பிஜேபியின் 2ஆம் பயணம் சமுக அநீதியில் தொடங்குகிறது சமுக நீதியாளர்களை ஒன்றிணைத்துத் தீர்வு காண்போம்!
மருத்துவக் கல்லூரிக்கான அகில இந்தியக் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாதாம்!
அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பார்ப்பனர் உள்ளிட்ட உயர் ஜாதியினருக்கு உண்டாம்!
மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய இடஒதுக்கீடு கிடையாதாம். அதே நேரத்தில் பிஜேபி ஆட்சியால் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட உயர் ஜாதியினரில் பொருளா தாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்படுத்தப் படுமாம். ஆக, பிஜேபியின் இரண்டாவது பயணத் தொடக்கத்திலேயே சமுக நீதிக்குச் சவக் குழி வெட்டப்படுகிறது. சமுக நீதியாளர்களை ஒன்றிணைத்து இதற்கான தீர்வு காணப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மருத்துவத் துறையில் இளநிலைப் பிரிவில் இந்தியாவிலுள்ள மொத்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 216; அதிலுள்ள MBBS இடங்கள் 30,455. இவற்றில் தமிழ் நாட்டில் மட்டும் 25 கல்லூரிகள் (முதல் மாநிலம்) மற்றும் 3,250 இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும், ஆக 4,600 இடங்கள் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய தொகுப்பிற்குத் தருகின்றன. தமிழகம் மட்டும் 490 இடங் களைத் தருகிறது (வேறு எந்த மாநிலத் தையும்விட அதிகம்). இந்த மொத்தமுள்ள 4,600 இடங்களில் மத்திய அரசு SC/ST க்கான இடஒதுக்கீட்டை 22.5 சதவீதம் வழங்குகிறது. ஆனால் OBC - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதில்லை. ஏனெனில் இந்த 4,600 இடங்களும் ஒரு கல்லூரியைச் சார்ந்தவை அல்ல, அது ஒரு கூட்டுத் தொகுப்பு தான், எனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக் கீட்டை அமல்படுத்த முடியாது என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர் களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் பிரித்தாளும் பார்ப்பனத் தந்திரம் இது. அதே அரசு 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கான இடஒதுக் கீட்டை (EWS quota) இந்த வருடமே இந்த 4,600 இடங்களில் அமல்படுத்த வேண்டும் என்று national testing agency மற்றும் MCI க்கு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 4600 இடங்களை பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினருக்கு உறுதி செய்தாகிவிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய 1242 இடங்களை அளிக்காமல் கொல்லைப்புறம் வழியாக அதையும் பார்ப்பனர்களுக்கே தாரை வார்க்கின்றது.
'புதிய இந்தியா - பாரதிய ஜனதா'வில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், இந்தியா முழுமையும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 'முதல் பரிசு' அவர்கள் மருத்துவர்கள் ஆகும் கனவில் மண்ணை அள்ளிக் கொட்டுவதுதான்.
பாரதிய ஜனதா என்பது பார்ப்பனர் நிரம்பி வழியும் கூடாரமாகி விட்டது. எம்.பி.க்களும் சரி, அமைச்சர்களும் சரி பார்ப்பனர்களே தலைக் கொழுத்த அள வுக்கு அதிகரித்துக் காணப்படுகின்றனர்.
சமுகநீதி என்றாலே எட்டிக்காயென்பது ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கொள்கை. போதும் போதாததற்கு 50 விழுக்காட்டுக்கு மேல் மத்திய அமைச்சரவையில் பார்ப்பனர் களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பதால் அடுத்தடுத்து சமுகநீதியை முற்றிலுமாக சவக் குழிக்கு அனுப்பி விடுவார்கள்.
இதற்கான ஒருதீர்வை தமிழ்நாடு தான் வழிகாட்ட வேண்டும். சமுக நீதியாளர்களை ஒருங்கிணைத்து உரிய பரிகாரம் காண திராவிடர் கழகம் முயற்சிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி. வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
5.6.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக