பக்கங்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2018

69 சதவிகித இட ஒதுக்கீடு - கிரீமிலேயர் - பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பாக

உச்சநீதிமன்றத்தில் சமூகநீதியை நிலைநாட்ட திறமை வாய்ந்த வழக்குரைஞர்களை நியமித்து தமிழக அரசு வாதாட வேண்டும்!


நவம்பர் மாதத்தில் டில்லியில் இது தொடர்பான மாநாடு


நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் கிளர்ச்சிகள்


திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்




சென்னை, ஆக.29 தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக் கீட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - தாழ்த்தப்பட்டவர் களுக்கும் கிரீமிலேயர், பதவி உயர்வில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்கிற வகையில் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகம் சார்பில் இன்று (29.8.2018) காலை சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்ட 69 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1 (அ)

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 76 ஆம் திருத்தம் - 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்று சட்ட வலிமை பெற்று நடை முறையில் செயலாக்கம் பெற்று வருகிறது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

எல்லா வகையிலும் பாதுகாப்பான இந்த சமூகநீதி சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில் திறமையும், அனுபவமும், சமூகநீதியில் அக்கறையும் கொண்ட மூத்த வழக்குரைஞர்களை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறு வதற்கான அனைத்து முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசினை இந்தக் கலந்துரையாடல் கூட்டம் வலியுறுத்துகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு - 69 சதவிகித இட ஒதுக்கீடு இவற்றைப் பாதுகாத்திட இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சியின்கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் - இவ்விரண்டிலும் முறையே முதல மைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் முக்கிய பங்கு இருப்பதால், அ.இ.அ.தி.மு.க. அரசு - உச்சநீதி மன்றத்தில் நடைபெறும் இவ்வழக்கில் கூடுதல் பொறுப் புடனும், அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் செயல் படவேண்டிய கடமை உணர்வு கூடுதலாக இருக்கிறது என்பதையும் இக்கலந்துரையாடல் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் திணிக்கப்பட்டுள்ள கிரிமீலேயரையே நீக்கவேண்டும் என்று சமூகநீதியாளர்கள் வலி யுறுத்திக் கொண்டு இருக்கும் இக்காலகட்டத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரிமீலேயர் தேவை என்ற பொருளிலும், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டம் 77 ஆம் திருத்தம் உறுதி செய்துள்ள நிலையில், இது குறித்தும் உச்சநீதிமன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பியுள்ளதானது - சமூகநீதி மீதான பெரும் அச்சுறுத்தலேயாகும். இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உரிய அளவு கவனம் செலுத்தவேண்டும் என்றும், பிரதமரைச் சந்தித்த அழுத்தம் கொடுப்பது, டில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்துவது உள்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 1 (ஆ)

முதுநிலை மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் உள்ள (2018-19) 10,449 இடங்களில் 205 இடங்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ளன. இதுவும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

தீர்மானம்: 1 (இ)

மேற்கண்ட கருத்துகளை மய்யப்படுத்தி, நாடு தழுவிய அளவில் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங் களையும், தேவையான கிளர்ச்சிகளையும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.



அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற  பல்வேறு கட்சியினர் - அமைப்பினர் (29.8.2018, சென்னை, பெரியார் திடல்)


பங்கேற்றோர்


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோர் வருமாறு:

வி.பி.துரைசாமி, தி.மு.க.

ஆ.கோபண்ணா, காங்கிரசு

உ.பலராமன், காங்கிரசு

தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

து.அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி

கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முசுலிம் லீக்

மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஆ.வந்தியதேவன், மதிமுக

பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அ. பாக்கியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கு.கா. பாவலன், விடுதலை சிறுத்தை கட்சி

சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை

எம்.நிஜாம் முகைதீன், எஸ்.டி.பி.அய். கட்சி

வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி

ஏ.கே.அப்துல்கரீம், எஸ்.டி.பி.அய் கட்சி

பேராயர் எஸ்றா.சற்குணம், இந்திய சமூகநீதி இயக்கம்

மலர் இரா.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள்  தொழிலாளர் கட்சி

டி.எஸ். ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி

இராமகோபால தண்டாள்வர், தலைவர், உழைப்பாளி மக்கள் கட்சி

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்

ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி

அப்துல் சலாம், மனிதநேய மக்கள் கட்சி

டி.காஜாமொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி

டி.தாகிர், மனிதநேய மக்கள் கட்சி

அ.இராமசாமி, தலைவர் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

ந.க.மங்கள முருகேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொது பள்ளிக்கான மாநில மேடை

ஏ.கே.மொகமத் ரபீ, இந்திய யூனியன் முசுலீம் லீக்

கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம்

வீ. அன்புராஜ், திராவிடர் கழகம்

வீ.குமரேசன், திராவிடர் கழகம்

வி.பன்னீர்செல்வம், திராவிடர் கழகம்

மஞ்சை வசந்தன், திராவிடர் கழகம்

தே.செ.கோபால், திராவிடர் கழகம்

சு.குமாரதேவன், திராவிடர் கழகம்

அருட்தந்தை ஸ்டோன் ஜெபமாலி, இந்திய சமூகநீதி இயக்கம்

ஞானதேவராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி

கே.எம்.நிஜாமுதீன், இந்திய முசுலிம் லீக்

எம்.ஜெய்னுலாபிதீன், இந்திய யூனியன் முசுலீம் லீக்

முத்தையாகுமரன், திராவிட இயக்க தமிழர் பேரவை

எஸ்.நடராஜன்

- விடுதலை நாளேடு, 29.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக