பக்கங்கள்

புதன், 14 நவம்பர், 2018

வகுப்புரிமை வரலாறு

ஒரு நண்பரின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க எழுதினேன். தனிப் பதிவாக நீண்டுவிட்டது. இது வரலாற்று பெருவெள்ளத்தின் சிறுஅளவே. வாசியுங்கள் வரலாற்றை!
*************************
#வகுப்புரிமை
#முதல்_அரசானை
இந்தியா முழுவதும் சமூகநீதிக்கான குரல் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தாலும் சென்னை மாகாணத்தை பொறுத்தவரை
இரட்டையாட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்த நீதிக்கட்சியின் ஆட்சி் 16/09/1921அன்று முதல் வகுப்புரிமை ஆணையை வெளியிட்டது. ஆனால் ஆதிக்க சாதியினரின் முட்டுக்கட்டையால்  இதை முழுமையாக நடைமுறைப்
படுத்த இயலவில்லை.

#காங்கிரசிற்கு_நிபந்தனை
அதே காலகட்டத்தில்... சட்டமன்றத்திற்குள் நுழைந்து நிர்வாக பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற குரல்கள் காங்கிரசு கட்சியில் ஒலிக்கத் துவங்கியிருந்தது. ஈரோடு நகர் மன்றத் தலைவராக இருந்து அதோடு சேர்த்து பல்வேறு பதவிகளை உதறிவிட்டு  காங்கிரசில் சேர்ந்த பெரியார் சேரும்போதே எதிர்காலத்தில் காங்கிரசு கட்சி தேர்தலில் போட்டியிடும் நிலையை எடுத்தால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உரிய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப் படவேண்டும் என்ற நிபந்தனையுடன் காங்கிரசில் சேர்ந்தார்.

இதே கோரிக்கையை 1922, 1923,1924 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளில் தீர்மானமாக முன்வைத்த நிலையில் தொடர்ந்து பார்ப்பன தலைவர்களால் வஞ்சகமாக முறியடிக்கப்பட்டு இறுதியாக 1925 காஞ்சிபுரம்  மாநாட்டிலிருந்தும், காங்கிரசு கட்சியிலிருந்தும்  வெளியேறினார் பெரியார்!

#முத்தையாவின்_அரசானை
நீதிக்கட்சி ஆதரவுடன் அமைக்கப்பட்ட டாக்டர் சுப்பராயன் ஆட்சியில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை செழுமைபடுத்தி 04/11/1927 அன்றுமுதல் துணிச்சலுடன் செயல்படுத்தினார்.
இதன்படி பார்ப்பனர்க்கு 16%
பார்ப்பனரல்லாதார்க்கு 44%
இசுலாமியர்க்கு 16%
கிறித்தவர்க்கு 16%
ஆதி திராவிடர்க்கு 8%
என்ற வகையில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

பூரிப்படைந்த பெரியார்
"இனி பிறக்கும் குழந்தைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள்" என்று உச்சிமுகர்ந்து பாராட்டினார்.

#வகுப்புரிமைகொடு
#வருகிறேன்_காங்கிரசிற்கு
29/10/1933 குடிஅரசு இதழில் வெளிவந்த "இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?" என்ற தலையங்கத்தில் புரட்சி
வாடை வீசுகிறதென்று வெள்ளையர் அரசாங்கம் தேசத்துரோக குற்றம் சாட்டி எழுதிய பெரியாரையும், குடியரசு இதழின் வெளியீட்டாளர் பெரியாரின் தங்கை கண்ணம்மாளையும் கைது செய்தது.
இந்த வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார் பெரியார்.
வேறொரு வழக்கில் அதே சிறையிலிருந்த ராஜாஜி பெரியாரை மீண்டும் காங்கிரசில் சேர அழைத்தார்.

அப்போது பெரியார் ராஜாஜியிடம் விதித்த இரண்டு நிபந்தனைகள்:
1) கடவுள் மத எதிர்ப்பை கைவிட மாட்டேன். அதேவேளை காங்கிரசு மேடைகளில் இதை கலக்காமல் தனியாக பரப்புரை செய்வேன்.
2) பார்ப்பனரல்லாத மக்களின் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை காங்கிரசு கொள்கையளவில் ஏற்கவேண்டும்.

இரண்டிற்கும் காந்தியும்- காங்கிரசும் ஒப்பவில்லை.
பெரியார் காங்கிரசில் சேரவில்லை.

#மத்தியஅரசில்_இடஒதுக்கீடு
1934 தேர்தலில் பெரியார் நேரடியாக ஆதரித்து பிரச்சாரம் செய்த பொப்பிலி அரசர் ஆட்சியில் 1935ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி அன்றைய வெள்ளையர் ஆட்சியின் மத்திய பணிகளிலும், தனியார்கள் நடத்தி வந்த இரயில்வேயிலும் பார்ப்பனரல்லாத மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

இதற்கு தூண்டுகோலாக இருந்தவர் தந்தை பெரியார்!
பெரியாரின் முயற்சியால் வெள்ளையர் அரசிடம் இதற்காக வாதாடி இந்த உரிமையை பெற்றுத் தந்தவர்கள் நீதிக்கட்சி அறிஞர்களான சர்.இராமசாமி முதலியார் மற்றும்
டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர்.

#இடஒதுக்கீட்டில்_உள்ஒதுக்கீடு
1927ல் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
இட ஒதுக்கீடு முறையில் பெரியாருக்கு ஒரு மனக்குறை இருந்தது. ஏனெனில் பொத்தாம் பொதுவாக பார்ப்பனரல்லாதார் என்று வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் பெரிதும் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த உயர்சாதியினரே பெரிதும் பயனடைந்தனர். அதற்கு அடுத்த நிலையில் இருந்த மக்களுக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்கவில்லை.
நுணுக்கமாக இதை கவனித்த பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில்
பலன் கிடைக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

04/08/1940 அன்று திருவாரூரில் பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15வது மாகாண மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"தற்போதுள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவ எண்ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக இருப்பதால் ஜனசங்கியைக்கு(மக்கள்தொகை) ஏற்றபடி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும், அவ்விகிதப்படி உத்யோகங்கள் அடையும் வரை அதிகமாக பிரதிநிதித்துவம் அமைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது. இதே முறை அகில இந்திய சர்க்கார் உத்யோகங்களிலும் கையாளப் படவேண்டுமென்று இந்திய சர்க்காருக்கு தெரிவித்துக் கொள்வதுடன் வரப்போகும் சீர்திருத்த சட்டத்திலேயே இவை குறிக்கப்பட வேண்டுமென்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது"

இதன் தொடர்ச்சியாக
1944 டிசம்பர் 29,30,31 மூன்று நாட்கள் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் தந்தை பெரியார். உடன் சென்றவர் பேரறிஞர் அண்ணா. அந்த மாநாட்டிலேயே அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவைக்கு தலைவராக்கினார்கள் பெரியாரை!

#அம்பேத்கரின்_அரியமுயற்சி
இந்த காலகட்டத்தில் 1942ல் அமைக்கப்பட்ட இடைக்கால மத்திய அமைச்சரவையில் அமைச்சராகும் வாய்ப்பு அண்ணல் அம்பேத்கரை தேடி வந்தது. அதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்ட அம்பேத்கர் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 8.33% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

#ஓமந்தூரார்_ஆட்சி
1937ல் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி இழந்தது. ஆயினும் அது கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்ந்தது.

அடுத்து ராஜாஜியும், பிரகாசமும் சென்னை மாகாணத்தை ஆண்டனர்.
அதற்கடுத்து 1947ல் ஆட்சிக்கு வந்தார் ஓமந்தூர்
ராமசாமி ரெட்டியார்.

பெரியாரின் இடையுறாத வலியுறுத்தலின் விளைவாக 21/11/1947 அன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14% ஒதுக்கீடு செய்து ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சி நடைமுறைபடுத்தியது.

இதை பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் ஓமந்தூர் ராமசாமியை "தாடியில்லாத ராமசாமி" என்று வசைபாடினார்கள் என்பது வரலாறு.

#சுதந்திர_இந்தியாவில்
#இடஒதுக்கீட்டை_இழந்தோம்!
1948 குமாரசாமி ராஜா ஆட்சிக்கு வந்தார்.
வெள்ளையர் காலம் முதல் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு சுதந்திர இந்தியாவில் பறிபோகும் நிலை வந்தது.
1950ல் அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு அனைவரும் சமம். எனவே இனி இடஒதுக்கீடு செய்யக்கூடாது என்று பார்ப்பனர்கள் வழக்கு போட்டார்கள். உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்தது. உச்சநீதிமன்றம் தடையை உறுதிபடுத்தியது.

கொதித்தெழுந்த பெரியார் 03/12/1950 அன்று திருச்சியில் "வகுப்புரிமை மாநாடு" கூட்டினார். முதல் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்த எஸ்.முத்தையா முதலியார் பெரியாருடன் இணைந்து மாநாட்டில் முழக்கமிட்டார்.

அணைத்துக்கட்சியினரும், தமிழக மாணவர்களும், பார்ப்பனரல்லாத மக்களும் இட ஒதுக்கீடு உரிமை காக்க போராடினர்.

போராட்டங்களில் கலந்து கொண்டு நம் மாணவர்கள் படிப்பை கெடுத்துக் கொள்ளக் கூடாது....இப்போதுதான் முதல் தலைமுறையாக படிக்கத் துவங்கியிருக்கிறோம். எனவே படிப்பை கவனியுங்கள் என்று அறிவுறுத்தும் பெரியார்
முதன்முதலாக "நமது கல்வி வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்படும் நிலையில் படித்து என்ன பயன்? மாணவர்களே!
வகுப்புரிமையை காத்திட போராடுங்கள்!" என்று அறைகூவல் விடுத்தார்.
களத்தில் குதித்தது மாணவர் பெரும் படை.
ஊர்தோறும் உணர்ச்சி பெருக்கு! மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டினார்கள் திராவிடர்கழகத்தினர். அனைத்துக் கட்சிகளும் ஆர்ப்பரித்து போராட்டங்களை நடத்தின.

அப்போது தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த காமராசர், பெரியாரை விட்டு பிரிந்து நின்ற அண்ணா அனைவரும் அவரவர்க்கு உரிய முறையில் வகுப்புரிமை காக்க போராடினார்கள், வாதாடினார்கள் என்றாலும்  போராட்டப் புயலின் மய்யமாய் திகழ்ந்தவர் பெரியாரே!

#அரசியலமைப்பு_சட்டத்தில்
#முதல்திருத்தம்.
தமிழ்நாட்டில் எழுந்த மக்கள் கிளர்ச்சியின் விளைவு...            இட ஒதுக்கீட்டிற்காக முதன்முதலாக இந்திய அரசியல் சட்டத்தின் 15வது பிரிவு திருத்தப்படும் தீர்மானம் பிரதமர் நேரு அவர்களால் கொண்டு வரப்பட்டு 01/06/1951 அன்று 15வது விதியில் 4வது உட்பிரிவாக சேர்க்கப்பட்டது.
வகுப்புரிமைக்கு வந்த ஆபத்து நீங்கியது.
தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்களின் வகுப்புரிமைக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு பெரிதும் காரணமாய் அமைந்தது அண்ணல் அம்பேத்கரின் அறிவு!

#அம்பேத்கரின்_அறிவாற்றல்
அம்பேத்கருக்கு முன்பே அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு ஒன்றை பி.என்.ராவ் என்பவர் உருவாக்கியிருந்தார்.
அதில் விதி 12ல் 3வது பிரிவு "அரசு பணிகளில் எந்த வகுப்பு குடிமக்களுக்கு வேண்டுமானாலும் அரசு இட ஒதுக்கீடு செய்யலாம்" என்று இருந்தது. இதன் மூலம் அதிகார செல்வாக்கு பெற்ற உயர்குடியினரே அரசு பணிகளை அபகரித்து கொள்வார்கள் என்பதை நுட்பமாக உணர்ந்து கொண்ட அண்ணல் அம்பேத்கர் "எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கு வேண்டுமானாலும்" என்று திருத்தி அதை அரசமைப்பு சட்டத்தின் விதி 16ல் 4வது உட்பிரிவாக சேர்த்தார். இதனால்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்திட அரசியல் சட்டத்தை இலகுவாக திருத்த முடிந்தது.
இன்று ஆண்டபரம்பரை எனும் மயக்கத்தில் திரியும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அம்பேத்கரின் அரிய பணியை அறிந்து கொள்ள வேண்டும்.
அவருக்காக அல்ல...நமக்காக!

#இன்றைய_நிலை
விரிவு கருதி சுருக்கமாக சொன்னால்....அதன் பிறகு தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டு வந்ததுதான் இன்று மாநில அரசில் 69% இட ஒதுக்கீடு!

திராவிடர் இயக்கத்தினர், மற்றும் வடபுலத்திலுள்ள
சமூகநீதி சிந்தனையாளர்களின் இடைவிடாத முயற்சியால், மண்டல் கமிசன் மூலமாக வி.பி.சிங் அவர்களின் பெரும்பணியால்  பெற்றதுதான் மத்தியஅரசில் 27% இட ஒதுக்கீடு!
ஆனால் இந்த ஒதுக்கீடுகளின் பலனையும் முழுமையாக அனுபவிக்க இயலாத வகையில் நீதிமன்றத்தின் குறுக்கீடுகள்,
நீட் தேர்வுகள், தனியார் மயமாக்கல் என இன்றுவரை பார்ப்பனீயம் முயன்று கொண்டே இருக்கிறது.

இன்று ஓரளவிற்காவது நாம் கல்வி- வேலைவாய்ப்புகளில் நிமிர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டவர்களை வந்தேறி என்று தூற்றுதல் எளிது! ஆனால் வரலாற்றை மாற்றுவது கடினம்!

( அடையாளக் குறிப்பாக அன்றைய வழக்கத்தின் படி பெயர்களுக்கு பின்னால் இருந்த ஜாதி குறிப்பிடப்பட்டுள்ளது)
- கட்செவி யில் வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக