பக்கங்கள்

வியாழன், 29 அக்டோபர், 2015

கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?


தந்தை பெரியார்
தந்தை பெரியாரவர்கள் நன்றியுரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது:-
இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே, இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக் கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்தி- பாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள். வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; மனதறிந்து, நமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. என்றாலும், அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன், என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்;  நம் இயக்கம்  நாச இயக்கம்- ஆக்க இயக்கமல்ல, அழிவு இயக்கமாகும். நாசமான காரியங்களை ஆக்கவேலை யாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும். இந்த மாதிரி நாசவேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில், சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு இருக்கின்றார்கள். நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக் காரர்கள் ஆக்கிவிட்டார்கள். அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நாசவேலை செய்பவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக் கின்றோம். நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின் படி நடப்பவர்கள் ஆவார்கள்.
மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என் றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வர வில்லை; மக்களை ஏமாற்றி வரவில்லை; எங்கள் கொள்கை கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், சம்பிரதாயம் இல்லை,  சாதி இல்லை. இவை யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவர்கள் ஓட்டு களைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.
நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள்,  இராமாயணத்தைக் கொளுத்தியவர்; புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்த கம் எழுதியவராவார். பத்திரிகைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால், நம் கொள்கைகளை - செயல்களை வெளி யிடாமல் அதற்கு மாறானவற்றை விளம் பரம் செய்கின்றார்கள். என்றாலும், அப் படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30 லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை- வெளியிடாமல் இருக்க முடியவில்லை.  இந்த 30 இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே!  அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?
அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால், கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை, தேவையில்லை; ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே! இது இந்த ஆட்சிக்குக் கடவுள்-மதம்-சாஸ்தி ரங்களில், சாதி, பழமைகளில் நம்பிக்கைக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த சாமி படங்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!
இந்த ஊரில் எனக்குச் சிலை வைத் தார்கள் என்றால், இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை, என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை- கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழு கிறவன் காட்டுமிராண்டி என்று சொல்ப வனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும். இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந் தால் கோயில்களை எல்லாம் அவர்களா கவே இடித்து விடுவார்கள்.
நாம் இந்த ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின் றோம். ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல், மூடநம்பிக் கைக்காரன் ஆட்சிதான்- பார்ப்பான் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது. பார்ப் பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது.
பார்ப்பானுக்கு ஆட்சியில்- இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானே, அதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறது! இல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சி யிலிருப்பார்கள். நம்முடைய தொண்டின் காரணமாக, பிரச்சாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும் படி ஆயிற்று. நமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லை; அவன் மட்டும் என்ன உயர்ந்தவன்? நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்? எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பது? இன்னொருவன் பஞ்சமன், பறையன், தீண்டப்படாதவனாக இருப்பது? என்கின்ற இது மாதிரிப் பிரசாரம் செய்ததாலே தான் இன்றைக்குப் பஞ்சமனை, நாவிதனை, பள்ளன், பறையனை எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம்.  பல பெரும் உத்தியோகங் களில் நம்மவர் இருக்கும் படியாயிற்று. இந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள்- தொண்டாற்றியவர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.
காங்கிரசாரும், காந்தியும் இந்தத் தீண் டாமையைக் காப்பாற்றும் வகையில்  தான் நடந்து கொண்டனரே தவிர, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக்  கிடையாது. நம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கடவுள், மதம், கோயில் இவற்றை எல் லாம் இன்னமும் கட்டிக்கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்? ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழி படுகிற கடவுளால், பின்பற்றுகிற மதத்தால், கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானே? எனக்குக் கடவுளும் வேண்டாம்; மதமும் வேண்டாம்; என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன், என் கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.
இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான், தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.
நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாக, திருவாங்கூர் காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடி களை எல்லாம் நுழையவிட்டான்.
நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டி, மக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோது, பலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர். மாறியவுடன் அதுவரை ஈழவர்கள், கீழ்சாதிக்காரர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும், மேல் சாதிக்காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர்; கலவரம் ஏற்பட்டது; அதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட் டான். உடனே கலவரம் முற்ற ஆரம்பித்தது; இந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம் பித்து விட்டது; எங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்று. இதைப் பார்த்துப் பயந்து, அப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது  இடங்கள், கோயில், குளம், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும், எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டு, என்று திறந்து விட்டார். அதன் பிறகுதான் இங்கு இவர்கள்- தீண்டப் படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர். அப்போது நான் காந்தி யிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததன் மூலம் எங்களையும் பறை யனாக்கினீர்களே தவிர, பார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில் லையே என்று கேட்டேன். உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போகவேண்டும் என்று சொன்னாரே ஒழிய, பார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடு, நடைமுறை யில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டி ருந்த இடம்வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான்; அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.
நாட்டின் சகல துறைகளிலும் பார்ப் பானின் ஆதிக்கமே இருந்து வந்தது. ஆட்சித்துறை, அரசியல் துறை, மதத்துறை, எல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்தி லிருந்து வந்தான்.
எனக்குத் தெரிய முதன் முதல் அய்க் கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார், முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும். அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என் றால், அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும்.  இன்று அய்க்கோர்ட்டில் இருக் கின்ற 14 ஜட்ஜூகளில் 10 பேர்கள் தமி ழர்கள். மீதி 4 பேர்கள் தான் பார்ப்பனர்கள், இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை  12 ஆகிவிடும். பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்தது. இதனால் என்ன பயன் என்பீர்கள்? நம் வக்கீல்களுக்கும், நம் மக்களுக்கும் அத னால் நல்ல வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன். நீதித்துறையில் மட்டும் அல்ல, கல்வி விஷயத்திலும் காமராசரைப் போல, அவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர். இதுவரை எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லாமல் இருந்தது. இப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சி) வரை இலவசமாக்கி இருக் கிறார்கள்.
நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றன. இந்தக் கட்சியைப் போல இனஉணர்ச்சியுள்ள, அரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாது. இந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்ப வனாகத்தான் இருப்பான்; பார்ப்பான் சொல் கிறபடி நடப்பவனாகத் தான் இருப்பான்.
நம் பத்திரிகை என்பவை ஆரம்பிக் கும் போது நம் படங்களைப் போட்டு- கொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும். மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.
இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றன. இது மாடு மேய்க்கப் போகாது, உத்தியோகம் வேண்டும் என்று தான் கேட்கும்; நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும். இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும். மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோ, அவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லையே. நம் மக்களுக்கு இன உணர்ச்சி, அறிவுப் புத்தி இருக்க வேண்டும். இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும். இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும். இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றோம். அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.
நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தர மான நிலையில்லை. முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  கையை விட்டால் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றது. அந்த நிலை மாறி, நிரந்தரமாக நிற்கிற வரை, நாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்ல; ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர் தான் கடவுள் இல்லை என்று சொன்ன வராவார் என்று சொல்லுவான். இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலை யாகும். நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல் கிறார்கள். அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் கள், அதனால் தான் சொல்கிறார்கள்.
வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?
நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும்; நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.
24. 5. 1969 அன்று தர்மபுரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
(விடுதலை, 9.6.1969)
-விடுதலை,25.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக