பக்கங்கள்

சனி, 27 ஜூலை, 2019

ஸ்டேட் வங்கி நடத்திய பணியாளர் தேர்வின் முடிவு காட்டுவது என்ன?

சமுகநீதியின் மீது விழுந்த பேரிடி

ஸ்டேட் வங்கி நடத்திய பணியாளர் தேர்வின் முடிவு காட்டுவது என்ன?


தாழ்த்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மார்க் 61.25;


உயர்ஜாதி ஏழைகளுக்கான கட் ஆஃப் மார்க் 28.5


பகற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திட ஒடுக்கப்பட்ட மக்களே கிளர்ந்தெழுவீர்!


பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு  அலை இந்தியா முழுவதும் வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!




உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சூழ்ச்சி வலை என்று நாம் எச்சரித்தது உண்மையாகிவிட்டது. ஸ்டேட் பாங்க் நிர்வாகம் நடத்திய எழுத்தர் தேர்வில் தாழ்த்தப் பட்டோருக்குக் கட் ஆஃப் மார்க் 61.25; ஆனால், உயர்ஜாதி ஏழைகளுக்கோ 28.5. இந்த பயங்கரமானப்         பகற்கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்  என்றும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் சுழன்றடிக்கட்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள மிக முக்கிய  அறிக்கை வருமாறு:

பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 23, செவ்வாய்க்கிழமை) இணையத்தில் வெளியிடப்பட்டன. எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான  தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி இருந்தனர்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்ஜாதி ஏழை பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம், நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்வு முடிவுகள் - சமுகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

தாழ்த்தப்பட்டவர்களைவிட உயர்ஜாதி  ஏழைகளுக்கான  கட்-ஆஃப் மார்க் மிகவும் குறைவு!


100 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை ஸ்டேட் பாங்க் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

பொதுப் பிரிவு - 61.25

தாழ்த்தப்பட்டோர்   - 61.25

பழங்குடியினர்  -  53.75

பிற்படுத்தப்பட்டோர் (OBC)  -  61.25

உயர்ஜாதி ஏழைகள் (EWS) -  28.5

என்ற  அதிர்ச்சி தரும் விவரம் வெளிவந்துள்ளது.

சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட (Socially and Educationally Backward) மக்களுக்குக் கிடைத்திருக்கவேண்டிய இடங்களை, EWS என்ற அக்கிரமமான, சட்ட விரோதமான சமுக அநீதிச் சட்டத்தின்மூலம் பார்ப்பனர்கள், உயர்ஜாதியினர் தட்டிப் பறித்துள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானத்துக்குக் கீழ்பெறுவோர் ஏழைகள்'' என வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ஏழைகள், உயர்ஜாதி ஏழைகளை விட மிக அதிகமான மதிப்பெண் பெற்றால்தான் வேலை பெற முடியும் என்ற நிலை இதன்மூலம் உருவாக்கப் பட்டுள்ளது.

சந்திக்கு வந்த "தகுதி - திறமை!''


பார்ப்பனர்கள் நலனுக்காக, பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், தகுதி - திறமை' என இத்தனைக் காலம் பார்ப்பனர்கள் போட்டு வந்த தகுதி- திறமை' கூப்பாட்டை சந்தியில் நிறுத்தி இருக்கிறது.

உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு 28.5% மதிப்பெண் எடுத்தால் வங்கி வேலை; அதுவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 61.25% மதிப்பெண் எடுத்தால்தான் வேலை என்பது எவ்வளவு பெரிய அநீதி! அக்கிரமம்! சமுகநீதியின் அடித்தளத்தில் அமிலத்தை ஊற்றிய கொடுங்கோன்மை அல்லவா!

அன்றே எச்சரித்தோம் - நடந்தே விட்டது!


இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்ப்பது சமுகநீதியின் அடித்தளத்தையே நொறுக்கி விடும் என்று நாம் எச்சரித்தோம். அந்த எச்சரிக்கை இன்று நூற்றுக்கு    நூறு உண்மையாகி விட்டதே! பார்ப்பன, உயர்ஜாதியினருக்கு தனி பந்தி விரிக்கப்பட்டு, அமோக விருந்தை பா.ஜ.க. அரசு படைத்திருக்கிறது.

நியாயமாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சேரவேண்டிய இடம், சூழ்ச்சியால் இன்று தட்டிப் பறிக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. சமமற்ற சமுகத்தில் -  சமத்துவத்தை ஏற்படுத்து வதற்காக சம வாய்ப்பு வழங்கிடும் இட ஒதுக்கீடு முறையை, பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டு வந்து ஒழித்துக்கட்டி விட்டனர்.

தகுதி - திறமைக் கூச்சல் போட்டவர்கள் எங்கே? எங்கே?


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தால், தகுதியற்றவர்களும், திறமையற்றவர் களும் டாக்டர்களாக, அதிகாரிகளாக வந்துவிடுவார்கள் என்று கூப்பாடு போட்டவர்கள் இந்த அநீதிக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்?

எந்த வாதத்தையும் அவர்களின் சுயநல தராசு தட்டில் போட்டு நிறுத்திப் பார்த்தே முன் வைப்பார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற  இளைஞர்களுக்குச் சேரவேண்டிய வேலை வாய்ப்பு, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பார்ப்பனர்களால் பறிக்கப் பட்டுள்ள கொடுமையிலும் கொடுமையை என்ன வென்று சொல்லுவது!

பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் மூவருக்கும் கட் ஆஃப் மார்க் 61.25 என்று ஒரே நிலையில் வந்தது எப்படி? என்ன மந்திரம்', தந்திரம்?'

மற்றொரு ஆபத்து; மோசடி!


பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோருக்கான, கட்ஆஃப் மதிப்பெண் 61.25, பழங்குடியினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 53.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு அநீதி, சட்ட விரோத ஏற்பாடோ என அச்சம் வருகிறது. 61.25-க்கும் அதிகமாக உயர்ந்த மதிப்பெற்ற எஸ்.சி., ஓ.பி.சி., மாணவர்கள், பொதுப் பிரிவினராகக் கருதப்படாமல், அவர்களது இட ஒதுக்கீட்டுப் பிரிவின்கீழ் சட்ட விரோதமாகக்  கணக்கிடப்பட்டதன்  காரணமாக, எல் லோருக்கும் ஒரே கட் ஆஃப் என அறிவிக்கப்பட் டுள்ளதோ என்ற அய்யம் எழுகிறது.

அதிக ரேங்க் எடுப்பவர்களை - அவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவராயினும் பொதுப் பிரிவில் சேர்க்கப் பட்டு கணக்கிடப்பட வேண்டும்; அதுதான் சட்டம். உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதுதான். அனைத்தையும் புறக்கணித்து பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற தோரணையில் வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தொடக்கமே  பேராபத்து! பேராபத்து!!


தொடக்கமே பேராபத்தாக உள்ளது. நாடாளுமன்றம் நடந்துகொண்டு இருப்பதால், இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு உறுப்பினர்கள் கிளப்பிடவேண்டும் - கிளப்பிடவேண்டும்!

உயர்ஜாதி ஏழைகள் என்ற பசப்பு வார்த்தை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஸ்டேட் பாங்க் தேர்வின் முடிவு மூலம் அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.

கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!


எந்த விலை கொடுத்தேனும் இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்!

போராடிப் போராடிப் பெற்ற சமுகநீதி பார்ப்பன - பனியா ஆட்சியில் சவக் குழியில் தள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது.

கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்


சென்னை

24.7.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக