பக்கங்கள்

ஞாயிறு, 16 ஜூன், 2019

'நீட்' மோசடி : 'நீட்' தேர்வில், பூஜ்யம் எடுத்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்?

சென்னை, ஜூன் 16 பஞ்சாப் மா நிலத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற 180 மாணவர்களில் 50 மாணவர்கள், இயற்பியல் அல்லது வேதியியல் பாடத் தேர்வில்  ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 7 மாணவர்கள், பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளனர். 10 மாணவர்கள், பூஜ்யத்திற்கும் கீழே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இவை அனைத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கிறோம் என்ற பேரில், இத்தகைய மோசடி நடைபெற்றுள்ளது.  2017-ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்படிப்பில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து சேர்க்கப்பட்டுள்ளனர் என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிக்கையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டில் தனியார் கல்லூரியான அதேஷ் மருத்துவக் கல்லூரி 68 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்து, மாணவர்களை சேர்த்துள்ளது. இதில் பாதிக்கும்  மேற்பட்ட மாணவர்கள், பூஜ்யம், ஒற்றை மதிப்பெண் அல்லது எதிர்மறை மதிப்பெண்கள் பெற்றவர்களாவர். இந்த கல்லூரியில் தான் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

இது பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு என்றாலும், நாடு முழுவதும் இது போன்ற நிலைமைதான் இருக்கும் என்பது வெளிப்படை. இந்திய மருத்துவக் கழகமோ அல்லது மருத்துவ கவுன்சிலிங் குழுவோ நீட் தொடர்பான அனைத்து மதிப்பெண் விவரங்களையும் வெளிப் படையாக தெரிவிக்காத நிலையில், நீட் தேர்வு என்பது தகுதி அடிப்படையிலான தேர்வு என்ற பொய்யான கருத்தையே சொல்லி வருகின்றனர்.

சுமார் ஏழு லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மொத்தம் உள்ள 65000 இடங்களில் (இந்த ஆண்டு 70000 இடங்களாக அதிகரிப்பு), பெரும்பாலான இடங்களை,  நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அதிக வசதி படைத்தவர்களே இடம் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று பண வசதி இல்லாதவர்கள், வாய்ப்பை நழுவவிடுகின்றனர்.

தகுதி, திறமையின் அடிப்படையில்தான் மருத்துவம் படிக்க வேண்டும்; அதற்கு நீட் தேர்வுதான் உரிய தீர்வு என மத்திய பார்ப்பன அரசு முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியபோது, நீட் தேர்வு என்பது ஒரு மோசடியே, வசதி படைத்தவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமே அதிக வாய்ப்பை உருவாக்கும், மருத்துவப்படிப்பு, ஏழை சமுக மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என முதன் முதலில் இந்த நாட்டிற்கு எடுத்துரைத்தது திராவிடர் கழகம் தான். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து இது குறித்து எச்சரித்து அறிக்கை விடுத்து, போராட்டம் நடத்தினார்.

தற்போது அந்த எச்சரிக்கை உண்மையானது என இன்றைய 'டைம்ஸ் ஆப் இந்தியா'வின் செய்தி உறுதி செய்துள்ளது.

நீட் மோசடியை நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டவேண்டிய முக்கிய பணியை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெத்து செல்ல வேண்டும். மக்கள் மன்றத்திலும் இதன் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி, நீட் விலக்கு தொடர்பான தமிழக சட்டமன்றம் அனுப்பிய மசோதாவை நிறைவேற்ற வழிவகை செய்திட வேண்டும்.

- கோ. கருணாநிதி

- விடுதலை நாளேடு, 16.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக