பக்கங்கள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

அய்தராபாத் சமூக நீதிப் போராளிகளின் சங்கமத்தில் தமிழர் தலைவரின் பங்கேற்பும் - பயன்பாடும்

அய்தராபாத் சமூக நீதிப் போராளிகளின் சங்கமத்தில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் நெறி வார்ப்பு

பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா - தமிழர் தலைவரின் பங்கேற்பும் - பயன்பாடும்

தொகுப்பு
வீ.குமரேசன்
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் சமூகநீதிக்கான உணர்வுகள், பல்வேறு தளங்களிலும் போற்றிப் பேணப்பட்டு வருவது ஒரு தனிச்சிறப்பாகும். அரசி யல் கட்சி எல்லைகளைத் தாண்டி சமூகநீதிச் சுடரை தூக்கிப் பிடிப்பதில் அனைத்துத் தரப்பினரும் இணக்க மாக, ஒருங்கிணைந்து செயல்படுவது நாட்டின் மற்ற பகுதியிலும் பின்பற்றத் தக்கதாக விளங்கி வருகிறது. பிற் படுத்தப்பட்ட மக்களிடையே விழிப் புணர்வினை ஊட்டி, அவர்களது மேம்பாட்டிற்கு பாடுபடும் நோக்கத் தில் தெலுங்கு தேசக் கட்சியின் முன்னணித் தலைவரும், ஒன்று பட்ட ஆந்திர பிரதேசத்தில் உள்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்ச ராகப் பணியாற்றியவரும், தற்சமயம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.தேவேந்தர் கவுடு சமூகநீதி உரிமையினை வலியுறுத் திடப் பிற்படுத்தப்பட் டோர் அதிகாரத் துவ மய்யத்தினை (Backward Class Centre for Empowerment - BCCE) 2014-ஆம் ஆண்டில் துவக் கினார். சமூகநீதிக்கான நிறுவனத்தின் துவக்க விழாவில் தமிழர் தலைவர் பங்கேற் றிட பெரிதும் விரும்பினார்.
அந்த சமயம் ஏற்கெனவே ஒத்துக்கொள்ளப் பட்ட சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி காரணமாக தமிழர் தலைவர் அந்த துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றிட வில்லை. இந்த ஆண்டு 2015-இல் பிசிசிஇ (BCCE) நிறுவனத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் அவசியம் தமிழர் தலைவர் பங் கேற்றுச் சிறப்பித்திட வேண்டும் என்ற டி.ஓ.தேவந்தர் கவுடு அவர்களது அழைப்பிற்கிணங்க தமிழர் தலைவர் செப்டம்பர் திங்கள் 6-ஆம் நாள் அய்தராபாத் நகரத்திற்குப் பயண மானார். உடன் திராவிடர் கழக வழக் கறிஞர் அணியின் தலைவர் த.வீர சேகரன் மற்றும் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் சென்றிருந்தனர்.
அதிகாலை 4 மணிக்குக் கிளம்பி சென்னை விமான நிலையம் வந்த தமிழர் தலைவர், பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்ததும், விமானத்தில் வழங்கப் பட்ட நாளிதழ்களைப் படிக்க முனைந் தார். தி இந்து ஆங்கில நாளி தழைப் புரட்டியதும் தமிழர் தலைவர் பார்வையில் பட்டது பகுத்தறிவாளர் - தோழர் ஆசிரியர் இராஜேந்திரன் நடத்தி வரும் சிறைக் கைதிகளுக்கான பாட வகுப்புகள் பற்றி படத்துடன் கூடிய செய்தி.  இராஜேந்திரன், புழல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளுக்கு, சிறைச்சாலைக்குச் சென்று வகுப்பு எடுத்து வருகிறார். இதன் மூலம் பயின்று பள்ளி இறுதித்தேர்வில் வெற்றி பெற்ற கைதிகள் ஏராளம். சிறைத்துறையின் அனுமதியுடன் ஆசிரியர் இராஜேந் திரன் கல்வி கற்பிக்கும் பணியினை ஆற்றி வருகிறார் என குறிப்பிடும் செய்தியோடு ஆசிரியர் இராஜேந் திரன் பெரியாரியலார் (Periyarist) எனும் குறிப்பும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. செய்தியோடு, கருப்புடை அணிந்து கைதிகளுக்கு வகுப்பு எடுத்து, அவர்கள் தேர்வெழுது வதை பள்ளி ஆசிரியர் இராசேந்திரன் பார்வையிடும்  ஒளிப்படமும் பிரசுரமாகி இருந்தது. செய்தியுடன், ஒளிப்படத் தினையும் படித்து பார்த்த தமிழர் தலைவர் பெரியாரியலார் கல்விப்பணி ஆற்றி வருவது பற்றியும் அது செய்தியாக நாளிதழில் வெளியிடப்பட்டதும் குறித்தும் மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரு மணி 10 நிமிட நேரப்  பயணத்தில் தமிழர் தலைவர் அய்தராபாத் இராஜீவ் காந்தி விமான நிலையம் வந்தடைந்தார். விமானத்திலிருந்து இறங்கி, பயணிகள் சுமைக்காக காத்திருந்தோம். வந்திறங்கிய பயணிகள் அனைவரும் தங்களது உடை மைகளைப் பெற்றுச் சென்றுவிட்டனர். தமிழர் தலைவரது பயணத்தில் பதிவு செய்யப்பட்ட உடைமைகளுள் ஒன்று, நகர்த்தும் வார்பட்டையில்  வந்து சேரவே இல்லை. நகர்த்தும் பட்டையும் பயணச் சுமைகளை வழங்கி முடித்துவிட்ட நிலை யில் நிறுத்தப்பட்டு விட்டது. உடைமை வராத நிலவரத்தினை அங்கிருந்து விமான நிறுவன ஊழியரிடம் தெரிவித்தோம்.
பயணச்சீட்டு, பயண உடைமை பற்றி விமான நிறுவனம் அளித்த விவரங் களையும் அந்த ஊழியரிடம் அளித்தோம். உடனே விமானத்தைத் தொடர்பு கொண்டு, விடுபட்ட பயண உடைமை எதுவும் உள்ளதா என அந்த ஊழியர் விசாரித்தார். சென்னை என பதில் வந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள பயணச் சீட்டு வழங்கிய அவர்களது நிறுவன அலுவலகத்திற்கும் செல்பேசியில் தொடர்பு கொண்டு பயண உடைமை சரியாக விமானத்தில் அனுப்பப்பட்டுள் ளதா எனவும் கேட்டறிந்தார். உடைமை கள் பதிவு செய்யப்பட்டு முறையாக விமானத்தில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட் டுள்ளதாக செய்தி வந்தது. இப்படி முயற் சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, அந்த ஊழியர் தமிழர் தலைவரிடம் வந்து எப்படியும் உடைமையினை கண்டுபிடித்து அளித்துவிடுவோம். நீங்கள் அவசரமாக கிளம்ப வேண்டியிருந்தால், கிளம்புங்கள்; அய்தராபாத்தில் எங்கு தங்குவீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். பயண உடை மையினை தேடி நேரில் கொண்டு வந்து அளித்து விடுகிறோம் என உறுதியளித் தார். பரவாயில்லை சற்று நேரம் விமான நிலையத்திலேயே இருக்கிறோம், உடை மையினைத் தேடும், உங்களது முயற்சி யினைத் தொடருங்கள் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.
சற்று நேரம் யோசித்த அந்த ஊழியர் சற்று பொறுங்கள் எனக் கூறிவிட்டு சென்னையிலிருந்து பயணப்பட்ட விமானத்திற்கே சென்று உடமையினை தேட ஆரம்பித்தார். விடுபட்ட பயண உடைமை ஒரு ஓரத்தில் இருந்ததைக் கண்டுபிடித்து, அய்ந்து நிமிடங்களில்  வந்து தமிழர் தலைவரிடம் கொடுத்து விட்டார், ஹமீது எனும் அந்த விமான நிறுவன ஊழியர். அந்த ஊழியர் விமானத்தில் சென்று தேடுவதற்கு சற்று தாமதித்து இருந்தாலும் தமிழர் தலைவர் பயணம் செய்த விமானம் ராய்பூர் பறந் திருக்கும். சரியான நேரத்தில் விரைவாகச் செயல்பட்டு, சேவை ஆற்றிய ஊழியர் ஹமீதைப் பாராட்டிய தமிழர் தலைவர் சென்னை திரும்பியதும் சிறப்பாகச் செயல் பட்ட அந்த ஊழியரைப் பாராட்டி அந்த விமான நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதிட வேண்டும் எனவும் எங்களைப் பணித்தார்.
அய்தராபாத் விமான நிலையத்தில் வரவேற்பு
விடுபட்ட பயணச்சுமையினை கண் டறிவதற்கு முயற்சிகள் நடந்து கொண்டி ருக்கும் பொழுதே, தமிழர் தலைவரை வரவேற்க வந்திருந்த தேவேந்தர் கவுடு அவர்களின் மைந்தர் டாக்டர் டி.வின யேந்தர் செல்பேசியில் தொடர்பு கொண்டு பயணிகள் அனைவரும் வெளிவந்துவிட் டனர், தாமதத்திற்கு காரணம் என்ன என ஆவலுடன் கேட்டு, விவரங்கள் அறிந்த பின்னர் தாம் விமானநிலையத்திற்கு வெளியில் காத்திருப்பதையும் தெரிவித் தார். ஏறக்குறைய 45 நிமிட தாமதத்துடன் விமான நிலைய வெளிவாயிலுக்கு வந்த தமிழர் தலைவரை பூங்கொத்து கொடுத்து டாக்டர் டி.வினயேந்தர் வரவேற்றார்.
விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு தமிழர் தலைவர் கிளம்பினார். வரும் வழியில் டாக்டர் டி.வினயேந்தரிடம் அவரது தந்தையார் உடல்நிலைப்பற்றி தமிழர் தலைவர் கேட்டறிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை மிகவும் குன்றி, அமெரிக்க நாட்டிற்குச் சென்று தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் தேவேந்திர் கவுடு இருந்தார். இப்பொழுது உடல்நலம் தேறி தாம் ஏற்றுக்கொண்ட அரசியல் பணியில் சமூகநீதிக்கான அர்ப் பணிப்பு உணர்வுடன் கவுடு அவர்கள் பணியாற்றி வருகிறார். பேச்சினூடே கவுடு அவர்களின் மைந்தர், தான் சென்னை இராமச்சந்திரா மருத்துக கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு மேற்கொண்டதை தமிழர் தலைவருக்குத் தெரிவித்தார். விடுதிக்கு வரும் வழிப் பயணம், பெரும்பான்மையான நேரம் மேம்பாலப் பயணமாகவே இருந்தது. ஆம், உலகிலேயே அதிக நீளமான மேம்பாலமான நரசிம்மராவ் பெயரி லான அந்த மேம்பாலத்தைக் கடந்து தான் விமான நிலையத்திலிருந்து வருபவர்கள் அய்தராபாத் பெரு நகருக்குள் நுழைய முடியும். நரசிம்ம ராவ் மேம் பாலத்தின் மொத்த நீளம் 31.6 கி.மீ ஆகும்.
30 நிமிடப் பயணத்திற்குப் பின்பு அய்தராபாத் நகரின் மய்யப்பகுதியில் அமைந்திருந்த விடுதிக்கு தமிழர் தலைவர் வந்தடைந்தார். விடுதிக்கு தமிழர் தலைவர் வருவதற்கு முன் னரே, சமூகநீதிக்காக ஆந்திர மாநிலத்தில் அரும் பணியாற்றிய மறைந்த நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் மருமகன் (மகளின் கணவர்) பொறியாளர் சுதாகர் விடுதிக்கு வந்து காத்திருந்தார். அய்ந்து நட்சத்திர விடுதி யில் தமிழர் தலைவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அறையினுள் நுழைந்ததும் இவ்வளவு பெரியது தேவை யில்லையே, எளிமையாக இருந்திருக்க லாமே எனத் தமிழர் தலைவர் டாக்டரிடம் கூறினார். காலை உணவு நேரம் நெருங் கிய நிலையில் உணவருந்திட தரைத்தளத் திற்கு செல்லலாமா அல்லது அறைக்கு உணவினை தருவிக்கலாமா என டாக்டர் கேட்டதற்கு தரைத்தளத்திற் குச் சென்று உணவருந்தலாம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.
வரிசை யாக, வகையாக அடுக்கி வைக்கப் பட்ட உணவை நாமே எடுத்து நாமே பரிமாறிக்கொள்ளும் பஃபே (Buffet) முறை. சூடாக தேவைப்படும் உண வினை மட்டும் தெரிவித்தால் நாம் அமர்ந்து சாப்பிடும் இடத்திற்கு வந்து பரி மாறுவார்கள்.
அனைவரும் உரையாடிய வாறு உணவருந்திய பின்னர் தமிழர் தலைவர் அறைக்கு திரும்பினார். தேவேந் திர கவுடு அவர்களின் இளைய மகன் வீரேந்தர் தமிழர் தலைவரைச் சந்தித்தார். முழுநேர அரசியல் பணியில் உள்ள அவர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசக் கட்சியின் சார்பில் அய்தராபாத் நகரில் போட்டி யிட்டார். இன்றைய தெலுங்கானா முதல்வர் டி.எஸ்.சந்திரசேகரராவ் அவர்களின் மகள் கவிதா அவர் களுடன் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.
மிகவும் சுறுசுறுப்பாக ஆர்வ மிகுதியுடன் தமிழர் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந் தார். சற்று நேரத்தில் தேவேந்தர் கௌடு அவர்களின் மூத்த மகன் விஜயேந்திரும் தமிழர் தலைவரைச் சந்திக்க வந்தார். பின்னர் மைந்தர்கள் மூவரும் 11 மணி யளவில், தமது தந்தையார் தேவேந்தர் கவுடு விடுதிக்கு வந்து தமிழர் தலைவரைச் சந்தித்து பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத் துவ மய்யத்தினை பார்வையிட அழைத் துச் செல்வார் என்ற தகவலையும் தெரிவித்துச் சென்றனர்.
(தொடரும்)


பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா - தமிழர் தலைவரின் பங்கேற்பும் - பயன்பாடும் 

தொகுப்பு
வீ.குமரேசன்
ஆந்திர மாநிலம் உயர்நீதி மன்ற மூத்த நீதிபதி நீதியரசர் ஜி.சந்திரய்யாவுடன் சந்திப்பு
மறைந்த நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் மருமகன், இந்நாள் மற்றும் மேனாள் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்ற நீதியரசர்களுடன் சுவாமி அவர்கள் ஏற்படுத்திய உறவை சமூக நீதிப்பணி களுக்கான தொடர்புப் பாலமாக பரா மரித்து வருகிறார். நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளையினை வல்லம் - பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தில் ஏற்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிக்காகப் பாடுபட்டு வரும் அறிஞர் பெருமக்களை அழைத்துச் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றிட வைத் திடும்  பணியினை தொடர்ந்து வருகிறார். நடப்பு ஆண்டு அறக்கட்டளை சொற் பொழிவினை ஆற்றிட ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி நீதியரசர் ஜி.சந்திரய்யா அவர்களைக் கேட்டுக் கொள்ளலாம் என தமிழர் தலைவரிடம் பரிந்துரைத்தார். நீதியரசர் ஜி.சந்திரய்யா அவர்களும் தமிழர் தலைவரைச் சந்திக்க ஆவல் கொண்டுள்ள செய்தியினையும் தெரிவித்த பொழுது, நாம் நேரில் சென்று நீதியரசர் சந்திரய்யா அவர்களை சந்தித்து வேண்டிக் கொள்ளலாம் என தமிழர் தலைவர் விருப்பத்தினைத் தெரிவித்தார். நீதியரசர் அவர்கள் அவரது இல்லத்தில் இருப்பதை உறுதி செய்தபின் தமிழர் தலைவர் உடனே நீதியரசர் சந்திரய்யா அவர்களைச் சந்தித்திட கிளம்பினார்.
தமிழர் தலைவர் வருவதை எதிர் நோக்கி இல்லத்தின் வாசலில் நின்று தமிழர் தலைவரை நீதியரசர் சந்திரய்யா வரவேற்றார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த பின்னர் நாட்டு நடப்புகளை பற்றி தமிழர் தலைவரது கருத்தினை அறிந்திட ஆர்வமுடன் பல்வேறு வினாக் களை எழுப்பினார். இளைய தலைமுறை யினர், சமூகக் கண்ணோட்டம் பற்றிய அக் கறையின்றி உள்ளதைக் குறித்து மிகவும் ஆதங்கப்பட்டார்.
சமூகநீதிக் களத்தில் அடுத்த கட்ட நடைமுறைகள் குறித்து தமிழர் தலைவரின் கருத்தினை ஆவலுடன் எதிர்பார்த்தார். சந்தித்த அரைமணி நேரமும் தமிழர் தலைவர் என்ன நினைக்கிறார் என்பதி லேயே அக்கறை கொண்டவராக நீதியரசர் சந்திரய்யா இருந்தார். நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளைச் சொற் பொழிவினை நீதியரசர் சந்திரய்யா ஆற்றிட வேண்டும் என தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று கூடிய விரைவில் வருவதற்கு நாள் ஒதுக்கித் தருவதாக உறுதியளித்தார்.
தமிழர் தலைவர் விடைபெறுவதற்கு முன்பாக, சற்று பொறுத்தருள வேண்டி னார். அவரே இல்லத்தின் உள்ளே சென்று சால்வை ஒன்றை எடுத்து வரப்பணித்தார். முதல் முறையாக தமது இல்லம் வந்த தமிழர் தலைவரைப் பெருமைப்படுத்து வதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்து தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து மகிழ்ந்தார். வீட்டு வாசல் வரை வந்து தமிழர் தலைவரை வழி அனுப்பி வைத்தார்.
நீதியரசரைச் சந்தித்துவிட்டு விடுதி அறைக்கு வருவதற்கும், தேவேந்தர் கவுடு எம்.பி. அவர்கள் தமிழர் தலைவரைச் சந்திக்க வருவதற்கும் சரியாக இருந்தது, அய்ந்து நிமிட இடைவெளி. தாம் நிறுவிய சமூகநீதி அமைப்பின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள தமிழர் தலைவரை பூங்கொத்து கொடுத்து தேவேந்தர் கவுடு வரவேற்றார். உடன் சமூகநீதி ஆர்வலர்கள்  பெரும் திரளாக வந்திருந்தனர். தேவேந்திர கவுடு அவர் களின் உடல்நலம் குறித்து மிகவும் அக் கறையுடன் தமிழர் தலைவர் விசாரித்தார். பின் மருத்துவ சிகிச்சை சோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுமாறு தமிழர் தலைவர் வேண்டிக்கொண்டார். தேவேந் திர கவுடு அவர்களது சமூகநீதிக்கான பணி மேலும் அழுத்தத்துடன் தொடர வேண் டும் என்ற விருப்பத்தினைத் தமிழர் தலைவர் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய சமூக நீதி முழுமையாகக் கிடைத்திட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் தாம் கலந்துகொண்டதை தேவேந்தர் கவுடு நினைவு கூர்ந்தார். அடுத்த கட்டமாக சமூகநீதித் தளத்தில் ஆற்றிட வேண்டிய பணிகள் பற்றி தமிழர் தலைவருடன் கலந்து உரையாடி அவரது வழிகாட்டுதலை விரும்பி வேண்டினார். ஏறக்குறைய அரைமணி நேர உரையாட லுக்குப் பின்னர் தாம் நிறுவியுள்ள  பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தினை பார்வையிட வரும்படி வேண்டி அழைத்துச் சென்றார்.
பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தில் தமிழர் தலைவர்
செகந்திராபாத் வழியாக அரை மணிநேரப் பயணத்தில் அய்தராபாத் - ஹிமாயத்நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதிக்கான மய்யத்தினை வந் தடைந்தோம். அங்கு திரளாகக் கூடி யிருந்த சமூகநீதி அமைப்பின் பொறுப் பாளர்கள் மற்றும் சமூகநீதி ஆர்வலர்கள் தமிழர் தலைவரை மகிழ்ச்சியுடன் வர வேற்றனர். சமூகநீதி மய்யம் - அலுவலகம், நூலகம், பயிற்சி உரைக்கூடங்கள், கலந் துரையாடல் கூடம் என பல்வேறு கட்ட மைப்பு வசதி வாய்ப்புகளுடன் அமைக் கப்பட்டிருந்தது. உரைக்கூடங்கள் முழு வதும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளிலிருந்து  பல்வேறு பிரிவு  ஒடுக்கப்பட்ட மக்கள் - ஆண்களும் பெண்களுமாய் பயிற்சி எடுத்த வண்ணம் குழுமியிருந்தனர். ஆண்டு முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கு கின்ற வகையிலும், அவர்களிடம் சமூக எழுச்சிக்கான விழிப்புணர்வு மற்றும் உரிமை வேட்கையினை ஊட்டுகின்ற வகையில் தொய்வில்லாமல் பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன எனும் செய்தியினை தேவேந்தர் கவுடு தமிழர் தலைவரிடம் தெரிவித்தார். நூலகத்தினைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் சமூகநீதி பற்றிய நூல்கள் இன்னும் அதிகமாக இருந்திடல் வேண்டும் என விரும்பி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீட்டு நூல்களை குறிப்பாக சமூகநீதி பற்றிய நூல்களை நன்கொடையாக அந்த மய்யத்திற்கு வழங்கினார். மேலும் ஆங்கில மாத இதழான The Modern Rationalist, தொடர்ந்து நூலகத்திற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார். சமூகநீதி மய்யத் தின் செயல்பாடுகள் மிகவும் செம்மை யாக, மற்ற சமூகநீதி அமைப்புகள் பின் பற்றக் கூடிய முன்மாதிரியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் தேவேந்தர் கவுடு அவர்களைப் பாராட்டினார். சமூக நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தமிழர் தலைவரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஏறக் குறைய ஒரு மணிநேரம் மய்யத்தினை பார்வையிட்ட தமிழர் தலைவர் தங்கும் விடுதிக்கு திரும்ப வந்தார். நண்பகல் உண வினை அறையிலேயே தருவிக்க ஏற்பாடு செய்திருந்தனர். உணவு அருந்திய பின் சற்று நேரம் இளைப்பாறினார். பின்னர் 3 மணியிலிருந்து தமிழர் தலைவரை பார்க்க சமூகநீதி ஆர்வலர்கள் வருகை தர ஆரம்பித்தனர்.
தமிழர் தலைவருடன் சமூகநீதி ஆர்வலர்கள் சந்திப்பு
ஆந்திர பிரதேச அரசில் காவல்துறை உயரதிகாரியாய் பணியாற்றிய டி.டி.நாயக் அவர்கள் தமிழர் தலைவரைச் சந்திக்க வந்தார். சென்ற ஆண்டு பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தில் நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவினை நாயக் அவர்கள் ஆற்றினார். பல்வேறு சமூகநீதி மாநாடு களில் பங்கேற்றவர். தமிழர் தலைவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள பெருமகனார் ஆவார். சில தளங்களில் சமூகநீதி நடை முறைக்கான வழிமுறைகள் குறித்து தமிழர் தலைவரிடம் ஆலோசனைகளைப் பெற் றார். மாலைக் கூட்டத்தில் சந்திப்பதாகக் கூறி விடை பெற்றார்.
தெலுங்கு மொழியில் தந்தை பெரியார் புத்தகம்
அடுத்து தெலுங்கு மொழியில் பெரியார் ராமசாமி எனும் தலைப்பி லான 124 பக்க நூலினை எழுதிய எழுத் தாளர் துர்கம் ரவிந்தர் புத்தகத்தினை தமிழர் தலைவரிடம் அளித்திட வந்தார். தந்தை பெரியாரின் வாழ்க்கைச் சுருக்க மாக, அவர் நடத்திய சமூகநீதிக்கான போராட்டங்களின் தொகுப்பாக நூல் இருந்தது. தந்தை பெரியாரின் வாழ்க்கை யில் ஒவ்வொரு ஆண்டும் அவர் ஆற்றிய அரிய பணி பற்றியும் நூலின் இறுதியில் ஆண்டு வரிசையில் வழங்கப்பட்டு இருந்தது. மாலை விழா தொடங்கும் நேரம் நெருங்கிவிட்டதால் தமிழர் தலைவரை கூட்டத்தில் சந்திப்பதாகத் தெரிவித்துச் சென்றார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா - தமிழர் தலைவர் சந்திப்பு
விழாவிற்குச் செல்ல தமிழர் தலைவர் அணியமாகி இருந்த வேளையில் விழா வில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா, தமிழர் தலைவரைச் சந்திக்க அறைக்கு வந்தார். சென்ற முறை குண்டூரில் நடை பெற்ற சமூகநீதி மாநாட்டிலும், தமிழர் தலைவருடன் கலந்து கொண்டார்.
சமூகநீதியின் நடைமுறைக்கு - குறிப் பாக பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட் டுக்கான சட்ட ரீதியான வழிமுறைக்கு தமிழர் தலைவரின் கருத்தினை ஆலோ சனையினைப் பெற்றார். கிரீமிலேயர் பற் றிய சில நுணுக்கங்களையும் அவைகளை நேர்கொள்வதற்கான வழிமுறைகளையும் தமிழர் தலைவரிடம் கேட்டறிந்தார்.
விழா அரங்கத்திற்கு தமிழர் தலை வரை அழைத்துச் செல்ல ஏற்பாட்டாளர் கள் வந்த நிலையில், தமிழர் தலைவரும், நீதியரசர் ஈசுவரய்யா அவர்களும் ஒன்றாக விழாக் கூட்டத்திற்கு கிளம்பினர். நீதியரசர் வருகை தந்த கார் தேசியக் கொடியுடன் விடுதியில் காத்திருந்தது. இருவரும் சேர்ந்து அரசு வாகனத்தில் செல்லலாமே என நீதியரசர் தமிழர் தலைவரை வேண் டினார். அரசு அளித்த வாகனத்தில் நீங் கள் வருவது முறையாக இருக்கும்; நான் விழா ஏற்பாட்டாளர்களின் காரில் வந்து விடுகிறேன் என கூறி தமிழர் தலைவர் விழா அரங்கத்திற்கு கிளம்பினார்.

அய்தராபாத்- சமூக நீதிப் போராளிகளின் சங்கமத்தில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் நெறி வார்ப்பு (3)

பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா - தமிழர் தலைவரின் பங்கேற்பும் - பயன்பாடும்

தொகுப்பு
வீ.குமரேசன்


பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா
அய்தராபாத், பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பல்வேறு சமூகநீதி அமைப்பினரின் பங்கேற்புடன் மாலை 6 மணிக்குத் துவங்கியது. நகரின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள ரவீந் திர பாரதி அரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆடல், பாடல் நிகழ்ச் சிகள் வருகை தந்தோரை மகிழ்ச்சிப் படுத்தின; சமூக நீதி உணர்வினை ஊட்டின. சமூகத்தில் நிலவிடும் பரம் பரைத் தொழில்களை - தந்தை செய்த தொழிலை மகன் செய்திடும் - காட்சி வடிவில் மேடையில் நடித்துக்காட்டினர். பெண் அடிமைத்தனத்தை  மேடையில் காட்சிப்படுத்தினர். இதற்குப் பின்னணி யில், எழுச்சி மிகு சமூகநீதிப் பாடல் களை தெலுங்கு மொழிக்குரிய சிறப் பான - இனிமையும் உணர்வும் கலந்து சமூகநீதி ஆர்வலர்கள் பாடினர். கலை நிகழ்ச்சி முழுவதும் அரங்கத்தில் அமர்ந்திருந்தோரை கொள்கை வயப் படுத்தி எழுச்சியுறச் செய்தன.
கலை நிகழ்ச்சி முடிந்ததும், ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. மேடையில் பின்பதாகையில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜோதி ராவ் பூலே, சிறீநாராயணகுரு, சாகு மகராஜ் ஆகியோரது படங்கள் பதிக்கப் பட்டிருந்தன. நிகழ்ச்சியின் தொடக்க மாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த சமூகநீதி முன்னோடிகள் ஜோதிராவ் பூலே மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த சமூக நீதித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரையும் மய்யத்தின் நிறு வனர் தலைவர் டி.தேவேந்தர் கவுடு வரவேற்று உரையாற்றினார். கடந்த ஓராண்டு காலத்தில், மய்யம் ஆற்றிய சமூகநீதிக்கான பணிகளைப் பட்டிய லிட்டு பேசினார். விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர் அனைவருக் கும் சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டது. பின்னர் பிற்படுத்தப் பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு மலரை தமிழர் தலைவர் மேடையில் வெளியிட்டார். (மலரில், மய்யத்தின் பணிகளைப் பாராட்டி, தமிழர் தலைவர் முன்னமே அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருந்தது).
ஆந்திர மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பெரிய தலைவர்கள், கட்சிக் கண்ணோட்டம் இன்றி சமூகநீதித் தளத்தில் ஒன்றாக மேடையில் அமர்ந்திருந்தனர். காங் கிரசுக் கட்சியினைச் சார்ந்த வி.அனுமந் தராவ், நாடாளுமன்ற உறுப்பினர் ராபோல் ஆனந்த பாஸ்கர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன் னம் பிரபாகர், மது யாசகி,  மற்றும் தலித் சேனா தலைவர் ஜே.பி.ராஜூ உரை யாற்றிய பின்னர் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா உரையாற்றி னார். சமூகநீதி நடைமுறைக்கு ஆணை யம் அரசுக்கு அளித்து வரும் அறிவுரை சார்ந்த ஆலோசனைகளையும், அவை நடைமுறை ஆக்கம் ஆனதையும் விரிவாகக் கூறினார்.
நிறைவாக தமிழர் தலைவர் நீண்ட தொரு சொற்பொழிவினை ஆங்கிலத் தில் வழங்கினார். சமூகநீதிப் பயணத்தில் நடந்து வந்த பாதை, நடப்பு நிலை, எதிர்காலச் சவால்கள் என வரலாற்று விளக்கமாக அளித்தார். பெரியார்தம் இயக்கம், இந்திய நாட்டளவில் ஆற்றிய சமூகநீதிக்கான பணிகளை, தமிழ்நாட் டளவில் சமூகநீதியில் முன்மாதிரியாக எடுத்த முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அரங்கம் முழுவதும் அமைதியும் ஆர்வமும் கலந்த பிணைப் பில் தமிழர் தலைவரது பேச்சினை மிகவும் உன்னிப்பாகக் கேட்டனர். உரைச்சிறப்பு மற்றும் உரை ஆற்றிய பாங்கின் பாராட்டு வெளிப்பாடாக தமிழர் தலைவர் பேசி முடித்ததும் அரங்கத்தில் அமர்ந்திருந்தோர் கூட்ட நன்றியுரை கூறி முடிவு பெறுவதற்கு முன்பாகவே மேடையில் ஏறி தமிழர் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். ஒலி பெருக்கியில் பாராட் டுவோர் பற்றி அறிவித்தும், அறிவிக்கா மலும் தமிழர் தலைவருக்கு மாலையும், சால்வையும் அணிவித்தனர். (தமிழர் தலைவரது பேச்சு 8.9.2015 நாளிட்ட விடுதலையில் வெளிவந்துள்ளது) விழா ஏற்பாட்டாளர்கள், மக்கள் வெள்ளத்தி லிருந்து தமிழர் தலைவரை மீட்டெடுக்க மிகவும் இன்னல்பட்டனர்.
அய்தராபாத் தமிழ்ச் சங்கத்தினர் சந்திப்பு
சமூகநீதி விழாவில் அய்தராபாத் நகர் தமிழ்ச்சங்கத்தினர் திரு. சாய்காந்த் தலைமையில் தமிழர் தலைவரைச் சந்தித்து, பாராட்டி மகிழ்ந்தனர். பல தலைமுறைகளாக அய்தராபாத் நகரில் தமிழர்கள் வாழ்ந்து வருவதையும் எடுத்துக்கூறினர். தமிழ்ச்சங்கத்தினரை தேவேந்தர் கவுடு அவர்களிடம் தமிழர் தலைவர் அறிமுகப்படுத்தி, அவருட னான தொடர்பினை தொடர்ந்திடப் பரிந்துரைத்தார். விழா முடிந்தும், தமிழர் தலைவர் அரங்கத்திலிருந்து கிளம்புவ தற்கு அரைமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது.
சமூகநீதிச் சுடரொளி நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியின் இல்லத்தில் தமிழர் தலைவர்
விழா அரங்கத்திலிருந்து அனை வரிடமும் விடைபெற்ற தமிழர் தலை வரை சமூகநீதிச் சுடரொளி நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் இல்லத் திற்கு அவரது மருமகன் கணினிப் பொறியாளர் சுதாகர் அழைத்து சென்றார். நீதியரசரின் துணைவியார், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் தமிழர் தலைவரை பெரிதும் மகிழ்ந்து வர வேற்றனர். குடும்பத்தினர் அனைவரிட மும் தமிழர் தலைவர் நலம் விசாரித்தார். ஆந்திர மாநிலத்தில் சமூகநீதி நிகழ் வுகள் நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களை நினைத்துப் பார்க்காமல் நடந்திட முடியாது. சமூகநீதி அமைப் புகள் ஆந்திராவில் சீரிய செயல் பாட்டுடன் இருப்பதற்கு அடித்தள மிட்டவர் நீதியரசர் சுவாமி அவர்கள். இரவு உணவினை சுவாமி அவர்களின் இல்லத்திலேயே தமிழர் தலைவர் அருந்தினார். சுவாமி அவர்கள் காலத் தில் நிலவிய அதே விருந்தோம்பல் அவரது குடும்பத்தினரிடம் இன்றும் நீடித்துவருகிறது. கொள்கை உறவு களுக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடைவெளி இல்லாத நிலையே நிலவியது. இரவு நேரமாகிவிட்டதால், குடும்பத்தினர் அனைவரிடமும் தமிழர் தலைவர் விடைபெற்று விடுதிக்குத் திரும்பினார். தமிழர் தலைவர் ஒவ் வொரு முறையும் அய்தராபாத் வருகை தரும்பொழுது, முழுமையும் தமிழர் தலைவருடன் இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் நீதியரசர் சுவாமியின் மருமகன் சுதாகர் அவர்கள். பெங்க ளூரில் பணி ஆற்றி வந்தாலும் தமிழர் தலைவரின் அய்தராபாத் நகர் வருகை, அவரது  நிகழ்ச்சி பங்கேற்பினை ஏற் பாட்டாளர்களுக்கு இயல்பாக்குவதில் சுதாகர் அவர்களின் பங்கு உறுதுணை யாக இருந்தது.
விடுதிக்குத் திரும்பியதும் பயண உடைமைகளை சரி செய்துவிட்டு தமிழர் தலைவர் தூங்கச் சென்றார். காலையில் 6 மணிக்கு எழுநது காலைக் கடன்களை முடித்து விட்டு 7.30 மணிக்கெல்லாம் காலை உணவினை முடித்துக் கொண்டார். தேவேந்திர கவுடு அவர்களின் மகன் விஜயேந்தர் சரியாக 8 மணிக்கு விடுதிக்கு வந்து தமிழர் தலைவரை விமான நிலையத் திற்கு அழைத்துச்சென்றார். அன்று காலை வந்த நாளிதழ்களில்  முதல் நாள் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி பற்றிய செய்திகள் ஒளிப்படத்துடன் வெளியிடப்பட்டு இருந்ததை தமிழர் தலைவரிடம் காண்பித்தனர். விமான நிலையம் வரும் வரை ஆண்டு விழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று ஆற்றிய உரை பற்றியே வருகை தந்தோர் பேசிக் கொண்டிருந்தனர் எனக்கூறி நன்றி தெரிவித்தார். விமான நிலையத்தில் வழியனுப்பிட வந்தோ ரிடம் தமிழர் தலைவர் விடை பெற்றார். பயணச்சீட்டு, பாதுகாப்பு சோதனை முடித்து பின்னர் விமானத்தில் சரியாக 9.45 மணிக்கு அமர்ந்து, 10 மணிக்கு கிளம்பிய விமானம் சரியாக 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
பொதுவாக முற்பகல் அலுவலக நேரத்தின்பொழுது, வெளியூரிலிருந்து தமிழர் தலைவர் சென்னைக்கு திரும்பி னால் நேராக பெரியார் திடலுக்கு வருவதுதான் அவர் வழக்கம். அன்று காலை அய்தராபாத்தில் இருக்கும் பொழுதே பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் தாம் டில்லிக்கு பயணமாகச் செல் வதைத் தெரிவித்திருந்தார். மோகனா அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவலைத் தெரிவித்திருந்த நிலையிலும், விமான நிலையத்தி லிருந்து நேராக பெரியார் திடலுக்கு கிளம்பிட முனைந்த தமிழர் தலைவர், அடையாறு வீட்டுக்குச் செல்ல கேட்டுக் கொண்டார்கள். அம்மா உடல்நலமின்றி  வீட்டில் தனியாக உள்ளார். நாளை பெரியார் திடலுக்கு வருகை தரலாம். அவசர வேலைகள் மற்றும் தமிழர் தலைவரின் நேரடிப் பார்வையில் நடை பெற எதுவும் இல்லை என எடுத்துச் சொல்லப்பட்டு விமான நிலையத்திலி ருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட் டார். வீட்டிற்குச் செல்ல முற்படும் பொழுது, அய்தராபாத் விமான நிலைய ஊழியரின் சேவை பற்றி உடன் கடிதம் எழுதிவிடுங்கள் எனப் பணித்து இல்லத் திற்கு கிளம்பினார்.
(அடுத்த நாளே அய்தராபாத் விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர் அளித்த சேவை பற்றிய கடிதம், விமான நிறுவனத்தின் தலைவருக்கு அனுப்பப் பட்டது. தமிழர் தலைவரின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து தங்களது விமானத் திலேயே வரும் நாள்களில் தமிழர் தலைவர் தம் பயணத்தை தொடர்ந்திட வேண்டும் என விமான நிறுவனத்தினர் வேண்டி கடிதம் அனுப்பினர
(நிறைவு)
விடுதலை,22-24.10.15
தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை வற்புறுத்தி மாபெரும் சமூகநீதி மாநாட்டினை திராவிடர் கழகம் நடத்திடும்!
அய்தராபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்ய ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்து மய்யத்தின் முதலாம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசினை மய்யத்தின் தலைவர் டி.தேவேந்திர கவுடு வழங்கினார். மாண்பமை விருந்தினர் நீதியரசர் வி.ஈசுவரய்யா அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மய்யத்தின் தலைவர் டிதேவேந்திர கவுடு அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் (அய்தராபாத், 6.9.2015)
அய்தராபாத், செப்.8- மாறிவரும் உலகமயமாக்கல் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் முழுமையான அதிகாரத் துவம் என்பது அரசுத் துறைகளில் மட்டுமன்றி, வளர்ந்து வரும் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படுவதில்தான் சாத்தியப்படும் என அய்தராபாத் நகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று சமூகநீதி எழுச்சிக்கு அறைகூவல் விடுத்தார்.
அய்தராபாத்தில் சமூகநீதி விழா!
தெலங்கானா மாநிலம் அய்தராபாத் நகரில் பிற்படுத்தப் பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் (Backward Class Centre for Empowerment) முதலாம் ஆண்டு விழா செப்டம்பர் 6 ஆம் நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று சமூகநீதி நிலைமை பற்றி பேருரை ஆற்றினார்.
அவரது உரையின் சுருக்கம் வருமாறு:
தமிழர் தலைவர் எழுச்சியுரை
சமூகநீதி என்பது வெறும் சொல்லாடல் அல்ல; ஏட்டுக் கோட்பாடும் அல்ல; ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் விடியலுக்கு, அவர்தம் மேம்பாட்டுக்கான கொள்கைக் கோட்பாடே சமூகநீதி. சமூகநீதியினை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட கடைப்பிடிக்கப்படும் ஒரு வழிமுறையே இட ஒதுக்கீடு. இந்திய நாடு அரசியல் விடுதலை அடைவதற்கு முன்பே சென்னை இராஜதானியில் (அன்றைய ஆந்திர, கருநாடக மற்றும் கேரளப் பகுதிகளை உள்ளடக்கியது) சமூகநீதிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. 1920-களில் அரசு அதிகாரத்திற்கு வந்த பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான தென் இந்திய நல உரிமைச் சங்கம் (பின்னாளில் நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது) ஒடுக்கப் பட்ட மக்களுக்கான சமூகநீதியினை வழங்குவதில் முனைப் பாக இருந்து பலவித முன் முயற்சிகளை எடுத்தது. அம் முயற்சிகளின் அடிப்படையில் 1928 ஆம் ஆண்டு முதல் வகுப்புரிமை ஆணை (கம்யூனல் ஜி.ஓ.) பிறப்பிக்கப்பட்டது. விடுதலை அடைந்து, அரசமைப்புச் சட்டம் அமல்படுத் தப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் அதுவரை பெற்றுவந்த இட ஒதுக்கீடு (கல்வியில்) செல்லாது என 1950 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உடனே சென்னை இராஜதானியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மாபெரும் போராட்டத்தினை தந்தை பெரியார் நடத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையினை, காத்திட தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து அரச மைப்புச் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டது. வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டினை மாநில அரசுகள் மட்டுமே செயல்படுத்தி வந்த நிலையில், 1980 இல் மண்டல் குழுப் பரிந்துரையின்பேரில்  முதன்முதலாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மய்ய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட் டினை வழங்கிட அன்றைய பிரதமர் வி.பி.சிங் ஆணை பிறப்பித்தார்.
பின் மய்ய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
இப்படி படிப்படியாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் எண் ணிக்கை அளவில் இட ஒதுக்கீடு முழு விழுக்காடு அளிக்கப் படவில்லை. அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடும் முழுமையாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்காத வகையில் உயர் ஜாதியினர், பல்வேறு தடைகளை அன்றும் ஏற்படுத்தினர்; இன்றும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் - அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது
இட ஒதுக்கீட்டிற்கான தகுதி என்பது சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கிய நிலையே அடிப்படை என்பது அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் புறம்பாக பொருளாதார அளவுகோலை வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக கிரிமிலேயர் எனும் விதியையும் உருவாக்கி விட்டனர். பொருளாதார அளவுகோல் என்பது நடைமுறையில் சாத்தி யப்படாது என அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்கியபொழுது அரசமைப்பு சட்ட அவையில் ஜவகர்லால் நேரு தெரிவித்து, பொருளாதார அளவுகோல் கைவிடப்பட்டது. நேரு அவர்கள் பொருளாதார அளவுகோல் என்பது நீட்சியுள்ள அளவுகோல் (Elastic Scale); நிலையான அளவுகோல் அல்ல; மாறும் தன்மை வாய்ந்தது தெளிவாகவே அறிவித்தார்.
அவ்வப்போது சமூகநீதிக்கு, நேரடியான பொருளாதார அளவுகோல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நீதிமன்றங்கள் அதனை தள்ளுபடி செய்ததும் உண்டு. 1980 இல் தமிழ்நாட்டில் அன்றைய முதலமைச்சர்  எம்.ஜி.ஆர். அவர்கள் ரூ.9000/- ஆண்டு வருமானத்திற்கும் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என ஆணை பிறப்பித்தார். திராவிடர் கழகம், பிற அரசியல் கட்சிகளின் துணையுடன் பிற்படுத்தப்பட்ட அமைப்பின ருடன் நடத்திய  பொருளாதார அளவுகோல் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக அப்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியை எம்.ஜி.ஆர். சந்தித்தார். இட ஒதுக்கீட்டிற்கான பொருளாதார வரம்பு ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் மொத்த இட ஒதுக்கீட்டிற்கு உச்சவரம்பு என எதுவும் அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. இருந்தும் உச்சநீதிமன்றம் வழக்கிற்கு தொடர்பில்லாமல் தெரிவித்த கருத்தின் (Obiter Dictum) அடிப்படையில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காட்டிற்குமேல் செல்லக்கூடாது என புதிய நடை முறையினை சமூகநீதி எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டு விட்டனர்.
தமிழ்நாடு சமூகநீதித் தளத்தில் முன்னேறிய மாநிலமாக மொத்த இட ஒதுக்கீடு விழுக்காடு 69 என நடைமுறைப்படுத்தி வந்த நிலையில், மொத்த இட ஒதுக்கீடு விழுக்காடு 50-க்குமேல் அளிக்கக்கூடாது என சமூகநீதி எதிர்ப்பாளர்கள் நீதிமன்றம் சென்ற வேளையில், திராவிடர் கழகம் அளித்த ஆலோசனையின் பேரில் இட ஒதுக்கீட்டிற்கு என ஒரு தனிச் சட்டம் (அரசமைப்புச் சட்டம் விதி 31-சியின்படி) மாநில சட்டமன்றத்தில் உருவாக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது. மேலும் அந்த சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலோடு அரசமைப்புச் சட்டத்தில் 9 ஆம் அட்டவணையிலும் இடம்பிடித்தது. இதற்காக 76 ஆம் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இதனால் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு நீதிமன்ற ஆய்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் மொத்த இட ஒதுக்கீடு 69 விழுக்காடு என நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டு விதிமுறை (Tamil Nadu Formula) என பிற மாநில சமூகநீதியாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.
உலகமயமாக்கல் நடைமுறையில் -
இட ஒதுக்கீடு சுருங்குகிறது
இதுநாள்வரை ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்று வரும் இட ஒதுக்கீடு நடைமுறைகள் மய்ய, மாநில அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படு வதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உரிய விகிதாசார அளவில் இட ஒதுக்கீட்டினை அரசுத் துறைகளில் பெறாத சூழலில், உலக மயமாக்கல் நடவடிக்கைகளால் அரசு கல்வி நிலையங்கள் மற்றும் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. சமூகநீதித் தத்துவத்தின் நடைமுறைக்கு மறைமுகமான எதிர்ப்பு நடவடிக்கை இது. தனியார் துறை என்றாலும், அரசு உதவியில்லாமல், மக்களின் வரிப் பணத்திலிருந்து பயன் பெறாமல் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் செயல்பட முடியாது. தனியார் நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை வலியுறுத்திட மாபெரும் சமூகநீதி மாநாடு
ஒடுக்கப்பட்ட மக்கள் முழுமையான அதிகாரத்துவம் பெறுவது, தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில்தான் சாத்தியப்படும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த - தனிச் சட்டம் உருவாக்கப்படவேண்டும். இதற்காக அரசினரை வலியுறுத்தி, திராவிடர் கழகம் சமூகநீதியில் ஒத்த கருத்துள்ள அனைத்து தேசிய மாநில, அரசியல் கட்சிகள், நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மற்றும் பிற்படுத் தப்பட்ட அமைப்புகள் அனைவரையும் ஒன்று சேர்த்து வெகுவிரைவில் சமூகநீதி மாநாட்டினை நடத்திடும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்துவம் என்பது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதில்தான் ஏற்படும். இதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, ஒருங்கிணைத்து, சமூகநீதித் தளத்தில் ஒருமுகப்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களை வென்றேடுப்போம்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டார்.
அய்தராபாத் சமூகநீதி விழா
அய்தராபாத் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள ரவிந்திர பாரதி அரங்கத்தில் மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது. சமூக நீதியின் தற்போதைய நிலவரம் குறித்து தோழர்கள் உணர்ச்சிமிகு பாடலுடன் கூடிய ஓரங்க காட்சி விளக்கங்களுடன் கலை நிகழ்ச்சி நடந்திட விழா துவங்கியது. தெலுங்குதேச கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத் துவ மய்யத்தின் நிறுவனத் (Backward Classes Centre for Empowerments) தலைவர் டி.தேவேந்தர் கௌடு, பிற்படுத் தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் (National Commission for Backward Classes) தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா, பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமைப்பின் மேனாள் தலைவர் அனுமந்தராவ், காங்கிரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராபோல் ஆனந்த பாஸ்கர், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் பொன்னம் பிரபாகர் மற்றும் மதுயாசகி, தலித் சேனா தலைவர் ஜே.பி.ராஜு, உருது எழுத்தாளர் ஜாகித் அலிகான் மற்றும் ஏராளமான சமூக நீதி அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சமூக நீதி முன்னணித் தலைவர்கள் சிலைக்கு மரியாதை
விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த சமூக நீதித் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மராட்டிய மாநில ஜோதிபா பூலே சிலைக்கும்,  பாபா சாகிப் அம்பேத்கர் சிலைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மய்யத்தின் தலைவர் டி.தேவேந்தர் கவுடு
விழாவிற்கு வருகை தந்த தலைவர்களை, சமூக நீதி அமைப்பின் உறுப்பினர்களை, வருகை தந்தோரை வரவேற்று மய்யத்தின் நிறுவனத் தலைவர் டி.தேவேந்தர் கௌடு உரையாற்றினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாளில் தொடங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் ஓராண்டு பணிகளைப் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைத்தார். பல்வேறு நிலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத் திடும் வகையில் மய்யம் ஆற்றிவரும் பயிற்சி முகாம்கள், சிறப்புக் கூட்டங்கள் பற்றி விளக்கியதோடு வரும் காலங்களில் இத்தகைய ஒருங்கிணைப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டு விரிவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழர் தலைவருக்கு மரியாதை, பாராட்டு, நினைவுப் பரிசு
சமூக நீதி மய்யத்தின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று சிறப்பானதொரு கருத்துரை ஆற்றிய தமிழர் தலைவருக்கு, மய்யத்தின் நிறுவனத் தலைவர் டி.தேவேந்தர் கௌடு சால்வை அணிவித்துப் பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கினார்.
நீதியரசர் வி.ஈசுவரய்யா
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா தமது உரையில் குறிப்பிட்டதாவது:
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. விடுதலைப் போராட்டத்தின் பொழுது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் சமூக நீதி உரிமைகள் பற்றி வலியுறுத்தப் படவில்லை.
விடுதலை பெற்ற பின்பு அரசமைப்புச் சட்டத்திலேயே முகவுரையில் சமூக நீதி வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சமூக நீதி என்பது பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதிகளுக்கு முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மரபினர் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட அளவிற்கு பிற்படுத் தப்பட்ட சமுதாய வகையினர் பற்றி தெளிவு படுத்தப்பட வில்லை. ஆனால் விதி 340இன்படி, தேசிய பிற்படுத்தப்பட் டோர் மேம்பாட்டுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர் களுக்கான அதிகாரத்துவம் அளித்திட வகை ஏற்படுத்தப் பட்டுள்ளது. மற்றும் விதி 16(4)இன்படி வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மக்களுடன் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு அளித்திட வகை செய்யப் பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு உரிமைகள் சமூக ரீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட நிலையினருக்குத்தான் என அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்நிலையில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நிலை வலியுறுத்தப்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது. தற்சமயம் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்படும் கிரீமி தளம் (Creamy layer)
ஒருவகையில் பொருளாதார அளவுகோல் சார்ந்ததே. இது அரசமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீடு அளவுகோலுக்கு புறம்பானதே. பிற்படுத்தப்பட்டோருக்கான இடதுக்கீட்டில் மய்ய அரசு வலியுறுத்தும் கிரீமி தளத்திலுள்ள வருமான உச்ச வரம்பினை அதிகப்படுத்தி, பெரும் அளவில் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினர் இடஒதுக்கீடு பெறுகின்ற வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தொடர்ந்து அறிவுரை வழங்கி அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்பதை 10 லட்சம் வரை உயர்த்தி ஆணையம் பரிந்துரைத் துள்ளது. இன்றைய நடைமுறையில் 6 லட்சம் என வருமான வரம்பு உள்ளது. இந்த வருமான வரம்பு கணக்கீட்டில் மாத சம்பளம் சேர்க்கப்படக் கூடாது என்று ஆணையம் தெளிவாக வலியுறுத்தி அதற்கான அரசு உத்தரவுகளும் பிறப்பிக்கப் பட்டுள்ளன.
தற்பொழுது பல முன்னேறிய சமுதாயத்தினர் இடஒதுக் கீடு பெற வேண்டி, தம்மை பிற்படுத்தப்பட்டோராக அறிவித் திட வேண்டுகின்றனர். அதற்காகப் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். சமூக, கல்வி நிலைகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வாய்ப்புகள் அளிக்கப்படும்.
இட ஒதுக்கீட்டிற்காக பிற்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் தலைகீழ் இடஒதுக்கீடு (reverse reservation)
என்பது சட்டத்திற்குப் புறம்பானது. பிற்படுத்தப்பட்ட அமைப்பினர் தமக்குள்ள சட்டம் அளித்திடும் உரிமைகளைப் பெற கவனமாக விழிப்புணர்வுடன் இருந்து பலனடைய வேண்டும்.
- இவ்வாறு நீதியரசர் வி.ஈசுவரய்யா பேசினார்.
அனுமந்த ராவ்
நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் உறுப்பினர் அமைப் பின் மேனாள் தலைவர் அனுமந்தராவ் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
மண்டல் குழு பரிந்துரைத்து பல ஆண்டுகள் கழித்தே மய்ய அரசுப் பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 27 விழுக்காடு என்னும் உத்தரவு நடைமுறைக்கு வந்தது. பின்னர் மய்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் (IIITs, IIMs & IIMs)
கல்வி பயில பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 27 விழுக்காடு இடஒதுக்கீடு என உத்தரவு இருந்தாலும், நடைமுறையில் ஒட்டுமொத்தமாக 7 முதல் 8 விழுக்காடு அளவில்தான் பிற் படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற்றுள்ளனர்.
இதற்கு அடிப்படைக் காரணம் கிரீமிலேயர் அளவுகோல் தான். பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயர் அளவுகோல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதே. இந்நிலையினைப் போக்கிட பிற்படுத்தப்பட்ட அமைப்பினர் தனித்தனியாக போராட்டம் நடத்திவருவதை விடுத்து ஒன்றுபட்ட அளவில் செயல்பட வேண்டும்; போராட வேண்டும். பிற்படுத்தப்பட்டோரிடம் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வு பெருகிப் பரவிட வேண்டும். பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடு 27 விழுக்காடு என்பது மக்கள் தொகை அடிப்படையில் மிகவும் குறைவு. இந்த 27 விழுக்காடு அளவும் முழுமையாகக் கிடைக்காத வகையில் பிற்படுத்தப்பட்டோர் நிலை உள்ளது. இந்த நிலைமைகள் மாற வேண்டும். சமூக நீதி உரிய அளவில் உரிய மக்களுக்குக் கிடைத்திட வேண்டும்.
- இவ்வாறு அனுமந்தராவ் பேசும்பொழுது குறிப்பிட்டார்.
தலித் சேனா ஜே.பி.ராஜூ
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினர் மற்றும் பிற்படுத்தப் பட்ட பிரிவினர், அரசியல் கட்சிகளின் அடிப்படையில் பிரிந்து உள்ளனர். அரசியல் கட்சி எனும் கூண்டு ஒடுக்கப்பட்ட மக்களை அதன் தலைவர்களைப் பிரித்து வைத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் அரசியல் கட்சி எனும் கூண்டில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே தளம் சமூகநீதித் தளம். எனவே சமூக நீதித் தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து செயல்படும் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வு, உறுதிநிலை ஒடுக்கப் பட்ட மக்களிடமும், தலைவர்களிடமும் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் தந்தை பெரியார்தம் சமூக நீதிக்கான கொள்கை வழித்தடத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரியாரது சமூக நீதிக் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்திட எடுத்துவரும் முயற்சிகளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஒரு வழிகாட்டும் ஒளி விளக்காகவே விளங்கி வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமூகநீதித் தளத்தில் பல சாதனைகளை வென்றெடுப்போம்.
இவ்வாறு தலித் சேனா அமைப்பின் தலைவர் ஜே.பி. ராஜூ அவரது உரையில் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவருக்கு வருகை தந்தோரது அன்பான வெளிப்பாடு
தலைவர்கள் அனைவரும் உரையாற்றிய பின்னர், தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றினார். சமூக நீதித் தளத்தின் ஆரம்பக்கால நிலைமைகள், கடந்து வந்த பாதைகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், இவற்றுக்கிடையே ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைத்து செயல்படுவதனால் கிடைத்திடும் ஆக்கம் ஆகியன பற்றி எழுச்சியுடன் ஆங்கிலத்தில் ஆசிரியர் உரை ஆற்றி முடித்தவுடன் உரையாற்றியதை செவிமடுத்த வருகையாளர்கள் மேடைக்கு பெரும்திரளாக வந்து மகிழ்ச்சியினையும், ஆதரவினையும் தெரிவிக்கும் வகையில் சூழ்ந்து கொண்டனர். பல்வேறு பிற்படுத்தப்பட்ட அமைப்பினர் மற்றும் அய்தராபாத் மாநகர தமிழ்ச் சங்கத்தினர் தமிழர் தலைவருக்கு மாலை, சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். விழா நிகழ்ச்சிகளை பிற்படுத்தப் பட்டோருக்கான மய்யத்தின் பொறுப்பாளர் டி.ஜெயப் பிரகாஷ் தொகுத்து வழங்கினார்.
விழா நாளன்று முற்பகலில் அய்தராபாத் - பிற்படுத்தப் பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். மய்யத்தின் செயல்பாடுகள் பற்றி அதன் நிறுவனத் தலைவர் டி.தேவேந்தர் கவுடு எடுத்துரைத் தார். பிற்படுத்தப்பட்ட அமைப்பினர், பொறுப்பாளர்கள் மிகப் பலர் அவ்வமயம் வருகை தந்திருந்தனர்.
சமூகநீதிக்கான விழாவிற்கு பெரும் திரளாக வருகை தந்து  சிறப்பித்தோர்.

1. நாடாளுமன்ற உறுப்பினர் - பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மேனாள் தலைவர் வி.அனுமந்தராவ் அவர்களுடன் மகிழ்ச்சித் திளைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர். உடன் பிற்படுத்தப்பட்டேர் தேசிய ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வி.ஈஸ்வரய்யா, விழா மேடையில் நிறுவப்பட்ட சமூக நீதித் தலைவர்கள் மகாத்மா ஜோதிபா பூலே, பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
2. அய்தராபாத் - பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா மலரினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிடுகின்றார். உடன் சமூக நீதித் தலைவர்கள் (இடமிருந்து வலம்) பொன்னம் பிரபாகர் (மேனாள் எம்.பி.), வி.அனுமந்தராவ் (நாடாளுமன்ற உறுப்பினர் -பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மேனாள் தலைவர்), மய்யத்தின் நிறுவனத் தலைவர் டி.தேவேந்தர் கவுடு (எம்.பி.),
தமிழர் தலைவர் ஆசிரியர், நீதியரசர் வி.ஈசுவரய்யா, ராபோல் ஆனந்த பாஸ்கர் (நாடாளுமன்ற உறுப்பினர்). அய்தராபாத் - பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் நூலகத்திற்கு திராவிடர் கழகம் வெளியிட்ட நூல்களை நன்கொடையாக தமிழர் தலைவர் வழங்கினார். மய்யத்தின் நிறுவனத் தலைவர் டி.தேவேந்திர கவுடு பெற்றுக் கொள்கிறார்.
3. அய்தராபாத் விமான நிலையத்தில் தமிழர் தலைவரை மய்யத்தின் சார்பாக டாக்டர் வினையேந்தர் பூங்கொத்து அளித்து வரவேற்கிறார். பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தினை தமிழர் தலைவர் பார்வையிடுகிறார்.
4. ஆண்டு விழாவில் நடைபெற்ற சமூக நீதிப் பாடல் நிகழ்ச்சிகள், சமூக நீதி வேண்டி குலத்தொழிலை எதிர்த்து வடிவமைக்கப்பட்ட ஓரங்க காட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி.
5. அய்தராபாத் - பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் எழுச்சி உரை ஆற்றுகிறார்.
விடுதலை,8.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக