது.

அன்றைய திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம்  ‘HURRY THE MANDAL REPORT’ என்று கூறினாரே பார்க்கலாம்!

மண்டல் குழு மீதான 9 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் என்ன கூறினார்? இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டினால், அது ஜாதியத்துக்கு வழிவகுக்கும் என்றார்.

(49 சதவிகிதம் கொடுத்தால் ஜாதியத்தை வளர்க்காதோ?)

இன்று ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோர்:

35க்கு 24 அமைச்சகங்களில் அதிகாரிகள்

‘ஏ’ பிரிவு

(Group – A) –  17%

பி.பிரிவு – 14%

சி.பிரிவு – 11%

டி,பிரிவு – 10%

ஒன்றிய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோர்:

37க்கு 25 துறைகளில்

‘ஏ’ பிரிவு – 14%

‘பி’ பிரிவு – 15%

‘சி’ பிரிவு – 17%

‘டி’ பிரிவு – 18%

குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் அலுவலகங்களில் 27% அமல்படுத்தப்-பட-வில்லை

(10.12.2017: ‘தி.இந்து’)

தகுதி – திறமை

சிறீ ஹரி கோட்டாவும் வாணியம்பாடியும்

இடஒதுக்கீடுதான் தகுதி திறமை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ற பல்லவியைப் பாடுவது பார்ப்பனர்களின் பிறவிக் குணம்.

11.2.1981 அன்று வாணியம்பாடியில் இரயில் விபத்தில் மாண்டவர்கள் 200 பேர்களுக்கு மேல். அப்பொழுது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு எழுதியது என்ன தெரியுமா?-

“VANIYAMBADI SMASH LINKED TO RESERVATION POLICY”

தாழ்த்தப்பட்டோருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று எழுதியது.

சிறீஹரிகோட்டா இஸ்ரோவில் ஜி.எஸ்.எல்.வி _ எஃப் 2 ராக்கெட் 15.7.2006 மாலை 5:37 மணிக்கு ஏவப்பட்டது. 90 வினாடிகளில் ராக்கெட் கடலில் விழுந்தது. அதற்கான செலவு ரூ. 256 கோடி.

தகுதி – திறமைக்குப் பெயர் போனவர்கள் தானே அந்த ராக்கெட்டை ஏவினர்! அந்தத் துறையில் தான் இடஒதுக்கீடு கிடையாதே! அப்படி இருக்கும்போது ஏன் தோல்வி? – ரூ. 256 கோடி நட்டம்! இதுபற்றி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’கள் ஒரு வரி கண்டித்து எழுதாதது ஏன்? இதற்கு பெயர்தான் பார்ப்பனத்தன்மை என்பது.

இரயில்வே அமைச்சராக, துணைப் பிரதமராகவெல்லாம் இருந்த பாபு ஜெகஜீவன்ராம்“CASTE CHALLENGE IN INDIA”

என்ற ஒரு நூலை எழுதினார். அதில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“WHEN A RAILWAY ACCIDENT TOOK PLACE, IT WAS A FASHION TO BLAME THE PROMOTED SCHEDULED CASTES AND SCHEDULED TRIBES EMPLOYEES OR OFFICIALS”.

“எப்பொழுதாவது இரயில் விபத்து ஏற்பட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டுவது ஒரு வகை நாகரிகமாகப் போய்விட்டது என்று பாபு ஜெகஜீவன்ராம் எழுதியுள்ளார்.’’ஸீ

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு! - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

தமிழர் தலைவர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

டிசம்பர் 1-15,2021

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு!

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆண்டாண்டு காலமாக வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்பட்ட மக்களை, கை தூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு என்பது.

இடஒதுக்கீடுக்கு என்று ஒரு வரலாறு உண்டு, மகாராட்டிரத்தில் ஜோதிபா பூலே, சாகுமகராஜ் என்று தொடங்குகிறது.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்று கேட்கின்றனர். ஆம், ஜாதி இருக்கும் வரை _ ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்கப்பட முடியாததுதான். அந்த ஜாதிதான் கல்வி உரிமையை மறுத்தது _ இதுவும் கூட ஒரு தடுப்பூசி அணுகுமுறைதான்.

ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர், ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரட்டுமே!

ஒரே தேசம் _ ஒரே மொழி _ ஒரே கலாச்சாரம் என்பவர்கள், எல்லோரும் ஒரே ஜாதி _ ஒரே நிலை _ சரி சமம் என்று சட்டம் செய்யட்டுமே! அப்படி சட்டம் செய்தால், செயல்பாடுக்கு வந்தால் இழப்புகள் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூற நாங்கள் தயார்தான் என்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

ஏதோ இப்போதல்ல _ இதற்கு முன்பே கூட சொல்லித்தான் வருகிறார். ஆனாலும் எதிர்த் தரப்பிலிருந்து பதிலைத்தான் காணோம்!

இன்றைய தினம் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கோட்பாடாக இருக்கக்கூடிய சமூக நீதியை, இடஒதுக்கீட்டை, அதன் நோக்கத்தை அதற்கான அடிப்படை வேரினையே வெட்டும் வேலையில் பார்ப்பன _ ஆதிக்கக் கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க. அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்படி செய்து கொண்டு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையா?

இடஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸின் ஏடான ‘பஞ்சான்யா’வுக்கு ‘அவுட்லுக்’ (20.9.2015) ஏட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அளித்த பேட்டியில் கூறியது என்ன?

“இந்தியா போன்ற மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும் போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால், இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்கிற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடாகும். கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்கிற பெயரில் கலாச்சாரக் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் பெரும்பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தி விடும்.

இந்த நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார். ஆகவே, வளர்ச்சிக்காக தியாகம் செய்யத் துணிச்சலும் இருக்கும் மக்களை அரசு வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான், இதுபோன்ற இடஒதுக்கீட்டுத் தேவைக்காகப் போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை உள்ள இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். அரசு குழு ஒன்றையமைத்து இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் கூறிய இந்தக் கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் (22.9.2015) வெளியிட்ட அறிக்கை என்னவோ அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

ஆசிரியர் சொன்னது என்ன?

“ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து வருகிற ஆபத்திற்கு ஒரு முன்னோட்டமாகும். பின்னாளில் அவர்கள் சிந்திப்பது என்ன வென்றால், இப்பொழுது இருக்கின்ற அடிப்படை அளவுகோலை அகற்றிவிட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் _ இவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படை என்கிற முறையில் இட ஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு அந்தக் கமிட்டி அமைக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது.

இந்தத் துறையில் மட்டுமல்ல, கல்வித்துறையிலும் கூட தனியாக ஒரு வாரியம் அமைத்து, கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டு ஆழம் பார்க்கிறார்கள்.

எனவே, இந்தக் காலகட்டத்தில், காலம் காலமாக நம்முடைய நாட்டில் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும், திராவிடர் கழக இயக்கமும் மிகப்பெரிய அளவில் போராடி வெற்றி கண்ட, பாதுகாத்த இடஒதுக்கீடு, சமூக நீதி என்பதற்குப் பெரிய அறைகூவல் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’’ என்று ஆறு ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொலை நோக்கோடு சொன்னதுதானே இப்பொழுது நடந்திருக்கிறது?

இடஒதுக்கீடு – உள் ஒதுக்கீட்டின் பலன் என்ன?

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு (29.5.2009) உள் ஒதுக்கீடு வழங்கிய அதன் பலன் என்ன தெரியுமா?

இந்த உள்ஒதுக்கீடு வருவதற்கு முன் அருந்ததியர்த் தோழர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் வெறும் 13;  2009இல் கிடைத்த இடங்களோ 29. 2009_2010இல் கிடைத்த இடங்களோ 56. நான்கரை மடங்கு அதிகம். அதே போல பொறியியல் கல்லூரிகளில் 2007_2008இல் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 44, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பின் 2009_2010இல் கிடைத்த இடங்கள் 1165, பார்ப்பனர்கள் ஆத்திரப்படுவதற்கும், இடஒதுக்கீட்டை ஒழிக்கக் கூப்பாடு போடுவதற்கும் இதுதான் காரணம்!

மதரீதியாக இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுடன் சேர்த்து சலுகை வழங்குவதால் ஏற்கெனவே உள்ள ஹிந்துக்களின் அந்தப் பிரிவினருக்கே பாதிப்பு ஏற்படும். தற்போது சலுகை பெற்ற பிரிவிலும் கூட வறுமையில் உழல்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு வருமான அடிப்படையில் சலுகை வழங்குவதன் மூலம் சிறுபான்மை மதத்தினர் உள்பட அனைத்து பிரிவினரும் பயன்பெற வசதி செய்யப்படும் என்பது பிஜேபியின் தேர்தல் அறிக்கை (2016).

வருமானஅடிப்படையில் இடஒதுக்கீடு என்று கூறியுள்ளது சட்டவிரோதமாக ஒன்றைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, ஆட்சிக்கு வந்தபின் அந்த சட்டவிரோதத்தைச் செயல்படுத்தியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இது சட்ட விரோத அரசே!

இந்தியாவின்அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் என்பது இடஒதுக்கீட்டுக்காகவே கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம் தமிழ்நாடுதான் _ தந்தை பெரியார்தான்.

1928 முதல் சென்னை மாநிலத்தில் இருந்து வந்த இடஒதுக்கீடு செல்லாது என்று ‘சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்புக் கூறிய காரணத்தால் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.

தமிழ்நாட்டின் போராட்டத்தை எடுத்துக் காட்டித்தான் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு காட்டினார்.

அந்தத் திருத்தம் என்ன சொல்லுகிறது?

சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுப்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட உறுதி செய்தது. அப்பொழுதே கூட பொருளாதார ரீதியாக என்ற அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்று ஜன சங்க நிறுவனரான தீனதயாள் உபாத்தியாயா ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் பொருளாதாரத்துக்கு ஆதரவாக அய்ந்து வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கிற அளவுகோலின்படிதான் இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

1951ஆம் ஆண்டில் பொருளாதார அளவு கோலைக் கொண்டு வர முயற்சி செய்தவர்கள் இப்பொழுது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் காரணத்தால், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஒரு சட்டத்திருத்தம் (திருத்த எண்.103) கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் செல்லாது என்று ஏற்கெனவே பலமுறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததே!

பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியோர்க்கு என்று 10 விழுக்காடு இடஒதுக்கீடு செய்த போது உச்சநீதிமன்றம் செல்லாது என்று நிராகரித்து விட்டதே!

2016ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் உள்ள பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு வழங்கி அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது, பா.ஜ.க. ஆளும் குஜராத். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு குஜராத் சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதே. ராஜஸ்தான் மாநிலம் கொண்டு வந்த பொருளாதார அடிப்படைச் சட்டமும் நீதிமன்றத்தால் செல்லாது என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசே, சட்டத்துக்கு விரோதமாகவும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது _ பச்சையான சட்ட விரோதம் _ நீதிமன்ற விரோதம் தானே!

5.5.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியது என்ன?

மகாராட்டிர மாநிலத்தில் ‘மராத்தா’ பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 16 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது என்று கூறப்பட்டது. அத்தீர்ப்பில் 50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லாது என்றும், பிற்படுத்தப்-பட்டோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உண்டே தவிர, மாநில அரசுக்குக் கிடையாது என்றும் கூறப்பட்டது.

இந்தச் சட்டம் கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. “செலக்ட்’’ கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பூபேந்திர யாதவ் எம்.பி. ஆவார். அந்தக் கமிட்டியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (திமுக), டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), நவநீதிகிருஷ்ணன் (அஇஅதிமுக) மற்றும் பிற மாநிலத்தினரும் இடம் பெற்றிருந்தனர். அந்தக் கமிட்டியில் கருத்துச் சொல்ல திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். எழுத்துப்பூர்வமாகவே கழகத்தின் கருத்துகளை எடுத்துக் கூறி நேரிலும் விளக்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது. மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்ற சட்டத்தின் பிரிவு (342A) மாநில உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்று முதன்முதலில் ஆணி அடித்ததுபோல் கூறியவர் திராவிடர் கழகத் தலைவர்தான். ஆனாலும் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

மகாராட்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பு _ இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது.

50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சகானி வழக்கில் கூறப்பட்டதையும் மகாராட்டிரா வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மண்டல் குழு வழக்கை _ ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியபோது, ஜஸ்டிஸ் திரு.இரத்தினவேல் பாண்டியன் தனித்தன்மையாக தனித்த தீர்ப்பை எழுதினார்.

பாலாஜி எதிர் மாநில அரசு வழக்கில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஜெத்மலானி கூறியது என்ன? 50 சதவிகிதத்திற்கு மேல் போகக் கூடாது என்று நீதிமன்றம் சொன்னது தீர்ப்பின் வரிகள் அல்ல, வெறும் கருத்துதான் (Obiter- Dicta); இதற்குச் சட்ட வலிமை கிடையாது என்றாரே! என்று ஜஸ்டிஸ் இரத்தினவேல் பாண்டியன் மணடல் குழு வழக்கில் தன் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி என்ன கூறியுள்ளார்? (வசந்த குமார் வழக்கில்), 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியதற்கு என்ன அளவுகோல்? விஞ்ஞானபூர்வமானதா? புள்ளி விவர தரவுகள் உண்டா? என்று கேட்டாரே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 12ஆம் பிரிவு என்ன கூறுகிறது? ‘ஸ்டேட்ஸ்’ என்றால் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு மூன்றையும் தான் குறிக்கும்.

1928ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோரை முடிவு செய்தது மாநில அரசுதான் _ மாநிலத்துக்கு மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும், தன்மையும் மாறுபடுகிறது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோரை மாநில அரசு தானே முடிவு செய்ய முடியும்? மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு என்று வருகிற போது அந்தந்த மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அடிப்படையில்-தானே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இங்கே மத்திய அரசு எங்கே இருக்கிறது? இன்னும் சொல்லப் போனால் மாநில அரசுக்குத்தான் மக்கள் உண்டு; மத்திய அரசுக்கு நேரிடையாக மக்கள் கிடையாதே!

மகாராட்டிரத்தில் தானே நடந்திருக்கிறது _ நமக்கு என்ன என்று அலட்சியமாக இருக்க முடியுமா? கடைசி வீட்டில்தானே தீ பிடித்திருக்கிறது _ நம் வீட்டுக்கு ஆபத்தில்லையே என்று கைகட்டி நிற்க முடியுமா? அந்தத் தீ நம் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?

அதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்றால் எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தத்-தானே செய்யும்!

(தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளுள் ஒருவரான நாகேஸ்வர ராவ் _ அதிமுக அரசு சார்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் ஆவார்).

தமிழ்நாட்டில் முசுலிம்களுக்கும், அருந்ததியர்க்கும், உள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இந்த நிலையில் யாருக்கோ வந்தது என்று அலட்சியமாக இல்லாமல் சமூக நீதிக் களத்தில் _ பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து, நாம்தான் வெகு மக்கள் _ ஜனநாயகம் என்பது பெரும்பாலோரால் ஆளப்படுவது என்பதைக் கணக்கில் கொண்டு களத்தில் நிற்க வேண்டும்.

திராவிடர் கழகத்தின் முயற்சியால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வினைத் திட்பத்தால் 69 சதவிகித இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டுள்ளது. ஒன்பதாவது அட்டவணையில் வைத்துப் பாதுகாக்கவும் படுகிறது.

கருநாடக மாநிலத்தில் உள்ள 73 விழுக்காடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பு என்ன கூறுகிறது?

“தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் அரசுப் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் (தமிழ்நாடு அரசு) 1993இன்படி வழங்கி வருகிறது. இது அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணையின் கீழ் கொண்டு வந்துள்ளதால், இது நீதிமன்ற மறு ஆய்விற்கு அப்பாற்பட்டது ஆகும் (ஜூலை 2010) என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.’’

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு இத்தனை சதவீதம்தான் _ இத்தனை சதவிகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு என்ன பதில்? (ஒரு முறை ராம் ஜெத்மலானி இடஒதுக்கீட்டுக்காக வாதாடிய-போது நீதிபதி 100 சதவிகிதம் கூட இடஒதுக்கீடு கேட்பீர்களா என்று கேட்டபோது “Why Not?” என்று பதிலடி கொடுத்ததுண்டே!).

அரசமைப்புச் சட்டம் 15(4), 16(4) என்பது அடிப்படை உரிமையாகும். இதில் கை வைக்க எந்த நீதிமன்றத்துக்கும் உரிமை கிடையாது. ஆனால் நீதிமன்றங்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இப்பொழுது எந்த அளவுக்கு நீதிமன்றம் சென்றுள்ளது? நீதிமன்றம் தலையிட முடியாது _ கூடாது என்பதற்காகவே அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணை உருவாக்கப் பட்டது. இப்போது அதிலும் தலையிடுவோம் என்று உச்சநீதிமன்றம் சொல்லுகிறது என்றால் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டாமா?

நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, உச்சநீதிமன்றம் செல்லாது என்று கூறியது. நீதிமன்றத்தின் இத்தகைய தலையீட்டைத் தவிர்க்கவே ஒன்பதாம் அட்டவணை கொண்டு வரப்பட்டது. இந்த அட்டவணையின் கீழ் 284 சட்டங்கள் உண்டு. ஆனால், சமூக நீதியும் இதில் முதன்முதல் இடம் பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் கழகமே! இதுவரை இந்தச் சட்டங்களுக்கு எதிர் வினை என்பது வந்ததே கிடையாது.

9ஆம் அட்டவணை நீதிமன்ற அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது. அதிலும் தலையிட முடியும் என்று கூறியுள்ள நிலையில் மற்றொரு அட்டவணை கொண்டு வரப்பட வேண்டும் என்பது திராவிடர் கழகத் தலைவரின் கருத்தாகும்.

80 சதவிகித மக்களுக்கு _ 69 சதவீத இடஒதுக்கீடு என்பதற்கு ஆதாரம் உண்டு. ஆனால் 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்பதற்கு ஆதாரங்களோ _ தரவுகளோ கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 16(4) என்ன கூறுகிறது? மற்ற (முன்னேறியவர்களோடு சமமான நிலை அடையும் அளவுக்கு) (Adequately) இடஒதுக்கீட்டின் அளவு இருக்கலாம் என்று கூறுகிறது. இதனைக் கண்டறியும் உரிமை அரசுகளுக்கு உரியதே தவிர நீதிமன்றங்களுக்கு அறவே கிடையாது. Adequate என்ற இலத்தீன் சொல்லுக்கு Till it is equalised மற்றவர்களோடு சமநிலை அடைகிற அளவுக்கு என்று பொருள். இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குரிய இடஒதுக்கீடு விகிதாசாரம் அளவுக்கு இடங்கள் இதுவரை பூர்த்தியாகவில்லை என்பது கவனத்துக்கு உரியதாகும்.

இடஒதுக்கீடு குறித்து நீதிபதிகள் தெரிவித்து வரும் கருத்து குறித்து நோபல் அறிஞர் அமர்த்தியா சென் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

“இடஒதுக்கீடு அளித்தால் தகுதி, திறமை குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கை-யோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படை-யில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்-பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டுமொத்தப் போக்கினையும் பார்க்க வேண்டும். அதுபோல்தான் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பலன்களை நோக்க வேண்டும். நீதிமன்ற அடிப்படையில் இதற்கு மிக எளிதான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்கவேண்டும்’’ என்று நோபல் அறிஞர் அமர்த்தியா சென் சொன்னார். அதுவும் எங்கு எந்த இடத்தில் சொன்னார் என்பதுதான் கைதட்டிச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சென்னை அய்.அய்.டி.யில் (22.12.2009) தான் சொன்னார் என்பது நினைவிருக்கட்டும்!

மக்கள் நலனுக்காக தந்தை பெரியார் நீதிமன்றங்களை விமர்சித்ததுண்டு _ திராவிடர் கழகம் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட எரித்ததுண்டு.

மக்களுக்குத் தேவையானவற்றை முடிவு செய்வது அரசுகளே _ நீதிமன்றங்கள் அல்ல.

இப்பொழுது சமூகநீதிக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்றங்களும், இத்திசையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும்.

குறிப்பு: சமூகநீதி _ இட ஒதுக்கீடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் காணொலியில் (மே 2021) ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்டது இக்கட்டுரை.

சதிகளை முறியடிக்க வந்த சமூகநீதி கண்காணிப்புக் குழு இந்தியா முழுமைக்கும் வேண்டும்!

 

முகப்புக் கட்டுரை : சதிகளை முறியடிக்க வந்த சமூகநீதி கண்காணிப்புக் குழு இந்தியா முழுமைக்கும் வேண்டும்!

நவம்பர் 1-15,2021

மஞ்சை வசந்தன்

மனுநீதி நடைமுறைப்படுத்தப்பட்ட நாட்டில் மக்களுக்கான சமூகநீதிக் குரலை ஓங்கி ஒலித்தவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஆவர். சாகுமகராஜ், ஜோதிராவ் பூலே போன்றவர்கள் சமூகநீதிக் குரலை தொடங்கி வைத்த பெருமைக்கு உரியவர்கள்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற தமிழர் நீதிக்கு முற்றிலும் எதிரான மனுநீதி ஆரிய சனாதனவாதிகளால் உருவாக்கப்பட்டது. அயல் நாட்டிலிருந்து பிச்சையெடுத்துப் பிழைக்க வந்த ஆரியர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினர். ஆனால், சூழ்ச்சியால் பெரும்பான்மையினரான மண்ணின் மக்களை ஆதிக்கம் செலுத்தியவர்கள். அதற்கு அதிகார வர்க்கத்தை அண்டி, அவர்களைத் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு தங்களுக்குச் சாதகமான, தங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் சட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு ஆயிரக்-கணக்-கான ஆண்டுகளாக அதை நடைமுறைப்-படுத்தியவர்கள்.

பிறப்பால் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். மற்றவர்களெல்லாம் தங்களுக்கு பணிவிடை செய்யப் பிறந்தவர்கள் என்றும், தங்களுக்கு மட்டுமே கல்வி, உயர்நிலை, வழிபாட்டுரிமை என்று சட்டம் செய்து மற்றவர்களுக்கு இவ்வுரிமைகள் இல்லை என்றும் மறுத்தனர். பெண்கள் எந்த ஜாதியினரானாலும் அவர்கள் இழிவானவர்கள், அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை; அவர்கள் ஆண்களைச் சார்ந்து வாழ வேண்டிய அடிமைகள் என்றனர். கணவன் ஆயுள்தான் மனைவியின் ஆயுள். அவள் கணவன் இறந்த பின் வாழக் கூடாது என்று கணவன் பிணத்தோடு சேர்த்துக் கொளுத்தினர்.

ஆரியப் பார்ப்பனர்களான தங்களைத் தவிர மற்றவர்களுக்குத் தீட்டு உண்டு. அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றனர். தங்களைத் தவிர மற்றவர்கள் படிக்கவோ, பதவி வகிக்கவோ கூடாது என்றனர்.

ஆட்சிகள் மாறினாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இந்த நிலையே நீடித்தது. நாடு விடுதலை அடைந்து மக்கள் ஆட்சி ஏற்பட்ட பின்னரும் பிறப்பால் கற்பிக்கப்பட்ட இந்த அநீதிகள் தொடர்ந்தன; இன்றளவும் தொடர்கின்றன.

சாகு மகராஜ் தொடங்கிய சமூகநீதி அடித்தளம், நீதிக்கட்சி ஆட்சியின் மூலம் மேலெழுப்பப்பட்டது. தந்தை பெரியாரின் வருகைக்குப் பின் சமூகநீதி இயக்கமாக மாற்றப்பட்டது.

சமூகநீதிக்கு எதிரான அனைத்தும் அகற்றப்பட வேண்டும். சாஸ்திரங்களின் பெயரால், மதத்தின் கோட்பாடுகளால், ஜாதியின் அடிப்படையில், பால் இன அடிப்படையில் பின்பற்றப்பட்ட அநீதிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட வேண்டும். அநீதிகளுக்குக் காரணமானவை ஒழிக்கப்பட வேண்டும் என்று பெரியார் ஓங்கி ஒலித்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார்.

மக்களாட்சி வந்து அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட பின்னும் அடித்தட்டு மக்களுக்கான சமூகநீதி கிடைக்கவில்லை என்பதால் அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்று போராடி திருத்தும்படி செய்தார். பெரியாரின் பெரும் போராட்டத்தின் விளைவாய் அரசியல் சட்டம் முதன் முதலில் திருத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி சட்டப்படி உருவாக்கப்பட்டது. அதன்பின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்தி, அனைத்தையும் தனதாக்கிக் கொண்டிருந்த ஆரியர்கள், மற்றவர்களும் கல்வி, வேலை, உயர்பதவி என்று பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீதிமன்றத் தடை, எதிர்ப்பு போன்ற பலவற்றைச் செய்து வந்ததோடு, சூழ்ச்சிகள், சதிகள் செய்து மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை, உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருவதோடு, பிறருக்குரியவற்றைத் தொடர்ந்து தாங்களே அனுபவித்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக பிற்படுத்தப்பட்-டோருக்கான 27% இடஒதுக்கீடு நமக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. அது ஒரு நீண்ட போராட்டத்தின் விளைவாய்க் கிடைத்தது.

அரசமைப்புச் சட்டத்தின் 340ஆம் பிரிவின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆணையம் அமைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை காண வேண்டும் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒன்றிய அரசு அமைத்த முதல் ஆணையத்தின் அறிக்கையை அன்றைய அரசு குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது. இரண்டாவது ஆணையம் _ மண்டல் தலைமையில் தனது அறிக்கையை 1980இல் அரசுக்குத் தந்தது. ஆனால், அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூட அரசு முன்வரவில்லை. இதற்காக திராவிடர் கழகம் 43 மாநாடுகள், 16 போராட்டங்கள் நடத்தி _ தில்லி வரை சென்று போராடி, தொண்டர்கள் திகார் சிறைக்கு செல்ல நேரிட்டது. பின்னர் 1990இல் மண்டல் குழுவின் ஒரு பரிந்துரை _ ஒன்றிய அரசுத் துறைகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகிதம் _ சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசால் இடஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டது. அதுவும் உச்ச நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்டு பின்னர் 1993இல்தான் நடைமுறைக்கு வந்தது.

தற்போது 28 ஆண்டுகள் கடந்த நிலையில், ஒன்றிய அரசின் செயலாளர் பதவிகளில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை என்ற நிலைதான் உள்ளது. அதே போன்று பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் பல துறைகளில் உள்ளது. குரூப் ‘ஏ’ பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி ஆகிய பிரிவுகள் 25 சதவிகிதம் கூட எட்டவில்லை. மக்கள் தொகையில் 90 விழுக்காடு உள்ள மக்கள், ஆட்சி அதிகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கும் இடத்தில் இல்லை என்பது மிகப் பெரிய சமூக அநீதி. அவர்களின் குறைகளைக் களைய நாடாளுமன்றக் குழு, ஆணையம் என அனைத்தும் உள்ளன; ஆனாலும் அதிகார வர்க்கம், சமூக நீதிக்கு எதிராகத்தான் உள்ளது.

2005இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் குழு அமைத்து, ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு சட்டம் இயற்றிட அறிக்கையை அளித்தது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், 27 சதவிகித இடஒதுக்கீடு  நடைமுறைப்படுத்தப்பட்டு, 27 ஆண்டுகள் ஆகியும் ஒன்றிய அரசின் அதிகாரப் பகிர்வில் நாட்டின் பெரும்பான்மை மக்களான ஓ.பி.சி.   மக்களுக்கு அவல நிலை நீடிக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட பட்டியல் காட்டுகிறது. குரூப் ‘ஏ’ பதவிகள் 27 துறைகளில் ஓ.பி.சி. பிரிவினர் யாருமில்லை (Zero). குரூப் ‘பி’ பதவிகளில் கூட ஓ.பி.சி. பிரிவினர் 23 துறைகளில் யாருமில்லை (Zero).

பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 50% சதவிகிதத்துக்கும் அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு இருப்பது, 27%. அந்த 27%மும் பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதை கீழ்க்கண்ட அட்டவணைகள் தெளிவுபடுத்துகிறது.

மேலும், பல்வேறு துறைகளில் இடஒதுக்-கீட்டை நிறைவேற்றுவதில் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருந்தன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் தமிழக அரசின் நிதியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அனைத்து மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் தர முடியவில்லை. அகில இந்திய தொகுப்பு என்ற பெயரில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு முற்றிலும் மறுக்கப்படுகிறது. எஸ்.சி. பிரிவினர்க்கு தமிழ்நாட்டில் உள்ள 18 சதவிகிதத்திற்குப் பதில் 15 சதவிகிதம் எனத் தரப்படுகிறது.

இது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களின் சில முதுநிலை படிப்புகளில் ஒன்றிய அரசு நிதி அளிக்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராகச் செயல்பட நிர்பந்திக்கிறது ஒன்றிய அரசு.

இப்படிப்பட்ட சூழலில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் பெற வேண்டிய நியாயமான ஒதுக்கீட்டு  இடங்களைக் கூடப் பெற முடியாதபடி சதி செய்யப்படுவதால், அச்சதியை முறியடித்து, உரிய மக்களுக்கு உரிய சமூகநீதி கிடைத்திட சமூகநீதி கண்காணிப்புக் குழு வேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

சமூகநீதியைக் காப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் அரசியல் அங்கமான தி.மு.கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் சமூகநீதி கண்காணிப்புப் குழுவை, சமூகநீதிப் போராளி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் அமைத்திருப்பது வரலாற்றில் நிலைத்து நிற்கும் சாதனை மட்டுமல்ல; மற்ற மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் வழிகாட்டும் செயலும் ஆகும்.

இந்த அறிவிப்பு வந்தவுடன், அளவு கடந்த மகிழ்வில் தமிழர் தலைவர் முதலமைச்சரைப் பாராட்டியதோடு, கீழ்க்கண்ட அறிக்கையையும் வெளியிட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை

இன்று சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  உருவாக்கியுள்ள ‘சமூகநீதி கண்காணிப்புக் குழு’ என்ற குழு, இந்திய வரலாற்றில் சமூகநீதிப் பயணத்தில் ஒரு சிறந்த மைல்கல். ஒரு வரலாற்று வழிகாட்டும் திருப்பம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முகப்புரை (Preamble) பற்றி அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடும்போது,

‘‘Preamble of the Constitution has been framed with great care and deliberation. It reflects the high purpose and noble objective of the Constitution-makers. It is the Soul of the constitution”என்று குறிப்பிட்டுவிட்டு, “நீதிகளை மக்களுக்கு அளிப்பதே அதன் முதற்பணி. சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவற்றை மக்களுக்குப் பெற்றுத் தருவதே இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளனர்.

எமது அரசு ‘சொல்வதோடு நிற்காது, செயலில் காட்டும்’ என்று உலகுக்கு நிரூபித்துவிட்டார்!

அதற்கு செயல்வடிவம் கொடுத்து, சமூகநீதி இனி வெறும் ஆணைகளாக, சட்டங்களாக _ ‘ஏட்டுச் சுரைக்காயாக’ இல்லாது, நடைமுறையில் அதைக் கிட்டும்படிச் செய்ய, அரசுத் துறைகளுக்கு வழிகாட்டி, கண்காணித்து, மேலும் சிறப்பாகச் செயல்பட வைக்கும் செயலூக்கியாகத் தகுந்த திறமையுள்ள அறிஞர்களை, சமூகநீதிப் போராளிகளை, ‘நுண்மாண் நுழைபுலம்’மிக்க கல்வியாளர்களை அடையாளம் கண்டு, ‘இதனை இதனால் இவர் முடிப்பார்’ என்று அறிந்து, பொறுப்பில் அமர்த்தி, எமது அரசு ‘சொல்வதோடு நிற்காது, செயலில் காட்டும்’ என்று உலகுக்கே இந்தக் குழு நியமனம்மூலம் நிரூபித்துவிட்டார் நமது ஆற்றல்மிகு முதலமைச்சர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களான பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து சமூகப் பிரதிநிதிகளை, சமூகநீதியைப்பற்றி சரியாகப் புரிந்து களம் கண்டவர்களைக் கொண்ட சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைத்து _ அதன் மூலம் இடஒதுக்கீட்டைக் கண்காணித்து _ செயல்படுத்தி _ ஆணைகளை செம்மைப்படுத்தச் செய்துள்ள இந்த ஏற்பாடு அற்புதமான ஓர் ஏற்பாடாகும்.

சட்டத்தில், எழுத்தில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தந்தாலும், நடைமுறையில் ‘கைக்கெட்டியது வாய்க்கெட்டாத’ வண்ணம், செயல்உருக் கொள்வதில்லை. அதனை ஆராய்ந்து தீர்வு காண உதவிடும் குழு இந்தக் கண்காணிப்புக் குழு.

75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் செய்யப்படவில்லை

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சிறந்த வழிகாட்டும் குழு _ 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் செய்யப்படவில்லை.

தமிழ்நாடும், நமது முதலமைச்சரும் இந்தச் சாதனையைச் செய்துள்ளார்கள்.

இதனை மற்ற மாநிலங்களும், ஒன்றிய அரசும் பின்பற்றவேண்டும்; அப்போதுதான் சமூகநீதி வெறும் கானல் நீராக இல்லாமல், மக்களுக்குப் பயன்படும் வகையில் அமையும்.

முதலமைச்சருக்கு வாழ்த்துகள் _ நெஞ்சம் குளிர்ந்த நன்றி! நன்றி!!

பாராட்ட வார்த்தைகளே இல்லை! என தனதறிக்கையில் அகமகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு மட்டும் சமூகநீதியல்ல. அனைத்து மக்களும் சம உரிமையும், சம வாய்ப்பும் பெறுவதே சமூக நீதியாகும். குறிப்பாக, பெண்களுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, உயர் பதவி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பொறுப்புகள், சொத்துரிமை போன்ற அனைத்திலும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கச் செய்வதே சமூகநீதி.