பக்கங்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

திருவிதாங்கூர் முற்போக்குதிருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள் எவ்வகுப்பின ராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட கோயில்களிற் சென்று வழிபடலா மென நேற்று நடைபெற்ற தமது 25ஆவது பிறந்த தினக்கொண்டாட்டத்தின் போது திருவரங்கூர் மகாராஜா ஒரு உத்திரவு பிறப்பித்திருக்கிறார்.
மகாராஜாவின் இவ்வுத்திரவு திருவாங்கூர் மக்களிடை மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஜாவைப் பாராட்டி பல விடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவின் இதர பாகங்களுக்கும் திருவாங்கூர் ஓர் வழிக்காட்டியாயிருக்குமென கருதப்படுகிறது.
தோழர் ஈ.வெ.ரா. விதைத்த வித்து மரமாகி பலன் பழுத்து விட்டது.
(குடிஅரசு, 15-11-1936)

திருவிதாங்கூர் ஆலயப்பிரவேச உரிமை

15.11.36ஆம் தேதி சுதேசமித்திரனில் திருவிதாங்கூர் ராஜீயத்தின் உதாரகுணத்தின் மேன்மையைப் பற்றித் தெரிந்தோம். சுதேசமித்திரனில் ஒரு சூழ்ச்சியாகக் குறிக்கப் பட்டிருப்பதைப் பற்றி ஆச்சரியப்படுகிறோம்.
இதற்காக தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முன்னமே ஜெயிலுக்கும் போய் சத்தியாக்கிரகம், பட்டினி, முதலான எவ்வளவோ சொல்லொணாத கஷ்டங்களும் பட்டு உழைத்ததின் பயன்தான் இன்றையத்தினம் இந்த ஆலயவழிபாடு, ஏற்பட்டதென்று எழுத பிராமணப் பத்திரிகைகளுக்கு மனம் வராததினால் இவர்கள் சூழ்ச்சி தெற்றன விளங்குகிறது.
இந்த  ஆலயப்பிரவேச ஒப்பற்ற பெருமை வைக்கம் வீரராகிய தோழர் ஈ.வெ.ரா.அவர்களைச் சாருமே ஒழிய மற்றையோரைச் சாராதென தமிழ்நாட்டிலும் மலையாள நாட்டிலும் பிராமணரல்லாதாருடைய ஒவ்வொருவருள்ளத் திலும் பதிந்திருக்குமென உறுதி கூறுகிறோம்.
நிற்க, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் இன்றில்லாவிடினும் இன்னும் கொஞ்சகாலத்தற்குள்ளாக விரோதிகளே ஒப்புக் கொள்ள முன்வருவார்களென பூர்ணமாய் நம்புகிறோம்.
நம் பிரிட்டிஷ் இந்தியாவிலும் ஆலயபிரவேச உரிமைக்கு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் சென்ற 10 ஆண்டுகளாக போராடிவருவது நாங்கள் அறியாததல்ல.
தோழர் ஈ.வெ.ரா அவர்கள் இன்னும் தீவிரமாக உழைத்து தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவாரென்று எதிர் பார்க்கிறோம் என சென்னிமலை வாசிகள் எழுதுகிறார்கள்.
(குடிஅரசு, 22-11-1936)
-விடுதலை,15.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக