பக்கங்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

கோயிலுக்குள் போகலாம்- அய்க்கோர்ட்டுத் தீர்ப்பு

திருச்செந்தூர் கோவில் பிரவேச வழக்கில் அய்க்கோர்ட்டுத் தீர்ப்பு
19.3.1935இல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டான்ஸ், இருவர்களும் திருச்செந்தூர் ஆலயப்பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்மந்தமானவியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவியூ கவுன்சில் வரையில் போய் மறுபடியும் ஹைக்கோர்ட்டுக்கு வந்தது.
இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திரு நெல்வேலி ஜில்லாவிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் எண்ணெய் வாணியர் என்ற ஜாதியாருக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு.
வழக்கின் வரலாறு
திருச்செந்தூரிலுள்ள சில வாணியர்கள் தமது வகுப்பி னருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாக்களையும் ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதி களாக்கி, அந்த ஆலையத்தின் மற்ற மேல் ஜாதி ஹிந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்யத் தமக்கு உரிமை உண்டென்று வழக்குத் தொடர்ந்தார்கள். முதலில் இது தூத்துக்குடி சப் கோர்ட்டில் நடந்தது.
ஆட்சேபம்
பிரதிவாதிகள் பின் வருமாறு தாவாச் செய்தார்கள். வெளிப்பிரகாரத்தில் கூட இந்த வகுப்பினர் வருவதற்கு உரிமை கிடையாது. 1877 இல் இதைப்பற்றி வியாஜ்ஜியம் நடந்திருக்கிறது. வாணியர்களுக்கு இந்தக் கோயிலில் பிரவேச உரிமை இல்லையென்று அப்போது தீர்ப்பு கூறப்பட்டிருப்பதால் இப்போது கொண்டு வரப்படும் வழக்கு முன் வழக்கால் பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் விவாதித்தார்கள்.
சப்கோர்ட் தீர்ப்பு
வாணியர்கள் வைசியர்கள் என்று ருசுவாகா விட்டாலும் அவர்கள் சூத்திரர்களுக்கு குறைவானவர்களல்ல. முன் வியாஜ்யம் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியமல்ல.
ஆகையால் இப்போது வரும் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியத்தை முன் தீர்ப்பு பாதிக்காது என்று சப்கோர்ட்டு கருதியது, வாணியர்களுக்கு உரிமையுண்டு என்று தீர்ப்புக் கூறப்பட்டது.
பிரதிவாதிகள் ஹைகோர்ட்டில் அப்பீல்
இதன்மீது ஹைக்கோர்ட்டில் தர்மகர்த்தாக்களும், ஸ்தலத்தாரும், அப்பீல் செய்தனர். முன் தீர்ப்பினால் பாதகம் தான் என்று சொல்லி, ஹைக்கோர்ட்டு வாணியர்களுக்கு விரோதமாக தீர்ப்பு கொடுத்தது.
பிரிவி கவுன்சிலில் மாறியது
முன் வழக்கால் பாதகம் ஏற்பட்டதா என்பதைப் பற்றி வாணியர்கள் பிரிவியூ கவுன்சில் சொல்லிவிட்டதோடு, இந்த வழக்கின் உள் விஷயங்களையும் கவனித்து தீர்ப்புக் கூறும்படி உத்தரவிட்டது.
கடைசியாக இப்பொழுது
ஹைக்கோர்ட்டில் வழக்கு வந்தது
வாணியர்கள் எக்காலமும் பிரவேச உரிமையை அனுபவிக்க வில்லையென்பதை ருசுச்செய்வது பிரதிநிதிகள் பொறுப்பு, ஏனென்றால் வாணியர்கள் வைசியர்களை விட தாழ்ந்தபடியிலிருப்பவர்களல்ல. பிரதிவாதிகள் முன் அனுஷ்டானத்தை ருசுச் செய்யவில்லை 1862க்கு முன் வாணியர்களுக்கு பிரவேச உரிமை இருக்கவில்லையென்று ருசுவாகவில்லை.
ஆகையால் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது சப்கோர்ட்டின் தீர்ப்பு உறுதி. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்பதே இப்போது ஏற்பட்டுள்ள தீர்ப்பு.
இந்த வழக்கில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.எல்.வெங்கடராமய்யர் வி.சம்பந்தம் செட்டி ஆகியோர் வாணியர் கட்சிக்கும், டி.ஆர் வெங்கடராமய்யர் கே.எஸ். சங்கரய்யர் டி.நல்லசிவம் பிள்ளை தர்மகர்த்தாக்களுக்காகவும் ஆஜரானார்கள் (தினமணி)
குறிப்பு: பிரிட்டிஷ் ஆட்சி நம்நாட்டில் இல்லாமல், பார்ப்பனர்களுடைய வருணாச்சிரம தர்ம சுயராஜ்ய ஆட்சி இருந்திருக்குமானால், இத்தகைய தீர்ப்பு ஏற்பட்டிருக்க முடியுமா? இத்தகைய வழக்குத் தொடர்ந்ததையே அதிகப்பிரசங்கித்தனமானதென்று கருதி அதற்காக வாதிகளுக்கு கடுந்தண்டனை கொடுத்திருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம், வருணாச்சிரம தரும ஆட்சிக்காரப் பார்ப்பனர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிபவர்கள் இதைக்கவனிப்பார்களா?
(குடிஅரசு, 1935)
-விடுதலை,15.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக