பக்கங்கள்

வியாழன், 27 செப்டம்பர், 2018

பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது

பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான கிரீமிலேயரையும் ரத்து செய்க!

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடரப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு தீர்ப்பினை அளித்துள்ளது!

காலங்காலமாக சமூக இழிவினையும், கொடுமையையும், ஜாதி - வர்ணாசிரம சமூக அமைப்பின் காரணமாக அனுபவித்து, கல்வி, உத்தியோக வாய்ப்புகள், பார்ப்பனரைத் தவிர - மேல் ஜாதி என்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு "அடிமைகள்" அவர்கள் என்பதால் மறுக்கப்பட்ட உரிமைகள், 50, 60 ஆண்டு காலமாகத் தான் நாட்டில் எல்லா மாநிலங்களிலும் அல்ல, தமிழ்நாடு, கருநாடகம் போன்ற ஒரு சில தென் மாநிலங்களில் துவங்கி அங்கீகரிக்கப்பட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் தரப்பட்டு வருகிறது!

இடஒதுக்கீட்டை ஒழிக்க ஒற்றைக் காலில் தவம்!

பல கோடி மக்கள் மனுதர்மப்படி, கல்வி, உத்தியோகம் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புத் தருவதற்கு சமூகநீதி - இடஒதுக்கீடு என்ற உதவிகள் - ஊனமுற்றவர்களுக்கு உதவிடும் ஊன்றுகோல் போல  அளிக்கப்படுவதை, ஆதிக்க ஜாதிகளான - பார்ப்பனருக்கும், அவர் போன்ற அடுத்த வரிசையினருக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத உறுத்தப்பட்ட பார்வையோடு இந்த இடஒதுக்கீட்டினை ஒழித்திட ஒற்றைக் காலில்  'தவம்' செய்கின்றனர்!

தங்களிடம் உள்ள அதிகார வர்க்க ஆளுமை பலம், பத்திரிக்கை ஊடக பலம்; எல்லாவற்றிற்கும் மேலாக  நீதித்துறையில்  உயர் ஜாதி ஆளுமைப் பலம் கொண்டு இந்திய அரசியல் சட்டம் வழங்கிய உரிமை மீட்பைக்கூட சகியாதவர்களாகி, சமர்க்களத்தில் அமர்க்களத்தோடு இறங்கியுள்ளனர்!

தந்தை பெரியார் போராடினார்

தந்தை பெரியார் 1951ஆம் ஆண்டு துவக்கிய சமூக நீதிப் போர் பல்வேறு காலங்களில், பல்வேறு களங்களில் வெற்றி பெற்றே வந்திருக்கிறது!

நீதித்துறையில் இன்னமும் சமூகநீதி தலை தாழ்ந்தே பறக்கிறது!

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒரே ஒரு நீதிபதிகூட

31 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தில் - 25 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதில் இன்றும்கூட இல்லை. இல்லவே இல்லையே!

தேவை நீதித்துறையிலும் இடஒதுக்கீடு!

பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றோ - இரண்டோ அவ்வளவுதான்!

நீண்ட இடைவெளிக்குப்பின் ஜஸ்டீஸ் திரு. ரஞ்சன் கோகாய் என்ற பிற்படுத்தப்பட்ட சமூக நீதிபதி (அசாம் மாநிலத்தவர்) வரும் 2.10.2018 முதல் பதவி ஏற்று (ஓராண்டுதான் பதவியில் இருப்பார்) இருக்கிறார். என் றாலும் வெளியில் உள்ள மண்டல் காற்று உச்சநீதி மன்றத்திலும் அவ்வப்போது அடிக்கவே செய்கிறது!

அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு - நேற்றைய தீர்ப்பு.

நல்லதோர் தீர்ப்பு நேற்று

நேற்று (26.9.2018) வந்த 5 நீதிபதிகள் அமர்வு (எல்லாம் மேல் ஜாதியினரே! என்றாலும்கூட) அளித்த அரசியல் சட்ட ரீதியான தீர்ப்பு - நல்ல தீர்ப்பாகும்!

தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்குப் பதவிகளில் (இடஒதுக்கீட்டின் படிதான் அவர்கள் இந்த அளவுகூட வர முடிந்துள்ளது) பதவி உயர்வு தருவதற்கு, மேலும் புள்ளி விவரப் பொருளாதார நிலை ஆதாரங்களைத் திரட்டிட வேண்டிய அவசியம் இல்லை; தாராளமாக தற்போதுள்ளதைத் தரலாம் என்று கூறி, - முந்தைய நாகராஜன் வழக்கின் தீர்ப்பினால் (2006) ஏற்பட்ட தடையை - தீய விளைவை - அகற்றி விட்டனர்!

கிரீமிலேயர் முறை தாழ்த்தப்பட்ட மலைவாழ்  (S.C., S.T). மக்களுக்குக் கட்டாயம் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு - 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வின் தீர்ப்பாகும்.

ஊனமுற்றவர்களுக்கு உதவுவது இல்லையா?

S.C. S.T. மக்களுக்கு பதவி உயர்வு தரத் தடையில்லை  - ஊனமுற்றோர்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும்போது - மற்றவர்களுக்கு சில அடிகள் முன்னே நிறுத்தி (Handicap) ஓட விடுவதில்லையா? அதே நியாயத்தின் தத்துவத்தின்படி தான் இதைக்  கூறியுள்ளனர்.

மிகவும் பாராட்டி வரவேற்க வேண்டியதாகும்.அதுபோலவே - கிரீமிலேயர் இவர்களுக்கு கிடையாது!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரெங்காச்சார்யா வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கூறிய கருத்து இங்குப் பொருத்தமானது. Appointment includes promotion also 
என்று தெளிவாகக் குறிப்பிட்டதை நினைவூட்டுகிறோம்.

நேற்று ஊடகங்கள் - தொலைக்காட்சிகள் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது அவர்களது ஆசைகளின் வெளிப்பாடாகவோ திசை திருப்பி, பதவி உயர்வு S.C., S.T., யினருக்குத்  தரக் கூடாது இடஒதுக்கீட்டு அடிப்படையில் என்பது போன்ற செய்தி வெளியிட்டு கொஞ்சம் குழப்பி விட்டனர்!

இம்மாதிரி இவர்கள் செய்வது முதல் முறையல்ல!

அர்ச்சகர் தீர்ப்பு 2016 இறுதியில் வந்தபோதுகூட இப்படிக் குழப்பினர் - நாம் தான் துணிந்து ஓங்கி அடித்து விளக்கி "அந்த விஷப் பற்களை"ப் பிடுங்கினோம்!

'கிரீமிலேயரை' ரத்து செய்க!

கிரீமிலேயர் என்ற இந்திரா சகானி மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  மட்டும் வைத்ததேகூட பெரும் சமூக அநீதியாகும்;

அரசியல் சட்டத்தில் கூறாத பொருளாதார அளவுகோலின் (Economic Criteria)  மறு அவதாரம் தான் கிரீமிலேயரை புகுத்தல் இதையும் பிற்படுத்தப்பட்ட வர்கள் ஒருமுறை எதிர்த்து நீக்குவது அவசரம் - அவசியம்!

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

27.9.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக