பக்கங்கள்

செவ்வாய், 10 டிசம்பர், 2019

நாடாளுமன்ற, சட்டசபைகளில் தனித்தொகுதிகள் மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, டிச.5 நாடாளுமன்ற, சட்டசபைகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவருக்கு இட ஒதுக் கீடு வழங்கி தனித்தொகுதிகள் உரு வாக்கி அவை நடைமுறையில் இருந்து வருகின்றன. இது வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதியுடன் முடிகிறது.

தனித்தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகள் அதாவது, 2030ஆம் ஆண்டு, ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சவை கூட் டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கான மசோதா, நாடாளுமன் றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, பொது மற்றும் தனியார் நிறுவ னங்கள் தனிப்பட்ட தரவுகளை கையாள்வது தொடர்பான கட்ட மைப்பை கொண்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குடிமக்கள் திருத்த சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

காஷ்மீரில் பொருளாதாரத்தில் நலிவு அடைந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவ தற்கான மசோதாவை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

சமூக, பொதுத்துறை ஒன்றியம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காக பாரத பத்திர பரிமாற்ற வர்த்தக நிதியம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.

டில்லி ராஷ்ட்ரிய சமஸ்கிருத சமஸ்தான் மற்றும் லால் பகதூர் சாஸ்திர சமஸ்கிருத வித்யா பீடம், திருப்பதி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகியவற்றை மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றுவ தற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

டில்லி பிரகதி மைதானத்தில் 3.7 ஏக்கர் நிலத்தை 5 நட்சத்திர விடுதி கட்டுவதற்காக ரூ.611 கோடிக்கு இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்துக் கும், இந்திய ரெயில்வே உணவு வழங் கல் மற்றும் சுற்றுலா கழகத்துக்கும் குத்தகைக்கு விட இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

 - விடுதலை நாளேடு 5 12 19

வியாழன், 21 நவம்பர், 2019

ஜாதியும், மதமும் சேர்ந்ததுதான் பி.ஜே.பி. ஆட்சியா?

அகர்வால் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு வாருங்கள்!''

ரயில்வே உணவு வழங்கும் பிரிவு கொடுத்த விளம்பரம்

ஜெய்ப்பூர், நவ. 13 ரயில்வேயின் துணை நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி.யின் சார்பில் ரயில்களில் உணவு அளிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள  நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிய அகர்வால் வைசிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று விளம்பரம் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ரயில்வேதுறை உணவு வழங்கலுக்கு அய்.ஆர்.சி. டி.சி. என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங் களிடம் ரயிலில் உணவுவழங்கும் பணியை ஒப்படைத்து வருகிறது, ராஜஸ்தானைச்சேர்ந்த  பிருந்தா வன் உணவுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமும் மத்திய மேற்கு ரயில்வே சார்பில் உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவ னம் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இடையில் ஓடும் சில ரயில்களில் உணவு வழங்கும் பணியைச் செய் கிறது. இந்த நிறுவனத்திற்கு சமீபத் தில் மேலும் பல புதிய ரயில்களில் உணவு வழங்க ஒப்பந்தமிடப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிறுவ னத்தின் சார்பில் ரயில் உணவக மேலாளருக்கான ஆட்கள் தேவை என விளம்பரம்  செய்யப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தில் “ரயில்வேயில் கேட்டரிங், கிச்சன் மற்றும் ஸ்டோர் மேலாளர் காலி பணியிடங்களுக்கு 100 ஆண்கள் தேவை, விண்ணப்பதாரர்கள் அகர் வால் வைஷ்ணவ சமூகம், நல்ல குடும்பப் பின்னணியை  உடையவர் களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 10, 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்''  என குறிப்பிடப்பட்டி ருந்தது.

இது தொடர்பாக புனே அய்.ஆர்.சி.டி.சி. ஊழியர் ஒருவர் கூறும் போது, ”இவ்விவகாரம் ஊடகத்தில் வெளிவந்த காரணத் தால் தான் விவாதப் பொருளானது. ஆனால் நீண்ட காலமாகவே ரயில் வேயில் உணவு வழங்குபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான் வேலை பார்க்கின்றனர்.

ராமன்தான் பணித்தாராம்!

அகர்வால் பிரிவினர் அனை வரும் ராமன் அயோத்தி திரும்பிய பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது தன்னலமில்லாமல் உணவு சமைத்து தங்களது கையாலேயே அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் இவர்களுக்கு ராமன் தனது சேனைகளுக்கு உணவு வழங்கும் பணியைக் கொடுத்தார். இதனா லேயே மிகப்பெரிய உணவுப் பரி மாறல் வலைப்பின்னலைக் கொண்ட  இந்திய ரயில்வேதுறையில் பெரும்பாலும் அகர்வால் ஜாதி னரையே தேர்ந்தெடுக்கின்றனர்.  சமீப காலமாக ரயில்வே சார்பில் வெளியிடப்படும் ஒப்பந்ததாரர் பணியிடங்களுக்குத் தரும் விளம் பரத்தைப் பார்த்து பலரும் வரு கின்றனர். இதனால் அனைவரிட மும் நேர்காணல் நடத்தவேண்டியுள் ளது. ஆகவே ஊடகத்திலேயே குறிப்பிட்ட ஜாதியினர் தான் ரயில் வேயில் உணவு வழங்கும் பணிக்கு வரவேண்டுமென்று விளம்பரம் கொடுத்துவிட்டால் நேரம் மிச்ச மாகும்'' என்று கூறினார்.

”இந்தியாவைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் இந்துக்கள் ஆவார் கள். இவர்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் அகர் வால் ஜாதியைச்சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கின்றனர்” என்றும் கூறினார்.

மதிய உணவிலும்

குறிப்பிட்ட ஜாதியினர் தானாம்!

இஸ்கான் என்ற அரே ராமா அரே கிருஷ்ணா அமைப்பின் சார்பில் மோடி பிப்ரவரி மாதம் மதுராவில் உள்ள சந்திரோதயா பிருந்தாவன் கோவிலுக்குச் சென்று அக்ஷயா பாத்திரம் என்ற ”3 கோடிப் பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு” என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இஸ்கான் சார்பில் உணவு வழங்கப்படுகிறது, இங்கு பணி புரிபவர்கள் அனைவருமே சுத்த வைணவர்களாக இருக்க வேண்டும். அதாவது கிருஷ்ணனை மட்டும் கும்பிடுபவரக்ளாக இருக்க வேண்டும் கட்டாயம் குடுமி வைத் திருக்க வெண்டும். இணையதளத்தில் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனை  வரும் வேதப் பாரம்பரியத்தின் படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமர்சனம் எழுந்த போது ”இங்கு ஜாதி பேதம் இல்லை. ஆனால் இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைப்படி வாழ நாங்கள் வலியுறுத்துகிறோம். இங்கே அனைத்து ஜாதியினரும் வேலை பார்க்கின்றனர்'' என்று விளக்கம் கொடுத்திருந்ததுதான் வேடிக்கையும், விஷமமுமாகும்.

- விடுதலை நாளேடு 13 11 19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

ராமர் கோவில் திருவிழாக் காலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடதாம்


உத்தரப்பிரதேசத்தில் உள்ள  ராமர் கோவிலில் 10 நாள் பூஜைக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத் தில் உள்ள கதா என்ற ஊரில் பிரபல ராமர் கோவில் உள்ளது, அந்தக் கோவிலில்  10 நாள் ராமாயணப் பாடம் படிக்கும் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவிழா நடத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் :-

"ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் 10 நாட்கள் நடைபெறும் ராமாயணப்பாடம் படிக்கும் திருவிழா நடக்கும் காலங்களில் கோவில் பூஜைகளில் கலந்துகொள்வதை தடைசெய்கிறோம். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தவறுதலாக கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள். ஆகையால் அவர்கள் திரு விழா நடக்கும் 10 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் அப்படி வர நேர்ந்தால் கோவிலின் புனிதம் கெட்டு விடும், மேலும், கோவில் திருவிழாவில் உயர்ஜாதியினர் அதிகம் கலந்துகொள்ள வருவார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தொட்டுவிட்டாலோ, பார்க்க நேரிட்டாலோ தீட்டுப் பட்டுவிடும். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியது கோவில் நிர்வாகம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வருவதை கண்காணிக்க தனியார் பாது காப்பு நபர்களை நியமித்துள்ளனர்.  இது தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் ராம் ஜானகி கோவிலுக்குச் சென்று விசாரணை செய்தபோது "தாழ்த்தப்பட்டவர்கள் இங்கே வந்தால் கோவில் புனிதம் கெட்டு விடும். ஆகையால் தான் நாங்கள் இந்த சுற்றறிக்கையை அனுப்பினோம்" என்று கூறினர்.

இந்த விவகாரம் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சியில் வெளிவந்த பிறகு ஊரில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நோட்டீசை அகற்றியுள்ளனர். ஆனால் தனியார் நிறு வன பாதுகாவலர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகளில் அதிகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, இதனை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராம்ஜானகி கோவிலுக்குச் சென்று விசா ரணை நடத்த வருவாய்த்துறை அதிகாரி களை அனுப்பினார்.   அவர்களின் விசார ணையில் தாழ்த்தப்பட்டமக்களில் அதிகம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர், மது அருந்துகின்றனர். ஆகவே தான் இது போன்ற ஒரு சுற்றறிக்கையை நாங்கள் அனுப்பியுள்ளோம் என்று பதில் கூறியுள் ளனர்.  மேலும்  இந்த கோவில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது, இந்துமத சாம்பிரதா யங்களின் படி சூத்திரர்கள் கோவிலில் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்களி டம் நடத்த விசாரணையில் அவர்கள் கூறும் போது, “கோவிலில் நுழைவதற்கு நீண்டகாலமாகவே எங்களுக்கு கடுமை யான எதிர்ப்புகள் வருகிறது, எங்களை கோவில் உள்ள தெருக்களில் கூட நடக்க அனுமதி மறுக்கின்றனர். மேலும் எங்களை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை" என்றனர்.

மற்றொரு தாழ்த்தப்பட்ட நபரான ராஜூ சாகு என்பவர் கூறும் போது "கோவில் பகுதியில் நாங்கள் சென்றால் எங்களை அடித்து விரட்டுகிறார்கள். எந்த ஒரு விழா மற்றும் பூஜைகளுக்கும் எங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் எங்களிடம் வந்து கோவில் திருவிழாவிற்கு பணம் மட்டும் வசூலித்துச்சென்றுவிடுகின்றனர்" என்று கூறினார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் சுரேஷ் குமார் மிஸ்ரா கூறும்போது, “ நாங்கள் விசாரணைக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் கொண்டு வரும் விசாரணை அறிக்கையினை அடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு யாரும் எந்த காரணத்தைச் சொல்லியும் கோவி லிலோ, பொது இடங்களிலோ தாழ்த்தப் பட்டமக்கள் வருவதை தடுக்க முடியாது என்று கூறினார்.

- விடுதலை ஞாயிறு மலர், 7 .9 .19

சனி, 7 செப்டம்பர், 2019

கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்






ற்கு சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றத்தின் நிர்வாக அறக்கட்டளையாளரும், உச்சநீதிமன்ற முதுநிலை வழக்குரைஞருமான சுப்பாராவ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி,

டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் சமூகநீதிக்கான அறைகூவல்கள் பற்றியும், எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், ஆழமான கருத்துச் செறிவுடன் கூடிய உரையினை ஆற்றினார்.

தலைமை தாங்கிய முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ் உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி வழங்குவதில் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அக்கறை அற்ற தன்மை பற்றிய தனது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சில், சமூக நீதித் தத்துவத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராசர் ஆற்றிய பங்களிப்பின் சிறப்புப்பற்றி  குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்திட தந்தை பெரியார் காரணமாக அமைந்தார். இன்று ‘பொருளாதார அடிப்படையில்’ அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்புக்குப் புறம்பாக உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (?) 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தினை, ஆணையினை எதிர்த்து தி.மு.க சார்பில் முதன்முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.


  து.ராஜா எம்.பி., (சி.பி.அய்.)

நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா பேசும்பொழுது, இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை, கோரிப் பெறவேண்டியதில்லை என எழுச்சியுடன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உரையாற்றும் பொழுது பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றார். மேலும் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 8 லட்சம் என்பது பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெற பாதகமாகவும், உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியான அணுகு முறைப்பற்றிக் கூறினார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிந்தனையாளர்கள்


தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:

‘‘பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமைக்குப் 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி பெற வேண்டியிருந்தது. ஆனால் இன்று உயர்ஜாதியினர் இடஒதுக்கீட்டிற்கு வலுவில்லாத சட்டத்திருத்தத்தினை ஒரு வாரக் காலத்தில் நடைமுறைப்படுத்தியது எப்படி? அடக்குமுறை, ஆதிக்கம் நிறைந்த அரசியல் ஆட்சியாளரான மோடியின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையினையே இது வெளிப்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீட்டைத் தொடங்கியது இன்றைய காலத்தில் அல்ல; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வர்ண அடிப்படையில், ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது மனு _ மனுஸ்மிருதி. அந்தப் பாகுபாட்டைக் களைந்திட இன்று கோரப்படுவது நேர்மறை இடஒதுக்கீடு _ சரி செய்ய இட ஒதுக்கீடு தொடங்கியது. பாகுபாட்டைத் தொடங்கிய ஆதிக்க மனநிலை இன்றும் ஆட்சியாளரிடம் தொடர்கிறது என்பதற்கு அடையாளம்தான்  103 ஆம் அரசமைப்புச் சட்ட திருத்தமாகும் (2019). பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினருக்குக் கொண்டு வரும் இந்த சட்டத்தை நீதிமன்றத்திலும் சந்திப்போம்; வீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்துப் போராடுவோம்’’ என்று ஆசிரியர் அவர்கள் தமது நிறைவுரையை முடித்தார்.

கருத்தரங்க நிகழ்ச்சியினை கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) ஒருங்கிணைத்துத் தொகுத்தளித்தார்.

நிறைவாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.

பல தரப்பட்டவர்களும், பெருந்திரளாகக் கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் விருதாளர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக  இருந்தார்



2018 ஆம் ஆண்டு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குனர் டாக்டர் சோம. இளங்கோவன் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.

சமுக நீதிக்கான கி.வீரமணி விருது


புதுடில்லியில் அரசமைப்புச் சட்ட மன்றத்தில்  (Constitution Club) உள்ள துணை சபாநாயகர்  (Deputy Speaker) அரங்கில் 2018 ஆம் ஆண்டுக்கான “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கும் விழா நடைபெற்றது. அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மய்யம் ஒவ்வொரு ஆண்டும் “சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது.

1996ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018 ஆம் ஆண்டுக்கான விருதுவரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு, மொழி, இனம் பாகுபாடு எதுவும் இன்றி, இந்தியாவில், தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சார்ந்த தலைவர்களுக்கும், சிங்கப்பூர், மியான்மா, குவைத், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சமூகநீதிக்குப் பங்காற்றிய பெருமக்களுக்கும் இதுவரை விருது வழங்கப் பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதுடில்லியில் 5.2.2019 அன்று பிற்பகல் நடைபெற்ற சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, இந்த விருதினை 2009 ஆம் ஆண்டு வழங்கப் பெற்றவரும், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவரும், கருநாடக மாநில அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்ம குமார் தலைமை வகித்தார்.

விருதினை நிறுவிய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் சமூகநீதிக்கான வீரமணி விருது நிறுவப்பட்ட வரலாறு, விருது வழங்கப் படுவதன் நோக்கம்பற்றி எடுத்துக் கூறி, 2018 ஆம் ஆண்டுக்கான விருதினை பி.எஸ்.கிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதன் சிறப்புப்பற்றி உரையாற்றினார்.

விருது வழங்கல்

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.  அதிகாரி பூபீந்தர்சிங் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.

2018ஆம் ஆண்டு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை’ (K.Veeramani Award for Social Justice) பணி நிறைவு பெற்ற, மத்திய அரசின் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் விருதுக் குழுவின் சார்பாக டாக்டர் சோம.இளங்கோவன் வழங்கினார்.

பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது.  1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


விருது மடலினையும், விருதுத் தொகையான ரூ.1 லட்சத்திற்கான வங்கி வரைவோலையும் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டபொழுது பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் இருவருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது மகளும் உடன் இருந்தார். விருது வழங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

விருது வழங்கும் நிகழ்வின் சிறப்புரையினை மத்திய அரசின் மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் பூபீந்தர்சிங் வழங்கினார்.

தமிழர் தலைவரின் பாராட்டுரை

நிறைவாக விருது பெற்ற பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சமூகநீதிக்காக ஆற்றிய பணிபற்றி எடுத்துக்கூறி, பாராட்டித் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

அவர் தமது பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

சமூகநீதிக்கான விருதினை பெரியார் பன்னாட்டு மய்யம், என்னுடைய பெயரில் நிறுவிய நேரத்தில், நான் எனது பெயரில் விருது அமையப் பெறுவது வேண்டாம்; சமூகநீதிக்காக களம் அமைத்து 95 ஆண்டுகாலம் போராடிய தந்தை பெரியாரது பெயரில்தான் விருது அமையப் பெறவேண்டும் என அழுத்தமாக எடுத்துக் கூறினேன்.

தந்தை பெரியார் போற்றி காத்து வந்த சமூகநீதிச் சுடரை, அவர்தம் கொள்கையினை, அவரது காலத்திற்குப் பின் யார் எடுத்துச் செல்லுகிறார்கள் என்பதை உலகினர் அறிந்து கொள்வதன் பேரில் ஓர் அடையாளமாக எனது பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் டாக்டர் இலக்குவன்தமிழ் ஆகியோர் கூறினர். விருது பெயரில் தந்தை பெரியாரும், அவர் ஏற்றிப் பாதுகாத்திட்ட சமூகநீதிக் கொள்கையும் உள்ளடக்கம் என விளக்கமளித்தனர்.

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள்,  பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் (டில்லி, 5.2.2019).

1978இல் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணியினை மண்டல் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கியது. நாடெங்கும் பயணம் செய்து குழுவின் தலைவர் மண்டலும், குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்தறிந்து, உண்மை நிலைபற்றி ஆய்வு செய்து 1980ஆம் ஆண்டில் அறிக்கையை அளித்தனர். அரசிடம் அளிக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையினைப் பிரசுரிக்க, பலவிதமான தடைகளை அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகளில் உயர்ஜாதியினர் ஏற்படுத்தினர். பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது.  1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயம் அதிகார நிலையில்  அரசின் செயலாளராக இருந்து நிலவி வந்த நடைமுறைக்கான தடைகளைக் களைந்து பரிந்துரைக்கு ஆதரவாக இருந்து சமூகநீதிக் கொள்கைபற்றிய புரிதலுடன், அவசியம் கருதி உறுதுணையாக இருந்தார்- இந்த நிகழ்வின் விருதாளர்  பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக  இருந்தார் _ பணி நிறைவு பெற்ற நிலையிலும் சமூகநீதிப் பணிகளில் அக்கறைகாட்டிப் பாடுபட்டு வருபவர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர் மேம்பாட்டுக்காக இன்றளவும் பாடுபட்டு வருகிறார். சமூகநீதிக்கான அறைகூவல்கள் எழும்பொழுதெல்லாம் உரிய வகையில் விளக்கமளித்து, தனது அதிகார வர்க்கப் பணியில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள் வாயிலாக உண்மை நிலையினை உணர்த்தி வருகிறார். தற்பொழுது மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினரில் ஏழை(?)களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடுபற்றிய கருத்தினையும் கூறி, இட ஒதுக்கீட்டுக் கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கான கோட்பாடு; உயர்ஜாதியினருக்கானது அல்ல என்று குரல் கொடுத்து வருகிறார். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டுவரும் பி.எஸ்.கிருஷ்ணன் முற்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். அப்படிப்பட்டவரின் ஓய்வு என்பது தனது அரசுப் பணிக்குத்தான், தான் குரல் கொடுத்துவரும் சமூகநீதிக் கொள்கைக்கு அல்ல என்பதாகும். உடலால் சற்று முதுநிலை அடைந்தாலும், உள்ளத்தால் இளைஞரைப் போல சமூகநீதிக்காகப் பணியாற்றிவரும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றிப் பாராட்டுகிறோம். அவரது பணி தொடர்க என வாழ்த்துகிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

கலந்து கொண்டோர்

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்படும் விழா விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

டி.கே.எஸ்.இளங்கோவன், து.ராஜா, அரிபிரசாத் மற்றும் சமூகநீதிக்கான வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாக அறக்கட்டளையாளர் _ உயர்நீதிமன்ற முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ், வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், மத்திய அரசின் மேனாள் உயரதிகாரிகள், டில்லி மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக வழக்குரைஞர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் எனப் பலதரப்பட்டோரும் வருகை தந்திருந்தனர். வடமாநிலத்தில், டில்லி தலைநகரில் சமூகநீதிபற்றிய ஒரு விழிப்புணர்வு, இன்றைய பொருத்தப்பாடுபற்றிய விளக்கும் நிகழ்ச்சியாக சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கிடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சமூகநீதி விருதாளரும், செயல்பாட்டாளருமான கோ.கருணாநிதி நன்றி கூறி நிறைவு செய்தார்.

- உண்மை இதழ், 2.16-28.19

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

சமூக நீதி வரலாற்றைப் படைத்த நாள் - செப்டம்பர் 1



ஆம். இந்த நாளில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. சமூக நீதி வரலாற்றில், தமிழ் நாட்டில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் 1-ஆம் தேதியன்று நடைபெற்றன.

ஒன்று, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்ற ஆணையை 1993 செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தோழர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். எரிந்த சாம்பல் டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது தமிழகம் முழுவதும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உட்பட பதினைந்தாயிரம் திராவிடர் கழகத்தவர்கள் கைதாகினர். சமூக நீதிக் கொள்கையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும், ஒரே குரலில் ஆதரவு தந்து நின்றார்கள். இது தந்தை பெரியார் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று, கைது செய்யப்படும் நிலையில், ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.

இரண்டாவது - தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 69% இட ஒதுக்கீடு சட்டம், நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்ட வணையிலும் சேர்க்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியது 1994 செப்டம்பர் 1-ஆம் தேதியாகும்.

இந்த இரு செய்திகளையும் படிப்பவர் களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். 69% இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த ஆணை பின் எப்படி 69% இட ஒதுக்கீடு பாதுகாப்புச் சட்டமாக ஆகி, ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது.

ஆம். இது வியப்பாகவும் இருக்கலாம். ஒரே ஆண்டில், நீதிமன்றத்தின் தடை உடைக்கப்பட்டு, இட ஒதுக்கீடு சட்டம் பாதுகாப்பானது என்றால், அது எத்தனை பெரிய செய்தி. இதற்கு அடித்தளம் இட்டது திராவிடர் கழகம்; அதன் ஒப்பற்ற தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே என்பதை யார் மறுக்க முடியும்?

இப்படி ஒரு சட்டப் பாதுகாப்பு பெற முடியும் என அரசமைப்புச் சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டியதுடன், ஒரு வரைவுச் சட்டத்தையும் தந்தவர் திராவிடர் கழகத் தலைவராவார்.

அரசமைப்புச் சட்டத்தின் 31-சி பிரிவின்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றி அதனை அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்துவிட்டால், நீதிமன்றத்திலிருந்தும் பாதுகாப்பு பெறலாம் என்ற அரிய யோச னையை இந்த பிரச்சினை வருவதற்கு முன்பே, தெரிவித்தார் ஆசிரியர் என்பது, இன்னும் வியப்புக்குரியதும் எத்தனை தொலை நோக்குப் பார்வை உள்ளவர் என்பதும் விளங்கும்.

9.10.1987. அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர் வாகக் குழு கூட்டத்திலேயே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 31-சி பிரிவின்கீழ் சட்ட மன்றங்களில் சட்டமாகவே இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப் பட்டால் இதில் அதற்கு மேல் எந்தத் தடையும் ஏற்பட சட்ட ரீதியாக வழியில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

அரசமைப்புச் சட்டப்பிரிவு 31-சி பயன்படுத்தி சட்டம் இயற்றலாம் என திராவிடர் கழகத் தலைவர் சொன்னபோது, பல அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அரசமைப்புச் சட்டத் திருத்தம் தானே இதைவிட பாதுகாப்பு என கேள்வியை எழுப்பினார்கள்.

அவர்கள் அனைவருக்கும், ஆசிரியர் அளித்த பதிலானது: ஆம். உண்மைதான். அரசமைப்புச் சட்டத் திருத்தம் மிகுந்த பாதுகாப்பானது. ஆனால், அதைக் கொண்டு வந்து நிறைவேற்ற, டில்லி அரசின் நிலை, நாடாளுமன்றத்தில் சரியாக இருக்கிறதா என்பதுதான் அய்யம். எதிர்க்கட்சிகள் இதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஓட்டுப் போட்டால் ஒழிய, அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறாது.

அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற 368-வது விதிப்படி, மூன்றில் இரண்டு பங்கு இரு அவைகளில் வோட்டு வாங்கி, அது மொத்தம் உள்ள எண்ணிக்கையில் சரி பகுதிக்குமேல் இருந்தாகவேண்டும். பிறகு, 50 சதவிகிதத்திற்கு மேல் சட்டமன்றங்கள் அதை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றி, குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று திருத்தம் முழு வடிவம் பெற்றாகவேண்டும். எனவே, இது உடனடியாக, நமது அவசரத்திற்கு கைகொடுக்கக் கூடிய முறையாக இல்லை.

இதை நாம் எதிர்க்கவில்லை; அதை வலியுறுத்துவோம். ஆனால், இருதய நோய் கண்டவருக்கு உடனடியாக சிகிச்சை தருவதுபோல் உடனடியாக செய்ய நமது சட்டமன்றமே தனிச்சட்டம் கொண்டு வருவது வாய்ப்பானது. உடனடியாகப் பயன்படுவது என்பது நமது வாதம் ஆகும்.

ஆகவே, 31-சி பிரிவின் கீழ் தனிச்சட்டம் ஒன்றை சட்டமன்றத்தின் மூலமாக இயற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்றால், 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டை தொடர்ந்து பின்பற்றலாம் என்ற யோசனையை அரசுக்குத் தெரிவித்தோம். தமிழக அரசு, அதன் முதலமைச்சர் நாங்கள் எடுத்து வைத்த யோசனையை ஏற்று உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி. அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து ஒருமனதாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அச்சட்ட முன்வடிவை அனுப்பியது என விளக்கமாக பதில் அளித்தார்.

தமிழ்நாடு அரசின் - இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தின் நகலை உருவாக்கி - இப்படி ஒரு சட்டத்தை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனையை திராவிடர் கழகத்தின் சார்பில் முன்வைத்தவர் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தான்; முதல்வர் திறந்த மனத்தோடு - இந்தப் பிரச்சினையை அணுகியதால் - திராவிடர் கழகத்தின் இந்த யோசனையை - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைத்து - அனைவரின் ஒப்புதலோடு அதை சட்டமாக்கி - குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத் தார். குடியரசுத்தலைவரும் 1.9.1994 அன்று ஒப்புதல் அளித்தார்.

இந்தியாவிலேயே இடஒதுக்கீடு சட்ட வடிவமாக (ACT) இருப்பது தமிழ் நாட்டில்தான். மற்ற மற்ற மாநிலங்களில் வெறும் ஆணைகளாகத் (G.O.) தான் உள்ளன. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், சட்ட ரீதியாக இருந்தால் தான் முந்தேதியிட்டு (RETROSPECTIVE EFFECT) அமல்படுத்த முடியும். ஆணைக்கு அந்த அதிகாரம் கிடையாது.

அரசமைப்புச் சட்டம் 31-சி - இன் படி சட்டம் நிறைவேற்றி, 9-வது அட்டவணையில் இணைக்கப்பட்டால், மிகவும் பாதுகாப்பாக இருக்கும்; நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, அதற்கான வரைவையும் தந்து, தமிழ் நாடு அரசாலே ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் அரசமைப்புச் சட்டத்திருத்தம் (76ஆவது திருத்தம்) நாடாளு மன்ற இரு அவைகளாலும் 24.8.1994 மற்றும் 25.8.1994 அன்று மேற்கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவரால் 1.9.1994 அன்று ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழ் நாட்டில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு இன்றளவும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

-குடந்தை கருணா

- விடுதலை ஞாயிறு மலர், 31. 8. 19

அற்றைநாள் “ஸனாதன ஸமுதாயத்தால்”படிக்கப்பட்ட பாடம்



இவன் பறையன் தப்படிப்பான்;

இவன் நோக்கன் சங்கூதுவான்;

இவன் தாதன் சங்கூதி பாடுவான்;

இவன் நாவிதன் முடிவெட்டுவான்;

இவன் வெட்டியான் பிணம் சுடுவான்;

இவன் தோட்டி மலம் எடுப்பான்;

இவன் வண்ணான் துணி வெளுப்பான்;

இவன் சக்கிலியன் செருப்பு தைப்பான்,

இவன் குறவன் கூடை முடைவான்;

இவன் குயவன் மண்பாண்டம் செய்வான்;

இவன் தச்சன் மரவேலை செய்வான்;

இவன் தட்டான் நகை செய்வான்;

இவன் கொல்லன் இரும்பு வேலை செய்வான்;

இவன் கோனான் பால் கறப்பான்;

இவன் சாணான் மரமேறுவான்;

இவன் சேணியன் துணி நெய்வான்;

இவன் வாணியன் எண்ணெய் ஆட்டுவான்;

இவர் அய்யர்! நல்லவர்! வேதம் ஓதுவார்! “கேட்டீர்களா?”

உழைக்கும் வர்க்கம் “அவன்” இவன்’!

உஞ்சிவிருத்திக் கூட்டம் “அவர்! “இவர்!

வேதம் ஓதும் செயல் உயர்ந்தது!

ஏனைய தொழில்கள் இழிவானது!

அய்யர் மட்டும் நல்லவர்!

மற்றவர்கள்...

இவை பொதுநீதியா?

இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

ஒரு குலத்துக்கு ஒரு நீதி!

இற்றைநாள் இக்கொடுமைக்கு முடிவு கட்டியவர்

யார்? யார்? யார்?

பெரியார்! பெரியார்! பெரியார்!

- வை. மாறன், நன்னிலம்

-  விடுதலை ஞாயிறு மலர், 17.8.19

வியாழன், 5 செப்டம்பர், 2019

தாழ்த்தப்பட்ட பெண் சட்டமன்ற உறுப்பினரை விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள விடாமல் அடித்து விரட்டிய உயர்ஜாதியினர்



அய்தராபாத்,செப்.5 ஆந்திராவில் விநா யகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வந்த  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினரை அங் கிருந்து விரட்டியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் உள்ள தடிகொண்டா தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரான உண்ட வள்ளி சிறீதேவி என்பவர் தாழ்த் தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மருத்துவராக பணி புரிபவர். சிறீதேவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம்  குண்டூர் மாவட் டத்தில் துள்ளூர் பகுதியில் உள்ள அனந்தவரம் என்னும் ஊரில் மறைந்த மேனாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜ சேகர் ரெட்டியின் நினைவு தின நிகழ்வு நடந்தது. அதில் சிறீதேவி கலந்துகொண்டார்.

ஜாதிப்பெயர் சொல்லி கூச்சல்

அப்போது அங்கிருந்த சிலர் அவரை அதே ஊரில்  நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அழைத்துள்ளனர். அங்கு சென்ற சிறீதேவி அந்த பந்தலில் அமைக் கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வணங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த உயர்ஜாதியினர் சட்டமன்ற உறுப்பினர் சிறீதேவியை அவர் சார்ந்த ஜாதிப்பெயர் சொல்லி கூச் சலிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர் தொடர்ந்து அங்கு பேசிக்கொண்டு இருந்ததால் அவரை தாக்கி விரட்டி யுள்ளனர்.

விழாவிற்கு ஏற்பாடு செய்தவர் களிடம் அங்கு திரண்ட உயர்ஜாதி யினர்  “இவர் தீண்டத்தகாதவர், இவரை ஏன் இங்கு அனுமதித்தீர்கள்? இவரால் நமது ஊரே தீட்டுப்பட்டு விட்டது'' எனச் சத்தம் போட்டுள் ளார். இதனால் உயர்ஜாதியினருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தேவியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர்  இரு தரப் பையும் சமாதானம் செய்துள்ளனர். சிறீதேவி இதுகுறித்து, ‘‘ஜாதியின் பெயரால் என்னைச் சிறுமைப்படுத் துவது  மிகவும் அவமானகரமான செயல் ஆகும், அதுவும் மாநிலத்தின் தலைநகர் பகுதியில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. என்னை இவ்வாறு அவமதித்தவர்கள் உயர்ஜாதியினர்'' என்று கூறினார்.

இதுகுறித்து அந்தப் பகுதி காவல்துறை அதிகாரி சுப்பாராவ் கூறியபோது, ‘‘அப்பகுதியில் இருந்த சிலர் மது குடித்து இருந்தார்கள். அவர்கள் போதை அதிகமாகி சிறீ தேவியை ஜாதி குறித்துத் திட்டினர்.  இச்சம்பவம் குறித்து யாரும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்'' என்று கூறினார்

தெலங்கானாவில் புகழ்பெற்ற குழந்தைகள் நல மருத்துவர்களில் ஒருவராக கருதப்படுபவரும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான சிறீதேவி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற் காக விநாயர் கோவிலில் அனுமதிக் கப்படாமல் விரட்டி அடிக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘‘குடித்துவிட்டு இவ்வாறு செய்விட்டார்கள்'' என்று கூறி இச் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க் கிறார்கள்.

- விடுதலை நாளேடு, 5.9.19

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

சமூகநீதி உரிமையினைக் காப்பாற்றிட போராட்டக் களம் காண தயாராவீர்!



சென்னை, ஆக.25  சமூகநீதி உரிமையினைக் காப்பாற்றிட போராடக் களம் காண தயாராவீர்! என அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்களி டையே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறைகூவல் விடுத்தார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அதிகாரிகள் சங்க அரங்கத் தில் நேற்று (24.8.2019) மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இந்த அமைப்பின் துணைத் தலைவர் வி.என். புருஷோத்தமன் அனைவரையும் வரவேற்றார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று பாராட்டுரை வழங்கி பேசுகையில்:

சமூக நீதிக்கான நடைமுறை வழிமுறையான இடஒதுக்கீட்டிற்கு பெரிய ஆபத்து; இடஒதுக்கீடு அளவில் உயர்வு அவசியமே; இருப்பதை காப்பாற்ற வேண்டிய உரிமை வேட்கை பெருகிட வேண்டும். சமூக நீதிக்கான விதி முறையின் வாசல் சாத்தப்படும் அபாயம் ஆர்.எஸ்.எஸ்.யின் அறிவிப்புகளால் வெளிக் கிளம்புகிறது. சமூகநீதி உரிமையினைக் காப்பாற்றிட போராடக் களம் காண வேண்டும். தயாராவீர்! என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் தலைவர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. அனு மந்தராவ் தலைமை வகித்து உரையாற்றினார். தி.மு.க. மாநிலங்களவை உறுப் பினர்  டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் ஏற்புரையாற்றினர். செயல் தலைவர் ஜே. பார்த்தசாரதி சிறப்புரையாற்றினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த கோரிக்கைகளான - மண்டல் குழு பரிந்துரைப்படி 52 விழுக்காடு இடஒதுக்கீடு, கிரிமிலேயர் முறை ஒழிப்பு, பதவி உயர்வு மற்றும் தனியார் துறையில் இடஒதுக்கீடு, மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் ஜாதிவாரி 2021-இல் கணக்கீடு, நேரடி நியமன செயலாளர் பதவிக்கு நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு, குரூப் பி.சி பதவிகளில் அந்தந்த மாநிலத்தவர்க்கே முன்னுரிமை உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றிய குறிப் புரையை இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி விவரித்துப் பேசினார். அமைப்புச் செயலாளர் இராம. வேம்பையன் நன்றி கூறினார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்கள் - ஏர் இந்தியா, பால்மர் லாரி, பாரத கனரக தொழிற்சாலை, பாங்க் ஆப் பரோடா, மக்கள் கணக்கெடுப்பு துறை, சி.பி.சி.எல், இ.எஸ்.அய்.சி., ஆவடி கனரகத் தொழிற்சாலை, அய்.சி.எப், சென்னை அய்.அய்.டி. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அய்.சி.எம்.ஆர். சென்னை உரத் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம், சேலம் உருக்காலை, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களைச்  சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் திரளாக கலந்து கொண் டனர். அதன் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக பொருளாளர் வீ. குமசேரன், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், பெரியார் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தைய்யன், முனைவர் மங்களமுருகேசன், தாம்பரம் சிவசாமி, தளபதி பாண் டியன், அரும்பாக்கம் சா. தாமோதரன், ஆவடி கழக மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், விடுதலை  நகர் ஜெயராமன், காங்கிரஸ் கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் க. பலராமன் மற்றும் பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

-  விடுதலை நாளேடு, 25.8.19

சென்னையில் நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றோர் (24.8.2019)





- விடுதலை நாளேடு 25 8 19

நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிடம் மனு அளிப்பு



சென்னை ராயப்பேட்டை இந்திய அதிகாரிகள்  சங்கம் அரங்கில் , நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும்  பிற்படுத்தப்பட்டோர் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்  வி.அனுமந்தராவ்,  மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம்   கோரிக்கை  மனுக்களை அளித்தனர்.  உடன் அகில இந்திய  பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநி

- விடுதலை நாளேடு, 25 .8 .19

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

தாழ்த்தப்பட்ட சகோதரரின் சவம்கூட மரியாதையோடு எரியூட்டப்படக் கூடாதா?

வேலூர் நிகழ்விற்குத் தமிழர் தலைவர் கண்டனம்




வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள நாராயணகுப்பம் என்ற ஊரில் தாழ்த்தப் பட்ட  சமூக சகோதரர்களில் ஒருவரான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது சவத்தை அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் எரியூட்ட எடுத்துச் செல்ல முடியாதபடி, அச்சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பாதையையும் மற்றவர்கள் ஆக்கிரமித்து, சவங் களை சுமந்து சென்று எரியூட்ட வழி இல்லாமல் செய்ததால், தொட்டில் ஒன்று கட்டி, 20 அடி உயரமுள்ள கட்டப்பட்ட பாலத்திலிருந்து அச் சவங்களைத் தொட்டிலிலிருந்து இறக்கி, பிறகு இறுதி நிகழ்வுகள் செய்தார்கள். இது சில மாதங் களாகவே தொடருகின்றது என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய செய்தியாகும்!

பெரியாரின் திராவிட மண்ணிலா?


இந்த 21 ஆம் நூற்றாண்டில், அதுவும் தமிழ் நாட்டில் - பெரியாரின் திராவிட மண்ணிலா இப்படிப்பட்ட அநாகரிக ஆக்கிரமிப்புகள்.

வாழும்போதுதான் கொடுமை என்றால், இறந்த பிறகாவது எம் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் கண்ணியமாக - பிரச்சினையின்றி எரியூட்டப்பட வேண்டாமா?

வேலூர் மாவட்ட நிர்வாகம் இதனை உட னடியாக சரி செய்தாகவேண்டும். வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதன்மீது உடனடி யாக நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உறுதி கூறியுள்ளது ஆறுதலானதும், மிகவும் வரவேற்கத்தக்கதும் ஆகும்.

வேலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று சந்தித்து, விரைந்து பரிகாரம் காணுமாறு கூறிட, தலைமைக் கழகம் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

இதுபோல் சுடுகாட்டுக் கொடுமைகளை எதிர்த்து மனிதநேய போராட்டம்  - அறப்போரில் ஈடுபட கழகம் தயங்காது - தலைமை அனுமதி பெற்று ஈடுபடவேண்டும். இது மிகமிக முக்கியம், அவசரம்!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்


22.8.2019

சென்னை

சனி, 27 ஜூலை, 2019

ஸ்டேட் வங்கி நடத்திய பணியாளர் தேர்வின் முடிவு காட்டுவது என்ன?

சமுகநீதியின் மீது விழுந்த பேரிடி

ஸ்டேட் வங்கி நடத்திய பணியாளர் தேர்வின் முடிவு காட்டுவது என்ன?


தாழ்த்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மார்க் 61.25;


உயர்ஜாதி ஏழைகளுக்கான கட் ஆஃப் மார்க் 28.5


பகற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திட ஒடுக்கப்பட்ட மக்களே கிளர்ந்தெழுவீர்!


பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு  அலை இந்தியா முழுவதும் வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!




உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சூழ்ச்சி வலை என்று நாம் எச்சரித்தது உண்மையாகிவிட்டது. ஸ்டேட் பாங்க் நிர்வாகம் நடத்திய எழுத்தர் தேர்வில் தாழ்த்தப் பட்டோருக்குக் கட் ஆஃப் மார்க் 61.25; ஆனால், உயர்ஜாதி ஏழைகளுக்கோ 28.5. இந்த பயங்கரமானப்         பகற்கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்  என்றும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் சுழன்றடிக்கட்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள மிக முக்கிய  அறிக்கை வருமாறு:

பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 23, செவ்வாய்க்கிழமை) இணையத்தில் வெளியிடப்பட்டன. எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான  தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி இருந்தனர்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்ஜாதி ஏழை பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம், நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்வு முடிவுகள் - சமுகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

தாழ்த்தப்பட்டவர்களைவிட உயர்ஜாதி  ஏழைகளுக்கான  கட்-ஆஃப் மார்க் மிகவும் குறைவு!


100 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை ஸ்டேட் பாங்க் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

பொதுப் பிரிவு - 61.25

தாழ்த்தப்பட்டோர்   - 61.25

பழங்குடியினர்  -  53.75

பிற்படுத்தப்பட்டோர் (OBC)  -  61.25

உயர்ஜாதி ஏழைகள் (EWS) -  28.5

என்ற  அதிர்ச்சி தரும் விவரம் வெளிவந்துள்ளது.

சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட (Socially and Educationally Backward) மக்களுக்குக் கிடைத்திருக்கவேண்டிய இடங்களை, EWS என்ற அக்கிரமமான, சட்ட விரோதமான சமுக அநீதிச் சட்டத்தின்மூலம் பார்ப்பனர்கள், உயர்ஜாதியினர் தட்டிப் பறித்துள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானத்துக்குக் கீழ்பெறுவோர் ஏழைகள்'' என வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ஏழைகள், உயர்ஜாதி ஏழைகளை விட மிக அதிகமான மதிப்பெண் பெற்றால்தான் வேலை பெற முடியும் என்ற நிலை இதன்மூலம் உருவாக்கப் பட்டுள்ளது.

சந்திக்கு வந்த "தகுதி - திறமை!''


பார்ப்பனர்கள் நலனுக்காக, பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், தகுதி - திறமை' என இத்தனைக் காலம் பார்ப்பனர்கள் போட்டு வந்த தகுதி- திறமை' கூப்பாட்டை சந்தியில் நிறுத்தி இருக்கிறது.

உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு 28.5% மதிப்பெண் எடுத்தால் வங்கி வேலை; அதுவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 61.25% மதிப்பெண் எடுத்தால்தான் வேலை என்பது எவ்வளவு பெரிய அநீதி! அக்கிரமம்! சமுகநீதியின் அடித்தளத்தில் அமிலத்தை ஊற்றிய கொடுங்கோன்மை அல்லவா!

அன்றே எச்சரித்தோம் - நடந்தே விட்டது!


இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்ப்பது சமுகநீதியின் அடித்தளத்தையே நொறுக்கி விடும் என்று நாம் எச்சரித்தோம். அந்த எச்சரிக்கை இன்று நூற்றுக்கு    நூறு உண்மையாகி விட்டதே! பார்ப்பன, உயர்ஜாதியினருக்கு தனி பந்தி விரிக்கப்பட்டு, அமோக விருந்தை பா.ஜ.க. அரசு படைத்திருக்கிறது.

நியாயமாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சேரவேண்டிய இடம், சூழ்ச்சியால் இன்று தட்டிப் பறிக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. சமமற்ற சமுகத்தில் -  சமத்துவத்தை ஏற்படுத்து வதற்காக சம வாய்ப்பு வழங்கிடும் இட ஒதுக்கீடு முறையை, பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டு வந்து ஒழித்துக்கட்டி விட்டனர்.

தகுதி - திறமைக் கூச்சல் போட்டவர்கள் எங்கே? எங்கே?


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தால், தகுதியற்றவர்களும், திறமையற்றவர் களும் டாக்டர்களாக, அதிகாரிகளாக வந்துவிடுவார்கள் என்று கூப்பாடு போட்டவர்கள் இந்த அநீதிக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்?

எந்த வாதத்தையும் அவர்களின் சுயநல தராசு தட்டில் போட்டு நிறுத்திப் பார்த்தே முன் வைப்பார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற  இளைஞர்களுக்குச் சேரவேண்டிய வேலை வாய்ப்பு, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பார்ப்பனர்களால் பறிக்கப் பட்டுள்ள கொடுமையிலும் கொடுமையை என்ன வென்று சொல்லுவது!

பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் மூவருக்கும் கட் ஆஃப் மார்க் 61.25 என்று ஒரே நிலையில் வந்தது எப்படி? என்ன மந்திரம்', தந்திரம்?'

மற்றொரு ஆபத்து; மோசடி!


பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோருக்கான, கட்ஆஃப் மதிப்பெண் 61.25, பழங்குடியினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 53.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு அநீதி, சட்ட விரோத ஏற்பாடோ என அச்சம் வருகிறது. 61.25-க்கும் அதிகமாக உயர்ந்த மதிப்பெற்ற எஸ்.சி., ஓ.பி.சி., மாணவர்கள், பொதுப் பிரிவினராகக் கருதப்படாமல், அவர்களது இட ஒதுக்கீட்டுப் பிரிவின்கீழ் சட்ட விரோதமாகக்  கணக்கிடப்பட்டதன்  காரணமாக, எல் லோருக்கும் ஒரே கட் ஆஃப் என அறிவிக்கப்பட் டுள்ளதோ என்ற அய்யம் எழுகிறது.

அதிக ரேங்க் எடுப்பவர்களை - அவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவராயினும் பொதுப் பிரிவில் சேர்க்கப் பட்டு கணக்கிடப்பட வேண்டும்; அதுதான் சட்டம். உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதுதான். அனைத்தையும் புறக்கணித்து பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற தோரணையில் வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தொடக்கமே  பேராபத்து! பேராபத்து!!


தொடக்கமே பேராபத்தாக உள்ளது. நாடாளுமன்றம் நடந்துகொண்டு இருப்பதால், இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு உறுப்பினர்கள் கிளப்பிடவேண்டும் - கிளப்பிடவேண்டும்!

உயர்ஜாதி ஏழைகள் என்ற பசப்பு வார்த்தை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஸ்டேட் பாங்க் தேர்வின் முடிவு மூலம் அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.

கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!


எந்த விலை கொடுத்தேனும் இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்!

போராடிப் போராடிப் பெற்ற சமுகநீதி பார்ப்பன - பனியா ஆட்சியில் சவக் குழியில் தள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது.

கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்


சென்னை

24.7.2019