பக்கங்கள்

வெள்ளி, 7 ஜூன், 2019

இடஒதுக்கீடு குறித்து ஒரு மருத்துவரின் பார்வை!

கல்லூரியில் ஒன்றாகப் படித்து இப்போது மருத்துவராக இருக்கும் நண்பன் ஒருவன் ரிசர்வேசனை எதிர்த்து சில நாட்கள் முன்பு ஸ்டேட்ஸ் (தற்போதைய நிலை) போட்டிருந்தான்.
சில நாட்கள் முன்பு எனது பழைய நினைவுகள் அடங்கிய ட்ரங்க் பெட்டியை திறந்து பார்த்ததில்   நான் மருத்துவப்படிப்பிற்கு சேர்ந்தது, அதை யொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள், பத்திரிகை விளம்பரங்கள், எனது ஹால் டிக்கெட், வேதியியல் பரீட்சையின் போது எனக்கு வந்த வைரஸ் காய்ச்சல், அதற்கு காண்பித்த டாக்டர் பழனிச்சாமியின் ப்ரிஸ்க்ரிப்சன், வேலூர் மருத்துவக் கல்லூரியில் எனது அலாட்மண்ட் ஆர்டர் என்று பார்த்துக்கொண்டு சென்றேன்.
அப்போது என்னுடன் வேலூர் மருத்துவக் கல்லூரியில் ஒரே நாளில் சீட் எடுத்த மாண வர்களின் அட்டவணையை டவுன்லோடு செய்து ஒரு நினைவுக்காக ப்ரிண்ட் செய்து வைத்தேன். அதில் அந்த ரிசர்வேசனை எதிர்த்த நண்பன் "ரிசர்வேசன்" சீட்டில் தான் மருத்துவம் படிக்க சேர்ந்திருப்பது தெரிந்தது.
நண்பர்களே...
நம்மில் பலருக்கும் நாம் எந்த சீட்டில் படித்தோம் என்பதே தெரியமாட்டேங்குது!
BC என்பது பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - 26.5%, BCM பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு - 3.5%, MBC என்பது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - 20%, SC என்பது பட்டியலினம் அல்லது ஒடுக்கப்பட்டோர் - 15%. SCA  என்பது பட்டியலினத்துக்குள் அருந்ததியருக் கான உள் ஒதுக்கீடு - 3%, ST என்பது பழங்குடியினருக்கு - 1%/
இது தான் தற்போது தமிழகத்தில் உள்ள ரிசர்வேசன் பாலிசி.
இதில் மீதம் 31% பொது அதாவது யார் வேண்டுமானாலும் போட்டி போட்டுக் கொள்ளலாம்.
நான் கல்லூரியில் சேர்ந்த போது BCM உள் ஒதுக்கீடு கிடையாது. நான் BC பிற் படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் மெரிட் சீட் வழங்கப்பட்டு படித்தேன்.
நான் ரிசர்வேசனுக்கு ஆதரவாக பேசுகிறேன்.
ஆனால் அதே கவுன்சிலிங் நாளில் என்னுடன் அதே BC பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பயின்ற நண்பன் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்.
இப்படி பல பேர் உண்டு .
இந்த 69 % இட ஒதுக்கீட்டில் மருத்துவம் இஞ்சினீயரிங் படித்து விட்டு எங்கேனும் மேற்குலக நாடுகளில் அமர்ந்து கொண்டு ரிசர்வேசனுக்கு எதிராக மீம்/ போஸ்ட் / ரைட் அப் எழுதுவது.
முதல்ல நீங்க அந்த ரிசர்வேசன்ல தான் வந்தீங்கங்குறத மறந்துராதீகப்பு..
ஏத்தி விட்ட ஏணிய எட்டி உதைக்க லாமோ?
ஏனய்யா ... இந்த சமுதாயம் 2000 வருசமா சமமா இல்ல. அத ஒத்துக்கோங்க முதல்ல
ஏன் இப்ப கூட சமமா இல்லை . அதையும் ஒத்துக்கப்பா..
ஒரு சாரார் படிக்கவே விடாம அவன் அப்பன் பாட்டன் பூட்டன் பாத்த வேலைய பாக்குறதுதான் சரினு இந்த சமுதாயம் சொல்லிட்டுருந்துச்சு.
இந்த சமுதாயத்த ஓரளவு சரி பண்ணத் தான் ரிசர்வேசன் வந்துச்சு
பல பேரோட நெனப்பு என்ன தெரியுமா?
ரிசர்வேசன்னா அது தரமற்றதுனு.
அப்படி இல்ல...
புலிக்கும் புலிக்கும் தான் போட்டி இருக்கணும் புலிக்கும் பூனைக்கும் போட்டி வச்சா அது சரிசமமா இருக்குமா? அதுலயும் அந்த பூனையோட காலையும் ஒடச்சு நொண்டி ஆக்கிட்டு போட்டி வைக்கிறது சரியா?
சமீபத்தில் கூட ஒரு போஸ்ட் பார்த்தேன்   NEET PG கவுன்சிலிங்குல் 4000 ஆல் இந்தியா ரேங்க் எடுத்தவருக்கு சீட் கிடைக்கலையாம் 40,000 ஆல் இந்தியா ரேங்க் எடுத்தவனுக்கு சீட் கிடைச்சுருச்சாம்.
இது பெரிய அநீதினு போட்டு பரப்பிட்டு கெடந்தானுங்க
அந்த 40,000 ரேங்க் எடுத்தவன் ஒரு பழங்குடி இனத்தான். -
ஏன்யா.. உனக்கும் அவனுக்கும் ஜோடி போட்றீங்க.. நீ ஏசி கார்ல போறவன் அவன் வெறும் கால்ல நடக்குறவன்
நீ ஏசில தூங்குவ அவன் கொசுக்கடில வண்டு கடில தூங்குவான்
நீ இன்வெர்ட்டர்/ஜெனரேட்டர்னு கரண்ட் போனாக்கூட வசதி பண்ணி படிப்ப.
அவன் தெரு வௌக்கு வெளிச்சத்த மட்டுமே நம்பி படித்தவன். இன்னும் அவன் வீட்டுக்கு கூட முழுசா கரண்ட் வந்து சேரல.
நீ வெளிய சாப்டப்போனா 2000 ரூவா முழுசா ஆகும்.
அவுங்க அப்பனோட ஒரு மாச பொழப்பே அவ்வளவு தான்டா.. நீ ஒரு பீரோ காணாத அளவுக்கு துணிமணி வச்சுருக்கவன் அவனுக்கு உடுத்த ஒன்னு - மாத்த ஒன்னு இது தாண்டா அவன் பொழப்பு
நீ உங்க பரம்பரைல பத்தாவது டாக்டரு; அவன்தாண்டா அவங்க இனத்துலயே மொத டாக்டரு,  உனக்கும் அவனுக்கும் சோடி போட்ற.. இது நியாயமா?
ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
விடுதலை ஞாயிறு மலர், 4.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக