பக்கங்கள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

களப் பலியாகும் சமூகநீதி!


பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குச் செல்லும் பொழுது ஏற்படும் இழப்புகள், இடர்ப்பாடுகள் பற்றி ஒரு பக்கத்தில் பெரும் அளவில் பேசப்படுவது நியாயமே!
அதில் இன்னொரு பேராபத்து இடஒதுக்கீடு - சமூகநீதி - சவக் குழியில் தள்ளப்படுவதாகும். ஆனால் இதைப்பற்றி இடதுசாரிகள் உட்பட யாரும் பேசுவதில்லையே.
பார்ப்பனர்கள், பார்ப்பனர்களின் ஊடகங்கள், பொதுத்துறை குன்றி, தனியார்த்துறை வளர வேண்டும் என்பதில் வானம் வரை வாயைக் கிழித்துப் பேசுவதற்கு முக்கிய காரணம் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு இல்லை என்பதால் தான்.
2012ஆம் ஆண்டு கணக்கின்படி தனியார்த் துறைகளில் இயக்குநர்களுள் பார்ப்பனர்கள் மட்டும் 92.6 சதவீதமாகும் பிற்படுத்தப்பட்டோர் 3.8 சதவீதமாகும். தாழ்த்தப்பட்டோர் 3.5 சதவீதமாகும். (Economic and Political Weekly 11.8.2012).
இந்த இயக்குநர்கள்தாம் பணி நியமனம் செய்யும் இடத்தில் குளிர்சாதன அறைகளில் அட்டாணிக்கால்  போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் முதுகில் பூணூலைத் தடவிப் பார்த்து நியமனம் செய்யும் இயல்பினர் என்பதற்கு ஆய்வுகள் ஏதும் தேவைப்படாது; கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல், புனியா மிகவும் கவலையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும், கடமையுணர்ச்சியுடனும் கூறியது  -கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.
தனியார் துறைகளில் ஒரு திடமான ஒழுங்குமுறைச் சட்டங்கள் இல்லை; தற்போது பெருகி வரும் தனியார்த் துறை நிறுவனங்களை இடஒதுக்கீட்டு விதியின்கீழ் கொண்டு வந்து கல்வி, வேலை வாய்ப்பில் சமூக நீதி நிலைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
இனி சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்பதை பொருத்ததே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அழுத்தமாகவே சொல்லி வருகிறார்கள். அதற்காகத் திராவிடர் கழகம் களத்தில் இறங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அவர் கூறியதாவது,  தனியார் துறையில் இடஒதுக்கீடு தற்போது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆனால் தனியார் துறைகள் இடஒதுக்கீட்டை வழங்க மறுத்துவருகின்றன. இதன் காரணமாக தனியார் துறையில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.  இதை முக்கிய பிரச்சினையாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆணையம் எடுத்துக்கொள்ளவேண்டும். தனியார் அமைப்புகள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளிலும் அரசு மானியம் பெறும் பள்ளிகளிலும் இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறினார்.
அரசுத்துறை பல்வேறு பிரிவுகளை தனியார் மயமாக்கி வருவதால், இட ஒதுக்கீட்டின் பலன் குறைந்துகொண்டு வருகிறது. சில மாநிலங்கள் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை வைத்திருந்தாலும், அங்குள்ள தனியார் நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு விதியை விரிவுபடுத்தி, தனியார் துறையிலும்  கொண்டுவரும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டின் காரணமாக ஏற்பட்ட மாற்றம் மிகவும் மெதுவாகத்தான் இருந்து வந்தது, தற்போது பொருளாதார மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணிகளால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பொருளாதார சமநிலை உருவாக வேண்டுமென்றால் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். இல்லையென்றால்  இனிவரும் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு சமூகப்பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்றார் பி.எல். புனியா.
-விடுதலை,8.11.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக