மதுரைக் கோவில் நுழைவும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட சாந்து பட்டரின் குடும்பமும்
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை ஐந்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு நாடாரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மேல் ஜாதி அதிகாரிகள் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்குள் நுழைந்தனர். கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவும் பிற ஊழியர்களும் அவர்களை வரவேற்று மீனாட்சி சன்னதிக்கு அழைத்துச் சென்று சாமியைக் கும்பிட வைத்தனர்.
அதற்கு அடுத்த நாள் , ஜூலை 9ஆம் தேதி முத்து சுப்பர் பட்டர் என்பவர் காலை வழிபாட்டை முடித்துவிட்டு , மாலையில் கதவுகளைத் திறக்க மறுத்தார். சுத்தீகரண சடங்குகளைச் செய்யாமல் கோவில் கதவுகளைத் திறக்க முடியாது என்று கூறினார். சாவிகளைப் பெற நிர்வாக அதிகாரி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
வெளியூருக்குச் சென்றிருந்த சாந்து பட்டர் என்பவர் அன்று இரவு ஊர் திரும்பினார். அடுத்த நாள் காலையில் கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதற்குப் பிறகு பூஜைக்கு வராத பட்டர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட சாந்து பட்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். திருநெல்வேலியிலிருந்து பட்டர்கள் அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடந்தன.
1939லிருந்து 1945வரை இந்த பட்டர்கள் கோவிலிலிருந்து நீங்கியிருந்தனர். இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவில் சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, 'சுத்தீரகணச் சடங்கு ஏதும் செய்யப்பட மாட்டாது. நிர்வாக அதிகாரியின் உத்தரவே இறுதியானது' போன்ற நிபந்தனைகளை ஏற்று 1945ல் பட்டர்கள் திரும்பவும் கோவிலுக்குள் வந்தபோது, அவர்களுக்கு நிர்வாகத்திலும் கோவிலுக்குள் தங்கள் நிலையிலும் பழைய செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சாந்து பட்டரின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
யார் இந்த சாந்து பட்டர்?
-----------------------------------
சாந்து பட்டர் என்பது எல்லோரும் அவரை அழைக்கும் பெயர். அவருடைய முழுமையான பெயர் சாமிநாதபட்டர். அவருடைய மனைவியின் பெயர் விஜயலட்சுமி. இவருடைய பிறப்பு - இறப்பு குறித்த முழுமையான விவரம் தெரியவில்லை. இவர்களுக்கு பிச்சை பட்டர், கல்யாணசுந்தரம், சுப்பிரமணியன், சதாசிவம் என நான்கு மகன்கள். இதில் முதல் மகன் திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கு சுவீகராம் செய்துதரப்பட்டுவிட்டார்.
-----------------------------------
சாந்து பட்டர் என்பது எல்லோரும் அவரை அழைக்கும் பெயர். அவருடைய முழுமையான பெயர் சாமிநாதபட்டர். அவருடைய மனைவியின் பெயர் விஜயலட்சுமி. இவருடைய பிறப்பு - இறப்பு குறித்த முழுமையான விவரம் தெரியவில்லை. இவர்களுக்கு பிச்சை பட்டர், கல்யாணசுந்தரம், சுப்பிரமணியன், சதாசிவம் என நான்கு மகன்கள். இதில் முதல் மகன் திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கு சுவீகராம் செய்துதரப்பட்டுவிட்டார்.
மதுரைக் கோவிலில் திருமேனிகளுக்கு பூஜைசெய்யும் 40 வீட்டு பட்டமார்களில் அதிகம் படித்தவர் சாந்து பட்டரே. அந்த காலகட்டத்திலேயே பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்திருந்தார். மிக நேர்மையானவர். மனிதர்கள் அனைவரும் சமமென நினைத்தவர்.
ஆனால், கோவில் நுழைவுக்கு ஆதரவாக இருந்ததால், சக பட்டர்களால் மரணம் வரை இவர் ஒதுக்கிவைக்கப்பட்டார்.
"அவர் இந்தத் தெருவில் நடந்துவந்தால் அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றுவார்கள்" என்கிறார் அவருடைய மகன் சுப்பிரமணியன். ஒரு முறை தன் தந்தை சாந்து பட்டரிடம், இப்படி பிரச்சனை வருமெனத் தெரியுமில்லையா, எதற்காக ஒடுக்கப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் விவகாரத்தில், கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தீர்கள் என சுப்பிரமணியன் சாந்து பட்டரிடம் கேட்டார்.
"ஹரிஜனும் பக்தன்தானே. அவா உள்ள வர்றது நேக்கு தப்பா தெரியலைப்பா" என்றாராம் சாந்து பட்டர்.
இந்த விவகாரத்தில் பெரும் துணையாக நின்ற ராஜாஜி, கவர்னர் ஜெனரலாக இருந்தபோது மதுரை வந்தார். அப்போது சாந்து பட்டரை சந்திக்க விரும்பினார். கோவில் நுழைவுப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வைத்தியநாதய்யர், சாந்து பட்டரை அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் "கவர்னர் ஜெனரலைப் பார்க்கும்போது, பசங்களுக்கு ஏதேனும் வேலை கேளுப்பா" என்றார் வைத்தியநாதய்யர். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் சாந்து பட்டர். "அவங்க படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சா போறும்" என்றாராம்.
கோவில் நுழைவு நியாயமெனக் கருதியதோடு, அந்த முயற்சியில் கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவுக்கும் உறுதுணையாக இருந்த சாந்து பட்டர் சாகும்வரை தன் ஜாதியினரால் புறக்கணிக்கப்பட்டிருந்தார். பட்டர்களின் வீடுகளில் நடக்கும் எந்த நல்லது கெட்டதுக்கும் அவருக்கு அழைப்பு வராது. இவர்கள் வீட்டு விசேஷத்திற்கு யாரும் வரமாட்டார்கள்.
சாகும்வரை புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தனிமரமாக இருந்து இறந்துபோனார் சாந்து பட்டர்.
சாகும்வரை புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தனிமரமாக இருந்து இறந்துபோனார் சாந்து பட்டர்.
சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servants of the Goddess: The Priests of a South Indian Temple புத்தகத்தில் சாந்து பட்டரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவரது புகைப்படம் இல்லை.
அவரது சந்ததிகளைத் தேடிப்பிடித்து, சாந்து பட்டர் என்ற சாமிநாதபட்டரின் புகைப்படத்தைக் கண்டெடுத்தேன். அவரது புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறையென நினைக்கிறேன்.
கோவில் நுழைவுக்கு ஆதரவாக இருந்ததால், செய்யப்பட்ட ஒதுக்கல் இப்போதும் தொடர்கிறதா? இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
--------------------------------------------------
படம் 1. சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.
படம் 2. சாந்து பட்டர் வசித்த வீட்டில் இருந்த கல்வெட்டு.
படம் 3. மதுரைக் கோவில் நுழைவின்போது எடுக்கப்பட்ட படம்.
--------------------------------------------------
படம் 1. சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.
படம் 2. சாந்து பட்டர் வசித்த வீட்டில் இருந்த கல்வெட்டு.
படம் 3. மதுரைக் கோவில் நுழைவின்போது எடுக்கப்பட்ட படம்.
நன்றி: Muralidharan Kasi Viswanathan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக