பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

"சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு இந்துமத சன்னியாசி


சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு இந்துமத சன்னியாசி அல்ல" என பா.ஜ.கட்சியின் திரிபுவாதத்திற்கு கொள்கை ஆதாரத்துடன் தமிழர் தலைவர் மறுப்பு
கேரளத்தில் திராவிட மன்னன் மாவலியின் புகழினை, மாண்பினைப் போற்றிக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையினை மாற்றி அதனை "வாமன ஜெயந்தி" என கொண்டாட நினைத்த ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரின் திரிபுவாத திணிப்பு  முறியடிக்கப்பட்டு, அந்த விவகாரம் அடங்குவதற்குள் சமூக சீர்திருத்தவாதி சிறீ நாராயண குருவை இந்து மத சன்னியாசியாக முதன்மைப்படுத்த கேரள பாரதிய ஜனதா கட்சியினர் முனைந்துள்ளனர். பி.ஜே.பி. கேரளம்(ஙியிறி  ரிமீக்ஷீணீறீணீனீ) எனும் முகநூலில் சிறீநாராயண குரு இந்து சன்னியாசி எனவும், இந்து மதத்தை சீர்திருத்த வந்த மகான் எனவும் குறிப்புகள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன. இது குறித்த செய்தி "டெக்கான் கிரானிக்கில்" நாளிதழில் (சென்னை பதிப்பு) சுயமரியாதை ஏந்தல் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் பிறந்த நாளில் செப்டம்பர் 17இல் செய்தியாக வெளிவந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் கூற்றினை ஆதாரத்துடன் மறுத்து திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஓர் அறிக்கையினை வெளியிட்டார். தமிழர் தலைவரது அறிக்கையின் சாரம் "நாராயண குரு இந்து மத தொடர்பு அற்றவர்" எனும் தலைப்பில் "டெக்கான் கிரானிக்கில்" நாளிதழில் 20.9.2016 அன்று வெளிவந்தது.

சிறீ நாராயண குருபற்றியும், அவர்தம் சிந்தனை கொள்கைகள் பற்றியும் தமிழர் தலைவர் விரிவாக தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நாராயண குரு தமது வாழ்வில் எந்தக் காலத்திலும் இந்து மத வாதி எனக்கூறிக் கொண்டது கிடையாது. மதத்திற்கு முன்னுரிமை கொடுப் பதை விட்டு மனித சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்தவர் குரு அவர்கள். கேரள மாநிலம் ஆல்வாயில் குரு, சிவன் கோவில் கட்டி முடித்தது, ஆலய வழிபாடு என்பதை விட ஆலயத்தில் பூஜை செய்திட அனைத்து மக்களுக்கும் - அனைத்து ஜாதியினருக்கும் உரிமை உண்டு என்பதை நிலை நாட்டிடவே; கோயிலில் அர்ச்சனை செய்திட (பார்ப்பன நம்பூதிரிகள் மட்டுமே உரிமை பெற்றிருந்த ஆதிக்க நிலையில்) ஒடுக்கப்பட்ட  ஜாதியிலிருந்தும் தீண்டத் தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களிடமிருந்தும் அர்ச்சகர்களை தாம் நிறுவிய சிவன் கோயிலில் நியமித்தார்.
"எந்த மதமாக இருந்தால் என்ன?

மனிதரை உயர்வாக மதித்தால் அது போதுமே!"

என கவிதை  யாத்தவர் நாராயண குரு. மத அடை யாளம் தேவையற்றது எனும் கருத்துக் கொண்டவர். தமது சீடர்களிடம், "ஒருவர் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு செல்ல விரும்பினால் அதற்கான உரிமை அவருக்கு வழங்கப்பட வேண்டும்; மேலும் மத நம்பிக்கை அற்றவர் என வாழவும் மனிதருக்கு உரிமை வேண்டும்" என போதித்தவர். மனித குலம் முழுவதும் "ஒரே ஜாதி, ஒரே பிரிவு" என கொள்கைப் பரப்புரை செய்த குரு, மதத்தைப் பற்றிய முழக்கத்தை அதில் சேர்க்கவில்லை. 1924இல் ஆல்வாயில் நாராயண குரு நடத்திய அனைத்து மத மாநாட்டில் தம்மை ஒரு ஒருங்கிணைப்பாளராக மட்டுமே காட்டிக் கொண்டவர். இந்து மதவாதி என சொல்லிக் கொள்ளவில்லை. மேலும் மாநாட்டில் இந்து மதத்தினை பிரதிநிதித்துவ படுத்தும் விதமாக சென்னை - திருவல்லிக்கேணி தியாசபிகல் சங்கத்தின் சார்பாக ஒரு பார்ப்பனர் தான் கலந்து கொண்டார்.
சமூகத்தினரை கடவுளின் பெயரால் வேறுபடுத்திப் பார்த்து அவர்களிடம் பிறவி பேத அடிப்படை யில் ஏற்றத் தாழ்வினை ஏற்படுத்திய மதம் வேத மதமாகிய இந்து மதம். மனிதரைப் பேதப்படுத்தி, பிளவுபடுத்திப் பார்ப்பது இந்து மதத்தின் சாராம்சக் கொள்கை. ஆனால் நாராயண குருவோ மனி தரை ஒற்றுமைப்படுத்திப் பார்த்தவர்; அவர்களிடம் சமத்துவம், சமவாய்ப்பு கிடைத் திடப் பாடுபட்டவர். சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு கல்வி வழங்குவதை மறுத்து வருவது இந்துமதம். மறுக்கப்பட்ட கல்வியினை அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியவர் நாராயண குரு. கல்வியினை வலியுறுத்தி களத்தில் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்திட அரும்பாடு பட்டவர் நாராயணகுரு. இந்து மத கோட்பாடு,  இன்று மனுதர்மம் மக்கள் விரோத நிலையில் இருக்கும்பொழுது, சமத்துவத் திற்காகப் பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி சிறீநாராயண குருவை "இந்துமத சன்னியாசி" என பா.ஜ. கட்சியினர் குறிப்பிட்டு இருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது; உண்மைக்கு முற்றிலும் மாறானது.

பகுத்தறிவுவாதி புத்தரையே கடவுள் அவதாரமாக மாற்ற முனைந்த மதம் இந்து மதம். புத்தரது கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை மாற்றி மகாயானம் என பிரிவினை ஏற்படுத்தி புத்தரது கொள்கைகளை சிதைத்தவர்கள் வேத மதத்தினர். புத்தரது போதனைகள் எழுத்து வடிவில் இல்லாமல், பேச்சு வழக்கில் மட்டுமே அமைந்த துவக்க நிலையிலிருந்து அவரது கொள்கைகளை மாற்றுவதற்கு வேத மதத்தினருக்கு 400 ஆண்டுகள் பிடித்தது.

ஆனால் நாராயணகுரு அவர்களது போதனைகள் அவரே எழுதி, சீடர்கள் பதிவு செய்த நிலையில் அவர் மறைந்து ஒரு நூற்றாண்டு கூட ஆகாத நிலையில் அவரது சமத்துவம் போதிக்கும் மனித நேயக் கொள்கைகளை கபளீகரம் செய்து அவரை "இந்து மத சன்னியாசி" என திரிபு வாதம் செய்திடும் வேலையினை காவிக் கூட்டத்தினர் செய்யத் துவங்கிவிட்டனர். நாராயண குருவின் உண்மை சீடர்கள், தொண்டர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் காவிக் கூட்டத்தினரின் உண்மைக்கு மாறான செய்தியினை உணர்ந்திட வேண் டும். உண்மை நிலையினை - சமூக சீர்த்திருத்த வாதி நாராயண குருவின் உண்மையான கொள்கை வெளிப் பாட்டை பரப்பிட முன் வரவேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தலைவரது அறிக்கையின் சாரத்தினை, உண்மை விளக்கத்தினை, நாராயண குரு இந்து மதத்திற்கு தொடர்பில்லாதவர் எனும் செய்தியை நாராயண குருவின் நினைவு நாளான செப்டம்பர் 20ஆம் நாளில் "டெக்கான் கிரானிக்கில்" நாளிதழ் வெளியிட்டது நாராயண குருவின் கொள்கைக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது.
-விடுதலை,22.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக