இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர்நீதிமன்றம் உத்தரவு
மும்பை, டிச.7 மராத்தா இடஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். கடந்த ஜூலை மாதம் அவர்கள் நடத்திய போராட்டங்கள் வன்முறைக்கு திரும்பின.
இந்த நிலையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மராத்தா சமுதாயத்தினரின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து சமீபத்தில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மராத்தா சமுதாயத்தில் 37.28 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும், 93 சதவீத குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து மராத்தா சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி இருப்பதாக கருதி அவர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு முன்வந்தது. இது தொடர்பாக சட்டசபை மற்றும் மேல்-சபையில் இடஒதுக்கீட்டு மசோதாவை அரசு கொண்டு வந்தது. மசோதா ஒருமனதாக நிறைவேறியது. கடந்த மாதம் 30-ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவ் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து அதை சட்டமாக்கினார். இந்தநிலையில் இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து வழக்குரைஞர் குணராதன் சடவர்தே என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நேற்று நீதிபதிகள் நரேஷ் பாட்டீல், எம்.எஸ். கார்னிக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது. மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மராட்டியத்தில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 68 சதவீதமாக உயர்ந்து உள்ளது. எனவே மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், உட னடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநில அரசின் சட்டத்தை பொதுநலன் மனு மூலம் தடை கோர முடியாது என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். சட்ட ரீதியான குறைபாடுகளை களைந்த பிறகே மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இடைக்கால தடைக்கு மறுப்பு: இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மராத்தா இடஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். அதேநேரத்தில் பொதுநலன் மனு மற்றும் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை ஒன்றாக சேர்த்து வருகிற திங்கட்கிழமை விரிவாக விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
- விடுதலை நாளேடு, 7.12.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக