பக்கங்கள்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பொருளாதார இடஒதுக்கீடு சாத்தியமற்றது!- பேரா. ஜெயரஞ்சன்-


இந்தியப் பொருளாதாரத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர் பேராசிரியர் ஜெயரஞ்சன். 'இந்தியப் பொருளாதார மாற்றம்', 'கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்' உள்ளிட்ட பல்வேறு நூல்கள் எழுதி யுள்ளார். பொருளாதார முறையிலான இடஒதுக்கீடு, சமத்துவமற்ற சமுதாயத்தை ஏற்படுத்திவிடும் என்கிறார்.


இடஒதுக்கீடு என்றால், இருப்பதைப் பங்கிட்டுக் கொள்வது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அது அப்படி அல்ல. ஏழ்மை, வறுமையில் இருப்பவர்களுக்கு உதவும் திட்டமும் கிடையாது. அப்படி யென்றால் இட ஒதுக்கீட்டின் நோக்கம்தான் என்ன?

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட வர்கள் அதிகாரத்திற்கும் ஆளுமை நிலைக் கும் வரமுடியவில்லை. அப்படித்தான் சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இந்தியாவில் அவர்களின் நிலை இருந்தது. இவ்விரு சமுதாயத்தினரும் அதிகாரம், ஆளுமை நிலைக்கு வர முடியவில்லை என்பது, இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடு என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க முடிவெடுத்தனர். இரு பிரிவு மக்களின் பங்களிப்பும் ஆட்சி, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைத்தனர்.

அதன்படி அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிலர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் அந்த ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக ஒலிப்பார்கள். அவர்கள் கொள்கை வகுக்கும் இடத்திலும் இருப்பார்கள். அதற் காகத்தான் இடஒதுக்கீடு கொண்டு வரப் பட்டது. அதன் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் இத்தனை தலித் உறுப்பினர்கள், இத்தனை பிற்படுத்தப் பட்டோர் உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப் பட்டது. இதே அடிப்படையில்தான் ஆட்சி நிர்வாகத்தை மேலாண்மை  செய்யும் அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்பு இந்திய அரசிய லமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட போது, அதன் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்தியா வில் அனைவரும் சமம், எதன் பொருட்டும் வேற்றுமை இருக்கக் கூடாது. மதம், மொழி, இனம், சாதி உள்ளிட்ட காரணிகளால் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை அம்பேத்கர் எடுத்தார். ஏனெனில், அதற்கு முன்பு இந்தியாவில் மக்களிடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது. சிறுபான்மையாக இருந்த மக்கள் வசதியாகவும் பெரும் பான்மையாக இருந்த மற்றொரு தரப்பு மக்கள் வசதியின்றியும் இருந்தனர். அந்த நிலையைப் போக்கி, அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கப் போராடினார் டாக்டர் அம்பேத்கர். இந்த முரணை சீர்ப்படுத்த இட ஒதுக்கீடு கொள்கைதான் சரியான பாதை என அம்பேத்கர் வாதிட்டார்.

வர லாற்றில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்கள் மூன்று பிரிவினராக கருதப்பட் டனர்.

முதலில் தீண்டத்தகாதவர்களாக கருதப் பட்ட பட்டியல் இனத்தவர்கள். அவர்கள் பெரும்பான்மையான சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததால், அரசின் எந்த வளர்ச்சித் திட்டங்களும் சலுகை களும் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்தது.

இரண்டாவது, பழங்குடியினர். இவர்கள் பெரும் சமுதாயத்தினரிடம் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந் தவர்கள். தனித்தீவாக, அரசுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒதுங்கி வாழ்ந்த வர்கள்.

மூன்றாவது, பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், இதர பிற்படுத்தப் பட்டோர் ஆகியோர்களை உள்ளடக்கிய பிரிவினர். இவர்கள் சமூக நிலையிலும் கல்வியிலும் பின்தங்கியிருந் தவர்கள்.

அம்பேத்கர் காலத்திலேயே பொருளா தார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண் டும் என குரல் எழுந்தது. இதுபற்றி பிரதமர் நேரு முன்னிலையில் நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் இடஒதுக்கீடு தேவைதானே என்ற வாதம் வைக்கப் பட்டது. அப்போது பேசிய அம்பேத்கர், 'இந்தியாவில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களிலும் 80 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். அவர்கள் அனைவரையும் இட ஒதுக் கீட்டின் கீழ் கொண்டுவருவது சாத்திய மற்றது. மேலும், எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு எதிராக அது அமைந்துவிடும் என்று தெளிவுபடுத் தினார். - ஆனால், எஸ்.சி., எஸ்.டி., பி.சி. உள்ளிட்ட வழக்குகள் உயர் நீதிமன்றங் களில் அல்லது உச்சநீதிமன்றத்தில் வரும் போதெல்லாம் நீதிபதிகள், தங்கள் தீர்ப்புகளின்போது சமூகம், கல்வி ஆகிய நிலைகளுடன் பொருளாதார நிலையை யும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண் டும் என்ற கருத்தை மூன்றாவதாக முன் வைக்கத் தவறுவதில்லை . இதுதொடர்பாக, பல் வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் பிரதிவாதங்களை முன் வைத்தபோது, தமிழக அரசின் சட்டநாதன் ஆணையம் தெளிவாக தன் நிலைப் பாட்டை தெரிவித்து விட்டது. சமூக நிலைப்படிதான் இடஒதுக்கீடு கடைபிடிக் கப்படும் என்று தெளிவுபடுத்திவிட்டது.

இந்த நிலையில் பொருளாதார அடிப் படையில் இடஒதுக்கீடு என்ற குரல் எப் படிக் கேட்கிறது. இப்போது இடஒதுக்கீடு கேட்டு குஜராத், மகாராஷ்டிரம், தெலுங் கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராடு பவர்கள் யார்?

அவர்கள் எல்லாம் உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். பல ஆண்டுகளாக அவர்கள் தங்கள் விளைப்பொருட்களுக்கு நல்ல விலை வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி மத்திய அரசு, விவசாயிகளின் விளை பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க வில்லை. மேலும், ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்பதும் புஸ்வாணமாகிப் போனது. பா.ஜ.க.வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சி யில் 10 லட்சம் வேலைவாய்ப்பைக்கூட உருவாக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் நஷ்டத்தை யே சந்தித்த வடமாநில விவசாயிகள், மத்திய அரசைப் பார்த்து, ‘எங்களுக்கு வேலை கொடு' என கொதிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத மத்திய அரசு, சூடான பிரச்சினையை திசை திருப்ப இரண்டு விவகாரங்களை கையில் எடுத்துக்கொண்டது. ஒன்று, இந்துத்வா, மற்றொன்று பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு.

பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு கொடுத்தால் இந்தப் பிரச்சினை சரியாகி விடுமா? விவசாயத் தொழிலில் நட்டம் என்றால், அதனைத் தீர்க்க, அந்தத் தொழிலை லாபகரமாக்க மத்திய அரசுதான் சரியான கொள்கைகளை, திட்டங்களை வகுக்க வேண்டும். அது போல வே, வேலை வாய்ப்புகளையும் உருவாக்க அரசு முன் வர வேண்டும். சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் வறுமையில் வாடினால், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவை யான திட்டங்களை வகுத்து மேம்படுத்த வேண்டுமே தவிர, அவர்களையும் பொரு ளாதார நிலையைக் காட்டி இட ஒதுக் கீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது. ஏற் கெனவே அந்த இடஒதுக்கீட்டுக்குள் இருப் பவர்களுக்கு முழுமையாக பயன் சென்ற டையாதபோது, மேலும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

நிறைவாக, சமுதாய ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்க கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு முறையில் பொருளாதாரக் காரணிகளை உள்ளே புகுத்தினால் எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு விடும். நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற் கான ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் ஏற்பட்டு விடும்.

- நன்றி: ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, 30.11.2018

- விடுதலை ஞாயிறு மலர்,8.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக