புதுடில்லி, செப்.3 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், முதல் முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை தனியாகக் கணக்கெடுக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த கணக்கெடுப்பு வரும் 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஆலோ சனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 25 லட்சம் தகவல் சேகரிப்பாளர்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை தனியாகக் கணக்கெடுக்கப்பட உள்ளது. கணக்கெடுப்புப் பணிகள் அனைத்தும் தற்போதைய உயர் தொழில்நுட்ப முறைகளைப் பயன் படுத்தி, மிகத் துல்லியமாக இருக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இதில் மின்-நிலவரைபடங்கள், ஜிபிஎஸ் கருவி போன்றவற்றைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, கணக்கெடுப்பு நடத்திய பிறகு, அதன் இறுதி அறிக்கையைத் தயாரித்து வெளியிட 7 முதல் 8 ஆண்டுகள் ஆகின்றன. வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், 3 ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கையை வெளியிட முடிவு செய்யப் பட்டது என்று அவர் தெரிவித்தார்.
கடைசியாக 1931-ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை தனியாகக் கணக்கெடுக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பை அடிப் படையாக வைத்து, கடந்த 1990-ஆம் ஆண்டு வி.பி. சிங் அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது.
இந்த நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தங்களைத் தனியாகக் கணக்கெடுக்க வேண்டும் என இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு, 3.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக