பக்கங்கள்

வியாழன், 29 அக்டோபர், 2015

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.
செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன்ஸ் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.
மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமுகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மை யாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்,
இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது.
எனவே பார்ப்பனரல்லாதார் சமுக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர் களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934


தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே. புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன்கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழடைய விரும்புகிறான்... ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின் பற்றுகையில் மிகவும் தவறான முறையைப் பின்பற்றுகிறான். மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்கு முயற்சிக்கும் அத்தனையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்துக்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவனுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.
  • புகழும் இன்பமும்தான் மனித ஜீவனின் லட்சியம். புகழ் என்றால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதல்ல; ஒருவர் செய்த நன்மையால் பயனடைந்து மற்றவர் அவனைப் புகழும் புகழ். மனிதன் மற்றவனுக்குச் சேவை செய்ய ஏற்பட்டவனே தவிர தனக்குத்தானே வாழ்பவன் அல்ல.
  • -விடுதலை,24.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக